யாழ், வவுனியா தேர்தல்கள் - சில படிப்பினைகள்


தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போர், பல்வேறு நாடுகளின் கூட்டுச்சதி காரணமாக முறியடிக்கப் பட்டுவிட்ட நிலையில், தமிழ் மக்கள் தமது உரிமைக் கோரிக்கைகளைக் கைவிட்டு விட்டார்கள், சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் அடிமைகளாக வாழ விரும்புகின்றார்கள்| என்ற மாயையை உருவாக்கும் நோக்குடனும், போர் முடிந்துவிட்ட சூழலில் அங்கே ஜனநாயகம் மலர்ந்து விட்டது| என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் கபட நோக்குடனும், திடுதிப்பென அறிவிக்கப்பட்ட யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

தனது வீரப் பிரதாபத்தை| நிரூபிக்க இந்தத் தேர்தல்களை எவ்வளவு முக்கியமாக அரசு கருதியதோ அதேயளவு தமிழ்த் தேசியவாதிகளும் இந்தத் தேர்தல்களை முக்கியமாகக் கருதினார்கள்.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஈழத் தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம், அதன் கட்டமைப்பு என்பவை நிர்மூலம் ஆக்கப்பட்ட கையோடு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் தொடர்பிலான ஒரு பரீட்சைக் களமாகவும் இத்தேர்தல் பார்க்கப்பட்டது. இன்றைய சூழலில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பகிரங்கமாக ஆதரிக்கும் ஒரேயொரு அரசியல் அணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட முன்வந்தமை ஒரு துணிகரமான முடிவு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழர் தாயகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர் என்ற உணர்வை ஏற்படுத்த காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமே ஒரு குறுகிய காலத்தில் அந்த உணர்வைத் தோற்றுவித்துச் சாதனை படைத்தது.
அந்த உணர்வின் அடிப்படையிலேயே நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

1970 களின் ஆரம்பத்தில் இருந்தே தமிழர் அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலாகவே விளங்கி வருகின்றது. தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அணி, தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெறும். அதேவேளை, தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் (சில புறநடைகள் இருந்த போதிலும்) தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.

தமிழ்த் தேசியத் தலைமையின் அங்கீகாரத்தோடு, தமிழ் மக்கள் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்ட (முதலும் இறுதியுமான) 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இதற்குச் சிறந்த உதாரணமாகும். அதுதவிர, 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பகிஸ்கரிப்பு விடயமும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்துவதாக அமைந்திருந்தது.

2005 தேர்தல் பகிஸ்கரிப்பு தொடர்பில் மேற்குலகில் கடும் விமர்சனம் இருந்தமை அனைவரும் அறிந்த விடயம். விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் முறியடிக்கப்படுவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை மேற்குலகம் வழங்கியமைக்கான காரணங்களுள் இதுவும் ஒன்று என்பதுவும் உண்மை.

ஆனால், இன்று சிங்கள அரசாங்கமும் அதன் எடுபிடிகளும் கூறுவதைப் போன்று ~ஜனநாயகம் மலர்ந்துள்ள| சூழலில் கூட யாழ் மாநகரசபைத் தேர்தலில் 77.82 வீதமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருப்பதை மேற்குலகம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகின்றது?

முன்னர் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததற்காக விடுதலைப் புலிகள் மீது குற்றஞ் சுமத்தித் தண்டனை வழங்கியவர்கள் தற்போது என்ன செய்யப் போக்ன்றார்கள்?

கிழக்கிலே இருந்து விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டு பிள்ளையான் தலைமையிலான பொம்மை அரசை வைத்துக் கொண்டு, ~விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணித்து விட்டார்கள், தமிழ்த் தேசிய அரசியலை நிராகரித்து விட்டார்கள்| என்று கூறித் தம்பட்டம் அடித்தது போன்று மீண்டும் தம்பட்டம் அடிக்க முடியாத அளவிற்கே யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

யாழ் மாநகரசபையைப் பொறுத்தவரை அங்கே 100,417 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 22.18 வீதமான மக்களே இத்தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். வாக்களித்தோரில் 25 வீதத்துக்கும் மேலானோர் முஸ்லிம்களாவர். தனியே தமிழ் மக்களை மாத்திரம் எடுத்துப் பார்த்தால் இத்தேர்தலில் மொத்தத் தமிழ் மக்களில் 18 வீதமானோர் மாத்திரமே வாக்களித்துள்ளனர். அதாவது 82 வீதமான தமிழ் மக்கள் இத்தேர்தலை – எவருமே வேண்டுகோள் விடுக்காத போதிலும் - பகிஸ்கரித்துள்ளார்கள், புறக்கணித்துள்ளார்கள்.

இந்தத் தேர்தல்கள் மூலம் தமக்கு நன்மை எதுவும் விளையப் போவதில்லை என்ற எண்ணத்துக்கு அப்பால், இழக்கக் கூடாததை இழந்துவிட்ட நிலையில், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நிலையில் இந்தத் தேர்தலில் மக்கள் பங்கெடுக்க விரும்பவில்லை என்பதே யதார்த்தம்.

யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஜனநாயக மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் அது பெரு வெற்றி என்று கூறிப் பெருமிதம் அடைந்துவிட முடியாது. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் வாக்குகளே அக் கட்சியைத் தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளன. கிழக்கு மாகாணத்தைப் போன்று, முஸ்லிம் காங்கரசுக்கே முஸ்ஈpம் மக்கள் அனைவரும் வாக்களித்திருப்பார்களாயின் நிலைமை வேறுவிதமாக இருந்திருந்திருக்கும்.

மறுபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எதிர்ப்பு, அச்சுறுத்தல், அதிகார துஸ்பிரயோகம், மோசடி, ஆள் மாறாட்டம் போன்றவற்றின் மத்தியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளமை பாராட்டத் தக்கது. அதன் தலைமை வேட்டபாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணியுமான ரெமடியஸ் 4233 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை யாழ் மக்கள் உண்மையில் யாரை, எதனை ஆதரிக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

வவுனியா நகரசபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியுள்ளது. இங்கே, ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. இந்த வெற்றி பிரச்சார ரீதியில் சிறந்ததாக இருந்தாலும் கூட இங்கும் 47.72 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பது நோக்கத் தக்கது. அது மாத்திரமன்றி, இங்கே வாக்களித்த மக்களில் அநேகர் கொள்கை, இலட்சியம் என்பவற்றுக்கு அப்பால் நகர அபிவிருத்தி என்ற விடயத்துக்கு முன்னுரிமை தந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சிறி லங்காவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாகக் குறைவடைந்து செல்வதனை அவதானிக்க முடிகிறது. தேர்தல்கள் ஊடாகத் தெரிவாகும் பிரதிநிதிகள் வழியாகத் தமது அபிலாசைகள் நிறைவேற்றப் படுவதில்லை என்ற உண்மையே அவர்களைத் தேர்தல்களில் இருந்து விலகி நிற்கச் செய்கிறது. உண்மையான மக்கள் ஜனநாயகம் உருவாகும்வரை இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியாது.

அதேவேளை, இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இதுபோன்ற தேர்தல்களில் இருந்து விலகி நிற்பது ஆபத்தானது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் செலுத்திய விலையை தேர்தல்களுக்கு ஊடாக அறுவடை செய்துவிட முடியாது என்பது உண்மையே. ஆனால், அந்த அறுவடையை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கின்றோம் என்ற சேதியை இத்தகைய சந்தர்ப்பங்களிலேயே எம்மால் வெளிப்படுத்த முடியும்.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு அதிக பணி காத்திருக்கின்றது.
இன்றைய நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சோர்வும் அலட்சியமும் மிகவும் ஆபத்தானது. எதிரிகளுக்கே பெரிதும் சாதகமானது என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்குப் புரியச் செய்ய வேண்டும். இதற்கூடாக தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சோர்வு விரட்டியடிக்கப்பட்டு தமிழ்த் தேசியத்தின் பின்னால் அவர்கள் மீளவும் அணி திரட்டப்பட வேண்டும். இது இமாலய முயற்சியே ஆயினும் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சியே.

எமது வரலாற்றில் நாம் விலைமதிக்க முடியாத விலைகளைச் செலுத்தியுள்ளோம். தொடர்ந்தும் செலுத்திக் கொண்டும் இருக்கிறோம். அவற்றுக்கு நிச்சயம் பலன் கிடைத்தே ஆக வேணடும். அது ஒவ்வொரு தமிழ் மகனினதும், தமிழ் மகளினதும் கைகளிலேயே இருக்கிறது என்பதைப் புரிந்த கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்.

எதற்காகவும், எதனாலும் எமது உரிமைகளை, சுயமரியாதையை விட்டுத்தர முடியாது


சண் தவராஜா

Comments