தமிழர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிய சர்வதேசம் இந்தத் தேர்தலை அவதானிக்கிறது

மிக நீண்டகாலப் போராட்டம் அதனால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் அளவுகோலாகவே வடக்கில் நடைபெறும் உள்ளூராட்சிசபைத் தேர்தலை சர்வதேச சமூகம் அவதானித்து

வருவதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாதென வவுனியா நகர சபையின் தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளர் எஸ்.என்.ஜி.நாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், வன்னி பெருநிலப்பரப்பின் கொடிய யுத்தம் காரணமாக எமது மக்கள் தாம் தேடிய சொத்திழந்து, சுகமிழந்து, உடன்பிறப்புக்களையும் உறவுகளையும் இழந்து, குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டு, கையிழந்து காலிழந்து வார்த்தையில் வடிக்கமுடியாத துன்பக்கடலில் மூழ்கி, உயிருக்காக போராடிக்கொண்டு ஏக்கத்துடன் முகாம்களில் திறந்த வெளிச்சிறைச்சாலைக் கைதிகளாக ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி கண்ணீரும் கம்பலையுமாக அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் எம்மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு குட்டித் தேர்தலை விரும்பியோ விரும்பாமலோ சந்திக்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

எமது மக்களின் அவல வாழ்வுடன் பிள்ளைகளின் கல்வியும் பாழடிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே போகின்றோம் என்று மனக்கண்ணால்கூட எண்ணிப்பார்க்க முடியாத எல்லைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். என்றே சுயசிந்தனையாளர்கள் சிந்திக்கின்றனர்.

இவ்வேளையில் நாம் வேண்டுவது தேர்தலையல்ல. பட்டம் பதவிகளும் கேளிக்கைகளுமல்ல. மாறாக எமது மக்கள் முகாம் வாழ்விலிருந்து விடுபட்டு தத்தம் உறவுகளுடன் தாம் வாழ்ந்த தமது சொந்த இடங்களுக்குச் சென்று வளமுடன் வாழவழி சமைக்க வேண்டுமென்பதே. அத்துடன் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தன்னைத்தானே நிர்ணயித்துக்கொள்ளும் சுய நிர்ணய அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு அமைவான ஆட்சிமுறை அரசியல் சாசனத்தைக்கொண்ட அட்சியை ஏற்படுத்தி சகல இன மக்களும் சமமாக மதிக்கப்படும் தீர்வினை முன்வைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு நிரந்தர சமாதான சகவாழ்வை ஏற்படுத்த வேண்டும். இதுவே எமது வேணவா.

நாம் மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் உன்னத பணியை நிறைவேற்றுவதற்கு எம்மீது திணிக்கப்பட்ட இத் தேர்தலைப் பயன்படுத்தி எமது நிலைப்பாட்டினை இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏனைய அன்பு நெஞ்சங்களுக்கும் தெளிவுபடுத்துவோம்.

இற்றைவரை தமிழ் சமூகம் தனது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் கடந்த அறுபது ஆண்டுகளாக போராடி வந்துள்ளது.பாராளுமன்றத்திலும் வெளியிலும் சர்வதேச மட்டத்திலும் உரிமைக்காகக் குரல் கொடுத்துவந்துள்ளது. இதன் பயனாக இன்று ஐக்கிய நாடுகளும் சர்வதேசமும் குறிப்பாக இந்தியாவும் எமது மக்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிந்துள்ளனர்.

இற்றைவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திலும், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளை வழங்கவேண்டுமென்றும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்றும் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும், இந்தியாவும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.

தமிழ் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோலாகவே சர்வதேச சமூகம் இத்தேர்தலை உற்றுநோக்குகின்றது. இதற்கு நேர்மாறாக இலங்கை அரசு தான் நடத்திய இனப்படுகொலையை நியாயப்படுத்த இத்தேர்தலை பாவிக்க முயல்கின்றது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது.

தமிழ் மக்கள் என்றுமே சலுகைகளுக்கு பின்னால் ஓடியவர்கள் அல்ல. மாறாக அவர்களது அபிலாசைகள் சுயமரியாதையுடன் வாழவேண்டுமென்பதே. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இதுவரை தமிழர்களின் உரிமைகளுக்கான பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) கரங்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் எமது மக்களுக்கு உள்ளது. வெண்ணெய் திரண்டுவருகின்ற நேரம் தாழியை உடைத்துவிடாதீர்கள்.

அறிந்தோ அறியாமலோ அரசு எமது நாடியைப் பிடித்து பார்க்க துணிந்துவிட்டது. நாமும் சளைத்தவர்கள் அல்ல. இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) வெற்றிச்சின்னமான வீட்டுச் சின்னத்தை ஆதரித்து எமது நிலையை மீண்டும் ஒருமுறை அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்துவோம்.

இத்துடன் இத்தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்று வவுனியா நகர சபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால்,

1. நீர்விநியோகம், வடிகாலமைப்பு, வீதிகள் சீரமைப்பு, பிரதேச அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் ஆரோக்கியமான வாழ்வு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்து, பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்து நவீன நகரமாக்கி மாநகரசபை அந்தஸ்த்துக்கு உயர்த்த ஆவன செய்தல்.

2. பிரதேசத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து வளர்த்தல்.

3. பிரதேசத்தின் அமைதியையும் சமாதான சகவாழ்வையும் நிலைநாட்டி மக்களின் சுபீட்ச வாழ்வை உறுதிப்படுத்தித் தேசிய மட்டத்திலும் சமாதானத்தை அடைய பங்களிப்பு செய்தல்.

4. பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் சிக்கியுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி அவர்களை சிறப்பான சமுதாயக்கட்டமைப்புக்குள் உள்வாங்குதல்.

போன்ற சிறப்பான திட்டங்களை வகுத்து புத்தி ஜீவிகளின் ஆலோசனையைப் பெற்று நிர்வாகத்தை திறம்பட எடுத்துச் செல்வோம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments