தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பயங்கரவாத முத்திரையும்



(மீள்பதிப்பு)

........சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி இலங்கையின் இனப்பிரச்சனையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள் ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மறுதரப்பினரான சிறிலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன.

இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது. அத்தோடு எமது எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது.

இந்நாடுகளின் ஒரு தலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன....."
தேசியத்தலைவர் வே.பிரபாகரன் 2005 மாவீர்நாள் உரை

"சர்வதேச சமூகம் தமிழ்மக்களின் பாதுகாப்பு கவசமான ஆயுதத்தை களைவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தபின்னர், தமிழ் மக்களின் விடுதலை என்ற இலட்சியத்திற்கு மாறாக பயங்கரவாதம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்தனர்... நீதியான எமது போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்கிவிட எடுக்கும் முயற்சிகள் எவரது நோக்கத்தையும் அடைவதற்கு எதிர்வினையாக முடியும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தம்மை தாமே ஆளும் போதே நீதியான சமாதானம் நிலவும். "

ஒரு விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரம் அது வரித்துக்கொண்டுள்ள இலட்சியமாகும். அந்தப் போராட்டத்தின் மையம், இலக்கு யாவுமே இந்த இலட்சியமே. இந்த இலட்சியத்தை அடைவதற்கான போராட்ட வடிவங்களில் அது தரித்துக்கொண்டுள்ள ஆயுதங்களும், அஸ்திரங்களும் அடங்கும்.

தமிழ் மக்களின் போராட்டம் அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான ஒரு போராட்டம். தமிழர் தமது தாயகத்தில் தம்மைத் தாமே ஆள்வற்கான போராட்டம்.

சிங்களதேசத்தின் சட்டங்களும் இயாப்புக்களும் இந்த விடுதலைப் போராட்டத்தை தொட்டு நிற்க முடியாது. இதனை தொடுவதற்காக சிங்களதேசம் அரசபயங்கரவாதத்தை ஏவிவிட்டது. இதனால் தமிழ்மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டி நிற்பந்திக்கப்பட்டனர்.

சர்வதேச சமூகம் தமிழ்மக்களின் பாதுகாப்பு கவசமான ஆயுதத்தை களைவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தபின்னர், தமிழ் மக்களின் விடுதலை என்ற இலட்சியத்திற்கு மாறாக பயங்கரவாதம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்தனர். இதன் விளைவு ...

இதன் மூலம் பேச்சு வார்த்தையில் சமமாகப் பங்கு கொண்ட தமிழ் மக்களை சமனற்ற நிலைக்குத்தள்ளி அழுத்தங்கள் போடப்பெற்றன. இதனது நேரடி விளைவாக பேச்சு வார்த்தைகள் முறிவுற்றதும், தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச பயங்கரவாதம் ஒட்டுப்படைகள் என்ற வடிவத்தில் இடம்பெற்று வருவதும் அதன் விளைவால் இன்று தமிழ் தேசியத்தின் ஆயுதபலம் ஓய்வு நிலைபெற்று உலக ஒழுங்குக்கு அமைய மே 19 தொடக்கம் போராட்ட வடிவத்தை மாற்றிய இலட்சியப்பயணத்தில் நடக்க தொடங்கியிருப்பது நாம் அறிந்ததே.




சிங்கள அரசபயங்கரவாதத்தின் எதிர் வினையே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். 1983 ஜூலை இன அழிப்பு யாழ்பாணத்தில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கான சிங்களமக்களின் எதிர்வினை என நிறுவ முற்பட்ட முயற்சிகளை நாம் அறிவோம். 13 இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு ஆறு நாட்ககளுக்கு முன்னர் லண்டனில் இருந்து வெளிவரும் டெயிலி ரெலிகிறாப் பத்திரிகைக்கு

*1993மறைந்த அரச அதிபர் ஜெயவர்தனா அளித்த பேட்டி ஒன்றில்


" தான் இப்போது யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தை பொருட்படுத்தவில்லை என்றும் அவர்களைப்பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியோ தன்னால் சிந்திக்க முடியாது "
என்று கூறியிருந்தார்.

சிங்கள ஜனாதிபதிகள் பலர் வந்து போயினர். தமிழ்மக்கள் தொடர்பான அவர்கள் சிந்தனைகள் இருந்தபடியே இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் மாறிவிட்டது அது என்னவென்றால் சிங்களமக்கள் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று நாம் இப்போது அலட்டிக்கொள்வதில்லை.

அறம் எங்கள் பக்கம். தர்மம் எங்கள் பக்கம். ஒரு தனி மனிதனுக்கு அரசு இழைத்த தவறிற்காக ஒரு நகரத்திற்கே நெருப்பூட்டி, மன்னனும் அவனது துணைவியான மகாராணியும் இறப்பதற்கு காரணமாக இருந்தாள் கண்ணகி. அது காப்பியகால கலாச்சாரம். இன்று அது பொருந்தாது என்பது எமக்கு தெரியும்.

" காலத்திற்கு ஏற்ற வகைகள், அவ்வக்
காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் எந்த
நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை "

பாரதி

ஆனாலும் நீதியான எமது போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்கிவிட எடுக்கும் முயற்சிகள் எவரது நோக்கத்தையும் அடைவதற்கு எதிர்வினையாக முடியும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தம்மை தாமே ஆளும் போதே நீதியான சமாதானம் நிலவும். அதனால் பிராந்தியவல்லரசிற்கும் பெரும் வல்லரசிற்கும் பிறர்கும் நன்மையுண்டாம் என இந்த உலகத்துக்கு மீண்டும் எடுத்துச் சொல்வோம்.

வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது

ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

Comments