இலங்கைக்கு அமெரிக்க அறிக்கை ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தல்



யுத்தக் குற்ற விசாரணையைக் கோருவது பிரிவினைவாதத்தைத் தூண்டும் செயலா?

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் இறுதிப் பகுதியில் யுத்தக் குற்றங்கள் எனக் கருதக் கூடிய சம்பவங்கள் இடம்பெற்றன என அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்ட கருத்து தென்னிலங்கையில் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

அச்சமயத்தில் இலங்கையின் யுத்த முனையில் இடம்பெற்றவை என விவரித்து, அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தயாரித்துள்ள அறிக்கை அந்த நாட்டின் காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரதி இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை, மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதத்தைத் தூண்டக்கூடியவை எனப் பதிலடி கொடுத்திருக்கின்றது இலங்கை வெளிவிவகார அமைச்சு.

நல்லது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் இந்தப் பதில் குறித்து நோக்குவது இந்தச் சமயத்தில் பொருத்தமானது.வன்னியில் யுத்தம் தீவிரமடைவதற்கு முன்னர் அங்கிருந்த சர்வதேசத் தொண்டுப் பணியாளர்கள், முகவர் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் என எல்லோரையும் அரசு வெளியேற்றி விட்டது. யுத்தம் மூர்க்கமடைந்து மிக மோசமான கட்டத்தை அடைந்த பின்னரும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட , சர்வதேசப் பார்வையாளர்களையோ, தரப்பினரையோ, ஊடகவியலாளர்களையோ, அரசு அங்கு அனுமதிக்கவில்லை. ஓர் இறுக்கமான மூடுமந்திர வேலியே தொடர்ந்தும் பேணப்பட்டது.

அது மட்டுமல்ல, இந்த யுத்தம் வன்னியில் தீவிரமடை வதற்கு முன்னர் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவை தொடர்பில் இலங்கை அரசு நியாயமான வகையில் நீதி விசாரணைகளை நடத்தியதாகவோ, தவறுகளுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியதாகவோ சர்வதேச சமூகம் நம்பவில்லை. அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கை நடந்து கொள்ளவே இல்லை என்பதுதான் சர்வதேச சமூகத்தின் ஆதங்கமாகும்.

அத்தகைய நிலையில் வன்னியில் இறுதி யுத்த காலத்தில் மிக மோசமான மனிதப் பேரழிவுக்கு வழி செய்த யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகள் குறித்த விட யத்தில் குற்றச்சாட்டு விரல் இலங்கை அரசை நோக்கியும், அதன் படைகளை நோக்கியும், அந்தப் படைகளை வழி நடத்திய அரசியல் தலைமையை நோக்கியுமே நீட்டப்படுகின்றது.

இந்த நிலைமையில் சர்வதேசப் பார்வையாளர்கள், நிபுணர்கள் நேரடியாக யுத்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, சம்பந்தப்பட்டோரைக் கண்டு, பேசி, அளவளாவி, உண்மையைக் கண்டறிய வாய்ப்பளிக்காமல் மறித்துக்கொண்டு மறைத்துக்கொண்டு சர்வதேச நீதி விசாரணைகளுக்கும் இடமளிக்காமல் தடுத்தபடி அத்தகைய நீதி விசாரணை நாட்டின் இறைமையில் தலையிடும் விடயம் என விமர்சித்தபடி இந்த விவகாரத்தைச் சமாளிக்கலாம் என இலங்கை எதிர்பார்ப்பது அர்த்தமேயற்றது.

அது மாத்திரமல்ல, யுத்தத்தில் வெற்றியீட்டிய தரப்புகளுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற தென்னிலங்கைத் தரப்புகள் சிலவற்றின் அர்த்தமற்ற விளக் கமும் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவு.

மேலும், இத்தகைய யுத்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதத்தைத் தூண்டக்கூடியவை என்ற இலங்கை வெளிவிவகார அமைச்சின் சீற்றமும் பெரும் நகைப்புக்கிடமானதாகும்.இந்த விடயத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளர் மிகக்காத்திரமான விளக்கம் ஒன்றைத் தந்திருக்கின்றார். அது, கவனிக்கத்தக்கது.

"வடபகுதி மக்களுடன் ஓர் நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுப்பதில் தாம் திடசங்கற்பம் கொண்டுள்ளார்கள் என்று இலங்கை அரசுத்தலைவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் எந்த நல்லிணக்கச் செயற்பாட்டிலும் அடிப்படையான முக்கியமான விடயமாக இருப்பது பொறுப்புக்கூறும் அம்சமாகும் என்றே நாம் உறுதியுடன் நம்புகின்றோம். அதைத்தான் எமது வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வலியுறுத்தி சிபாரிசு செய்து நிற்கின்றது.'' என்று தெரிவித்திருக்கின்றார் அந்தப் பேச்சாளர்.

வன்னி யுத்தத்தின் போது மக்களுக்கு எதிரான பெரும் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. அதனால் பேரழிவுகளைச் சந்தித்துப் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்ற கருத்து தமிழ் மக்களின் மனதில் ஆழ உறைந்துபோய்க் கிடக்கின்றது. தமிழினத்துடன் தென்னிலங்கைக்கு நல்லிணக்கம் ஏற்படுவதாயின் இத்தகைய கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

அந்தச் செயல்களுக்கான தவறுகளுக்கான பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட முடியும். அதை விடுத்து,பெரும் மனிதக் கொடூரங்களுக்குக் காரணம் எனக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை மூடி மறைத்துவிட்டு அதற்குப் பொறுப்பான குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிட்டு அந்தக் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களோடு நல்லிணக்கம் காண்பது என்பது அர்த்தமற்றது; சாத்தியமற்றது.

வேண்டுமானால், யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு, அவ மானப்படுத்தப்பட்டு, முடங்கிப்போய்க் கிடக்கும் தமிழினம் மீது,தனது அதிகார பலத்தின் மூலம் தனது திட்டம் ஒன்றைத் திணித்துவிட்டு அதை நல்லிணக்க ஏற்பாடாக வேண்டுமானால் கொழும்பு காட்டமுடியும். அவ்வளவே.ஆகவே, வன்னி யுத்தக் களத்தின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்றவை எனக் கருதப்படும் கொடூரங்கள், யுத்த மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்குக் கோருவது பிரிவினையைத் தூண்டும் நடவடிக்கை அல்ல. உண்மையான நியா யமான நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்க அத்தகைய விசாரணை உதவும் என்பதே உண்மையாகும். உண்மையில் அங்கு யுத்தக் குற்றங்கள் எவையும் இடம்பெறவேயில்லை எனக் கொழும்பு கூறுவது சரியானால் இத் தகைய விசாரணைக்கு அது பின்னடிப்பது ஏன் என்பதுதான் புரியாத மர்மமாக உள்ளது.

முகிலன்

Comments