தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தீர்வுத்திட்டம் மக்கள் ஆணையை பிரதிபலிக்குமா?

உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவு நாள் செப்டெம்பர் 26.

அகிம்சைப் போர் மூலம் சுதந்திரம் பெற்று, அணுகுண்டைத் தாங்கி நிற்கும் இந்தியப் படைகளின் நடுவே, ஆயுதங்களை ஒப்படைத்து, போராட்ட வடிவத்தை மாற்றிய திலீபன் விடுத்த ஐந்து கோரிக்கைகளை, எவருமே செவிமடுக்கவில்லை.

இற்றைவரை எந்தப் போராட்ட வடிவங்களையும் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளவார்களென்று, வாடிய கொக்குப் போல் காத்திருக்கவும் முடியாது.

வன்னிப் படுகொலைகளையும், வவுனியா தடுப்பு முகாம் அவலங்களையும் மறந்து, இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வினைத் தேடுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது

தீர்வுகளை முன்னிலைப்படுத்தினால், அவலங்கள் மறைக்கப்படலாமென்று பிராந்திய சக்திகள் எண்ணுகின்றன.

அரசாங்கத்தைக் காப்பாற்ற, ஜனாதிபதியுடன் பேசுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா நிர்ப்பந்திப்பது போலிருக்கிறது.

இதில் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படாதவாறு, இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கிய மாகாண சபையை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்வதே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னுள்ள ஒரே தெரிவென்று ஆலோசனை வழங்கப்படுகிறது.

முகாம் மக்களின் விடுதலைக்காக அல்லது அரசியல் தீர்வுக்காக முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்கிற சிக்கல், கூட்டமைப்பிற்கு இருக்கலாம்.

ஆனாலும், வாழும் உரிமை முற்றாக மறுக்கப்பட்ட மக்களிடம், அரசியல் தீர்வு குறித்து பேசுவது அபத்தமானது. அம்மக்களைப் பார்வையிடும் உரிமை கூட மறுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கத்தோடு பேசி, அரசியல் உரிமையைப் பெறலாமென்பது யதார்த்தமாகத் தென்படவில்லை.

மக்களின் முகாம் வாழ்வு, இடம் மாறுகிறதே தவிர, மீள்குடியேற்றமென்பது அலங்காரச் சொல்லாக மாறி விட்டது.2004ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு, மக்கள் வழங்கிய அங்கீகாரத்தினை நிராகரித்து, இந்திய நலனிற்கு இசைவான வகையில் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கினால், அது மக்கள் ஆணையை மறுதலித்ததாகவே கருதப்படும்.

மாகாண சபை முறைமையை இடைக் காலத் தீர்வாக ஏற்றுக் கொண்டால், புதிதாக முளைக்கும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த இயலுமென்பது போன்ற கருத்துத் திணிப்புகளும், புலம்பெயர் நாடுகளுக்கு விஜயம் செய்யும் தமிழக அரசியல்வாதிகள் சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

ஒன்றிணைந்த அல்லது பிரிக்கப்பட்ட மாகாண சபைக்கு, காணியதிகாரம் இருக்கிறதாவென்பதை, முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளிடமும், இன்றைய கிழக்கின் முதல்வர் சந்திரகாந்தனிடமும் கேட்டறிந்து கொள்ளலாம்.
ஒற்றையாட்சிக்குள் தீர்வுத் திட்டத்தை முன்மொழியச் சொல்லும் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு, நிர்வாகப் பரவலாக்கத்திற்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்குமிடையே உள்ள பாரிய வேறுபாடுகளை, புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறதா? எக்காலத்திலும் இந்தியாவை மீறி, இலங்கையின் இனச் சிக்கலைத் தீர்க்க முடியாதென்று அடம் பிடிப்பவர்களே, மாகாண சபையினை ஏற்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கமில்லையென்று பரப்புரை செய்கிறார்கள்.

மாகாண சபையென்பது, இந்திய இலங்கை ஒப்பந்தம், மக்கள் மீது திணித்ததொரு நிர்வாக முறைமை.

இது மக்களின் அங்கீகாரம் இல்லாமல், ராஜீவ்காந்தியும், ஜே.ஆரும் எடுத்த முடிவு. இந்த ஒப்பந்தம் உருவாக்கிய தற்காலிக வடக்குகிழக்கு இணைப்பும், உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றையடுத்து நீக்கப்பட்டது.

ஒற்றையாட்சிக்குள், மாகாண சபை என்கிற நிர்வாகப் பரவலாக்கம், விளைவித்த எதிர்வினை இது. இலங்கை அரசினைத் திருப்திப்படுத்த ஒற்றை ஆட்சி முறைமையின் நீடிப்பினையும், தமிழ் மக்களை சாந்தப்படுத்த மாகாண சபை முறைமையினையும் இணைத்து, ஒரே தடத்தில் நகர்த்திச் செல்ல இந்தியா விரும்புகிறது.

இந்தியாவின் பிராந்திய நலனையும், உள்நோக்கத்தையும் தெளிவாகப் புரிந்து, அதன் அரவணைப்பும் அனுசரணையும் இல்லாமல் அடுத்த நகர்வினை மேற்கொள்ள முடியாதென்று கூட்டமைப்புக் கருதினால், கூடுதல் அதிகாரம் கொண்ட மாகாண சபையே, நிரந்தரத் தீர்விற்கான முதல்படி, இரண்டாம் படி யென்று புதிய விளக்கங்களை அளிக்க முன்வரும்.

1977ஆம் ஆண்டுத் தேர்தல் வழங்கிய ஆணையிலிருந்து, விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட 2004 ஆம் ஆண்டுத் தேர்தல் வரை, தாயகம்,தேசியம், தன்னாட்சி என்கிற கோட்பாடுகளே தமிழர் அரசியலின் ஆணி வேராகத் திகழ்ந்தன. மறுபடியும்காலச் சக்கரம் திருப்பிச் சுழன்று, திம்புவையும் வட்டுக் கோட்டையையும் கடந்து மாவட்ட சபைக்குச் சென்றடையலாம்

ஆகவே இந்தியாவின் ஆதரவுபெறப்பட வேண்டுமாயின், அது உருவாக்கிய, மாகாண சபையினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற நிர்ப்பந்த அரசியல், தமிழ் மக்கள் மீது திணிக்கப்படப் போகிறது.

அதேவேளை, சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் யுத்தக் குற்றப் பரப்புரைகளால் அரசு பதற்றமடைவதையும் நோக்க வேண்டும்.

சிறுவர் படை சேர்ப்புப் பிரசாரத்தில் மூழ்கித் திளைத்த யுனிசெப் நிறுவனம், 18 வயதிற்குட்பட்ட 50,000 சிறுவர்களைப் பாதுகாக்க முடியாமல் திணறுகின்றது.

இது தொடர்பான செய்திகளை கசிய விட்ட, ஐ.நா. சிறுவர் நிதிய தொடர்பாடல் பிரிவின் பிரதிநிதி ஜேம்ஸ் எல்டரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

வடக்கில் சுற்றுலா சென்ற ஐ.நா.வின் அரசியல் விவகாரத் துணை பொதுச் செயலாளர் வின்பெஸ்கோ, முகாமில் இருக்கும் இரண்டு உள்நாட்டு ஐ.நா. பணியாளர்களை விடுவிக்கக் கோரி அரசிடம் விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது.

இதற்காக, இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கில்லை. இருப்பினும் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கட்டளைக்கு இணங்க, பயணத்தை முடித்துக் கொண்டு, விரிவான அறிக்கையையும் பெஸ்கோ சமர்ப்பித்து விட்டார்.

அதேவேளை ஐ.நா.வின் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடரில், புதிய சிக்கல் உருவாகி, ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலை குழப்பக் கூடாது என்பதற்காக, அமெரிக்க காங்கிரஸால் முன்வைக்கப்படவிருந்த இலங்கை போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தயாரிப்பு வேலைகள் முழுமை பெறவில்லையென்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகமும், ஆசிய மனித உரிமைச் சபையும், மிகக் காட்டமான விரிவான அறிக்கைகளை இன்னமும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

மனித உரிøமகள் விவகாரத்தை காரணம் காட்டி இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளப் பெறப்படலாம் என்று கூறப்படுகிறது.

தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம் நிறுத்தப்பட்டால் சுதந்திர வர்த்தக வலயத்தை மையப்படுத்தி தொழில் புரியும், இரண்டரை இலட்சம் தொழிலாளர்களும், அவர்கள் சார்ந்த குடும்பங்களுமாக, ஏறத்தாழ 10 இலட்சம் பேர் பாதிப்படைவார்கள்.

ஆனாலும், 500 ரூபா சம்பளம் கோரிப் போராடும், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குறித்து எவருமே கவலைப்படவில்லை.

இம்மக்கள், வெறும் கூலிகளாகவும், தீண்டத்தகாத மக்களாகவும், எட்டடிக் குடிசைக்குள் வாழும் மனிதர்களாகவுமே பார்க்கப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர் சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனத்தோடு செய்து கொண்ட வர்க்க சமரசத்தில் 405 ரூபா மட்டும் கிடைத்தது.

மறுநாள் மலையேறவும் அதற்காக உயிர் வாழவும் கொடுக்கப்படும் பிச்சை போலாகிவிட்டது. இந்தச் சம்பள உயர்வுக்கு பேரம் பேசும் தொழிற்சங்கங்களே, தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் தலைமையாகி விட்ட கொடுமை, பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது.

மாட்டு வியாபாரம் போன்று, ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக, ஏற்றி இறக்கப்பட்ட இந்த பாட்டாளி வர்க்கத்தின் அவல நிலை குறித்து இந்தியாவும் கவலை கொள்வதில்லை.
அதற்கு நாடு பூராகவும் சீனக் கம்பளம் விரிக்கப்பட்டு விடுமோ என்கிற பெருங்கவலை.

தமிழ் பேசும் மலையக மக்களின் போராட்டத்திற்கு, கருத்தளவில் கூட ஆதரவினைத் தெரிவிப்பதற்கு, ஏனைய, சிறுபான்மை என்று வர்ணிக்கப்படும் தேசிய இனங்களின் அரசியல் பிதாமகர்கள், ஏன் முன்வருவதில்லையென்கிற கேள்வியும் எழுகிறது.

இங்கு வர்க்க ஒடுக்குதலுக்குள், இனமுரண்பாடுகளும் முக்கிய பாத்திரம் வகிப்பதை, தேசிய இன விடுதலைக்காக போராடும் சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆடைகளை உற்பத்தி செய்யும் கரங்களைப் பாதுகாக்க, மேற்குலகோடு போராடும் பேரினவாதம், தேயிலைத் துளிர் கொய்யும் கைகளுக்கு விலங்கிட முனைகிறது.ஜி.எஸ்.பி. பிளஸ் போன்றதொரு பொருளõ தாரச் சிக்கல், அண்மையில் சீனாவிற்கும் ஏற்பட்டது. ஆனால், அது மனித உரிமை மீறல் சம்பந்தமான விவகாரமல்ல.

இந்த மாதம் 11 ஆம் திகதி முதல், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ரயர்களுக்கான இறக்குமதி வரியை, 4 % இலிருந்து 35% ஆக அமெரிக்கா உயர்த்தியதால் வந்த உரசல். 2008 இல், 46 மில்லியன் ரயர்களை சீனா ஏற்றுமதி செய்தது.வரி அதிகரிப்பினால், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படலாமென சீனா எச்சரித்தது.

அத்தோடு வரியை உயர்த்தினால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கார் உதிரிப்பாகம் மற்றும் கோழி இறைச்சிக்கு தடை விதிக்கப் போவதாக சீனா அறிவித்தது.இருப்பினும் இரண்டு பொருளாதார வல்லரசுகளும் மேற்கொண்ட, சமரச உடன்பாட்டை அடுத்து, இம்மோதல் தணிந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை, இத்தகைய மோதலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடுக்கக்கூடிய வல்லமை கிடையாது. சீனாவிடம் செல்வேன், இந்தியாவிடம் போவேனென்று அறிக்கைப்போரினை மட்டும் ஸ்ரீலங்காவில் நிகழ்த்த முடியும்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட தொடக்க நிலை விசாரணைகளின் அறிக்கையே, வரிச்சலுகை நீக்கப்பட வேண்டுமென்கிற முடிவிற்கான காரணியாகக் கருதப்படுகிறது.
உண்மையிலேயே, மனித உரிமை விவகாரம் காரணமாக, இவ் வரிச்சலுகையை நீக்க ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றனவா? அல்லது மேற்குலகின் இராஜ தந்திர வலைக்குள் இலங்கையை கொண்டுவர, இத்தகைய அழுத்தங்களை அவை பிரயோகிக்கின்றனவா என்னும் சந்தேகமும் எழாமலில்லை.

ஆனாலும் போர்க் குற்ற மேகங்கள் இலங்கையைச் சூழ்ந்து வரும் இவ்வேளையில், தமிழர் தரப்பின் அடுத்த நகர்வு, மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக நோக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட, உயிர் நீத்த, இலட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, இந்திய நலனிற்காகத் திருத்தி எழுதினால், அது நிரந்தரக் கறையாக வரலாற்றில் பதியப்படும்.

- சி.இதயச்சந்திரன்

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Comments