தாயகத்தின் தற்போதய அரசியல் சூழலும் ஈழத் தமிழர் தேசத்திற்கான அரசியல் வேலைத்திட்டமும் !

அரசியல் இராசதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பது இலகுவான ஒரு விடயம் அல்ல எனவும் பல சவால்களையும் எதிர் கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது எனவும் கடந்த வாரப்பக்கங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

இப் பயணத்திற்கு உரிய அரசியல் வேலைத்திட்டம் மிகவும் முக்கியம் எனவும் இது குறித்த சில கருத்துக்களுடன் நாம் இவ் வாரம் சந்திப்பதாகவும் கடந்த வாரப் பக்கங்களின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

நமது அடுத்த கட்டப் போராட்டத்திற்குரிய அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்பது பல்வேறு அரசியல் கோணங்கள் ஊடாகவே பார்க்கப்படல் வேண்டும். சமகால நிலவரங்கள், எதிர்காலம் பற்றிய எமது நோக்கமும் – மதிப்பீடும் இந்த வேலைத்திட்டங்களை வடிவமைக்கின்றன. அனைத்திலும் மேலாக சிங்கள அரசின் நடவடிக்கைகள் எமது வேலைத்திட்டத்தின் தீவிரத்தினையும், வடிவங்களையும் பாதிக்கும்.

நாம் இவ்விடயத்தில் முக்கியமான அம்சத்தினைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்த கட்ட அரசியல் இராசதந்திர போராட்டத்தின் வெற்றி ஒட்டு மொத்தமான ஈழத் தமிழர் தேசத்தினையும் தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதிலேயே தங்கியுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை. 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985ம் ஆண்டு திம்புப் பிரகடனம், 2003ம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை. இவ் அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்படவேண்டியவை.

Sri Lanka Military

இதேவேளை, இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் உடனடியாக தமது அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பதற்கான வழிகள் மூடப்பட்டுள்ளன.

எனினும், ஈழத்தமிழ்த் தேசத்தின் அரசியல் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதியோடு சுருங்கி விடாமல் நாடுகடந்த அரசியலாக விரிவாக்கம் கண்டுள்ள இன்றைய சூழலில் நமது தேசத்தின் விடுதலைக்கான அரசியல் வேலைத்திட்டம் நமது தாயகத்திலும் நாடு கடந்த நிலையிலும் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமானதாகும்.

இவ் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப – ஒரு பொதுநோக்குடன் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் – தாயகத்திலும் புலத்திலும் இரு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று துணைபுரியக்கூடிய செயற்திட்டங்களை தமிழர் தேசம் சமாந்திரமாக முன்னெடுக்க வேண்டும்.

இங்கு நான் தமிழர் தேசத்தின் திட்டங்கள் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் ஒன்றுபட்ட தேசமாக இயங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

நமது அடுத்த கட்டப் போராட்டத்திற்கான அரசியல் வேலைத் திட்டம் தொடர்பான நமது சிந்தனைகளை நமது தாயகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலை ஆய்வு செய்வதுடன் ஆரம்பிப்பது பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நமது தாயகத்தின் தற்போதைய நிலையில் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளை வெகுசன வடிவங்கள் ஊடாக வெளிப்படுத்தக்கூடிய சனநாயகச் சூழல் இல்லை.

Temple _army

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர் தேசம் இராணுவ ஆக்கிரமிப்பு அகன்ற ஒரு சூழலில் – கொடிய யுத்தத்தினால் நிலை குலைந்து போன தமது வாழ்வினை மீளக் கட்டியமைத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு சூழலில் – எவ்வித அச்சமுமின்றி – ஆபத்துக்களுமின்றி அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக எழுதவும் பேசவும் விவாதிக்கவும் முடியக்கூடிய ஒரு சூழலில் மட்டுமே – தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்.

நமது தாயகத்தில் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் மட்டுமல்ல – சிறிலங்காவின் சட்டங்களுக்கூடாகவும் மறுக்கப்பட்டிருக்கிறது.

உதாரணமாக தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளான தேசியம், தாயகம் எனும் அடிப்படைகளோடு கூடிய சுயநிர்ணயத்தை அதன் முழுமையான அர்த்தத்துடன் – அதாவது ஈழத் தமிழ்த் தேசிய இனம் தனது அரசியல் தலைவிதியினைத் தானே தீர்மானிக்கக்கூடிய உரிமையே சுயநிர்ணய உரிமை எனும் அடிப்படையில் – தமக்கென ஒரு தனிநாட்டினை அமைத்துக் கொள்ள உரிமையுடையது என்ற கருத்தினை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு ’சிறிலங்காப்பிரசை’ வெளியிட்டால் – சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய ஒரு குற்றம்.

மேலும் தற்போதய சிறிலங்கா அரசு தான் இனத்துவ அரசியலை நிராகரிப்பதாகக் கூறுகிறது. சிறுபான்மை என எவரும் இலங்கைத்தீவில் இல்லை எனவும் கூறுகிறது.

சிங்கள இனத்தின் அரசியல் ஆதிக்கத்துக்குள் இலங்கைத்தீவினை அமிழ்த்திக் கொண்டு – பௌத்த நாடாகப் அரசியல் சட்டரீதியாகப் நாட்டைப் பேணிக்கொண்டு – சிறிலங்காவின் தேசியக்கொடியில் ’சிறுபான்மையினரான’ தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இரு சிறிய கோட்டுத்துண்டுகளை ஒதுக்கிக் கொண்டு இவ்வாறு பேசுவது மிகப் பெரும் அபத்தம்.

இலங்கைத்தீவில் நாம் ஈழத் தமிழ் தேச மக்களாகிய நாம் ஒரு தேசம் (Nation) என்ற அங்கீகாரத்தைக் கோரினோம். அதற்காகப் போரிட்டோம். சிங்கள தேசத்தை அங்கீகரித்தவாறு – தமிழ்த் தேசத்திற்கு உரிய அங்கீகாரத்திற்காக அகிம்சை வழியிலும் ஆயுதம் தாங்கியும் ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் போராடினோம்.

சிங்கள அரசுகள் ஈழத் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் மகிந்த அரசுக்கு முன்னைய சிங்கள அரசுகள் தமிழரின் இனத் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டு ‘சிறுபான்மையினர்’ என்ற அடிப்படையில் நமது பிரச்சினைகளை அணுக முற்பட்டனர்.

இங்கு எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனம் என்பது வேறு. சிறுபான்மையினர் என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள தேசத்துடன் ஒப்பிடும் போது தமிழர் தேசம் ஆறு மடங்கு எண்ணிக்கையில குறைந்தது தான். ஆனால் ஈழத் தமழ் மக்கள் சிறுபான்மையினர் அல்லர். இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்குப் பகுதிகளை தமது தாயகமாகக் கொண்டு தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு அடிப்படையில் தனித்தவமாக வாழ்ந்து வரும் – சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசம்.

சிங்கள தேசத்திற்குரிய அனைத்துரிமைகளுக்கும் தன்னாட்சி உரிமைக்கும் தமிழர் தேசம் உரித்துடையது. இதனை முன்னைய சிங்கள அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை எதிர்த்துத் தமிழர் தேசம் போராடியது.

ஆனால் தற்போதைய மகிந்த அரசு இன்னும் ஓர்படி மோசமாகப் போய் ஈழத்தமிழ் மக்களாகிய நாம் ஒரு தேசம் என்பதை நிராகரிப்பது மட்டுமன்றி – நமது இனத் தனித்துவத்தையே மறுக்கிறது. சிறுபான்மை என இங்கு எவரும் இல்லை. நமது நாடு சிறிலங்கா – நாம் அனைவரும் சிறிலங்கரே – எனக் கூறுகிறது. இதுவே மகிந்த அரசின் கொள்கைப் பிரகடனம்.

சிறிலங்கா சிங்கள தேசத்திற்குரிய. அடையாளம். தமிழர் தேசத்திற்குரியது அல்ல. நாம் ஈழத் தமிழர். சிறிலங்கர் அல்ல. இது ஒவ்வொரு ஈழத் தமிழருக்குள்ளும் ஆழ உறைந்திருக்கும் அடையாள நியமம்.

இதனை மறுதலித்து மகிந்த அரசு செய்ய முனையும் சிறிலங்கா தேச நிர்மாணத்தை நான் வலிந்த தேச நிர்மாணம் (Forced Nation Building) என வகைப்படுத்த விரும்புகிறேன். அரசியல் அறிஞர்கள் இந்த வகையான வலிந்த தேச நிர்மாணத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வரலாற்றில் மகிந்த அரசின் வலிந்த தேச நிர்மாணம் தோல்வியினைத் தழுவுவது திண்ணம்.

ஆனால் சிறிலங்கா அரசு தற்போது கொண்டுள்ள இராணுவ மேலாதிக்க நிலையினூடாக தனது வலிந்த தேசநிர்மாண முயற்சியினை தமிழர் தேசத்தின் மீது பலாத்காரமாக திணிக்கவே முயலும்.

இதன் ஓரம்சமாக இனத்தனித்துவத்துடனான அரசியல் அமைப்புக்களை, கட்சிகளை தனது அதிகாரத்தின் மூலம் பலவீனப்படுத்தவே சிங்கள அரசு முயற்சிக்கிறது. தன்னோடு இணைந்து இயங்கும் தமிழ்க்கட்சிகளைக்கூட தமது அடையாளங்களோடு இயங்கவிட சிங்கள அரசு தயாராய் இல்லை.

கிழக்கில் நடைபெற்ற மாகாணசபை மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தற்போது யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்களிலும் இதனை வெளிப்படையாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

தனது ஆழும் கூட்டணியின் கூட்டுச்சின்னமான வெற்றிலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி – இராணுவ மேலாதிக்கத்தினாலும், தேர்தல் மோசடிகளினாலும், அழுத்தங்களினாலும், சலுகைகளினாலும் தேர்தல் முடிவுகளைத் தனக்குச் சாதகமாக வென்றெடுத்து – தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற கருத்து நிலையை உருவாக்கும் திட்டத்துடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் கிழக்கில் தான் அடைந்த குறிப்பிடத்தக்களவு ’வெற்றியை’ தொடர்ந்து வடக்கிலும் இவ் அணுகுமுறையை சிங்கள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்த தமிழர் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தல் சிங்கள அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று. தமிழ்த் தேசிய அரசியலுக்கான அரசியல் வெளியினைச் (political space) சுருக்குதல் என்ற மூலோபாயத்தின் அடிப்படையில் சிங்கள அரசு இயங்கி வருகிறது.

இப் பின்னணியில் தமிழ்த் தேசியம் தாங்கிய கருத்தாடல்களை மேற்கொள்ள முடியாத வகையில் தமிழ் ஊடக உலகம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது.

இதனை விட சிங்கள அரசின் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நமது மக்களின் நல் வாழ்வுக்காக அரச எதிர்ப்பு அரசியலிலிருந்து விடுபட்டு அரசுடன் இணைந்து அல்லது அரசுடன் முரண்படாது செயற்படவேண்டும் என்ற வாதமும் சிலதரப்புக்களால் முன்வைக்ப்படுகிறது.

இப் பின்னணிகளிலிருந்தே நமது தாயகத்தின் அரசியல் சூழலை நாம் நோக்க வேண்டும்.

இச் சூழலுக்குள் இருந்து நமது மக்களின் உடனடிப்பிரச்சினைககளையும் அரசியல் பிரச்சினைககளையும் எவ்வாறு தமிழர் தேசம் அணுகப் போகிறது?

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களை மௌனிக்கச் செய்து அரசியல் இராசதந்திரப் பாதையினைப் பின்பற்ற முடிவு செய்துள்ளதால் தாயகத்தில் உள்ள நமது போராளிகள் இயக்கத்தின் முடிவைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றனர்.

வெளிப்படையாக அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடக்கூடிய எந்தவிதமான அரசியல் வெளிகளும் இல்லாமையால் விடுதலைப்புலிகள் இயக்கம் நமது தாயகத்தில் தற்போது எவ்விதமான அரசியல் வேலைத்திட்டங்களிலும் வெளிப்படையாக ஈடுபட முடியாது.

ஆயினும் கடந்த 2008ம் ஆண்டுக்கான மாவீரர்நாள் உரையில் நமது தலைவர் கோடிட்டுக் காட்டியது போன்று வரலாறு விட்ட வழியில் காலம் இடுகின்ற கட்டளைப்படி என்கின்ற சிந்தனையுடன் – எமது இயக்கத்தின் போராளிகள் தாயகம் பூராவும் எமது அரசியல் வேலைத்திட்டத்தினை பல்வேறுபட்ட வெகுசன வடிவங்களில் எதிர்காலத்தில் முன்னெடுக்க சங்கற்பம் பூண்டுள்ளனர்.

மறுபுறம் தாயகத்தின் அரசியல் வேலைத்திட்டங்களை தாயகத்தில் தற்போது வெளிப்படையாக இயங்கும் – தமிழ் மக்களின் நலன்களில் விசுவாசம் கொண்ட அரசியல் இயக்கங்களும், பிற அமைப்புக்களும் ஈடுபடுவது முக்கியமானதாகும். இந்தச் சக்திகள் தமிழ்மக்களின் தேசிய நலன்களுக்கான வெகுசன போராட்டங்களை முதன்மையானதாகக் கருதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தாயகத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையலாம் என்பது குறித்த எனது கருத்துக்ளை அடுத்த வாரப்பக்கங்களில் (08.08.2009) பகிர்ந்து கொள்கிறேன்.


என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பம் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இவற்றில் பொருத்தமானவற்றைப் இப் பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.

உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com

நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.


என்றும் அன்புடன்
கேபி

01.08.2009

Comments