மாறாத இந்திய நிலைப்பாடும் தீராத வன்னி மக்களின் அவலமும்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, படுகொலைக் காட்சியால் அதிர்ச்சியுற்ற ஐ.நா. சந்நிதானம், அடுக்கடுக்காக ஆட்களையும் அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

ஐ.நா. மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுமென்பதை விட, பான் கீ மூனின் தலையைச் சுற்றிய ஒளி வட்டம் சிதைந்து போகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அதன் அரசியல் விவகாரச் செயலாளர் லின் பொஸ்கோ அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டுமென்கிற அறிவுறுத்தலைவிட வேறெதையும் அவர் கூறப் போவதில்லை.
தனது நேரடிப் பதிவுகளை அறிக்கையாக, ஐ.நா. சபை பொதுச் செயலாளருக்கு சமர்ப்பித்தாலும், அது குறித்த விவாதம் அங்கு நடைபெறுமா என்பதில் பலத்த சந்தேகம் உண்டு.

மெக்ஸிகோ போன்ற நாடுகள் அதனை முன்னெடுத்தாலும், இந்திய இராஜதந்திரம் அதற்கு இடங்கொடுக்காது தடுத்து விடும்!

ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், ஈழத் தமிழர்பால் அன்புள்ளம் கொண்ட இந்தியா செய்த திரை மறைவு காய் நகர்த்தல்களை தமிழ் மக்கள் மறக்கவில்லை.

இன்னமும் ஈழத்தமிழர் விவகாரம் குறித்த இந்திய நிலைப்பாட்டில் மாறுதல்கள் சிறிதளவும் இல்லை.
புதுடில்லியில் நடைபெற்ற காவற்துறை உயரதிகாரிகள் மாநாட்டில், இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் விடுத்த எச்சரிக்கை இதனை மேலும் வலுப்படுத்துகிறது.

புலம்பெயர் தமிழர்கள், புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முனைகிறார்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்.எதனையும் எதிர்கொள்ள, தாம் தயாராக இருக்க வேண்டுமென்று, காவற்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வேறு வழங்குகிறார்.

விடுதலைப் புலிகளால், இந்தியப் பாதுகாப்பிற்கும், அதன் நலனுக்கும் ஆபத்து ஏற்படும் என்பது போன்று உள்ளது நாராயணனின் அறை கூவல்.

20 மாநிலங்களிலுள்ள 40 ஆயிரம் சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மக்கள் புரட்சியாளர் மாவோயிஸ்டுக்களைவிட, விடுதலைப் புலிகளை பரம எதிரியாக பார்க்கும் நாராயணன் போன்றோரின் நலன்களுக்குள் வேறு விவகாரங்களும் இருக்கின்றன.

தமிழ்நாடு, புதுடில்லிக்கூடாக தமிழர் பிரச்சினையை உலக மயமாக்கலாம் என்கிற அரசியல் சித்தாந்தம், நாராயணத்துவத்தோடு ஒத்துப்போகாது.

விடுதலைப் புலிகளின் தலைமையும், அதன் இராணுவக் கட்டமைப்பும், முற்றாக துடைத்தழிக்கப்பட்டதாக செய்து வந்த பரப்புரையை, தாமே மறுதலிக்கும் நிலைக்கு, இந்தியாவும், தென்னிலங்கையும் வந்துள்ளன.

தடுப்பு முகாமிலுள்ள மக்களை விடுவிக்கக் கோரி சர்வதேச அளவில் எழும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் இத்தகைய எதிர்வினைப் பரப்புரைச் செயற்பாடுகளை இவர்கள் மேற்கொள்ளலாம்.

இவை தவிர வெளியிட முடியாத அளவிற்கு சில சம்பவங்கள் வடக்குகிழக்கில் நடைபெற்றிருக்கக் கூடிய வாய்ப்புக்களும் உண்டு.

யுத்த வெற்றிக்கு கால அட்டவணை வகுத்த அரசாங்கம், அந்தப் போர் காரணமாக வெளியேற்றப்படும் மக்களுக்கான தங்குமிட வசதிகளுக்கும் ஒரு திட்டம் வகுத்திருக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் திடீரென்று வந்து குவியும் போது தம்மால் எதுவும் செய்ய முடியாதென கூறப்படும் விளக்கங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதைவிட மக்களிடமிருந்து புலிகளைப் பிரித்தெடுப்பதற்கும், போர் நிகழ்ந்த இடங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும், கால அவகாசம் தேவை என்பதை உறுதிப்படுத்த பல உலக உதாரணங்களை அரசு முன் வைக்கிறது.

இறுதிவரை மக்களோடு இருந்த குற்றத்திற்காக, மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெளியுலகின் வெளிச்சம், இந்த தடுப்பு முகாமில் வாழும் மக்கள் மீது படாமல் தடுப்பதற்குரிய காரணிகள்தான் என்ன?

முகாமில் வாழும் 3 இலட்சம் மக்களைப் பராமரித்து மீள்குடியேற்றத் தேவையான நிதிவளம் அரசாங்கத்திடம் இல்லையானால் அவர்களை ஐ.நா. சபையிடம் கையளிக்கலாம்.ஆனாலும், இந்தச் சபை, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லையென்று, ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கெஹன்ன தெரிவிக்கின்றார்.

அவ்வாறாயின், இச்சபைக்கான பிரதிநிதித்துவம், இலங்கைக்கு ஏன் தேவை என்கிற கேள்வியும் எழுப்பப்படலாம்.

நுளம்புத் தொல்லைக்கு மருந்து அடிப்பதுதான் ஐ.நா. சபையின் கடமையென்று வியாக்கியானம் வழங்கிய, காலஞ்சென்ற லஷ்மன் கதிர்காமரின் கூற்றினை, பாலித கொஹன்ன நினைவுபடுத்துகிறார் போல் தெரிகிறது. அதேவேளை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் உரிமை பற்றிபேசுவதை, எந்த வகையிலும், நியாயப்படுத்த முடியாது. 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் நல்ல சான்று.ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் பொருந்தாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதே சர்வதேசத்தின் தலையாய கடமையாகிறது.

இதனை விடுத்து, புலிகள் பீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்து விடுவார்களென்றும், புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னுமொரு ஆயுதப் புரட்சிக்கு வித்திடுவார்களென்றும், உலகை ஏமாற்றி, முகாம் மக்களை நிரந்தரமாக பலஸ்தீனர்கள் போன்று அடைத்து வைக்க திட்டமிடப்படுகிறதா என்கிற பலத்த சந்தேகங்கள் எழுகின்றன.

கூட்டாக குந்தி இருந்து பத்திரிகையாளர் மாநாடுகளை நடாத்தும் எதிர்க்கட்சியினர், கொழும்பு வீதிகளில் இறங்கி வன்னி மக்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தலாம்.

ஆனாலும் வாக்கு வங்கியின் ஏற்ற இறக்கம் குறித்தே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பேசுகின்றார்.

இடதுசாரி கட்சியினர் நடத்திக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்து, போராட்டத் தளங்களை விரிவுபடுத்தலாம். அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைவதையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

-சி.இதயச்சந்திரன்-

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Comments