ஈழத் தமிழனுக்குரிய விதியா இது?


குழந்தையோடு களியும் பொழுதுகளும், மனைவியின் மூச்சுக்காற்றும் இன்றி ஆளுக்கொருவராய் பிரித்தடைக்கப்பட்ட முகாம்களுக்குள் நான் வாழவில்லை. ஒப்பீட்டளவில் மிக மிக வசதியான ஒரு அருவருக்கத் தக்கம் கசடுகளும், கசப்பும் நிறைந்த ஒரு வாழ்வையே வாழ்கிறோம். ஆனாலும் உறவுகளோடு கரைகிற பொழுதுகளோடுதான் இது பற்றி குற்ற உணர்வோடு பேச வேண்டியிருக்கிறது.

முட்கம்பி வேலிகளுக்குள் முகாம்களுக்குள் மூன்று லட்சம் வன்னி மக்கள் வாழ்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக பெரும் இன்னல்களோடு கழிந்த அவர்களின் வாழ்வு மே மாதத்திற்குப் பிறகு பெரும் துயரத்தோடு முடிவுக்கு வந்து. மீளாத் துயரமாய் இப்போது முட்கம்பி வேலிகளுக்குள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று ஆரம்பகல்வியில் கற்றுக் கொண்டதை நாம் யாரிடம் போய்ச் சொல்வது. ஆனால் சமூக விலங்குகளை மிருகக்காட்சிச் சாலைக்குள் அடைத்த குற்றத்தை மடை மாற்றி விட்டிருக்கிறது. இந்தியாவும் இலங்கையும்.

சுதந்திரத் தமிழீழம், வடக்கு கிழக்கு இணைப்பு, 13‐வது சட்டத்திருத்தம், சமஷ்டித் தீர்வு என்று காலம் தோறும் பேசப்பட்டு வந்த அரசியல் தீர்வுகள், புனரமைப்பு என பேசிவந்த நிலையில், இன்று எந்த ஒரு தரப்பினரும் ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதில்லை, போர் நிறுத்தம் கோரி தமிழகம் கோரிக்கை வைத்த போது நாற்பதாண்டுகாலப் பிரச்சனையை நான்கு நாளில் முடிக்க முடியாது என்றார் அப்போதைய வெளிவிவாகார அமைச்சர் ப்ரணாப்முகர்ஜி. அதையே மாநில அரசும் வழிமொழிந்தது. இப்போதோ இருபத்தைந்து ஆண்டுகால இனப்பிரச்சனைகு என்கிறார்கள்.

வரலாற்றில் இன்றைய இனப்படுகொலைகளுக்கு முன்னரும் 1956, 1958, 1961, 1979, 1981 என பல முறை ஈழ மக்கள் மீது இனவெறிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதற்கான வரலாறு உண்டு. கலவர வரலாற்றை விட நீண்ட வரலாறு இனமுரணுக்கு உண்டு. அதில் இடையில் வந்த முப்பதாண்டுகாலத்தில் ஆயுதங்களை நம்பி போராட வந்தவர்கள்தான் விடுதலப்புலிகள். புலிகள் வரலாறு முப்பாதண்டுகால வரலாறே. இனமுரணின் வரலாறோ நூற்றாண்டுகளையும் கடந்தது. ஆனால் இன்றுவரை அது தீர்வதற்கான சாத்தியங்கள் அற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போர் வேண்டாம் என்றோம், போர் நிறுத்தம் என்றோம், இனப்படுகொலை என்றோம், இப்போது முட்கம்பி முகாம்கள் என்றோம், இந்தியாவும் அதன் கூட்டணி சகாக்களுமோ போர் நடைபெற வில்லை என்றார்கள், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப் படவில்லை என்றார்கள். புலிகள்தான் கொலைகளுக்கு காரணம் என்றார்கள், ஈழ மக்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டும் என்றார்கள். நாளை முகாம்களில் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். அல்லது நீங்கள் சொல்கிற மாதிரி இல்லை. அவர்கள் சில சிலப் பிரச்சனைகளோடு வன்னியில் இருந்ததை விட வசதியாகவே இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி விடுவார்களோ என்கிற நிலையிலேயே இதை எழுத நேர்ந்தது.

தங்களது தேச எல்லைக்குள் வாழும் மக்கள் கூட்டத்தை அவர்கள் குறிப்பிட்ட இனம் என்பதற்காக கொல்வதோ, தனித்துப் பிரித்து வேறுபடுத்தி வாழ நிர்பந்திப்பதோ கூட இன அடக்குமுறை, அல்லது அழிப்புதான். முகாம்களுக்குள் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது. முகாம் வாழ்வையும் இனப்படுகொலைகளையும் எதிர்ப்பவர்களும், இலங்கை ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட் வேண்டிய குற்றவாளிகள் என்றும் கருத்துக் கொண்டிருப்பவர்கள்தான் முகாம்களின் உள் நிலை பற்றி ஆராய முடியும்.

இலங்கை அரசின் இனம் தொடர்பான கொள்கையை ஆதரிக்கிறவர்கள் எப்படி முகாம் பற்றி கருத்துச் சொல்ல முடியும், முகாம் என்பதே வன்முறை வடிவம். அதற்குள் மிருகங்கள் பால் பாயாசம் சாப்பிடுகிறார்களா? அல்லது பணியாரம் சாப்பிடுகிறார்களா? என்பதல்ல பிரச்சனை. வன்னி மக்களை அவர்களின் பாரம்பரீய பிரதேசங்களில் இருந்து பிரித்தெடுத்து. முகாம்களுக்குள் அடைத்து வைத்திருப்பது ஆகப் பெரிய குற்றம். அதை இலங்கையை அங்கீகரிக்கும் ஒரு நாட்டின் அதை ஆளும் அரசில் அங்கம் வகிப்பவர்கள் போய் பார்ப்பதென்பது எப்படி நியாயமான ஒன்றாக இருக்கமுடியும். தவிரவும், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை முகாம்களில் இருக்கும் மக்களைக் காட்டியே உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது அவர்களுக்குத் தேவை சான்றிதழ். முகாம்கள் குறித்த நற்சான்றிதழ். பான்கிமூனே இப்படியான சான்றிதழை முதலில் கொடுத்தார்.

ஆனால் மேற்குலக ஊடகங்கள் முகாம்களின் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள், தற்கொலைகள், காணாமல் போதல்,அடிப்படை வசதியின்மை என்பதை எல்லாம் வெளிக் கொணர்ந்த பிறகு, முகாமகள் பற்றி இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? ஆசியா கண்டத்தின் நாடொன்றில் தமிழர்கள் என்பதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் துன்பம் மேற்குலக ஊடங்களுக்குத் தெரிகிறது.

வெறும் இருபதே கிலோ மீட்டர் தொலையில் இருக்கிற இந்தியாவுக்குத் இம்மக்களின் துன்பம் தெரியாதா? தெரியும் இவர்கள் போரின் போதும் சரி, போருக்குப் பின்னரும் சரி அங்கு தமிழர்களின் அரசியல் என்ற ஒன்றே இந்தியாவின் சந்தை நலனுக்கு ஆபத்தானது என்று கருதுகிற படியால், இலங்கையில் அல்லா சர்வாதிகார நாடவடிக்கைகளையும் இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

முகாம்கள் நன்றாக இருக்கிறது என்றால் அதுவே வன்னி மக்களின் எதிர்கால வாழ்வு பற்றிய கனவில் பெரும் இடியாய் இற்ங்கப் போகிறது. மௌனமாக இருந்தால் அதை விடப் பெரிய இடியாக இலங்கை மௌனத்தையே தங்களுக்கான சம்மதமாக எடுத்து முகாம்களில் மேலதிகமாக கம்பிகளை போட்டு மக்களை முடக்கும், முகாம்கள் நன்றாக இல்லை, மக்களை முகாம்களிலேயே அடைத்து வைத்தல் மனித உரிமை மீரல் என்றால் அதை இந்தியா விரும்பாது. மேற்குலகம் இப்படியான குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதை இந்தியா விரும்பவில்லை.

இலங்கையை இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதே இந்தியா என்னும் போது, இந்த நாடாளுமன்றக் குழுவினர் எப்படி இந்தியாவை பகைத்துக் கொள்வார்கள்.? என்றெல்லாம் கேள்விகாள் இருக்க, புலிகள் அழிந்து விட்ட நிலையில் தமிழகத் தலைவர்களும், தன்மானக் காவலர்களும், இம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்து வன்னி மக்களை மேலும் படுகுழிக்குள் தள்ளாமல் இருந்தால் அதுவே உசிதமானது.

Comments