சிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப்போர்


சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், நல்லாட்சி விடயத்தில் ஆளும் மகிந்த அரசு காண்பிக்கும் பொறுப்பற்ற போக்கு, சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறை, தெளிவான திட்டமிடலுடன் அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு போன்ற பல விடயங்களில் சீற்றமடைந்துள்ள மேற்குலகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தும்வகையில் மறைமுகமாக பல்வேறு அரசியல் - இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மனித உரிமைகள் என்ற விடயத்தில் மேற்குலகத்தின் பேச்சை கேட்காத சிறிலங்கா அரசை மேற்குலகம் வெளிப்படையாக சாடியது. சிறிலங்கா அரசும் பதிலுக்கு மேற்குலகுக்கு எதிராக தனது தெளிவான - திட்டமிட்ட - பிரசாரபோரை முன்னெடுத்தது மட்டுமல்லாமல், தனது போர் நிகழ்ச்சிநிரலுக்கு ஓத்துழைக்காத மேற்குலகுக்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தும்வகையில், பணி நிமிர்த்தம் சிறிலங்காவை தளமாக கொண்டியங்கிய மேற்குலக ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் பலருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது.

சிறிலங்காவின் உண்மைநிலவரங்களை தமது செய்திசேவைக்கு வழங்கிவந்த மேற்குலக ஊடகவியலாளர்களின் விசா நீடிப்பை இரத்து செய்து அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.

- சிறிலங்காவின் போர் நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாக விமர்சித்த சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் விசாவை இரத்து செய்து நாட்டுக்கு வருவதற்கான அனுமதியையே மறுத்தது.

- போரில் சிக்குண்ட மக்களுக்கான அவசர உதவிகளை மேற்கொண்டுவந்த அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளின் மூலம் தமது படுகொலைகளின் சாட்சியங்கள் வெளியேறிவிடக்கூடாது என்ற நோக்குடன் அவர்களின் விசாக்களை நீடிப்பு செய்யாமல் அவர்களையும் நாட்டைவிட்டு அனுப்பியது.

- அண்மையில் கனடாவை சேர்ந்த முன்னாள் அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான பொப் ரே அவர்கள் சிறிலங்காவுக்கு சென்றபோது அவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியது.

வவுனியாவில் தடுப்பு முகாங்களில் உள்ள தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வந்த ஐ.நா தொண்டு நிறுவனமான யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்டர் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடு கடத்தப்படவுள்ளார் என தெரியவருகிறது. தடுப்பு முகாங்களில் உள்ள மக்கள் பட்டினியால் உயிரிழப்பதாகவும், குழந்தைகள் போசாக்கு இல்லாமல் பாதிப்படைகின்றனர் என ஜேம்ஸ் எல்டர் உண்மைக்குப் புறமான தகவல்களை வெளியிட்டுள்ளாரென அவர் மீது சிறிலங்கா அரச தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அதிக கவனம் செலுத்தியதாகவும் பாதுகாப்புப் படையினர் இவர் குறித்து படை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் இதனை தொடர்ந்தே ஜேம்ஸ் எல்டரை நாடுகடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் தனது நாடு கடத்தல் நடவடிக்கையை இரத்து செய்யும் நடவடிக்கைகளை ஜேம்ஸ் எல்டர் பல வழிகளில் மேற்கொண்ட போதும் அவை பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல சம்பவங்களின் மூலம் மேற்குலகின் சீற்றத்தை மேலும் ஆரோகணிக்கும் செயற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்ட சிறிலங்கா தனது ஆட்சி பாதையை புறம்பான அரசியல்தளத்தை நோக்கியதாக அமைத்துக்கொண்டது.

மேற்குலகுடன் கைகோர்த்து தனது காரியங்களை முன்னெடுப்பது போன்ற தோரணையை வெளிவாரியாக காண்பித்து, சிறிலங்கா அரச அதிபர் முதல் இராஜதந்திரிகள் வரை பேட்டிகளிலும் புகைப்படங்களிலும் ஒருவித வெளிபார்வைக்கேற்ற அரசியலை சிறிலங்கா மேற்கொண்டுவருகின்றபோதும், மேற்குலகுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான முன்னைய உறவுநிலை தற்போது இல்லை என்பதே உண்மை.

இதனை மேற்குலகும் தனது பங்குக்கு பதிலடியாக அண்மைக்காலமாக காண்பித்துவருகின்றமை இங்கு குறிப்பிடக்கூடிய விடயம்.

உள்நாட்டில் மனித உரிமை மீறல்களையும் தான் நினைத்தவாறு ஆட்சியையும் நடத்திவரும் சிறிலங்கா அரசுக்கு தண்டனை கொடுப்பது போலவும் தனது சர்வதேச இருப்புக்கு கரி பூசியது போல அரச தரப்பில் அறிக்கை விடுத்து சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கு பதிலடி கொடுப்பதுபோலவும் மேற்குலகம் அண்மைக்காலமாக தனது நடவடிக்கைகளையும் மறைமுகமாக - மிக மும்முரமாக - மேற்கொண்டுவருவதை காணமுடிகிறது.

இந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அதிபர் தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளப்போவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆனால், உள்நாட்டில் இடம்பெற்ற போரில் பாரிய மனிதப்பேரவலத்துக்கு காரணமான இராணுவ அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் அவை கூட்டத்துக்கு அழைத்து அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குவதில்லை என்பதில் மேற்குலகம் இம்முறை உசாரடைந்திருக்கிறதுபோல் தெரிகிறது.

இதனால், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சிறிலங்கா அரசின் சார்பில் விண்ணப்பித்த பல இராணுவ அதிகாரிகளின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மூக்குடைபட்டுக்கொண்ட சிறிலங்கா அதிபர் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் பங்குபற்றாமல், பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை கூட்டத்தொடருக்கு அனுப்பமுடிவு செய்துள்ளார் எனத்தெரிகிறது.

இதைவிட, ஏற்கனவே மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகி இருக்கும் படையதிகாரிகள் மற்றும் பலருடைய விஸாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, சிறிலங்கா பாதுகாப்புதரப்பின் ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்பக்வெலவின் கனடாவுக்கான விசா விண்ணப்பம் கனடிய தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் மேல்மாகாண முதல்வர் அலவி மௌலானாவினதும் அவரது குடும்பத்தாரதும் பிரித்தானியாவுக்கான விஸா விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் பிரித்தானியாவிற்கான விஸாவுக்காக விண்ணப்பித்த போது அவர் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

பூகோள அரசியல் மாற்றத்துக்கு உட்பட்டிருக்கும் புதிய அணியுடன் கைகோர்த்துள்ள சிறிலங்கா அரசு, மேற்குலகின் நிரந்தரமான அதிருப்தியை சம்பாதித்திருக்கும் இந்தவேளையில், இனிவரும் காலங்களில் இப்படியான - தொடர்ச்சியான - அனுபவங்களை கற்றுக்கொள்ளநேரிடும்.

இதில் மேற்குலகம் விடாப்பிடியாக உள்ளது போலவே தெரிகிறது. மகிந்த அரசுடனான மேற்குலகின் இந்த மறைமுக பனிப்போர் வெளிப்படையாக வெடித்து செயல்வடிவில் மூர்க்கமடையும் காலமும் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

Comments