திரு.செல்வராஜா பத்மநாதன் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை வழிநடாத்திச் செல்வார்

தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து இன்று விடுத்துள்ள அறிக்கையில்:

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

21 – யூலை – 2009.

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே,

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த கால கட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது. ஈடு செய்ய முடியாத – கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத – மிகப்பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் – தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமை – ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் – வரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ் தேசியத்தின் தலைவர். எமக்கு முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளி வந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட – நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டு-முடிவுக்கு அமைய – தேசியத் தலைவர் அவர்களால்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற் குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

எம் பெருந்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுளள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்த கட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

நன்றி

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


இவ்வண்ணம்,
நிறைவேற்றுச் செயற்குழு சார்ப்பாக,
திரு.சுரேஸ்(அமுதன்), திரு.ராம்.
தலைமைச் செயலகம்,

தமிழீழீழ விடுதலைப் புலிகள்.

Comments

Anonymous said…
Thalavarin pillaikal naangal irukiroom, thanthaiyin pathaiyai thodarvathu magalin uthesam ipothu illai eninun, thanthaiyin peyaraal nadakkum kuuththai anumathikka mudiyathu