கானல் நீராகப் போகும் அரசியல் தீர்வும் மாற்றப்படும் பிராந்திய பூகோள எல்லைகளும்

இலங்கை இந்திய அரசுகள் 1987 களில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமாக நடைமுறைப்படுத்த முயன்ற 13 ஆவது திருத்தச்சட்ட நடைமுறை சாத்தியமற்றது என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார். இந்தியா பெரிய நாடு. எனவே அதற்கு அதிகாரப்பரவலாக்கம் தேவை. ஆனால் இலங்கை சிறிய நாடு. அதற்கு அதிகாரப்பரவலாக்கம் சாத்தியமற்றது.

பொலிஸ், மற்றும் காணித்துறை அதிகாரங்களும் உகந்தவை அல்ல என தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு வழங்கப்போவதாகவும், அதற்கு விடுதலைப்புலிகளின் போரிடும் வலு தடையாக இருப்பதாகவும் அனைத்துலகத்தில் பரப்புரைகளை மேற்கொண்டு வந்த இலங்கை அரசுகள் தற்போது விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான கட்டமைப்புகள் கலைந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு என்ற தோற்றப்பாட்டை கலைத்துவிட முயன்று வருகின்றன.

முற்று முழுதாக மத்திய அரசிடம் அதிக அதிகாரங்களை ஒப்படைக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தைக் கூட இல்லாது செய்துவிடும் கைங்கரியங்களை தென்னிலங்கை அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் மெல்ல மெல்ல மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு சிறு உதாரணம் தான் பிரதம நீதியரசர் மேலே கூறிய கருத்தாகும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்ற போது சிங்கப்பூரின் அளவு தமிழ் மக்களால் கூறப்பட்ட தமிழ் ஈழத்தின் அளவை விட மிகவும் சிறியதாகும். சில வருடங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து சென்ற மொன்ரேநீக்குரோவின் அளவையும், மக்கள் தொகையையும் நாம் கருதினாலும் இவர்களின் கூற்றுகளில் உள்ள அரசியல் பின்புலங்கள் தெளிவாகப் புரியும்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் நோக்கம் மாகாணசபைகளை உருவாக்குவதற்கான அதிகாரங்களை வழங்குவதாகும். உருவாக்கப்படும் ஒவ்வொரு மாகாணசபைகளுக்கு உயர்நீதிமன்றங்களை உருவாக்கும் அதிகாரங்களும் உண்டு. தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் கொண்டுவரப்படும். ஏறத்தாழ 37 பிரிவுகளில் உள்ள அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

ஆனால் முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கும். உதாரணமாக தேசிய பாதுகாப்பு, வெளிவிவகாரம், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, ஒலிபரப்புஒளிபரப்பு, நீதித்துறை கட்டமைப்பு, தேசிய வருமானத்துறையின் நிதிப்பிரிவு, வெளி நாட்டு வர்த்தகம், சுங்கத்திணைக்களம், மாகாண சபைகளுக்கு இடையிலான வர்த்தகம், வான்போக்குவரத்து, தேசிய போக்கு வரத்து, கனிமப்படிவு அகழ்வு, குடிவரவு குடியகல்வு, குடியுரிமை, தேர்தல், கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல், தேசிய பண்பாடு, நதி, நீர்த்துறை, நீர்வளத்துறை, கடல் எல்லை ஆளுமை போன்ற மேலும் பல அதிகாரங்கள் மத்திய அரசிடமே உண்டு.

அதாவது மாகாண அரசுகள் அதிக அதிகாரங்கள் அற்ற ஒரு சம்பிரதாய கட்டமைப்பாகவே விளங்க முடியும். ஆனாலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கொண்ட மாகாணசபைகள் கூட மிகப்பெரும் அதிகாரங்களை கொண்ட தீர்வாக தென்னி லங்கையில் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றன. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பகிரப்படும் அதிகாரங்களை சிலர் இந்தியாவின் மாநில ஆட்சி முறைமைக்கும், பிரித்தானியாவின் அதிகார பரவலாக்கத்திற்கும் ஒப்பிடுகின்றனர். ஆனால் அந்த இரு அரசியல் கட்டமைப்புகளுடன் ஒப்பிடும் போது 13 ஆவது திருத்தச்சட்டம் வழங்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது.

அதாவது மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வேறுபாடாகும். பிரித்தானியாவின் அரசியல் கட்டமைப்பில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து என நான்கு மாநிலங்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களின் பொலிஸ்துறை, நாடாளுமன்றம் (இந்தியாவின் சட்டசபைக்கு ஒப்பானது), உள்நாட்டு வருமானம், நீதி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, வீடமைப்புத்துறை, பொருளாதார அபிவிருத்தி, சிறைச்சாலை நிர்வாகம், விவசாயம் என்பன மாநில அரசுகளிடம் தான் உண்டு.

நிதி, குடிவரவு , குடியகல்வு, வெளிவிவகாரம், தேசிய பாதுகாப்பு போன்றவை மத்திய அரசிடம் இருந்தாலும் நாணயங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு (நீங்கள் ஸ்ரேலிங் பவுன்ஸ் நாணயத்தில் பல வகைகளை கண்டிருப்பீர்கள், அதனை வெளிநாடுகளில் மாற்றுவதற்கும் சிரமப்படுவதுண்டு). வட அயர்லாந்தும் இத்தகைய அதிகாரங்களை கொண்டிருந்தாலும் அங்கு நிலவிவந்த இனமோதல்களினால் அதன் ஆட்சி அதிகாரங்கள் பல மத்திய அரசிடமே இருந்தன.

எனினும் 1998 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும், பிரித்தானியாவில் உள்ள மக்கள் ஒரு இனத்தின் பூகோள பாரம்பரியத்தை மதிக்கும் பண்பைக் கொண்டவர்கள். அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேய இனத்தவன் ஒருவன் ஸ்கொட்லாந்தின் தலைநகரமான எடின்பரோவையோ அல்லது அதன் வர்த்தக நகரமான கிளாஸ்கோவையோ இங்கிலாந்தின் பகுதி என உரிமை கோருவதில்லை.

அதாவது அங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராந்திய எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை யாரும் மாற்ற முற்படுவதில்லை. அதனைப் போலவே அங்கு ஆட்சிக்கு வரும் அரசியல் தலைவர்களும் தமது அரசியல் சுகபோகங்களுக்காக ஒரு இனத்தின் பாரம்பரிய கட்டமைப்பையோ அல்லது சரித்திரத்தையோ மாற்ற முற்படுவதில்லை. அதாவது ஒரு இனத்தின் பாரம்பரிய கட்டமைப்பையோ, அதன் வரலாறையோ அல்லது அந்த இனத்தின் பிராந்திய பூகோள எல்லைக்கோடுகளையோ அவர்கள் மாற்ற முற்படாதபோது அங்கு அதிகாரப்பரவலாக்கம் அதிக பலனைக் கொடுத்துள்ளது.

இந்தியாவை எடுத்துக் கொண்டாலும் அங்கு மாநில ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளது. பொலிஸ் அதிகாரங்களை கொண்ட மாநில ஆட்சிமுறையில் பல குறைபாடுகள் உள்ளன. அதாவது அங்கு மத்திய அரசிற்கு அதிக அதிகாரங்கள் உண்டு. மாநிலத்தின் ஆளுநர் பிரதமரின் பிரதிநிதியாகவே செயற்பட்டு வருகின்றார். மாநில அரசை கலைக்கும் அதிகாரங்களும் அவருக்கு உண்டு. மாநில அரசானது நிதி மற்றும் ஏனைய உதவிகளுக்கு மத்திய அரசையே சார்ந்துள்ளது.

எனினும் ஒரு வட இந்தியர் சென்னையை வடஇந்தியர்களின் பாரம்பரிய பிரதேசம் என உரிமை கொண்டாடுவதில்லை. அங்கும் ஒவ்வொரு இனத்தினதும் பூகோள எல்லைக்கோடுகளும், இன அடையாளங்களும் மாற்றமடையவில்லை. எனவே தான் குறைந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் அதிகாரப்பரவலாக்கம் அங்கு பலனைக் கொடுத்துள்ளது. எனினும் பிரித்தானியாவின் அதிகார பரவலாக்கத்திலும் பல குறைபாடுகள் உள்ளதாகவே கருதப்படுகின்றது. அதாவது அது இலங்கைக்குப் பொருந்தப்போவதில்லை.

ஏனெனில் மத்திய அரசின் நாடாளுமன்றத்தின் விகிதாசாரத்தில் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவம் குறைவானது. அதற்கு மாற்றீடாக சிறுபான்மை இனத்திற்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட இரண்டாவது சபை ஒன்று நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் இவ்வாறான கட்டமைப்புகள் இல்லை.

ஆனால் பிரேசில் மற்றும் அவுஸ்திரேலியாவில் உண்டு. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் மேலே குறிப்பிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள அதிகாரப் பரவலாக்கங்களை விட மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே மிகப் பெரும் நெருக்கடியாகக் கருதுகின்றது. தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதான தோற்றப்பாடுகள் வெளியுலகத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையில் தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை ஒன்று அனைத்துலக சமூகத்திற்கு முன் உள்ளது.

ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் ஏற்படுத்திய எழுச்சியின் பலம் அதிகமானது. அதனை புறக்கணிப்பதோ அல்லது அதனை புறந்தள்ளியவாறு அமைதியான தென்னாசிய பிராந்தியத்தை உருவாக்குவதே இயலாத காரியம். இந்த நிலையில் தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அதனைக் கூடக் கொடுக்க முடியாது என்ற கருத்துருவாக்கங்களை உருவாக்கும் முயற்சிகளில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தைக் கூட நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு முன்வரப்போவதில்லை என்ற கருத்துகளே வலுப்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் முகமாக இந்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற 1988களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு, கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிருந்தது. ஆனால் அதுவும் இல்லாது போய் விட்டது.

மீண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் இலங்கை அரசினைப் பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறானதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதிகாரப் பரவலாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவை செயலிழந்து போகும் நடைமுறைகளையும் அரசு பின்பற்றி வருகின்றது. அதாவது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தின் பூகோள எல்லைகளையும், இனவிகிதாசாரங்களையும் மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் இலங்கை இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனைத் தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்டக் கட்டளைத் தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயசூரிய இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஏனெனில், பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதிகளே இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு.

எனினும், ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரம நியமிக்கப்பட்டது நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள இலங்கை அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் இலங்கை அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இன விகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தனர்.

ஆனால் அன்றைய இலங்கை அரசு அதனை விவாதிக்கக் கூட முற்படாமல் குப்பைத் தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளை ஏவிவிட்டிருந்தது. சுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலம்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையை விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வைக் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதானப் பேச்சுகளுக்கான ஒரு திறவுகோல். அதனை வீணாக இழுத்தடிப்பதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப்புலிகளின் குறிக்கோளாக இருந்தது.

விடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இலங்கை அரசைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி செயற்பட்டு வருகின்றது.

அவற்றை எல்லாம் புறந்தள்ளி தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டுமெனில்

இலங்கை மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். அது தான் இந்துசமுத்திரப் பிராந்தியத் தின் அமைதிக்கு வழிகோலும்.

ஆனால் அதனை மேற்கொள்ளப்போவது யார்? மேற்குலகமா? அல்லது இந்தியாவா?

- வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி: வீரகேசரி (19.07.2009)

Comments