வலை வீசும் இந்தியாவும் புலம் பெயர் தமிழ் மக்களும்

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியம் மாறாது என்பது பொதுவான கூற்று.ஒரு இலக்கினை அடைவதற்கு, பலவிதமான அரசியல் செயற்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப்படும். அடக்கு முறையாளன் அரசாக இருக்கும்போது, இராணுவ ஒடுக்குமுறையானது, போராடும் மக்கள் மீது ஏவிவிடப்படும் என்பது உலக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஒரே தேசிய இனத்தினுள் சாதீய முரண்பாடு, மத முரண்பாடுகள் வெடிக்கும்போது, வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. சமூகக் கட்டமைப்பிலுள்ள வர்க்க நிலை சார்ந்த முரண்நிலைகள் கூர்மையடைந்து, மோதல்களை உருவாக்கும்.

ஆனாலும் இத்தகைய முரண் நிலைகளையும் மீறி, பெருந் தேசிய இனவாதம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைகள், முதன்மையுறும்போது, தேசிய இன விடுதலைப் போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக மாற்றமுறுகிறது.

அதற்குத் தலைமை தாங்கி, அறவழியைத் தேர்ந்தெடுத்தவர்கள், தமது போராட்டங்களை அடுத்த படிநிலைக்கு நகர்த்த முடியாமல் திணறும் போது, ஆயுதப் போராட்டப் பாதை திறந்து விடப்படுகிறது.

இது வரலாற்றின் தவிர்க்க முடியாத இயங்கியல் நியதி. இதுவரை உலகில் நிகழ்த்தப்படும் யுத்தங்களும், போராட்டங்களும் இதனையே வெளிப்படுத்துகின்றன.

ஆனாலும் ஈழ விடுதலைப் போராட்டமென்பது வெறுமனே சிறீலங்கா என்கிற எல்லைக்குள் அடைத்துப் பார்க்கப்படும் விவகாரமல்ல. இந்தியத் தலையீடு இதனை உணர்த்தும்.

கெரில்லாப் போராட்டமாக பரிணமித்த வன்முறை எதிர்ப்பியக்கம், மரபுவழி படைக்கட்டமைப்பாக விரிவடைவதும், அதனை எதிர்கொள்ள பிராந்திய நலன் தேடும் ஏகாதிபத்தியங்களின் உள் நுழைவையும், ஆதரவையும் ஒடுக்கும் அரசு அனுமதிப்பதும் எதார்த்தமான விடயந்தான்.

சந்தை நலன், கேந்திர முக்கியத்துவமிக்க மையம் குறித்த நலன் போன்ற விடயங்கள், இந்த ஏகாதிபத்தியங்களை சிறீலங்கா விவகாரத்தில் தலையிட வைக்கின்றன.

1981 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள், நேரடியாகவும் திரைமறைவாகவும் மேற்கொண்ட மோதல்கள், இலங்கை - இந்திய ஒப்பந்தம், ரணில் - பிரபா உடன்படிக்கை ஊடாக வெளிப்பட்டது.

ஆனாலும் அறவழிப் போராட்ட காலத்தில் சர்வதேச மயப்படாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமானது, ஆயுதப் போராட்ட காலத்திலேயே உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டது.

அதேவேளை சர்வதேச முற்போக்குச் சக்திகளின் ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்கள், சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்கிற காத்திரமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்குலகை வென்றெடுத்தால், ஈழ விடுதலை சாத்தியமாகுமென்கிற கணிப்பு, மிகத் தவறான தென்பது தற்போது புரியப்படுகிறது.

அதேபோன்று, இந்தியாவின் அனுசரணை இருந்தால், தனிஈழம் சாத்தியமென்கிற அங்கலாய்ப்பும் தவறானது.

இன்னமும் எம்மில் பலர் இந்தியாவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை.

சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர, ஈழவிடுதலைப் போராட்டத்தை, ஒரு துருப்புச் சீட்டாகவே இந்தியா பயன்படுத்துகிறது. விடுதலைப் புலிகள் அதற்கு உடன்பட்டு ஒத்துப்போக மறுத்ததால் 87 இல் அழிக்க முற்பட்டார்கள். ராஜீவின் மர்மக் கொலையூடாக, புலிகளைச் சர்வதேசப் பயங்கரவாதிகள் ஆக்கினார்கள்.அதனையும் மீறி மேற்குலக அனுசரணையில் இரணிலுடன் ஒப்பந்தம் செய்தாலும், மகிந்தர் மூலம் அந் நகர்வினை முறியடித்து, புலிகளின் மரபுசார் படைவலுவை தற்போது அழித்துள்ளார்கள்.

ஆனாலும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டார்களாவென்பதை களநிலையில் இனிமேல் ஏற்படப்போகும் மாற்றங்களே வெளிப்படுத்தும். இவை தவிர, தமது பிராந்திய நலனிற்குள் ஒத்திசைவாக இயங்க மறுக்கும் விடுதலைப் புலிகளை, வேரடி மண்ணோடு அழிக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிச்சயம் மேற்கொள்ளும்.

அதற்கான சதிவேலைகளை இந்தியா முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தாயக, புலம்பெயர் மக்களின் ஆதரவினைச் சிதைக்கும் வகையில் உளவியல் பரப்புரைகளையும், பிளவுகளையும் மிக நுட்பமாகத் திட்டமிட்டு மேற்கொள்கிறது.

அதேவேளை பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவின் காலூன்றலை முறியடிக்க, புதிய தமிழ் ஆயுதக் குழுக்களை உருவாக்கவும் இந்தியா முயற்சிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரானவர்களையும், அதிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் தமது நலனிற்காகப் பயன்படுத்திய நிகழ்வுகள் பலவுண்டு.

தற்போதைய சூழ் நிலையில், அவ்வாறான தேவையன்று இந்தியாவிற்கு இருக்கிறது.

விடுதலைப் புலிகள் அல்லாத மாற்றுக் குழுவொன்றினை வளர்த்திட வேண்டிய அவசியம் குறித்து, மகிந்தர் மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்த நாட்களிலிருந்து இந்தியா, அக்கறை செலுத்தி வந்துள்ளது.

தனது காலடியில் சீனா தளம் அமைக்காமல் தடுக்க வேண்டுமாயின், தொடர்ச்சியான உள்நாட்டு அச்சுறுத்தலொன்று சிங்க
ளத்தின் மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவின் நுழைவினைத் தடுக்க, விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களை எவ்வாறு இந்தியா பயன்படுத்தியது என்பதை 80 களில் கண்டோம். இதில் இடதுசாரிப் போக்குக்கொண்ட என்.எவ்.எப்.டி (NLFT) விதிவிலக்கு.

தற்போதைய சூழ்நிலையில் மகிந்தரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ்க் குழுக்களைத் தம்பக்கம் இழுத்தெடுக்க இந்தியா
வால் முடியாது. தனித்துப் போட்டியிட முயன்ற டக்ளஸ் தேவானந்தாவை, மகிந்தர் தன்னோடு இணைத்துக்கொண்ட நிகழ்விலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம்.

சேர்ந்து போட்டியிடாவிட்டால், மக்கள் அறிந்த ஒருவரை என்னோடு இணைத்து, உமக்கு எதிராகப் போட்டியிட வைப்பேனென்று மகிந்தர் போட்ட அதிரடியால் டக்ளஸ் மருண்டு போனதாகத் தகவல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், சில நாடாளுமன்ற உறுப்பினர்களோடு விருந்துண்டு, பிளவுகளை ஏற்படுத்தவும் மகிந்தர் முயற்சிக்கிறார்.

சிங்களம் மிகத் தெளிவாகத்தான் இருக்கிறது. வன்னி வதை முகாம்களில் வாடும், மக்களின் துயரங்கள் குறித்து எதிர்க்கட்சி பிரமுகர்கள் விடுக்கும் கூக்குரல்கள் யாவும் அரசியல் அதிகாரம் சார்ந்தது.

இவர்கள் விடுக்கும் ஊடக அறிக்கை பற்றி மகிந்தர் அதிகம் கவலைப்படவில்லை. யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து அவர் படிப்படியாக மீண்டு வருகின்றார். நம்மவர் மத்தியில் புலம்பெயர் நாட்டில் நடைபெறும் இழுபறிகள், அதற்குத் துணைசேர்க்கின்றன.

அதேவேளை தாயகத்தில் இனி எந்தப் போராட்டங்களும் சாத்தியமில்லை என்கிற வகையில், ஏகாதிபத்திய மனோநிலைப் பரப்புரைகள், முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலிற்குப் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் இவ்வுலகில் ஏற்பட்டுவிட்டன. உலகப் பொருளாதாரச் சீரழிவினால் புதிய மாற்றங்களும், இரு துருவ நிலையும் உருவாகின்றன.

ஏகாதிபத்தியங்களின் துணையோடு விடுதலையை வென்றெடுக்கலாம் என்கிற கருத்துநிலை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

-இதயச்சந்திரன்

ஈழமுரசு(24-07-09)

Comments