தமிழினத்தின் இன்னொரு வரலாறு: வதைமுகாம் வாழ்வு


தமிழ்மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் கொலைப்படலங்களும் கொடூரங்களும் ஆதாரத்துடன் வெளியாகிவரும் தற்போதைய நிலையில் இன்னமும் சிங்களச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படும் தமிழ் உறவுகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை அந்தச் சிறைகளிலிருநு்து வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அத்தியாவசியமாகியிருக்கிறது.

கடந்த மே மாத நடுப்பகுதியில் - போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய காலப்பகுதியில் - சிறிலங்கா அரச படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் கொடூரம் தாங்காமல் நிராயுதபாணிகளாகச் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காப் படைகளால் நூற்றுக்கணக்கான இரகசிய வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு விசாரணைகள் என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

முகாம்களிலிருந்து தினமும் 20 பேர் காணாமல் போகிறார்கள், வெள்ளைவானில் வந்த அடையாள தெரியாத நபர்களால் முகாமிலுள்ளவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த காணாமல் போதல்களின் பின்னணியில் ' சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் காண்பிக்கப்பட்டது போன்ற சம்பவங்களே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்று சிறிலங்காவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு சார்ந்த - பெயர்குறிப்பிட விரும்பாத - அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

155போரின் போது அல்லது போரின் கொடூரத்தால் இரண்டு கைகளையும் இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்பார்வையற்றவர்கள் என எல்லோரையும் விசாரணைகள் என்ற பெயரில் அழைத்துச் செல்லும் சிறிலங்காப் படைகள் அவர்களை புகைப்படம் எடுத்தபின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிவருவதாகவும் ஏனையவர்களைக் காட்டித்தரும்படி அவர்களை வதைப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவயங்களை இழந்து அன்றாட தேவைகளுக்கே தங்கியிருக்கக்கூடிய இளையவர்கள் இனி ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்று சிறிலங்காப் படைகள் எந்த அடிப்படையில் நம்பி அவர்களை இன்னமும் தடுத்துவைத்து சித்திரவதை செய்துவருகிறார்கள் என்று தெரியவில்லை என்று அங்கிருந்து குரல்தந்த ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

155
147பல்லாயிரக்கணக்கில் சரணடைந்த மக்களை கூட்டம் கூட்டமாக அடைத்துவைத்துள்ள சிறிலங்காப் படைகள், அவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து அவர்களின் கழுத்தில் இலக்கங்களை மாட்டிய பின்னர் அவர்களை புலனாய்வுப்பிரவினரிடம் அனுப்பிவைக்கின்றனர். ஒட்டுக்குழுக்களிடமிருந்தும் அரச பிரிவிலிருந்தும் புலனாய்வுப்பிரிவினர் என்ற பெயரில் வருபவர்கள் விசாரணை என்ற பெயரில் அவர்களை தனித்தனியே வைத்து துருவுவதாகவும் -

இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி புலனாய்வுப்பிரிவிலிருந்து வரும் ஆண்கள், சரணடைந்த பெண்களை தமது இஷ்டத்துக்கு சித்திரவதைகளை மேற்கொண்டும் தமது வக்கிரங்களை அவர்களிடம் திணிப்பதாகவும் -

ஆண்கள் படுபயங்கரமான சித்திரவதைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் இந்த அவலக்குரல்கள் வெளியில் கேட்காதவண்ணம் இந்த வதைமுகாம்கள் வன்னிக்காட்டுப் பகுதிகளுக்குள் உள்ள வீடுகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

37இவ்வாறு சித்திரவதைகளை மேற்கொள்பவர்கள் கூட்டம் நிரந்தரமாக வன்னிப்பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும் ஒவ்வொரு கூட்டமாக வந்து விசாரணைகளை மேற்கொள்பவர்கள் தமது நேரம் முடிந்தபின்னர் வெளியேற மற்றைய கூட்டத்தினர் வந்து விசாரணைகளை மேற்கொள்வர் என்றும், இவர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் முகாமிட்டிருப்பதாகவும் இவர்களுக்குரிய உணவை இராணுவம் விநியோகிப்பதாகவும், மாலைவேளைகளில் அங்குள்ள திறந்த வெளிகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டுவிட்டு இரவுவேளைகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

37
இவ்வாறு விசாரணைகள் என்ற பெயரில் கொண்டுசெல்லப்படுபவர்கள் அப்பாவிகளாக இனம்காணப்பட்டால் அவர்களை திரும்பவும் உயிருடன் வெளியே அனுப்பினால் தமது வதைமுகாம்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்களை அங்கேயே கொலை செய்துவிடுவதாகவும் கொண்டுசெல்லப்படுபவர்களிடம் ஏதாவது தகவல்கள் பெறப்பட்டால் அவர்கள் ஏனைய சிறப்பு வதைமுகாம்களுக்கு மாற்றப்பட்டு அங்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு - தேவை ஏற்பட்டால் - அவர்கள் வவுனியா மற்றும் தென்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் தெரியவருகிறது.

இவ்வாறு வேறு இடங்களுக்கு மாற்றப்படுபவர்களில் சிலர் தென் பகுதியில் உள்ள பூசா, வெலிக்கடை போன்ற சிறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள சிறப்புத் தடைமுகாம்களில் வைத்து கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் உயர்மட்டத்தினரால் விசாரணை செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதுடன் -

கொழும்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை இவர்களின் முன்கொண்டுவந்து நிறுத்தி விடுதலைப்புலிகளைக் காட்டித்தரும்படி கூறி சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆங்காங்கு கொண்டுசெல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்கள் ஆகியவை எவருக்கும் தெரியாது என்றும் இவர்கள் தொடர்பான பதிவுகள் வெளியில் தெரிவிக்கப்படாதவையாக உள்ளதாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களோ சர்வதேச செஞ்சிலுவைக் குழுவோ அல்லது வேறு விசாரணை குழுக்கள், ஊடகங்கள் ஆகியவை ஆதாரங்களுடன் நேரில் வந்து கேட்கும் முன்னர் கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் தெரியாமல் வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றுவிடுவது அல்லது விசாரணைகளை முடித்துவிட்டு கொலைசெய்துவிடுவது என்பதில் படைத்தரப்பு வேகமாக செயற்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

215இது தொடர்பாக அங்கிருந்து மேலும் தெரிவிக்கப்படுகையில் - "சித்திரவதையின் அகோரம் தாங்காமல் இரத்தத்துடன் சேர்ந்து சில தகவல்களையும் வெளியே கொட்டுபவர்கள் வவுனியா முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வேறு ஆட்களைக் காட்டித்தருமாறு பணிக்கப்படுகிறார்கள். முகாமிலிருந்து பணம் கொடுத்து வெளியே வந்தவர்கள் தொடர்பான விவரங்களை அறிவதற்கும் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடல்வழியாக இந்தியா சென்றவர்கள் கொழும்பின் ஊடாக வெளிநாடு சென்றவர்கள் என்று முக்கியபுள்ளிகள் தப்பிவிட்டார்கள் என்ற பயங்கர சீற்றத்தில் உள்ள படைத்தரப்பு தனது ஆத்திரத்தை அங்குள்ள மக்களின் மீதும் சரணடைந்த போராளிகள் மீதும் காண்பிக்கிறது".

215
"முகாம்களிலுள்ள அனைத்து மக்களையும் சரணடைந்த போராளிகளையும் தற்போதும் செயற்பாட்டு நிலையிலுள்ள விடுதலைப்புலிகளாகவே பார்க்கும் சிங்களப் படைகள், வயது வேறுபாடின்றி அவர்களை வதைபுரிந்து வருகின்றன. அவர்களில் எத்தனைபேரை தனது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தனக்குச் சார்பாகப் பயன்படுத்திவிட்டு அவர்களையும் பின்னர் வெளியில் விட்டுவிடாமல் - தனது இரகசிய சித்திரவதைப் படலங்களை மறைக்கும்வகையில் - கொன்றுதள்ளலாம் என்ற விடயத்தில் இராணுவத்தினர் கவனமாகச் செயற்படுகின்றனர்.

"சரணடைந்தவர்களைப் பார்வையிடவேண்டும் என்று வரும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினருக்குக் காண்பிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை விசேட முகாமில்வைத்து அதனை விளம்பர முகாமாக இராணுவம் பராமரித்துவருகிறது. ஆனால் உள்ளே கொடூரங்களை மட்டுமே நாளாந்தம் முகம்கொடுத்துவரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை வெளியே யாருக்கும் தெரியாது" - என்று அவர் கூறிமுடித்தார்.

இதுதான் தாயகத்தில் உறவுகள் முகம்கொடுத்துவரும் இன்றைய நிலை.

இரண்டு கைகளும் இல்லாதவர்களும் இனிவரும் காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என்று சர்வதேசத்தை நம்பவைக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்க அதனை செவிமடுத்து சிறிலங்காவுக்கு இன்னமும் நிதி உதவி வழங்கும் வகையில் பன்னாட்டுச் சமூகம் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

போர் நடைபெற்று முடிந்த நிலையில் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஜனநாயக வழியிலேயே தனது அடுத்த கட்டப் போராட்டத்தை நகர்த்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாகரிகமற்ற முறையில் 'யுத்த தர்மம்', 'மனித உரிமைகள்' என்று சர்வதேசம் வார்த்தைக்கு வார்த்தை அறிக்கைக்கு முன்மொழியும் விடயங்களை அடியோடு மீறி தனது அடாவடித்தனத்தையும் அக்கிரமத்தையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசம் இனிமேலும் தண்டிக்காதா?

யுத்தக் கைதிகளை எவ்வாறு பராமரிக்கவேண்டும் என்பது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று. அப்படியிருக்கையில் இன்றையநிலையில் சிறிலங்கா அரசு கடைப்பிடிக்கும் அத்துமீறிய செயலையும் எதேட்சதிகாரப்போக்கையும் சர்வதேசம் இன்னமும் பொறுத்துப் பொறுத்து இருப்பது எதற்காக? சிங்களத்தின் கொடும் கரங்களில் அகப்பட்டுள்ள தமிழினம் அந்த ஆக்கிரமிப்பாளர்களின் கொலைவாளால் அறுக்கப்பட்டு தனது மண்ணில் முற்றாக அழியும்வரை சர்வதேசம் இப்படித்தான் மெளனமாக இருக்கப்போகிறதா?

இதனை புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் எவ்வாறு சர்வதேசத்திடம் எடுத்துக்கூறி அங்குள்ள உறவுகளின் விடுதலைக்கு வழியமைக்கப் போகிறார்கள் என்பது மிக முக்கிய கேள்வி. சர்வதேச சமூகம் இதுவரை காலமும் இவ்வாறு கொடூரங்களைப் புரிந்த சிறிலங்கா அரசிடமிருந்து தமது மக்களைக் காப்பாற்ற ஆயுதம் தரித்த விடுதலைப்புலிகளை 'பயங்கரவாதிகள்' என்ற ஒற்றைச் சொல்லினுள் அடக்கி அவர்களை வதம் செய்யத் துணைநின்றது. இன்றையநிலையில், தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்படும் இந்தக் கொடூரங்களிலிருந்து விடுவிக்க பன்னாட்டுச் சமூகம் தனது பொறுப்பை இனியாவது சரிவர முன்னெடுப்பதற்கு புலம்பெயர்ந்துவாழும் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும் செயலாற்றவேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான காலகட்டம் இது.

இந்தப் பொறுப்பிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் சமூகம் தவறுமாயின், நாளை இந்தக் கொடூர சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழினம் சிறிலங்கா அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து மீண்டும் ஆயுதம் தரித்து தமது விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியே ஏற்படும்.

சிங்களத்தின் வதைமுகாமிலிருந்து தமிழ் உறவுகள் வீறிட்டு அலறும் சத்தம் சர்வதேசத்துக்குக் கேட்கவில்லை, விட்டுவிடுவோம். இது தொடர்பில் அவசரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய புலம்பெயர்ந்துள்ள தமிழ்ச் சமூகம் என்ன செய்யபோகின்றது?

ஈழநேசன்

Comments