முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் ரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. அவர் வீதியில் சென்ற வாகனங்களுக்கு கல் எறிந்தார் என்றும், அதன் பின்னர் புகையிரதம் ஒன்றின்மீதும் கற்களை வீசியபோது அவரை சிலர் துரத்திச் சென்றதாகவும், அதனால் அவர் கடலில் குதித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். இவரைத் துரத்திச்சென்ற ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கடலினுள் வைத்துத் தாக்கியதாகவும், அந்த தமிழ் இளைஞர் தன்னை விட்டுவிடும்படி கையெடுத்துக் கும்பிட்ட போதும் அவர் தொடர்ந்தும் தாக்கப்பட்டதனால் அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மனநோயாளியான அந்த இளைஞர் தமிழர் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு சிங்கள இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில், பலரும் பார்க்க நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவத்தை கடற்கரையில் நின்ற சிலர் கைத் தொலைபேசி மூலம் பதிவு செய்து வெளியிட்ட காரணத்தால், குற்றவாளிகளில் ஒருவரான காவல்துறையினர் ஒருவர் குறைந்த பட்ச நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பினும், சிங்கள நீதித்துறை இந்தப் படுகொலையில் தொடர்பு ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா? அப்படி நிறுத்தினாலும் சிங்கள நீதித்துறை பாராபட்சமான விசாரணை நடாத்தித் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமா? என்பது சந்தேகமே. கடந்த காலங்களில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான எந்தப் படுகொலைக்கும், எந்தப் பாலியல் வன்புணர்வுப் படுகொலைக்கும் சிங்கள நீதித்துறை நீதி வழங்கிய வரலாறே கிடையாது.

குற்றவாளி சிங்களவனாகவும், பாதிக்கப்பட்டவன் தமிழனாகவும் இருக்கும் பட்சத்தில் சிங்கள தேசத்தின் நீதிதேவதை விடுமுறையில் சென்றுவிடும். இதுவே இலங்கைத் தீவின் நீதியியல் வரலாறாகும். 1983-ம் ஆண்டு கருப்பு ஜுலை இனப் படுகொலைகளுக்குப் பின்னர் கொழும்பில் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலையாகும். எண்ணற்ற தமிழர்கள் காரணமற்ற வகையில் படுகொலை செய்யப்பட்டு, வீதிகளிலும், வாவிகளிலும் வீசப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் அத்தனையையும் நியாயப்படுத்த சிங்கள தேசம் விடுதலைப் புலிகள் என்ற முகவரியைக் கொடுத்து நியாயம் கற்பித்து வந்தது. தமிழீழ மண்ணில் முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நிகழ்த்தி முடிக்கப்பட்ட அத்தனை படுகொலைகளும் யுத்த பின்னணியில் நீதி கோர முடியாமலேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது.

அதன் பின்னர் கொழும்பில் இந்தக் கொடூரம் பட்டப்பகலில், பலரும் பார்த்திருக்க நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளின் பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதனால், அவர்களால் 1983 இற்குப் பின்னர் இத்தகைய எந்தவொரு கொடூரத்தையும் அரங்கேற்ற முடிந்திருக்கவில்லை. தமிழ் மக்களது பலம் சிதைக்கப்பட்டு, தற்போது தமிழர்கள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட சூழலில் மீண்டும் இனப் படுகொலைகள் தெற்கிலும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது என்ற செய்தி இதன் மூலம் தென் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் தெற்கில் வாழும் தமிழர்கள் சிங்கள இனத்தின் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படும் போதெல்லாம், அவர்கள் தமது பாதுகாப்பிற்காக வடக்கை நோக்கியும், கிழக்கை நோக்கியும் அவர்களது தாயக பூமிக்கு சிங்கள அரசுகள் அனுப்பி வைப்பதுண்டு.

தற்போது, தமிழர்கள் பிரதேசங்கள் முழுவதும் சிங்கள இராணுவத்தால் தமிழர்களின் பாதுகாப்பு அங்கும் கேள்விக் குறியாகவே உள்ளது. இலங்கைத் தீவு முழுவதும் போக்கிடமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்களது எதிர்காலம் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தைப் பொறுத்ததாகவே இருக்கப்போகின்றது. இதைத் தொடர அனுமதிக்கப் போகின்றோமா? அல்லது எதிர்த்துப் போராடப் போகின்றோமா? என்ற எமது தீர்மானத்திலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

சி. பாலச்சந்திரன்

நன்றி:ஈழநாடு

Comments