தேசியத்தை பறைசாற்றப்போகும் தாயகத்தி்ன் தேர்தல்

ரிமை இழந்தோம்.உடமையை இழந்தோம்.உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...

பெரும்பாலான ஈழத்தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இப்பாடல் வரிகள்தான் இப்போது வவுனியா மற்றும் யாழ்ப்பாண தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


ஈழவிடுதலைக்கான ஆயுத போராட்டம் தோல்வியடைந்த நிலையில், மாற்றுதிட்டங்களை முன்வைத்து மக்களை வழிநடத்தி செல்லவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் தற்போது தமிழ்த்தேசிய சக்திகள் நிற்கின்றன.

TNA___Praba_-_3ஆயுதப்போராட்டம் மூலமே இனப்படுகொலை ஒன்றை தடுக்கமுடியும் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு, அந்த வழியை தேர்ந்தெடுத்த தமிழர்களின் சேனை அந்த பாதையில் பின்னடைவை சந்தித்துள்ளநிலையில்-

இன்று அதே ஆயுதப்போராட்டத்தை காரணமாக வைத்து மீண்டும் தமது மக்களை ஒரு மனிதப்பேரவலத்துக்குள் தள்ளிவிடக்கூடாது என்ற ஒரே நோக்குடன் தமது ஆயுதங்களை மெளனிக்கச்செய்துள்ளது.

சிறிலங்கா என்ற நாட்டின் இராணுவ வலுவோடு மட்டும்தான் விடுதலை போராளிகள் மோதவேண்டிய நிலை இருந்திருந்தால் தற்போது தமிழீழ தேசம் உருவாகியிருக்கும். ஆனால், நடந்துமுடிந்த போர் எவ்வாறான ஒரு சமச்சீரற்ற ஒழுங்கில் இடம்பெற்றது என்று யாவருக்கும் தெரியும். உலக வல்லாதிக்க போட்டிகளுக்குள் தமிழீழ விடுதலைப்போராட்டமும் இழுத்து செல்லப்பட்டபோது உலக நாடுகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரத்திற்கு முண்டுகொடுத்தன.

mps_meet_01இதனால் ஏற்பட்ட இராணுச் சமச்சீரற்ற நிலை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்டியெழுப்பட்ட விடுதலை இயக்கத்தின் இராணுவ கட்டமைப்புக்களை அழித்துச்சென்றிருக்கிறது. உலக இயங்கியலானது தர்மம் என்ற அச்சில் சுழலவில்லை என்பதற்கான இன்னொரு சான்றாக ஈழவிடுதலைப்போரின் தற்போதைய இறுக்கமான காலகட்டம் நிருபித்திருக்கிறது.

சுதந்திரத்திற்காக அவாவும் ஒரு தேசிய இனத்தின் அபிலாசைகளை இராணுவ வல்லாதிக்கம் மூலம் உடைத்துவிடலாம் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரத்திற்கு ஈழத்தமிழ் மக்கள் என்ன செய்யமுடியும்?

சுதந்திர தமிழீழ தனியரசை அமைக்க புறப்பட்ட தமிழீழ மக்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நகரசபை தேர்தல்கள் மூலம் எவற்றை சாதிக்கமுடியும்?

தமிழர் தாயகத்தில் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி கேள்விகள் இயல்பானவை. இவற்றை ஆழமாக கருத்திற்கொண்டு செயலாற்றவேண்டியத இன்றைய அவலம் நிறைந்த சூழ்நிலையிலும் தமிழ்மக்களின் கட்டாய கடமையாகியுள்ளது.

சிறிலங்கா அரசுக்கும் உலகநாடுகளுக்கும் இந்த தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தமது உரிமைகளை - தமது அபிலாஷைகளை - தமது கோரிக்கைகளை - தமது வலிகளை - அதனை தந்தவர்களின் சுயரூபத்தினை - தமது லட்சியத்தினை - தமது கொள்கைகளை மீண்டும் ஒலிக்கசெய்யவேண்டும்.அதுவே வரப்போகும் இந்த தேர்தலின் ஊடாக தமிழ்மக்களால் செய்யகூடிய பலமான பணியாக அமையும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனப்படும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தமிழர்களின் முழுமையான அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து இன்றுவரை செயற்பட்டுவருகிறது. ஒரு சில தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் சிலவேளைகளில் சிலருக்கு அவர்கள் மீதான சந்தேகத்தை உண்டுபண்ணலாம்.

ஆனால், அவர்கள் அனைவரும் தமிழர்களின் அடிப்படை கோட்பாடுகளான தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் அதற்காக அவர்களும் பல தியாகங்களை செய்திருக்கிறார்கள் என்பதையும் மறக்ககூடாது.

அதேவேளையில், சிறிலங்கா அரச - இராணுவ இயந்திரத்திற்குள்ளிருந்துதான் அவர்கள் தமிழ்மக்களுக்கான அரசியல் பயணத்தை முன்னெடுக்கவேண்டிய இக்கட்டான இடருக்குள் இருக்கிறார்கள் என்பதையும் அதற்குள் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தாயகத்தில் ஒரு பலமான தளத்தை உருவாக்கவேண்டிய தேவை உணரப்படவேண்டும். அதேவேளை அந்த தரப்பினரின் நடைமுறைச்சிக்கல்களையும் உணர்ந்து அவர்களை தேசியத்தின்பால் பணிபுரிய பலம் அளிக்கவேண்டும்.

எனவே, நடைபெறப்போகும் தேர்தலில் யாழ்ப்பாண மற்றும் வவுனியா பகுதியில் வாழும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்புத்தான் தமிழர்களின் இதுவரைகாலமும் நடத்திய போராட்டத்தின் நியாயதன்மையையும் போருக்குப்பின் உணர்த்திய வரலாற்று தீர்ப்பாகவும் இருக்கப்போகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணிலிருந்து ஒலிக்கப்போகும் அடக்கப்பட்ட இந்த மக்களின் குரல் இம்முறை தேர்தலின் மூலம் உலகின் மனச்சாட்சியை தட்டிக்கேட்கவேண்டும்.

Comments

உங்கள் தளத்தில் இடப்படும் இவ்வாறான கட்டுரைகள் உங்களால் எழுதப்பட்டவை என்ற தோற்றத்தைத் தருகின்றன.

இக்கட்டுரையை எழுதியவரின் பெயரோ, இக்கட்டுரை வெளியிடப்பட்ட வலைத்தளமோ இங்கே குறிப்பிடப்படவில்லை.

அப்படிச் செய்வதே எழுத்து அறமாகும். எனவே கட்டுரை வெளியிடப்பட்ட தளத்தையும் அதை எழுதியவரின் பெயரையும் குறிப்பிட்டு ஓர் இணைப்புக் கொடுங்கள்.
நன்றி உங்கள் கருத்திற்கு

ஆனாலும் சிலரின், சில தளங்களின் பச்சோந்தித் தனங்களாலும்

எழுதியவர்களின் உண்மை சுயரூபத்தை அறியாத வரை பிரசுரிக்க விரும்பவில்லை

தவிர பெரும்பாலான தளங்களில் வேறு ஒன்றின் பிரதியைத் தான் வெளியிடுகின்றார்கள்

ஆக உண்மையில் அதற்குரியவரோ அந்த தளமோ மறைந்து விடுகின்றது

இப்போதுள்ள நெருக்கடியில் தவிர்க்க விரும்புகின்றேன்

நாங்களே இவர்களை விளம்பரப்படுத்திவிட்டு பின்னர் பச்சோந்தி என்று எழுதவேண்டி உள்ளது