போர் வெற்றி கனவுகள் கலைகின்றன!

போர் வெற்றி மயக்கத்தில் மூழ்க்கிக் கிடந்த சிங்கள மக்கள் இப்போது அதில் இருந்து மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கியுள்ளனர். எப்போதும் போர் வெற்றிகளைக் கொடுத்தே ஆட்சியை நகர்த்திய சிங்கள ஆட்சியாளர்களுக்கு இனிமேல் போர் வெற்றிச் செய்திகளைச் சொல்வதற்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது.

அத்துடன், போர் வெற்றி தொடர்பான கனவில் மிதந்த சிங்கள சமூகத்திற்கும் இனி அவ்வாறான வெற்றிச் செய்திகள் கிடைக்காது என்ற நிலையில்தான் பொருளாதார நெருக்கடி குறித்து அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதனால், போர் வெற்றியை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்திய சிங்கள அரசுகள் இனிமேல் பொருளதார வெற்றிகளை அந்த மக்களுக்கு கொடுத்தாலேயே ஆட்சியை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. இந்த நிலை தோன்றியுள்ளதையே கடந்த வாரம் தென்னிலங்கையில் நடைபெற்ற தென்மாகாண சபைத் தேர்தல் முடிவுகளும் அரசுக்கு எடுத்துரைத்துள்ளன.

போர் வெற்றி பெற்ற தங்களுக்கே ஒட்டுமொத்த சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைக்கும் என்று நம்பிய மகிந்த அரசுக்கு தென்மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதாக அரச தரப்பு பீற்றிக்கொண்டாலும், உண்மை நிலை கசப்பானது என்பதை விழுந்துள்ள வாக்குகள் உணர்த்துகின்றன. பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை என்பதுடன், 90 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிய மகிந்த அரசிற்கு 70 வீதத்திற்கும் உட்பட்ட வாக்குகளே கிடைத்துள்ளன. அத்துடன், நம்பிக்கையோடு களமிறக்கிய மகிந்தவின் உறவினர்களான வேட்பாளர்கள் கூட மண்ணைக் கௌவியுள்ளது போர் வெற்றியில் இருந்து மக்கள் விடுபடத் தொடங்கியுள்ளார்களோ என்ற அச்சத்தை மகிந்த அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தி மக்களின் சுமையைக் குறைப்பதற்கு இன்னும் மகிந்த அரசினால் முடியவில்லை. போர் முடிந்தால் பாதுகாப்பு செலவீனம் குறைந்துவிடும் என்று நம்பிக்கை வெளியிட்டவர்கள், இப்போது போர் முடிந்ததன் பின்னரும் பாதுகாப்பு செலவீனத்தை பல புதிய காரணங்களுடன் மேலும் அதிகரித்திருப்பது சிங்கள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. போர் முடிந்தால் பொருளாதாரத்தில் பெரு வெற்றி காணலாம் என்று நம்பியிருந்த மக்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வரிச்சலுகை தொடர்ந்தும் கிடைக்குமா, கிடைக்காதா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்காமல்போனால் ஒரு இலட்சம் மக்கள் அடுத்த வேளை உணவுக்காக வீதிக்கு இறங்க வேண்டிய நிலை உருவாகும்.

இதற்குள் பெரும் இழுபறிப்பட்டு பெற்ற உலக நாணய நிதியத்தின்கடன்கூட தொடர்ச்சியாக கிடைக்குமா என்ற நிலை எழுந்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சம் மக்களை விடுவிப்பதற்கு சிறீலங்கா அரசு மறுக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள கடன் பணத்தினை நிறுத்துவதற்கு சர்வதேச சிக்கல் ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. பருவ மழை துவங்குவதற்கு முன்னர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க சிறீலங்கா அரசு முன்வரவிட்டால் சர்வதேச நாணயநிதியம் ஒப்புக்கொண்டுள்ள 2.6 பில்லியன் நிதி உதவியின் இரண்டாவது கட்ட நிதியுதவியை அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியமும் நிறுத்த முன்வரவேண்டும் என சர்வதேச சிக்கல் ஆய்வுக்குழுவின் இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோலீன் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

வன்னி மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்துக்கொண்டே தனது எண்ணங்களை நிறைவேற்றி விடலாம் என்று எதிர்பார்த்தது மகிந்த அரசு. மக்களையும் வெளியில் விடக்கூடாது, நிதியும் கிடைக்கவேண்டும் என்று கூழுக்கும், மீசைக்கும் ஆசைப்படும் மகிந்த, மக்களை அகதி முகாமில் வைத்துக்கொண்டு உலக நாடுகளிடம் இருந்து நிதியை வசூல் பண்ணிவிடலாம் என்று போட்ட கணக்கும் பிழைத்துப் போகத் தொடங்கியுள்ளது. அதனால்தான், ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டைத் தொடக்கிவைத்து பேசிய மகிந்த ராஜபக்ச, மேற்குலக நாடுகளின் பேராசை பிடித்த கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமைகளை சிறீலங்காவும் சுமக்க வேண்டியிருக்கிறது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மக்களை முகாம்களில் இருந்து விடுவித்தாலேயே நிதியைக் கொடுப்பதற்கு உலகம் தயாராக இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டதனால், மக்களை விடுவிப்பதுபோல் பாவனைகள் காட்டப்படுகின்றன. 40 ஆயிரம் மக்கள் ஒரே நாளில் மீளக் குடியமர்த்தப்படுவதாக சாத்தியமில்லாத செய்திகள் வெளியிடப்படுகின்றன. தமிழர்களுக்கு பெரும் அழிவினை ஏற்படுத்தி போரில் வெற்றி பெற்ற மகிந்தவினால், அந்த மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தத் தொடங்கியுள்ளது.

ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு

நன்றி்:ஈழமுரசு

Comments