மக்களை விடுவிக்கும் மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கை சிறிலங்காவால் நிராகரிப்பு காணொளி : அல்ஜெசீரா

சிறிலங்காவில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து என மனித உரிமைக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் விடுத்த எச்சரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாக அல்ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


"பருவ மழையை எதிர்கொள்வதற்கு முகாம்கள் தயாராக இருக்கின்றன" என மனித உரிமைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைச்சு செயலாளர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார் எனவும் அல்ஜெசீரா கூறுகின்றது.

சுமார் 3 லட்சம் மக்கள் வன்னியில் உள்ள தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 180 நாட்களுக்குள் இந்த மக்களை மீளக்குடியமர்த்துவதாக அரசு உறுதியளித்து 5 மாதங்கள் கடந்துவிட்ட போதும் 2 லட்சத்து 55 ஆயிரம் மக்கள் இன்னமும் அடைபட்டே கிடக்கிறார்கள்.

பருவ மழை காலம் நெருங்கிவிட்ட நிலையில் முகாம்களின் உள்ள மக்களின் உயிர்களுக்கு ஆபத்து என மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கின்றன.

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் குரல் கொடுத்திருந்தது.

"மோசமான நிலையில் உள்ள இந்த முகாம்களில் தேவையற்ற விதத்தில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றமும் அமைதி இன்மையும் அதிகரிக்கின்றது. பருவ மழைக்கு முன்பாக அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் அவர்களின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படும்” என்று தெரிவித்தார் பிறட் அடம்ஸ். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிரிவு இயக்குநர் அவர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட மழையின்போது பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பதை ஒத்துக்கொண்ட ராஜீவ விஜயசிங்க, அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களே பொறுப்பு என்று விமர்சித்தார்.

தற்போது நிலைமைகள் மேம்படுத்தப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ராஜீவ விஜயசிங்கவின் கருத்து குறித்துப் பதிலளித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆய்வாளர் அன்னா நெய்ஸ்டாட், ‘பருவ மழையை எதிர்கொள்வதற்கு முகாம்கள் தயாராக உள்ளன என்பதை நம்புவதற்கு எந்தக் காரணங்களும் இல்லை' என்று தெரிவித்தார்.

"கடந்த மாதம் முழுவதும் சிறிலங்கா அரசு பல்வேறுபட்ட விடயங்களை சொல்லி வருகிறது. உதாரணமாக, மக்கள் விடுவிக்கப்படுவார்கள், மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள், முகாம்களின் நிலை அனைத்துலக தரத்திற்கு உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட உண்மையாகியது இல்லை" என்றார் அவர்.

"அரசின் உண்மைக்கு மாறான வாக்குறுதிகள் இனியும் எவரையும் ஏமாற்ற முடியாது" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


.

சிறிலங்காவில் நடைபெற்ற போரின் பின்பு- அல்ஜசிரா

Comments