முகாம் மக்கள் விடுவிக்கப்படுவது யாரால்? எதனால் நடக்கிறது?

முகாம் மக்கள் விடுவிக்கப்படுவது யாரால்?

இலங்கையில் வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் ஒரே நாளில் 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி அனைத்து இந்திய நாளிதழ்களிலும் வந்துள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி - எப்போதும் போல எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதிலளித்து - அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவதில் இதற்கு மேலும் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குத்தான் மீண்டும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, சிறிலங்க அமைச்சர் செந்தில் தொண்டைமான், முத்து சிவலிங்கம் ஆகியோர், “இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை அதிபர் ராஜபக்ச துரிதப்படுத்தியுள்ளார். இந்த டிசம்பருக்குள் அனைத்துத் தமிழர்களும் சொந்த இடங்களுக்குச் செல்வார்கள் என அதிபர் உறுதியளித்துள்ளார். தமிழர்கள் குடியமர்த்தப்படுவதில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று அவர்கள் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “அவர்களுடைய கருத்துகளை படித்துப் பார்த்த பிறகாவது, ஐயப்பாடுள்ள அறிக்கை வெளியிட்டவர்களும், ஒரு சில பத்திரிக்கையாளர்களும் இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் படிப்பட்டியாக அவரவர் தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

இதெல்லாம் யாரால், எதனால் நடக்கிறது?

  • தமிழக முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கட்சிக் கூட்டணியில் இடம்பெற்ற 10 உறுப்பினர்கள் இலங்கை சென்று முகாம்களை பார்வையிட்டப் பிறகு, சிறிலங்க அதிபர் ராஜபக்சவை சந்தித்து விடுத்த வேண்டுகோளை ஏற்று, முகாம்களில் உள்ளத் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிபர் ராஜபக்ச ஒப்புக்கொண்டது போல ஒரு தோற்றம் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுகிறது.

    “முகாமிலிருந்து யாராலும் விடுவிக்க முடியாத தமிழர்களை 5 நாட்களில் விடுவித்த கலைஞர் வாழ்க” என்று திமுக-வின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன!

    ‘வன்னி முகாமில் இருந்து ஒருவரைக் கூட விடுவிக்க ஒப்புக் கொள்ளாத ராஜபக்ச, தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்றக் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று விடுவிக்கத் தொடங்கியதாக’ ஒரு மாயை ஒத்துப் போகும் ஊடகங்களின் துணையுடன் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

    சட்டத்திற்குப் புறம்பாக, அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான சூழலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், அதுவும் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது இங்குள்ளத் தமிழர்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், தேர்தல் நாடா அரசியல் அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து ஐ.நா. அகதிகள் ஆணையம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகள் என்று அனைவருமே சிறிலங்க அதிபரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அம்னஸ்டி இண்டர்நேஷனல் என்றழைக்கப்படும் பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் ‘முகாம்களை திறந்துவிடு’ என்ற கோரிக்கையுடன் ஒரு இயக்கமே நடத்தி வருகிறது. அப்போதெல்லாம் தமிழக அரசும், அதன் தலைமையும் மற்ற அரசியல்களில் பிஸியாக இருந்ததால் அவர்கள் இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    ‘வன்னி முகாம்களில் உள்ள அனைவரும் 180 நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்’ என்று இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ முனிடம் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தைச் சுட்டிக்காட்டி, 100 நாட்களைக் கடந்த பின்னரும் யாரையும் விடுவிக்காதது ஏன் என்று கேட்டு, பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா.வும் சிறிலங்க அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கின.

    அகதிகள் விடுவிப்புத் தொடர்பாக தான் அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்ற மறுக்கிறது சிறிலங்க அரசு என்று குற்றம் சாற்றிய மனித உரிமை கண்காணிப்பகத்தின் (Human Rights Watch - HRW) தெற்காசிய இயக்குனர் ஆடம் பிராட், அனைவரையும் விடுவிப்பேன் என்று கூறிவிட்டு, இப்போது இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு இலட்சம் பேரை மட்டும் விடுவித்துவிடுவோம் என்று சிறிலங்க அமைச்சர்கள் கூறியுள்ளதை சுட்டிக் காட்டி கண்டித்திருந்தார் .

    அக்டோபர் 6ஆம் தேதி துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த உலக வஙகி மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்க அமைச்சர் சரத் அம்முனுகாமா, இந்த ஆண்டின் முடிவிற்குள் ஒரு இலட்சம் பேரை முகாமில் இருந்து விடுவித்து விடுவோம் என்று கூறியிருந்ததையும், இதையே சிறிலங்காவின் மறுவாழ்வுத் துறை அமைச்சர் ரிஷார்த் பத்தியுதீன் கூறியிருந்ததையும் ஆடம் பிராட் தனது (அக்டோபர் 20) அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

    அதுமட்டுமல்ல, செப்டம்பர் 24ஆம் தேதி வரை 40,000 அகதிகளை மீள் குடியமர்த்தம் செய்துள்ளதாக சிறிலங்க அமைச்சர் பிரியதர்ஷ்ன யாப்பா கூறியிருந்தது பொய் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தார். அக்டோபர் 09ஆம் தேதி வரையிலான ஐ.நா. புள்ளி விவரப்படி, முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 13,502 பேர் மட்டுமே அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்றும், மேலும் 13,336 பேர் அவர்களின் உறவினர்களிடன் ஒப்படைக்கப்பட்டார்கள் என்றும், ஆக 27,000 பேர்தான் விடுவிக்கப்பட்டுள்ளார்களே தவிர, 40,000 பேரல்ல என்று கூறிவிட்டு, இதற்கு மேலும் பொறுத்திருக்காமல், முகாமில் உள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சிறிலங்க அரசு மீது உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஆக, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்திய பிறகுதான் முகாமில் இருந்து தமிழர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது உண்மையல்ல என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

    முகாம்களில் உள்ள தமிழர்களில் ஒரு இலட்சம் பேரை விடுவிக்க முடிவு செய்துவிட்ட சிறிலங்க அரசு, யார் யார் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று விண்ணப்பம் செய்யுமாறு ஏற்கனவே முகாம்வாசிகளை கேட்டுக் கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் விண்ணப்பம் செய்தவர்களைத் தான் விடுவிக்கத் தொடங்கியுள்ளது சிறிலங்க அரசு. அப்போது நமது நாடாளுமன்றக் குழுவும் சென்றது!

    தங்களைச் சந்தித்த குழுவினரிடம் தாங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 58,000 பேரை விடுவிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதை இவர்கள் தமிழக முதல்வரிடம் சொல்ல, முதல்வர் அதனை பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்கிறார். தமிழக நாடாளுமன்றக் குழு கூறியதால்தான் விடுவிக்கின்றோம் என்று இன்று வரை சிறில்ங்க அரசு கூறவில்லை! எனவே, அவர்கள் பட்டியலைத் தயாரித்து வைத்து விடுவித்துக் கொண்டிருந்தார்கள், இவர்களும் சென்றார்கள், அவர்கள் வெளியிட்டத் தகவலை தங்களது சாதனையாக இங்கே கூறிக் கொள்கிறார்கள்.

    இவர்கள் கூறித்தான் விடுவித்தார்கள் என்றால், அது என்ன 58,000 பேர்? இந்தக் கேள்விக்குப் பதில் தேடட்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த அழுத்தம்!

  • ஆக, இன்றுடன் சேர்த்து முகாம்களில் இருந்து 70 ஆயிரம் பேரை விடுவித்துள்ள சிறிலங்க அரசு, இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் 30,000 முதல் 35,000 பேர் வரை முகாமில் இருந்து விடுவிக்கவுள்ளதென இடம்பெயர்ந்தோருக்கான சிறிலங்க அரசின் அதிகாரி கமல் குணரத்னா கூறியுள்ளார்!

    தமிழக நாடாளுமன்றக் குழுவை சந்தித்த ஓரிரு நாளில் தென் இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ராஜபக்ச, “மீள் குடியமர்த்தம் என்பது சாதாரணமானதல்ல, அது கற்பனைக்கெட்டாத அளவிற்கு கடினமானது” என்றார். ஏன்? எங்கு பார்த்தாலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளனவாம். இன்று, முல்லைத் தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் கூட முகாமிலிருந்த மக்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று செய்தி கொடுக்கிறது சிறிலங்க அரசு!

    இன்று வந்துள்ள இன்னொரு செய்தி என்ன கூறுகிறது தெரியுமா? “இன்னும் ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு இலட்சம் பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக” சிறிலங்க நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண திசாநாயக்க தெரிவித்துள்ளார்!

    அப்படியென்றால் கண்ணி வெடி கதை என்ன ஆனது? கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு, அதற்காக ஐ.நா.விடமிருந்து சிறிலங்க அரசு சான்றிதழ் பெற்றதாக ஏதாவது செய்தியை யாராவது பார்த்தோமா? பிறகு எப்படி முல்லைத் தீவிற்கும், கிளிநொச்சிக்கும் கூட அனுப்பி வைக்கப்படுகிறார்கள்? அதுவும் ஆயிரக்கணக்கில், குடும்பம் குடும்பமாக?

எல்லாம் ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கிற அழுத்தம்தான்!

  • சிறிலங்க அரசு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டு்ம், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கக் கூடிய வகையில் சிறிலங்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அந்தத் தீர்மானத்தில் உள்ள வாசகங்களில் இந்தப் பகுதி மிக முக்கியமானது: "சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியும், அந்நிய முதலீடும் முக்கியமானது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு கணிசமானது என்பதை அந்நாடு புரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் சிறிலங்க அரசை இயக்கிக் கொண்டிருக்கிறது.

    இது மட்டுமல்ல, சிறிலங்க பொருட்களுக்கு - ஒரு வளரும் நாடு என்பதற்காக - ஜி.எஸ்.பி. (Generalized System of Preference - GSP) என்றழைக்கப்படும் வாணிப முன்னுரிமையை ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ளது. இதனால் சிறிலங்கப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ஐரோப்பிய ஒன்றியமே மானியமாக செலுத்துகிறது!

    2005ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்க அரசிற்காக அளிக்கும் இந்த வரிச் சலுகைக்காக அது அளித்துள்ள மானியத் தொகை எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! ‘பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய போரில்’ சிறிலங்கப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களுக்காக இந்தச் சலுகையை இழக்கும் நிலையில் சிறிலங்க உள்ளது என்று மகிந்த ராஜபக்சவின் அரசை தொடர்ந்து விமர்சித்துவரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

    சிறிலங்காவிற்கு அளிக்கப்பட்டுவரும் இந்த வாணிப முன்னுரிமை சலுகையை இரத்து செய்யும் முடிவை இன்னும் இரண்டு மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ளது. அதற்குள் முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து அதன் மூலம் மனித உரிமைகளை மதிக்கும் நாடாக தன்னை காட்டிக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்க அரசு ஈடுபட்டுள்ளது. அதுதான் இப்படி வேக வேகமாக முகாம்களில் இருந்து மக்களை ‘விடுவிப்பதற்கான’ காரணமாகும்.

    எனவே, முகாம்களில் உள்ளவர்கள் எதனால் விடுவிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    முகாம்களில் உள்ளோரை விடுவிப்பது தொடர்பாக எந்த அழுத்தத்தையும் மத்திய அரசு கொடுக்காத நிலையில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றக் குழு சென்று வந்தது யாருக்குப் பயனளித்தது தெரியுமா?

இதோ நமது நாடாளுமன்றக் குழுவைப் பாராட்டி சிறிலங்க ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா கூறியதைப் படியுங்கள் புரியும்:

  • “இதுவரை சர்வதேச நாடுகளையும், அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இலங்கைக்கு பயணம் செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டுள்ளனர். மதிப்பீடுகளை மேற்கொணடப் பின்னர் தங்கள் நாடுகளுக்குச் சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள் குடியேற்றம் குறித்து அழுத்தங்களை அளித்தனர். சிலர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இடம் பெயர்ந்த மக்களின் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகிய தமிழக எம்.பி.க்கள், அகதிகளுக்கு சிறிலங்க அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு திருப்தி வெளியிட்டனர். சிறந்த செய்தியொன்றை சர்வதேச சமூகத்திற்கு விடுத்துள்ளனர். இதுவரை சிறிலங்க வந்தவர்களிலேயே தமிழக எம்.பி.க்கள் சிறிப்பான அணுகுமுறையை மேற்கொண்டனர். அவர்கள் எந்த விடயம் குறித்தும் பெரிய அழுத்தத்தை வெளியிடவில்லை. நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். சிறிலங்காவிற்கான இந்தியாவின் உதவிகள் அதிகரிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்”

இதன் பிறகு இந்தியா மேலும் ரூ.500 கோடியை சிறிலங்காவிற்கு தருவது என அறிவித்தது.

தமிழக மடல்

Comments