ஈழ மண்ணில் இந்தியாவின் புதிய நாடகம்

தமிழ்நாட்டைச்சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அகதி முகாங்களுக்குக் காட்சியளிக்கச் செல்லும் செய்திதான் இன்றைய தமிழ்ச் செய்தித்தாள்களிலும், இணையங்களிலும், முதன்மை இடத்தைப்பிடித்துள்ளது. தி.மு.க வின் நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைக்கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணி அரசின் பத்துப் பேர் கொண்ட குழு இலங்கையைச் சென்றடைந்துள்ளது.

இக்குழு அங்குள்ள அகதிமுகாங்களில் வாழும் மூன்றரை இலட்சம் தமிழ்மக்களை நேரில் சந்தித்து, உண்மை நிலைவரங்களைக் கண்டறிந்து தமிழக முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான பயணமாக இது அமைந்திருக்கின்றது என அவர்களது பயணத்தின் நோக்கம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிகக்கொடுமையான யுத்தத்தில் தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது போருக்கு முண்டுகொடுத்து நின்ற காங்கிரஸ் கட்சியின் அரசிற்கு தோள் கொடுத்த தமிழக அரசு, வெறுமனே கண்துடைப்புக்குப் போராட்டங்களை நடாத்தியதே தவிர தமிழ்மக்களின் அழிவைத்தடுக்க எந்த முயற்சியையும் ஆரோக்கியமாகச் செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

in_lk_1

தமிழக உறவுகள் உயிர்களை ஆகுதியாக்கி போரைநிறுத்த வேண்டுமென்பதற்காகச் செய்த தனிமனிதப் போராட்டங்களுக்குக் கூட மதிப்புக்கொடுத்துப் போரை நிறுத்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வெறுமனே அறிக்கைகளையும், மனுக்களையும், தந்திகளையும், அவசரகடிதங்களையும் எழுதி காலத்தைக் கடத்தியதே தவிர எந்தச் செயலையும் செய்யவில்லை. காரணம், பயனுள்ள வலுமிக்க எந்த முயற்சியையும் எடுக்காமல் அழிவுக்கு துணைநின்ற மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதனூடாக, தனது வாரிசு அரசியல் நோக்கத்திற்குப் பாதிப்பு வரக்கூடாது என்ற - மறைமுக - கபட நோக்கத்தை நிறைவேற்றுவதே ஆகும். இதற்காக முனைப்புடன் செயற்பட்டது தி.மு.க அரசு. தமிழ் மக்களின் அழிவைக் கூட தமது சுயநல அரசிற்காக அடகுவைத்த தமிழகத்தின் முதல்வர், மூன்றுமணிநேர உண்ணாவிரத நாடகத்தால் ஈழத்தில் போர்நிறுத்தம் வந்துவிட்டது என தன் திரைத்துறை நாடக நடிப்புத்திறனையும் வெளிக்காட்டியதை ஈழமக்கள் மறக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். (மூன்று மணிநேரத்தில் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட ஒரு தலைவர் ஏன் முப்பது வருடமாக முன்னூறாயிரம் மக்கள் மடியும் வரை பொறுத்திருந்தார் என தயவு செய்து யாரும் கேள்வி கேட்டுவிடாதீர்கள்)

“தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுப்பது” தான் முதல் உதவி. அகதிகளாக வந்த மக்கள் தொடக்கத்திலிருந்து இன்றுவரை சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இதுவரை எந்த உதவிக்கும் போகாமல் ஏதோ கொஞ்ச நிவாரணங்களை அனுப்பிவிட்டதுடன் தனது கடமை முடிந்துவிட்டது என்றிருந்த தமிழக அரசு - பிரித்தானியாவிலிருந்து வணங்காமண் கப்பலில் வந்த நிவாரணம் மக்களுக்குப் போய் சேர்வதைக்கூட உறுதிப்படுத்தாத இந்த அரசு - திடீரென ஞானம் வந்ததைப்போல “உண்மை நிலவரத்தைக் கண்டறிய ஒரு குழு” என புதிதாக சாத்தான் வேதம் ஓதுவதற்கு புறப்பட்டது போல ஒரு மிகைப்படுத்தப்பட்ட விளம்பரத்துடன் புறப்பட்டது. இக்குழுவில் காங்கிரஸ் சார்பானவர்களையும் உள்ளடக்கி, ஈழத்தமிழ்மக்கள் விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் கரிசனை கொண்டிருப்பதைப்போலக் காட்டி, தமிழக மக்களின் ஆதரவைக் கவரக்கூடிய பாரிய நாடகத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஏனெனில் இது ஆளுங்கட்சியின் சாதனைப்பட்டியலுக்கான தயார்ப்படுத்தலே தவிர தமிழக அரசினுடையது அன்று. இதனால்தான் எந்தவொரு எதிர்கட்சித்தரப்பினர் உட்பட பத்திரிக்கைக்காரர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், மற்றும் சுதந்திரக் கண்கணிப்பாளர்கள் என்று எவரும் உள்ளடக்கப்படவில்லை.
in_lk_2
இன்றைக்கு, ஐந்து மாதங்ககளுக்கு மேலாக அகதிமுகாம்களில் மக்கள் கொடுந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஐ.நா உட்பட பல உலகநாட்டுத்தலைவர்களும் புலம்பெயர் தமிழ்மக்களும் பல போராட்டங்களைத் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வளவு காலமும் இதைப்பற்றி அக்கறை எடுக்காது, சாட்டுக்கு அல்லது தமிழகமக்களை ஏமாற்றுவதற்காக சிறுசிறு மிகைப்படுத்தப்பட்ட போராட்டங்களை மட்டும் செய்துவிட்டு உள்ளுரில் நாடகமாடியது போதாதென்று இப்போது ஈழத்திலும் கலைஞரின் நாடகத்திறனைக் காட்ட ஒரு குழு அங்கே செல்கின்றது என்பது தமிழக அரசின் ஓர் அரசியல் கோமாளித்தனமாகவே தெரிகின்றது. மற்றும் தமிழர்கள் அருவருக்கத்தக்க நிலையில் இருக்கிறார்கள் என அகதிமுகாம் நிலை தொடர்பாக பி.பி.சி செய்திசேவை பதிவு செய்துள்ளது.

தற்போது செல்லும் குழுவினுடைய நிகழ்ச்சி நிரலில் மீள்குடியேற்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் இலங்கையின் பிரதமர் “நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் தற்போது மீள்குடியேற்றம் சாத்தியமில்லை” எனக் கூறியிருந்தார். இராமேஸ்வரம் மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பெற்றுக்கொடுக்கமுடியாத தமிழக அரசு வெறுமனே கண்ணிவெடியகற்றலுக்கு ஆட்களை கூடுதலாக அனுப்புவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுப்பதைத்தவிர மீள்குடியேற்ற விடயத்தில் என்னத்தைத் தான் செய்துவிடமுடியும்?

இந்திய அரசாங்கம் தனது நலனுக்காக அனல் மின்நிலையம் அமைப்பதற்கு, சம்பூரின் மக்கள் தங்களது வளம்மிக்க பூர்வீக இடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள், ஈழத்தமிழனின் நலனில் அக்கறை கொண்டவர்கள் எனின், சம்பூரில் அத்திட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்தி மக்களை மீளக்குடியேற்ற இரு அரசுகளையும் வற்புறுத்துவார்களா?

ஈழத்தில் தமிழ்மக்களுக்கு அவலங்கள் நடக்கின்றனவா என தமிழக முதல்வரை நேரடியாக வந்து பார்க்கும்படி இலங்கை அரசு கூறியகாலத்தில் ஒரு குழுவை அனுப்பவோ நேரில் செல்லவோ நாதியற்றவர்கள் தற்போது தங்களின் நிகழ்ச்சி நிரலின் நோக்கத்தில் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான உரிமைகளை பெற்றுத் தருவதற்கான பயணமாக இது அமைந்திருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட போராட்டத்தில் சிங்கள தேசத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அரசியல் சாசன திருந்தங்களும் ஏற்றுக்கொள்ளப்படாததின் எதிர்வினையாகவே மாபெரும் போர் நடந்தது என்பதை இவர்கள் இன்னும் அறியவில்லையா? இன்றுவரை தமிழர்களை அடிமைகளாகப் பார்க்கும் இலங்கை அரசு, எந்த உரிமையையும் தமிழனுக்கு விட்டுக்கொடுக்காத இலங்கை அரசு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைந்த வடக்கு - கிழக்கு என்பதையே இல்லாமல் செய்த இலங்கை அரசிடம், இந்திய மீனவர்கள் விடயத்தில் இன்னும் ஒரு தீர்வைப் பெறமுடியாத வல்லரசின் பிரதிநிதிகளா! தமிழ்மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தரமான உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக முயற்சிக்கப் போகிறார்கள்? அல்லது இந்திய அரசின் துணையுடன் நகர்த்தப்படவிருக்கும் ஓர் அரைகுறைத்தீர்வின் தொடக்க நகர்வாக இவர்கள் நகர்த்தப்படுகின்றார்களா?

தமிழ்நாட்டின் ஆறு கோடி தமிழர்களின் உணர்வுகள் ஈழத்தமிழர்பால் அனுதாபமாக இருந்தும் தமிழ்நாட்டின் சுயநல அரசியலின் கபடநாடகத்தால், 21ஆம் நூற்றாண்டில் நாகரீக மனித சமுதாயமே வெட்கித் தலைகுனியும் அளவில் மிகப்பெரும் தமிழின அழிப்பு தமிழ்நாட்டிலிருந்து இருபது மைல் அருகிலுள்ள ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அந்த வேளை இந்த மனித அவலத்தை நிறுத்த எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றபோதும் ஒன்றும் செய்யாமல் இருந்தது தமிழக அரசு. தற்போது ஈழத்தமிழரின் நிரந்தரமான பாதுகாப்பான உரிமையைப் பெற்றுத் தருவதற்கு இவர்களுக்கு வலு இருக்கின்றதா? அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்துகிறார்களா? அப்படியாயின் இதுவரைகாலமும், எம்மால் முடிந்தது இவ்வளவுதான், நாங்கள் மாநில அரசு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம்தான் எம்மிடம் உண்டு, உடன்பிறப்பே உனக்காக அழுவதைத்தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியவையெல்லாம் நடிப்பா? இல்லை உண்மையாகவே கூறியிருந்தால், வலுவற்ற நிலையில் உள்ள நீங்கள், ஈழத்தமிழரின் நிரந்தர, பாதுகாப்பான உரிமையைப் பெற்றத்தரச் செல்கின்றோம் என்று கூறுவது எவ்வகையில் நியாயம்?

மேற்குலகத்தின் ஆதரவற்ற நிலையில், தனது பிராந்திய வல்லரசான இந்தியா, சீனா போன்ற நாடுகளைத் திருப்திப்படுத்துவதனூடாக தனது பொருளாதார அரசியல் நலனை அடைய இலங்கையரசு முயற்சி செய்கின்றது. அண்மையில் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அகதிமுகாங்களுக்கு வருகைதர அனுமதி மறுத்த அரசாங்கம், இந்திய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிப்பதனூடாக இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்றது. மறுவளமாகப் பார்த்தால் இலங்கை அரசு 1987ஆம் ஆண்டு சர்வதேச தலையீட்டுக்குப் பயந்து இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செய்தது போலவே மீண்டும் ஒரு சுழற்சி ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளும் வாய்ப்பாக உள்ளதால் இராசதந்திர ரீதியாக தனது அரசியல் நகர்வுக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பான தளமாகவே இந்தியாவை இலங்கை பார்க்கின்றது.

இவர்கள் செல்வார்கள், பார்ப்பார்கள், அழுவார்கள், வாக்குறுதிகளை வழங்குவார்கள், இலங்கை அரசியல்வாதிகளுடன் கதைப்பார்கள், திரும்பிவந்து கலைஞரின் வெற்றி என்று பிதற்றுவார்கள். அறிக்கை சமர்ப்பிப்பார்கள், ஒன்றுமே செய்யமாட்டார்கள். இது தான் நிஐம். தமிழக அரசின் விநோத அரசியலில் ஈழத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகளையும் சேர்த்துவிடப்பார்க்கின்றார்கள் என்பதை நினைக்க வேதனையாகவே இருக்கின்றது. ஈழத்தமிழனின் இரத்தத்தையும் சதையையும் இவர்களது அரசியலுக்காக அடகுவைக்கும் அநியாயம் அரங்கேறப்போகிறதா?

ஈழத்தமிழனின் தமிழீழ அரசியல் விடுதலையானது, எந்த அரசின் உள்நோக்கத்தையும் உள்ளடக்காது, தமது உரிமைகளைக் கொண்ட தீர்வுகள் மட்டும்தான் என்பது ஈழத்தமிழனுக்குத் தெரியும் என்பதையும் எத்தகைய கஸ்டங்களையும் தாங்கி அந்த இலக்கை வென்றெடுப்பான் என்பதையும் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழநேசன்

Comments