ஐக்கிய நாடுகளின் கடப்பாடு பற்றி புலிகள் விசனம்


நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் ராணுவத்தினரை வீடியோவில் பார்த்த பின்னரும் கூட ஐக்கிய நாடுகள், பிற சர்வதேச அமைப்புகளின் மௌனம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் உருத்திரகுமார்.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியால் உலக மக்களே அதிர்ச்சியாகியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எந்த வித நடவடிக்கைக்களுமே இன்னமும் எடுக்கவில்லை.

இந்த அமைப்புகள் இருப்பதன் கடப்பாடு, நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் காட்டும் நேர்மைபற்றி புலிகளின் உத்தியோகத்தராகக் கருதப்படும் வி. உருத்திரகுமாரன் விசனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக தாம் பயன்படுத்தப் போவதாக உருத்திரகுமாரன் கூறியதாக இந்தியா டுடே என்ற பிரபல சஞ்சிகை கூறியுள்ளது. இதுவரை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்காமல் உள்ளமை தமிழர்களைப் பழிவாங்கும் செயலாக உள்ளதோடு மட்டுமல்லாமல், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் சட்டதிட்டங்களைப் பலவீனப்படுத்துவதோடு, அவற்றின் நேர்மைக்கும் பங்கம் விளைவிக்கிறது என்று தொடர்ந்து கூறியுள்ளார் உருத்திரகுமாரன்.

இதுபற்றிய விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தாமாகவே செய்யும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு சபைக்கு இதுபற்றி அறிவிக்கும் எனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகளைத் தொடங்குவதற்கு பாதுகாப்புச் சபையின் அனுமதியைப் பெறும் எனவும் தாம் மேலும் நம்புவதாகக் கூறியுள்ள இவர் அவற்றுக்கெல்லாம் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments