காலம் கடத்தும் தேர்தல் நாடகம்

ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்க வேண்டும் என்பதுபோல் இருக்கின்றது சிறீலங்கா ஜனாதிபதியின் தீர்வுத் திட்டம். யுத்த வெற்றிகளை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வென்றுவிட்டால் தாங்கள் விரும்பியதை தமிழ் மக்கள் மீது திணித்துவிடலாம் என்று மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது.

தீர்வுப்பொதியை வைத்துக்கொண்டு காலத்தைக் கடத்தியவர் சந்திரிகா. சர்வகட்சிக்குழுவை வைத்துக்கொண்டு காலத்தை இழுத்தடித்தவர் மகிந்த ராஜபக்ச. ஆனால், இப்போது காலத்தை இழுத்தடிப்பதற்கான புதிய காரணங்கள் தேவை என்பதால் இன்னொரு ஆயுதத்தை கையிலெடுத்திருக்கின்றார் மகிந்த. அதுதான் தேர்தல். எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன முடிவடைந்த பிறகே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது இந்த இழுத்தடிப்பிற்காகத்தான்.

இந்த இரண்டு தேர்தல்களும் முடிவடைவதற்கு குறைந்தது இன்னும் ஓராண்டுகள் என்றாலும் செல்லும் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, தமிழ் மக்கள் தங்கள் தீர்வு என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு ஓராண்டுகள் காத்திருக்க வேண்டும். 180 நாட்களில் அகதி வாழ்க்கை முடித்து வைக்கப்படும் என்று இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் கூறிய சிறீலங்கா, இன்னும் 365 நாட்களையும் கடந்து அகதிகளை முகாம்களில் அடைத்து வைத்திருக்கப் போகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

காலத்தை இழுத்தடித்து தமிழ் மக்களை நிலமிழந்தவர்களாக நிர்க்கதியாக்குவதே சிறீலங்காவின் காலகாலத் திட்டம். இதனை சர்வதேசம் புரிந்துகொண்டாலும் அதற்கு எதிராக எந்தக் கருத்துக்களையும் அது வெளியிடுவதில்லை. வெளியிடப்போவதுமில்லை.தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக விடுதலைப் புலிகள் இருந்தபோது, அவர்களை ஒடுக்கவேண்டும் என்று முனைந்து நின்ற உலகம், தங்கள் நாடுகளில் விடுதலைப் புலிகளால் எந்தவித நெருக்கடிகளோ ஆபத்துக்களோ ஏற்படாது எனத் தெரிந்திருந்தும் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து தடை விதித்த நாடுகள், இப்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அறிவித்தன் பின்னர், நிர்க்கதியாக உள்ள பாதிக்கப்பட்ட அந்த மக்களின் எதிர்கால வாழ்விற்காக குரல்கொடுப்பதற்கு கூட முன்வரவில்லை.

அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களை நிரந்தர அகதிகளாக்கி அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்ற வவுனியா, செட்டிகுளம் தடை முகாம்களில் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன என்று சுட்டிக் காட்டியிருக்கின்றன மனிதாபிமான அமைப்புகள்.இடம்பெயர்ந்த மக்களின் மீளக்குடியமர்வைத் தாமதப்படுத்த அரசு திட்டமிட்டிருக்கின்றதா என்று சந்தேகத்தையும் அவை வெளியிட்டுள்ளன.

180 நாள் வேலைத்திட்டத்தில் கூடிய விரைவில் அகதிகள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்றால், அகதி முகாம்களில் எதற்காக நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன என்று பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'த ரைம்ஸ்' பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. முகாம்களில் பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள், வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன.

சீமெந்து தரைகள், மறு கட்டமைப்புகள், இரும்புக் கூரைகள் என்பன காணப்படுகின்றன. இவை பல வருட காலம் நீடிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன' என மனிதாபிமானப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர். நிரந்தரக் கட்டடங்களை அமைப்பதற்கு அகதிகளைப் பயன்படுத்தும் அரசு, அவர்களுக்கு அதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு மறுக்கின்றது எனத் தெரிவிக்கும் ஐ.நா. வட்டாரங்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நாவின் கொள்கைகளுக்கு இது முரணானது என சுட்டிக்காட்டுகின்றன என்றும் ரைம்ஸ் கூறுகின்றது.

இதேவேளை, சிறீலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு நகரப் பகுதியை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனம் செய்திருக்கும் அதேவேளையில், முல்லைத்தீவு நகரைச் சேர்ந்த மக்களை மாங்குளத்தில் குடியேற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க செயலகமும் மாங்குளத்துக்கு இடமாற்றம் செய்யப்படவிருக்கின்றது. தமிழிரின் பூர்வீக வாழ்விடங்களை அபகரிக்கும் திட்டத்துடன் சிறீலங்கா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை சர்வதேச நாடுகள் தட்டிக் கேட்கப்போவதில்லை.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் இதற்கு எதிராக குரல்களைக்கூட எழுப்பமுடியாதபடி ஆயுதமுனையிலான கடும் அச்சுறுத்தல்கள் அங்குள்ளது. எனவே, தமிழ் மக்களின் நில அபகரிப்பை தடுக்கவும், தடை முகாம்களில் நிரந்தர அகதிகளாக்கப்படும் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் புலம்பெயர்ந்த மக்கள் பலமாக எழவேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சி ஒன்றுதான் அந்த மக்களுக்கான வாழ்வை மீட்டுத்தரும்.

ஆசிரியர் தலைப்பு

Comments