மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமூகம்

mahindajaff2இலங்கையின் பழைய நாடாளுமன்றம் இது. ரம்மியமான கடற்காற்று வீசும் காலிமுகத்திடலுக்கு அண்மித்து இருக்கும் பழமைவாய்ந்த கட்டடம்.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவரை கசக்கிப் பிழிந்த சட்டங்கள் பற்றியும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் பழமைவாய்ந்த நாடாளுமன்றத்தின் ஒவ்வோர் சுவர்களுக்கும் நன்கு தெரியும்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட முன்னைய தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகம் இருந்தபோது அவர்கள் மீது இரத்தம் சொட்டச் சொட்ட நடாத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் கூட இந்தக் கட்டிடத்திற்கும் காலிமுகத்திடல் காற்றிற்கும் நன்றாகவே தெரியும்.

இங்குதான் இலங்கையின் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மகிந்தராஜபக்ஸ கம்பீரமாக நிற்கிறார்.

நேற்றைய தினம் (ஒக்டோபர் 12) யாழ் மாநகரசபை உறுப்பினர்களும் முதல்வரும் பதவிப்பிரமானம் செய்து கொண்ட தினம். அல்பிரட் துரையப்பாவின் பின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையிலான தமிழ் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ளார்கள்.

மும்மதங்களினதும் குருவானவர்கள் அரசியல் பிரமுகர்கள் கல்விச் சமூகத்தவர்கள் என பலரும் ஜனாதிபதியின் கம்பீரமான தோற்றத்தின் புன்னகையில் பிரமித்து இருக்கிறார்கள்.

mahindajaff1

இந்தப் படத்தில் ஜனாதிபதி மிகவும் கம்பீரமாக தமிழில் உரையாற்றுகிறார். யாழ்ப்பாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசேட சந்திப்பொன்று இருப்பதாகக் கூறி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்த உரையை செவி மடுத்தார்கள்.

வழமை போலவே இன, மத, மொழி ஏற்றத் தாழ்வுகள் அற்ற இலங்கையை கட்டி எழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஜனாதிபதி. அதுமட்டும் அல்லாது பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து உங்களை உங்கள் பிள்ளைகளை தமிழ் மக்களை தான் விடுவித்ததாக தனது வீரப் பிரதாபங்களையும் ஜனாதிபதி அவிழ்த்துவிடத்; தவறவில்லை.

அரசியல் தீர்வு குறித்தோ முகாம்களில் அல்லலுறுகின்ற மக்கள் பற்றியோ மீள் குடியேற்றம் பற்றியோ எதனையுமே ஜனாதிபதி அங்கு குறிப்பிடவில்லை.

தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் காதுகளில் எதனையாவது ஏறச் செய்யலாம் என்ற பெரும் எதிர்பார்புடனும், ஆரவாரத்துடனும் அங்கு வீற்றிருந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளின் முகத்திலும் சற்றுத் தொய்வு ஏற்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வெளிவரும் பத்திரிகை ஆசிரியரும் அருகாமையில் இருந்தவர்களிடம் மனம் விட்டு சலித்துக் கொண்டார். இப்படியான சப்புக் கட்டிய உரைகளை கேட்டுக் கேட்டே அலுப்பேறிவிட்டது என மனம் வெதும்பினார்.

அங்கு மாநகர முதல்வராகப்; பதவியேற்ற அம்மா 13 ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றி எடுத்தியம்ப அவரை ஏற இறங்கப் பார்த்த ஜனாதிபதி ஒரு கிண்டலான நமட்டுச் சிரிப்பு சிரித்ததனை பலரும் அவதானித்திருந்தார்கள்.

பதவியேற்பு வைபவம் இவ்வாறு முடிந்து தேநீர் இடைவேளை என அறிவித்தாயிற்று. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் ஒருவித ஏமாற்றம்.

ஜனாதிபதியின் உரையில் அமைச்சர் பற்றியோ மாநகர தேர்தலில் அவரது பங்கு பற்றியோ அவரது முக்கியத்துவம் பற்றியோ ஜனாதிபதி சற்றும் வாய்திறக்கவில்லை.

அதுமட்டும் அல்ல ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது அவரிடம் உங்கள் பிரச்சினைகளை மனம் திறந்து பேசலாம் எனக் கூறி யாழ் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அழைத்து வந்த 350 வரையிலானவர்களை சந்திப்பதனை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டார்.

அமைச்சரோ பின்னாலும் முன்னாலும் அலைந்து எதைஎதையோ காதிற்கு கிட்ட சொன்னார். ஆனால் புலியை அழிக்கும் வரை தேவைப்பட்ட தம்மை இப்போ ஜனாதிபதி கணக்கிலும் எடுப்பதில்லை என்பது தெரிந்தும் விடா முயற்சியில் தொடர்கிறார் அவர் பாவம்….

இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஏராளமான முக்கியஸ்தர்களிடையே குறிப்பிட்ட சிலரை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். ஆனால் சந்திக்கச் சென்ற அவர்களிடமும் தனது வழமையான புராணத்தையே ஜனாதிபதி பாடுவார் என்பதனை பலரும் அறிந்திருக்கவில்லை.

சர்வதேச சமூகமும் எனக்கு அழுத்தங்களைத் தருகிறது. நீங்களும் அழுத்தங்களை தருகிறீர்கள் என்னால் என்ன செய்ய முடியும் என சென்றவர்களிடமே கேள்வியையும் கேட்டார் ஜனாதிபதி.

பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து பேசப்பட்ட போது அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவர். பசிலிடம் பேசுங்கள் என ஏனாதானோ எனக் கூறியுள்ளார்.

முகாம் மக்கள் பற்றி பேசப்பட்ட போது கண்ணி வெடி அகற்றப்பட்ட பின் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவது குறித்துக் கூட பேசாத ஜனாதிபதி புலிகளை வடிகட்டும் வேலை முடிவடையவில்லை அவை முடிவடைய நீண்ட காலம் எடுக்கும். அவை நிறைவடைந்த பின்புதான் மீள் குடியேற்றம் பற்றி பேசமுடியும் எனக் கூறியுள்ளார். சந்திக்கச் சென்றவர்களிடம் ஏனோ தானோ என தனது பதில்களை வழங்கிய ஜனாதிபதி சிலர் தனிப்படத் தயாரித்துச் சென்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.

அற்ப சொற்ப நப்பாசைகளுடன் தமது பிரச்சினைகளைக் கூறலாம் என ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றவர்களும் முகங்களில் உணர்ச்சியின்றி வெளியேறினர். தனித்தனியாக சிவில் சமூக அமைப்புக்களை ஜனாதிபதி சந்திப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு பலத்த ஏமாற்றம்.

பாவம் மக்கள் மாநகர உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்திற்கே தாம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டமையை நிகழ்ச்சியின் முடிவில் தான் அவர்கள் உணர்ந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக ஜனாதிபதியுடன் சந்திப்பு என அழைத்துச் செல்லப்பட்ட இந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ் மாநகர உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். ஊடகங்கள் இதற்கு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. யாழப்பாண மக்கள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ அரசாங்கத்துடனேயே இருக்கிறார்கள் என உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை காட்டப்பட்டுள்ளது.

mahindajaff

இந்தப்படத்தில் யாழ் மாநகர முதல்வர் அம்மா ஜனாதிபதியின் கையை பற்றிப் பிடிக்கிறார். இதனைத் தனது வாழ்நாளில் பெற்ற பெரும் பாக்கியமாக பேரானந்தத்தில் திளைத்திருக்கிறார்.

ஜனாதிபதியின் கையை பற்றிய அவர் தனது பேரானந்தத்தின் மூலம் வெளிப்படுத்த முனையும் செய்திகள் என்ன?


வெளியுலகிற்கு தெரியாமல் பதிவில்லாமல் தடுத்து வைக்கப்பட்ட 2500ற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளின் நிலை என்ன என்று எவருக்கும் தெரியாது. இவர்களில் குறிப்பா யோகி, பாலகுமாரன், புதவை ரத்தினதுரை உள்ளிட்ட 100 வரையிலான உயர்மட்டத் தலைவர்கள் குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தவிரவும் தனியான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 15 முதல் 20 ஆயிரம் வரையிலான விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்களின் நிலமையும் கேள்வியாகவே இருக்கிறது.

10 முதல் 20 ஆயிரம் வரையிலான மக்கள் தப்பிச் சென்றதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த தப்பிச் சென்ற கணக்கில் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டதோ கொலைஞர்களைத் தவிர எவரும் அறியார்.

இவை மட்டும் அல்ல 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக முகாம்களில் வதைக்கப்படுகிறார்கள்.

இவற்றிற்கும், ஆயிரக்கணக்கான மக்களை குறுகிய நிலப்பரப்பிற்குள் தள்ளி அனைத்துவகை அழிவு ஆயுதங்களாலும் பதறப் பதற கொலை செய்த முப்படைகளின் நடவடிக்கைகளுக்கும், தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் இருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு முதல்வர் அம்மா நன்றி கூறுகிறாரா?

ஆம் கடந்து சென்ற அண்மைய நாட்களும் கடந்து செல்லுகின்ற நாட்களும் மனசு நிரம்பிய வேதனைகளை சுமப்பனவாக உள்ளன. நம்பிக்கையீனங்களும் வெறுப்புகளும் வியாபித்திருக்கின்றன. வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க ஒரு இனம் எம் கண்முன்னே அழிக்கப்படு;கிறது. பிரபாகரனின் பெயராலும் புலிகளின் பெயராலும் அக்கிரமங்கள் தொடருகின்றன.

இவற்றை இந்த விஞ்ஞான உலகமும் காந்தி தேசமும் பார்த்து மௌனித்திருக்கின்றன. புலி எதிர்ப்பாளர்களின் வன்மங்கள் பழிவாங்கல்களாக உருவெடுத்துள்ளன.

மறுபுறம் மனிதர் வாழ்வதற்கே அருகதையற்ற நரகம் என சிங்கள கனவான்களாலேயே வர்ணிக்கப்படும் இடைத்தங்கல் முகாம்களை காந்திய தேசம் பாராட்டியுள்ளது என்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்.

ஒருபடி மேற்சென்று இந்திய ஊடகங்கள் கூறும் அளவிற்கு இடம்பெயர்ந்த மக்கள் துயரங்களை அனுபவிக்கவில்லை என உலகத் தமிழினத்தின் தலைவராம் கலைஞர் அவர் வழி வந்தவர்கள் மலையகத்தில் கூறியதாக ஏனைய சிங்கள ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.

உண்மையில் நாம் எங்கு நிற்கிறோம்? தவமாய் தவமிருந்து ஜனாதிபதியை சந்திக்க யாழிருந்து வந்த சிலர் நாம் தவறு விட்டுவிட்டோமோ எனத் தோன்றுகிறது எனக் கூறுகிறார்கள்.

எல்லோரும் சேர்ந்து எம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற அவர்கள் சிங்களத் தலைமைகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதனை உணர்வதாகக் கூறுகிறார்கள்.

ஆம் நீங்கள் எமது கையை இறுகப் பற்றிப் பிடித்தாலும் அரை நூற்றாண்டின் பின்பும் எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே இருக்கிறோம் என இலங்கையின் பழமைவாய்ந்த அந்த நாடாளுமன்றமும் இந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு மீண்டும் அறுதியிட்டுக் கூறியிருக்கிறது.

சிந்திப்போமா?

Comments