அமெரிக்காவின் உட்பிரவேசம் ஐ.நா மனித உரிமைச் சபையில் மாற்றங்களை ஏற்படுத்துமா?

ஐக்கிய நாடுகள் தனது ஆரம்பகாலத்திலிருந்து மனித உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து இயங்கிவருகிறது. இந்த அடிப்படையில் ஆரம்பத்தில் ஆணைக்குழு, உப - ஆணைக்குழு, அத்துடன் வேறுபட்ட குழுக்கூட்டங்கள் ஜெனீவாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. ஐ.நா. தனது முதலாவது மனித உரிமை பிரகடனத்தை வெளியிடுவதற்கு முன்னரே, மனித உரிமை ஆணைக்குழு 1947ம் ஆண்டு அவ்வேளையில் அமெரிக்கா ஜனாதிபதியான தி றூஸ்வெல்ட்டின் துணைவியார் திருமதி ஏலீனா றுஸ்வெல்ட் தலைமையில் கூடியது.

இம் மனித உரிமை ஆணைக்குழு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் தனது 62வது கூட்டத்தொடரை இறுதி அமர்வாக மேற்கொண்டது. இவ் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஐம்பத்திரண்டு (52) அங்கத்தவர்கள் ஐ.நாவின் பொருளாதார சமூக சபையில் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ் ஆணைக்குழுத் தெரிவானது வருடத்தில் ஒரு தடவை - அதாவது மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடுவது வழக்கம்.

இவ் ஆணைக்குழு உலகில் பல விடயங்களை சரியான முறையில் பார்த்தபொழுதும், அவையாவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதான ஒரு குற்றச் சாட்டைப் பெற்றுக்கொண்டது. அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலைக்கு இவ் ஆணைக்குழு சென்றதற்கான முக்கிய காரணம், அங்கு அங்கத்துவம் வகிக்கும் பல நாடுகள் தொடர்ச்சியாக அவ் ஆணைக்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டதே! இந் நிலையில் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனான் தான் பதவி வகிக்கும் வேளையில் இவ் ஆணைக்குழுவில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

அம்மாற்றங்களின் அடிப்படையில் ஆணைக்குழு என்ற பெயர் சபையாக மாற்றப்பட்டதுடன், அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாற்பத்து ஏழாகக் (47) குறைக்கப்பட்டதுடன், ஓர் அங்கத்துவ நாடு இரு தடவைக்குமேல் ஐ.நா. மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் பெறமுடியாது என்ற நிபந்தனையும் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆரம்ப காலத்திலிருந்து, 2002ம் ஆண்டு தவிர்த்து இறுதிவரை, தனது அங்கத்துவத்தை இவ் ஆணைக்குழுவில் அமெரிக்கா பேணிவந்துள்ளது.

இதற்கு பல பல காரணங்கள் உண்டு. 1990ம் ஆண்டிற்கு முன் அமெரிக்கா சோவியத் ஒன்றியம் ஆகிய பிரிவுகள் உலகில் பெரும்பான்மையான நாடுகளை தம்வசம் கொண்டிருந்தாலும், அவற்றில் சிலநாடுகள் மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்டிருந்தாலும், இவற்றை ஐ.நா.வின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மட்டுமின்றி முன்னைய சோவியத் ஒன்றியம், சீனா, கியூபா, இந்தியா, பாகிஸ்தான் போன்று பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் நிரந்தர அங்கத்தவர்களாக மாறியிருந்தார்கள்.

ஆனால் 1990ம் ஆண்டு உலக முறையில் மாற்றம் ஏற்பட்ட பின்னர், இவ் இரு அமெரிக்கா சோவியத் ஒன்றியம் என்றமுறை மாறி, பொருளாதார வளம் கொண்ட நாடுகள், மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் பேணும் நாடுகள், மனித உரிமையை கடுமையாக மீறும் நாடுகள் எனப் பிரிவுகள் ஏற்பட்டன. இந்த அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் சீனா, ரஷ்யா, கியூபா தலைமையிலான மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடுகளின் கைகளுக்கு மாறியது.

அமெரிக்காவின் ஜனாதிபதி திரு. ஜோர்ச் புஸ்சின் பதவிக்காலத்தில் இப்படியாக போட்டிக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில், முதல் முதலாக 2002ம் ஆண்டு அமெரிக்கா தனது அங்கத்துவத்தை ஐ.நா. ஆணைக்குழுவிற்கான தேர்தலில் இழந்தபோதிலும் பல் வேறுபட்ட ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து, மீண்டும் 2003ம் ஆண்டு தனது அங்கத்துவத்தை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவின் அங்கத்துவம் எப்பொழுதும் கியூபா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பெரும் நெருக்கடிகளையும், இறுகிய போட்டிகளையும் தொடர்ச்சியாகக் கொடுத்திருந்தது.

ஐ.நா. மனித உரிமைச் சபைதிரு.கோபி அனானினால் சிபார்சு செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு செயலிற்காக ஐ.நா. மனித உரிமைச்சபை 2006ம் ஆண்டு யூலை மாதம் உதயமாகிற்று. இதில் முக்கியம் என்னவெனில், இம் மனித உரிமைச்சபை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று 2009ம் ஆண்டு யூலை வரை அமெரிக்கா இச்சபையில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. இவ் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கியூபா, சீனா, ரஷ்யா தாம் நினைத்தவற்றையும், தமது தோழமை நாடுகளின் மனித உரிமை மீறல்களையும் இச்சபையில் மூடி மறைத்து ஐ.நாவின் தண்டனையிலிருந்து பாதுகாத்து வந்துள்ளது.

இதற்கு நல்ல உதாரணமாக சிறீலங்கா விளங்குகிறது. கடந்த மே மாதம் ஐ.நா மனித உரிமைச் சபையினால் சிறீலங்கா பற்றி பரிசீலிக்க கூட்டிய கூட்டத்தொடரை கியூபா, சீனா, ரஷ்யா அத்துடன் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முன்னின்று சிறீலங்காவை சர்வதேச தண்டனையிலிருந்து காப்பாற்றினார்கள். அவ்வேளையில் அதேசபையில் அங்கம் வகிக்கும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளால் மனித உரிமையை மீறும் நாடுகளால் மனித உரிமையை மீறும் நாடுகளின் குழுவை எதிர்த்து வாக்குச் சேர்க்கும் நிலையைப் பெற்றிருக்கவில்லை.

ஆனால் அமெரிக்கா தனக்கென தனது வல்லமையினால் ஆசியா, ஆபிரிக்கா நாடுகளிடையே தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் எதிர்காலத்தில் ஐ.நா. மனித உரிமைச் சபையில் ஆசியா, ஆபிரிக்கா நாடுகளின் பெரும்பான்மை வாக்குப் பலம் பிரிவடையும். சில ஆசியா, ஆபிரிக்கா நாடுகள் வாக்களிப்பில் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்ளும் பட்சத்தில் கியூபா, சீனா, ரஷ்யாவுடன் இணைந்துள்ள மனித உரிமை மீறும் நாடுகள் நிச்சயம் ஐ.நா. மனித உரிமைச் சபையில் பெரும் கடினங்களுக்கு உள்ளாகும்.

அமெரிக்கா, சிறீலங்கா விடயத்தில் தனது அக்கறையை, கடந்த இரு மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்களென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினதும், வெளிவிவகாரச் செயலாளர் திருமதி கிளாரி கிளின்டனின் சர்வதேச பார்வைகள் திரு. ஜோர்ச் புஸ்சின் போக்கைவிட வேறுபட்டது என்பதை யாவரும் நன்கு அறிவோம்.

-ச. வி. கிருபாகரன்.

நன்றி: ஈழமுரசு

11.17.2009

Comments