இலங்கை இனப்பிரச்சினையும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்


இலங்கைத் தமிழர்கள், இலங்கை இனப்பிரச்சினையை இந்தியா எப்படிக் கையாளுகிறது என்பதை அறிவதற்கு முதலில் அதன் வெளிறவுக் கொள்கை என்னவென்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் சரியான புரிதலோ அல்லது தெளிவோ இல்லாதுபோனால் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளை வளர்த்து பின் அவை நிறைவேறாத சந்தர்ப்பத்தில் பெருத்த ஏமாற்றத்தை அடைய நேரிடலாம்.

அண்மையில் தமிழ் ஊடகங்களில் இனப்பிரச்சினையில் இந்திய அணுகுமுறை பற்றிய அலசல்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன.

இதில் சில இந்தியாவின் மெத்தனப் போக்கைக் கண்டிப்பனவாகவும் இருந்தன.

இந்த விமர்சனங்கள் இந்தியாவின்பால் இலங்கைத் தமிழர் சிலருக்கு ஏற்பட்ட சினத்தையும் விரக்தியையும் பிரதிபலிப்பனவென்றும் கூடச் சொல்லலாம்.

இந்திய வெளியுறவுக் கொள்கை பண்டிதர் நேருவால் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே ஓரளவு வரையறை செயப்பட்டுவிட்டது. இந்தக் கொள்கை காலனித்துவ ஆட்சிக்கான எதிர்ப்பையும் மூன்றாம் உலக நாடுகளின் ஒற்றுமையையும் ஜனநாயக சோஷலிச சித்தாந்தத்தையும் வலியுறுத்துவதாக அமைந்தது.

இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போரின் காரணமாக மேற்குலக முதலாளித்துவ நாடுகளும் சோஷலிச நாடுகளும் இரு பெரும் அணிகளாக பிரிந்திருந்தவொரு காலகட்டத்தில் எந்தவொரு அணியின் பக்கமும் சாராத அணிசேராக் கொள்கையை முன்வைத்து அதை பல நாடுகளையும் தங்களது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக ஏற்றுக்கொள்ள வைத்ததோடு மட்டுமல்லாமல் அந்நாடுகளின் தலைமைத்துவத்தையும் இந்தியா ஏற்றுக்கொண்டது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் அணிசேராக் கொள்கையை வகுப்பதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும் அப்போதிருந்த இலங்கைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவும் அவருக்குப் பின் வந்த பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போன்ற தலைவர்களும் தங்களது பங்களிப்பை அதிகம் செதிருக்கிறார்கள். அதிலும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக வந்த பின் இந்திரா காந்தி அம்மையாரோடு தனிப்பட்ட முறையிலும் நட்புறவை வளர்த்துக் கொண்டார். தனது அண்டை நாடுகளில் வெளியாரின் தலையீட்டையும் அவை எந்தவொரு வல்லரசுடனும் சார்கின்ற நிலையையும் இந்துமாக் கடலில் வல்லரசுகளினதும் அல்லது வேறு நாடுகளின் ஆதிக்கம் வலுப்பெறுவதையும் இந்தியா எக்கால கட்டத்திலும் விரும்பியதில்லை. அவற்றை தனது மேலாதிக்கத்திற்கெதிரான சவால்களாகவே கருதியது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ஆரம்பத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் சரியாக புரிந்து வைத்திருந்தனர். அதனால் அவர்கள் இந்த நிலைப்பாட்டிற்கு எப்பொழுதும் அனுசரணையாகவேயிருந்தனர் எனலாம். எந்தக் காரணம் கொண்டும் அவர்கள் இந்திய நலனுக்கெதிரான செயற்பாடுகளில் அப்பொழுது இறங்கவில்லை.

சீனாவுடன் நட்புறவை அதிகம் வளர்த்துக்கொண்டாலும் அது ஓரளவிற்குமேல் இந்தியாவை எதிர்கொள்வதற்கு உதவாதென்பதையும் அவர்கள் அறியாமலில்லை.

அப்படியிருந்தும் கூட இந்திய இலங்கை உறவில் சில சமயங்களில் முரண்பாடுகள் ஏற்படாமல் போகவில்லை.

முதலில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் இந்த நிலைப்பாட்டில் சில பின்னடைவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

அவர் ஆட்சிச் காலத்தல் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் உச்சக் கட்டத்தை எட்டியிருந்தது. அதேநேரம், அமெரிக்காவின் ஆதிக்கமும் ஓங்கியிருந்தது. இந்நேரத்தில் ஜே.ஆர். மேற்குலக நாடுகளுடனான தனது நட்புறவை பலப்படுத்த விரும்பினார். அந்நாடுகளின் ஜனநாயக வழிமுறைகளும் பொருளாதார முன்னேற்றங்களும் அவரை பெரிதும் கவர்ந்திருந்தன.

இந்த நெருக்கமான உறவுகள் மேற்குலக நாடுகளுடன் இராணுவ ரீதியிலான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை அவருக்கு உண்டாக்கிக் கொடுத்தது.

அப்பொழுதிருந்த வல்லரசுகளுக்கிடையான போட்டிச் சூழலில் இந்த உறவுகளின் விளைவுகள் தனக்கெதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

தெற்காசியாவின் பாதுகாப்பு இந்தியாவை மையமாகக் கொண்டிருந்தாலும் அப்போதைய பாகிஸ்தான் அரசு அமெரிக்காவையும் சீனாவையும் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய நாடுகளாகக் கருதி அவற்றோடு பல பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் செதுகொண்டது.

மற்றைய தெற்காசிய நாடுகளும் இந்தியாவை மையப்படுத்தி தங்களுடைய பாதுகாப்பைப் பலப்படுத்த விரும்பின.

ஆனால், இந்தியாவோ தெற்காசிய பிராந்தியத்திற்குள்ளான ஒரு கட்டமைப்புக்குள் தனது அண்டை நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பியது.

இதனால் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகள் சிலவற்றுக்குமிடையே உரசல் போக்கு அவ்வப்போது தலைதூக்க ஆரம்பித்தது. இந்த நாடுகளோடு இலங்கையும் சேர்ந்து கொள்ளக்கூடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு ஏற்படலாயிற்று.

அப்பொழுது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இந்த உரசல்போக்கான நடவடிக்கைகளை விரும்பவில்லை.

பல சமயங்களில் இந்திரா இதனை வெளிப்படையாகத் தெரிவித்தும் ஜெயவர்தனவும் அரசாங்கத்தில் இருந்த அவருடைய நெருங்கிய சகாக்களும் இந்தப் போக்கை மாற்றுவதில்லையென விடாப்பிடியாக இருந்தனர். இந்தியாவின் எதிர்ப்பை அவர்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இது இந்தியாவுக்குக் கவலை அளிக்கக்கூடிய விடயமாக மாறத்தொடங்கியது. இதன் விளைவுகள் இந்திய இலங்கை உறவிலும் பிரதிபலிக்கத் தொடங்கின.

இவ்வேளையில்தான் இலங்கை இனப்பிரச்சினையும் விஸ்பரூபம எடுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் ஜூலை 83 கலவரத்தால் உச்சக் கட்டத்தை அடைந்தது.

தமிழ் நாட்டில் இந்தக் கலவரம் பெரும் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதனால் பெரும் விசனத்துக்குள்ளாகி தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள அரசாங்கங்களையும் அதிலும் குறிப்பாக இந்திய அரசாங்கத்தையும் இதில் உடனடியாகத் தலையிடுமாறு வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்கள்.

அதுவரை காலமும் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக அக்கறைகாட்டாது ஒதுங்கியிருந்த இந்திய ஆட்சியாளர்கள் தம்நாட்டு மக்களை ஓரளவு அமைதிப்படுத்துவதற்காகவும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் போக்கை மட்டுப்படுத்துவதற்காகவும் இலங்கை இனப்பிரச்சினையில் அக்கறை காட்டத் தொடங்கினர்.

அதேசமயம், இலங்கைத் தமிழர்களும் தாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை முன்வைக்கும் என எதிர்பார்த்தனர். இந்தப் பிரச்சினை பின்னர் எப்படியெல்லாம் உருமாறி கடைசியில் ராஜிவ்ஜெயவர்தன உடன்படிக்கையில் முடிவடைந்ததென்பதை இங்கே விபரிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தக் காலகட்டங்களில் மேற்குலக நாடுகள் இந்தியாவின் இனப்பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளில் அதிக அக்கறை காட்டாமல் அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவே செயல்பட்டனர். இதற்கு அப்பொழுது உலக அரங்கில் நிலவிய பனிப்போர் சூழ்நிலையும் ஒரு காரணியாக அமைந்தது.

இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமென்னவென்றால் ராஜீவ்ஜெயவர்தன உடன்படிக்கையின் பின்னர் இந்தியாவின் நலன்களுக்கெதிரான அணுகுமுறையை இலங்கை கைநழுவிவிட்டதென்பதாகும்.

பதிலுக்கு இந்தியாவும் இலங்கையோடான தனது காட்டமான அணுகுமுறையை தளர்த்தியதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கின்ற காப்பாளனாகவும் மாற்றம் கண்டது.

அந்நேரம் இலங்கையில் தன் அமைதிப்படையை நிலைகொள்ளச் செதிருந்த இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான ஒரு யோசனையை முன்வைத்தது. அதேநேரம் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு நேரா வண்ணம் தான் முன்வைக்கும் யோசனைகள் இருக்க வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்தியது.

ஆனால், இந்த யோசனைகளும் அதன் அடிப்படையில் ஏற்பட்ட தீர்வும் அப்பொழுது அரசாங்கத்திலிருந்த சில தீவிரவாதிகளாலும் சில தமிழ் போராட்டக் குழுக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தில் ஆரம்பித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மேற்குலக நாடுகளின் குறிப்பாக நோர்வேயின் ஈடுபாட்டுடன் தொடர்ந்து இன்று விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான பாரிய மோதலில் போ முடிவடைந்திருக்கிறது.

இந்த நிகழ்வுகள் எல்லாம் இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பவர்களுக்கு பெரும் சவால்களாக அமைந்திருந்தன. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஐரோப்பிய நாடுகளின் உந்துதலுக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆளாக வேண்டியிருந்த கால கட்டத்தில் இந்தியா இதில் ஒரு பார்வையாளனாகவே இருந்துவந்தாலும் நேரடியாகக் குறுக்கிடவில்லை.

சமாதான உடன்படிக்கைகள் முறிகின்ற வேளைகளில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுகின்ற ஆயுதப் போராட்டங்களின்போது பெருந்தொகையான மக்கள் உள்நாட்டிலே அகதிகளாகின்ற அவல நிலையும் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதும் உடைமைகளை இழப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி இன்று பெரியதொரு சீரழிவிற்கு இட்டுச் சென்றுள்ளது. விடுதலைப் புலிகளை அழித்தொழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இன்று நாட்டின் வடக்கில் நிலவும் அவல நிலைக்கு இராணுவத்தினதும் விடுதலைப் புலிகளினதும் மோதல்கள் மட்டுமன்றி வெளிநாடுகளும் அதிலும் குறிப்பாக இந்தியாவும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்தனவென்ற குற்றச்சாட்டுகளுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகவேண்டியிருந்தது. குறிப்பாக, தமிழ் ஊடகங்கள் இந்தியாவிற்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவமளித்தன.

இதேபோலத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் உணவுப் பொட்டலங்களைப் போடுவதற்கு இலங்கையின் வான் பரப்பிற்குள் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்த போதும் பின்னர் இந்திய அமைதிப்படை இலங்கையில் வந்திறங்கியபோதும் சிங்கள ஊடகங்கள் இந்தியாவிற்கெதிரான தங்கள் கண்டனங்களை பெரியளவில் வெளிப்படுத்தின. இதில் யார் சரி யார் தவறு என்று ஆராவதல்ல இக்கட்டுரையின் நோக்கம்.

இந்திய வெளியுறவுக் கொள்கை அதுவும் இலங்கையைப் பொறுத்தவரை அதன் கொள்கை என்னவென்பதை ஓரளவு புரிந்துகொள்ள முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கம். அதனால் சில நிகழ்வுகளை இங்கே பின்நோக்கிப் பார்க்க வேண்டியதாயிற்று.

வல்லரசுகளாயினும் சரி, மற்றைய நாடுளாயினும் சரி தங்கள் வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ளும்போது முதலில் தங்கள் தேச நலன்களையே அதிகம் கருத்தில் கொள்கின்றன. தங்கள் நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம், தங்கள் நாட்டு வளங்களை அபிவிருத்தி செதல் வெளிநாட்டு உள்நாட்டு வியாபாரம் போன்றவற்றைத் தங்கள் தேச நலன்கள் என்று கருதுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் அது தனது பாதுகாப்பிற்கெதிரான எந்தச் செயலையும் தனது பாதுகாப்பின் வலயம் என்று கருதுகின்ற பிராந்தியத்திற்குள் அனுமதித்ததில்லை. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியின் அல்லது சுயாதீன குழுவின் அத்துமீறல்களையும் பொறுத்துக் கொள்ளவில்லை. அவற்றை முறியடிக்கும் விதமாகவே அது செயல்பட்டது. இது அதன் பாதுகாப்புக் கொள்கையின் முக்கியமான அடிப்படைத் தத்துவம். இதுவே அதன் வெளியுறவுக் கொள்கையிலும் பிரதிபலிப்பதை நாம் அவதானிக்கலாம். அதேநேரத்தில் தனது தேசத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய செயல்பாடுகள், அவை தூர உள்ள நாடுகளிலிருந்தோ அல்லது அண்டை நாடுகளிலிருந்தோ அல்லது உள்நாட்டிலிருந்தோ வந்தாலும் சரி அவற்றை அகற்றும் நடவடிக்கைகளிலேயே அது தன் முழுக் கவனத்தையும் செலுத்துகின்ற தன்மையை நாம் அவதானிக்கலாம்.

இதைத்தான் இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா நாடுகளும் செய முற்படுகின்றன. அவை தங்கள் அண்டை நாடுகளில் மட்டுமல்லாமல் தமக்கு வெகு தூரத்தில் உள்ள நாடுகளிலும் தங்கள் நலன்களைக் காப்பாற்றுவதற்காக அந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற வல்லரசுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் எதற்காக தனது படைகளை இவ்வளவு காலமாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. அதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆசியப் பிராந்தியத்தில் வியட்நாம், கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளான சேர்பியா, பொஸ்னியா போன்ற நாடுகளிலும் அதன் இராணுவ ரீதியிலான தலையீடுகள் இருந்ததென்பதை உலகறியும். இன்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தனது எண்ணெ வளங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் ஸ்ரேலுக்கு அனுசரணையாகவே அது நடந்துகொள்கிறது. அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் எவற்றை தமது தேசிய நலன்கள் என்று கருதுகிறார்களோ அவற்றைப் பாதுகாப்பதற்கு வேண்டி அவர்கள் நடவடிக்கைகள் இந்த தலையீடுகள்.

இந்தத் தலையீடுகளால் பல அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள் என்பது வேறு விடயம். அதேநேரத்தில் அமெரிக்கா உலகின் வலிமை பொருந்திய ஜனநாயக நாடு என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. தனி மனித சுதந்திரத்தைப் பேணிக் காப்பதிலும் அது பின் நிற்கவில்லை. அது தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி தன் நாட்டின் பொருளாதார வளத்தையும் அது அபிவிருத்தி செதுள்ளது. இந்தப் பொருளாதார அபிவிருத்தியை எப்படி முன்னெடுத்துச் செல்கிறது. அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் என்னவென்பதில் பலருக்கும் கருத்து வேற்றுமைகள் உண்டு. இந்தியாவும் ஆரம்பத்திலிருந்தே ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றி வரும் நாடாகும்.

இன்று பொருளாதார வளத்திலும் அது நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உலகின் வல்லரசாக வரக்கூடிய தகைமைகளை அது அதிகளவில் பெற்றுள்ளது. பல மொழிகள், பல சமயங்கள் கோடிக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்டவொரு நாட்டில் பெரும்பான்மையினரென்றும் சிறுபான்மையினரென்றும் அரசாங்கத்தினால் பேதம் பாராட்டப்படாத ஆட்சிமுறையும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் மத்தியில் வலுவானதொரு அரசாங்கத்தையும் மாநிலங்களில் உள்ள மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெயக்கூடிய அரசியல் அமைப்பும், இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிசெயப்பட்டிருப்பதால் அவ்வப்போது ஏற்படுகின்ற இனச்சிக்கல்களையும் மொழிச் சிக்கல்களையும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் அது தீர்ந்து வந்துள்ளது.

காஷ்மீர் போன்ற பிரச்சினையில் வெளியாரின் தலையீடுகளை அது கூடியவரை எதிர்த்து வந்தாலும் அதேவேளை மக்கள் தங்கள் கருத்துகளைக் கூற அது மாற்றுக் கருத்தாகவிருந்தாலும் போதிய சுதந்திரம் கொடுத்துள்ளதென்பதை நடு நிலையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் ஏற்படுகின்ற இனச் சிக்கல்கள் தன்தேசத்தின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க இந்தியா ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை. இன்று இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியாவுடனான முரண்பாடுகள் பலவற்றை தவிர்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் நலன்களுக்கெதிரான போக்கை முன்னெடுக்காத வகையில் அது தனது நடவடிக்கைகளில் கவனமாகவுள்ளது. ஆனால், இலங்கை இனப்பிரச்சினை சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்படாதவொன்றாக இருக்கிறது. இது எதிர்காலத்தில் இந்திய, இலங்கை உறவை பாதிக்கக்கூடும்.

நா.குமரகுருபரன்

Comments