'' வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஓர் அடிப்படை விளக்கம் ''

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியில் உள்ள பண்ணாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று அழைக்கப்படுகின்றது.

தமிழீழ வரலாற்றில் மிக முக்கியமான தீர்மானமாகக் கருதப்படுகின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழீழ மக்களின் சுதந்திரமான வாழ்வு பற்றியும், தமிழீழம் என்ற தனித்துவமான அரசுபற்றியும் தெளிவான விளக்கத்தை உலகுக்கு அறிவித்தது.

மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. இலங்கைத் தமிழர்கள், தங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும், மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும், ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப் பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பலநூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனி வேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத் தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும், சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாக உள்ளனர் என இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது.

2. 1972 இன் குடியரசு, அரசியலமைப்பு, தமிழ் மக்களைப் புதிய காலணித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஒர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளது என்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப் பிரதேசம், மொழி, பிரசா உரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் ;மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்குச் சிங்களவர் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர் எனவும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றன எனவும் இம் மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

3. தமிழீழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக் கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களுக்கும், வேலை செய்கின்றவர்களுக்குமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன ஒவ்வாமைகளைக் கருத்திலே கொள்ளும் அதே வேளையில், ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறைமை பொருந்திய சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும், மீள உருவாக்குதலும் இந்நாட்டில், தமிழ்த் தேசிய இனம் உளதாய் இருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்கமுடியாததாகியுள்ளதென இம் மாநாடு தீர்மானிக்கின்றது.

மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:

1. தமிழீழ அரசு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன், இலங்கையின் எந்தப் பகுதியிலும் வசிக்கின்ற தமிழ்பேசும் மக்களுக்கும் தமிழ் பிரசாவுரிமையை விரும்பித் தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும், முழுமையான சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழீழத்தின் ஏதேனும் ஒரு சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்துக்கு உட்படாது இருத்தலை உறுதிப்படுத்தம் பொருட்டு, தமிழீழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

2. தமிழீழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக்கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தால் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.

3. தமிழீழ அரசில் உள்ள மக்கள் சார்ந்திருக்கக் கூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும், உதவியும் வழங்குகின்ற சமயச் சார்பற்ற ஒர் அரசாக இருக்க வேண்டும்.

4. தமிழ் அரசமொழியாக இருக்கவேண்டும், எனினும் தமிழீழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரீடான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

5. தமிழீழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும் சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைககளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி, மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ், அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழீழம் ஒரு சமதர்ம அரசாக இருக்கவேண்டும்.

இம் மாநாட்டில் செயற்குழுவுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை:

தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயற்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டும் எனத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம் மாநாடு பணிக்கின்றது.

இம் மாநாட்டில் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்:

சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும், இறைமையுள்ள தமிழீழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போராடும் படியும் பொதுவில் தமிழ் தேசிய இனத்துக்கும், குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.

தந்தை செல்வா அவர்களது தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமானது, ஈழத்தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் வாழ்வியல் அவலங்களில் உள்ள பல்வேறு இடர்களைத் தீர்ப்பதற்கும், தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்கும், தங்களது பாரம்பரியம் பிரதேசங்களில் தமது மொழி, கலை, பண்பாடு, கலாசாரம் என்பவற்றோடு தமக்குரிய அடையாளங்களைப் பேணித் தனித்துவமான இனமாக வாழ்வதற்குமுரிய முக்கியமான தீர்மானங்களைக் கொண்டதாகும்.

இந்த வகையில் நாம் இத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதும், இத் தீர்மானத்தை எல்லோரும் அறிந்து உணரும் வகையில் புரிய வைப்பதும் மிக அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.

தமிழ்த் தேசிய இனத்தின் தாயகத்தை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு இத்தீர்மானத்திலே கூறப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அனைத்துத் தமிழினமும் அணிதிரண்டு ஒற்றுமையாக உழைக்கவேண்டும்.

சம தர்ம தமிழீழம் அமைக்கப்பட்டு ஈழத்தமிழினம் அச்சமின்றி வாழ்வதற்கு வழிசமைப்பதற்காக, எமது இலக்கு எட்டப்படும் வரை ஓயாது போராடவேண்டும்.

இன அழிப்புச் செய்து, எம் இன அடையாளங்களை வேரோடு சாய்த்து, எமது பாரம்பரிய வாழ்விடங்களைப் பறித்து ஈழத் தமிழினத்தைத் திட்டமிட்டுச் சிதைத்து வருகின்ற இலங்கை அரசு செய்து முடித்த, செய்து வருகின்ற போர்க்குற்றங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்ப்டுள்ளன.

இந்த நிகழ்கால நிதர்சனத்தில், எம் இறைமையைப் பேணுவதற்கும், உரிமைகளைவிட்டுக் கொடாது வலிமையோடு தொடர்ந்து போராடுவதற்கும் இத் தீர்மானம் எமக்கு உணர்வூட்டுகின்றது. எமது இலட்சியப் பாதையைத் தெளிவுபடுத்துகின்றது. எமது விடியலுக்கான செய்தியை விரைவுபடுத்துகின்றது.

1976 இல் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம் இன்றை ஈழத்தமிழர் வாழ்வில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்மை பெறுகிறது எனில் காலத்தின் கட்டாய தேவையை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிப்போம்.

கிஷ்ணன்

Comments