திசநாயகம் : நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட ஓர் ஊடகப் போராளி

இனமுரண்பாட்டைத் தோற்றுவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆய்வின் எழுதி மூன்று வருடங்களின் பின்னாகவும் கைதாகி 17 மாதங்களின் பின்னாலும் ஓகஸ்ட் 30ம் திகதி திரு.ஐயப்பிராகாஷ் சிற்றம்பலம் திசநாயகம் அவர்கள் 20 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனையைப் பெற்றுள்ளார்.

இவரது தண்டனை உலகளவில் பாரிய கண்டனங்களை எழுப்பியுள்ளது. இதனை சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty) இனவாதக் கைதி (Prisoner of conscienec) என்றும் எல்லைகளற்ற ஊடகவியலான அமைப்பு (RSF) வெட்கக்கேடான ஒரு தீர்ப்பு எனவும் தெரிவித்துள்ளனர். உலகத்தின் கண்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தின் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையின் சின்னமாக திரு திசநாயகம் விளங்குகின்றார்.

இவரை ஊடக சுதந்திரத்தின் மாவீரராகவும் பார்க்கின்றனர். சிறீலங்கா அரசாங்கத்தின் சிங்கள இனச் சர்வாதிகாரப்போக்கு திசநாயகத்தின் கைதிலும் தொடர் அநீதிகளிலும் வெகு தெளிவாகத் தெரிகிறது. எப்படி ஒரு புகழ்பெற்ற (Sundy times) பத்தி எழுத்தாளர் அமெரிக்க ஐனாதிபதி ஒபாமாவினால் குறிப்பிடப்படும் படியான ஒரு அநீதிக்குள்ளாக்கப்படும் ஊடகவியலாளரின் கவலைக்குரிய உதாரணமாக மாறினார்? இது 2008 பெப்ரவரியில் சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவத்திற்கான சிறுவர் ஆட்சேர்ப்புபற்றி எழுதியபோது தொடங்கியது. இந்த ஆய்வு வெளியாகி வெகு சில நாட்களில் திசநாயகத்தின் வெளியீட்டாளர்களான திரு என்.ஜசிகரனும் அவரது மனைவி வளர்மதி ஜசிகரனும் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டனர்.

இவர்களது கைது பற்றிய விபரங்களைச் சேகரிக்கச்சென்ற திசநாயகமும் மார்ச் 08 அளவில் கைது செய்யப்பட்டார். கூடவே இவரால் நடாத்தப்பட்ட (OutreachSL.com) இணையத்தளம் பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர். பணியாளர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். திசநாயகம் அவர்களைக் கைது செய்யும் போது பயங்கரவாதப் புலனாய்புப் பிரிவினரிடம் திசநாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகையோ அல்லது பிடியாணையோ இருக்கவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கத்தின் நல்ல காலம், அவரது வீட்டிலிருந்த நட்டத்தினால் நின்றுபோயிருந்த வடகிழக்கு மாதந்தப் பத்திரிகையின் (Northeastern monthly) பழைய 50 பதிப்புக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.

இவற்றின் பத்திரிகை ஆசிரியராகத் திசநாயகமும் இருந்துள்ளார். இவற்றையே புலனாய்வுப் பிரிவினர் திசநாயகத்திற்கெதிரான சாட்சியமாக்கி இவற்றையே இவரின் கைதுக்கு காரணமாகவும் சோடித்தனர்.திசநாயகத்தின் கைதானது ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு ‘ஆண்மையற்ற இரண்டும் கெட்டான் நீதி'யாகவே இருந்தது. இவரது கைதின் பின்னர் இரண்டு கிழமைகள் கழித்தே இவரது வழக்கறிஞரைச் சந்திக்கும் உரிமை வழங்கப்பட்டது. திசநாயகம் தனது வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கும் போது கூட புலனாய்வுத்துறையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி கூடவே இருந்தார். இவர்கள் தனித்துப் பேசும் உரிமை வழங்கப்படவில்லை அதன் பின் திசநாயகம் தனது மனைவியைச் சந்தித்தபோது கூட அதிகாரிகள் கூடவே இருந்தனர்.

அடிப்படை உரிமையான ‘இவர்கள் தனியே சந்திக்கும் உரிமை' கூட வழங்கப்படவில்லை. திசநாயகத்துக்குரிய கைதிற்கான விளக்கம் எதுவுமே வழங்கப்படாதிருக்கையில் அவர் தனது கைதிற்கெதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். 2008 மார்ச்.27 இல் இவரது முதல் நீதிமன்ற விசாரணையின் போது நகரசபையினர் திசநாயகத்திற்குரிய பிடியாணை தம்மிடம் இல்லை என்று தெரிவித்தனர். உயர் நீதிமன்றத்திற்குப் பிடியாணையைத் தயாரிக்குமாறு தீபாளி விஐயசுந்தர ஆணையிட்ட அன்று மதியமே மார்ச் 7 என்று பழைய திகதியிடப்பட்டு ஒரு பிடியாணை தீபாளி விஜயசுந்தரவின் சகோதரியினால் கையப்பாமிடப்பட்டிருந்தது.

திசநாயகம் தரப்பு வழக்கறிஞர் இந்த முறையற்ற செயலைச் சுட்டிக்காட்டி விஜயசுந்தராவின் சகோதரியை இவ்வழக்கிலிருந்து நீக்கி இவ் விடயத்திற்கு முக்கியமளித்திருக்கக் கூடும். ஆனால் அப்படிச் செய்யத்தவறிவிட்டனர். (பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு விஜயசுந்தராவின் சகோதரி பதவி உயர்த்தப்பட்டார்.) கடைசியாக மே 28ல் திசநாயகத்தின் வழக்கறிஞர் புலனாய்வுத்துறையின் பொறுப்பதிகாரியிடமிருந்து குற்றப்பத்திரிகையையும், சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த திசநாயகத்தின் தன்னிலை வாக்குமூலமும் கையளிக்கப்பட்டது. இந்த வாக்குமூலத்தைத் திசநாயகம் தமிழிலேயே எழுதியிருந்தார்.

இது அவரது வழக்கறிஞருக்கு வழங்கப்படவில்லை. 2005ம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின்படி ஒரு கைதி ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். இதன் முலமே அந்தக் கைதி சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை என்பதை நிருபிப்பதற்கே இந்த 30 நாள் சட்டம். ஆனால் இந்தச் சட்ட நடைமுறைகூடத் திசநாயகத்திற்கு வழங்கப்படவில்லை. 2008 மார்ச் 12, 26ம் திகதிகளில் திசநாயகம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறீலங்கா அரசு திட்டமிட்டு இவற்றைப் பின் போட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியில் மார்ச் 27ம் திகதி நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

எனினும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி திசநாயகத்தை விசாரிக்க மேலும் அவகாசம் வேண்டுமெனக் கேட்டார் நீதிபதியும் யூன் 6ம் திகதி வரை அவகாசம் கொடுத்து அன்று நீதிமன்றம் அழைத்து வரும்படி ஆணையிட்டார். இது திசநாயகம் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் கடந்த பின்னரேயாகும். ஆனால் அரசு அவரை யூன் 6ல் நீதிமன்றம் கொண்டு செல்லப்படாது யூன் 13 வரை காலம் கடத்தியது. திசநாயகத்தின் குற்றப்பத்திரிகை: இன வன்முறைக்காகவும் இனங்களிடையே விரோதத்தை உண்டு பண்ணியதற்காகவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களின் பின் குற்றம் சாட்டப்பட்டுத் திசநாயகம் தன்டனை வழங்கப்பட்டது.

இவர் வடகிழக்கு மாதாந்த இதழில் எழுதிய இரு கட்டுரைகள் முலமே மேற்குறிப்பிடப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது. 2006 யூலையில் வெளியான முதல் கட்டுரையில், அரசாங்கம் வடகிழக்கு மக்களைக் காக்கத் தவறியதாலேயே மக்கள் புலிகளிடம் பாதுகாப்பு தேடிச் செல்ல நேரிட்டது என்று திசநாயகம் குறிப்பிட்டிருந்தார். டிசம்பரில் வெளியாகிய இன்னொரு கட்டுரையில் சிறீலங்கா இராணுவம் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை தமிழ் மக்கள் மீது வாகரையில் நிகழ்த்துகிறதென்றும் இந்த எறிகணைத் தாக்குதல் மூலம் மக்களைச் கொன்றும் இடம்பெயரவைத்தும் வாகரைப் பகுதியை தமது இராணுவ நடவடிக்கைக்கான தளமாக மாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

திசநாயகம் தனக்கான வாக்குமூல அறிக்கையில் ‘நான் என்றுமே பயங்கரவாதத்தை எதிர்ப்பவன். அது எந்த வடிவத்திலிருந்தாலும் அதற்கெதிராக வாதாடுபவன். எனது நோக்கமும் அவாவும் இந்த இனப்பிரச்சினைக்கு வன்முறையில்லாத ஒரு தீர்வு எற்படவேண்டுமென்பதே' எனத் தெரிவித்தார். திசநாயகம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளாக 1. வடகிழக்கு மாதந்தப் பத்திரிகையை அச்சிட்டு விநியோகித்ததின் மூலம் இன வன்முறையையும் சமூக முரண்பாடுகளையும் தூண்டிவிட்டதோடு சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவப் பெயர் உண்டு பண்னியுள்ளார் என்பது.

2. திசநாயம் எழுதிய மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டுரைகள் மூலம் மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர் செயல்படுத்தியிருந்தார் என்பது. 3. இந்த இதழ்கள் விநியோகிப்பதன் மூலம் பெறப்படும் பணத்தை இவர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக வழங்கினார் என்பது. வழக்கு நடக்கையில் அரசு தரப்பு தனது வாதத்தில் திசநாயகம் புலிகளிடமிருந்து பணம் பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்பட்டது. திசநாயகம் வழக்கு நெடுகிலும் இந்த வாக்கு மூலமானது கடும் சித்திரவதைக்குள் பலவந்தப்படுத்தி பெறப்பட்டதென்பதைக் குறிப்பிட்டிருந்தார். புலனாய்வுத் துறையினரின் சித்திரவதையைத் தான் அனுபவித்ததோடு பக்கத்து அறையில் தனது பதிப்பாளரான ஜசிகரன் சித்திரவதை செய்யப்பட்டு அலறுவதைத் தான் கேட்டதாகவும் கூறினார்.

ஜசிகரனின் வழக்கின் போதும் அவர் தன் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வழக்கு இன்னமும் நீதிமன்றத்திலேயே உள்ளது. திசநாயகத்தின் அறிக்கையில் பல பிழைகளை அரசு தரப்பு செய்த போதும் அதை நீதிபதி விஜேசுந்தர டிசம்பர் 5ல் வேண்டுமென்றே கண்டு கொள்ளாது ஏற்றுக் கொண்டபோதும் திசநாயகம் தரப்பு வழக்கறிஞரால் அதை எதிர்த்து வாதிடமுடியவில்லை. காரணம் திசநாயகத்தின் உண்மை அறிக்கையை வழக்கறிஞரிடம் அவர்கள் வழங்கியிருக்கவில்லை. மர்மமான மாற்றங்கள்: இறுதியாக காவற்துறை அத்தியட்சரின் குறுக்கு விசாரணையின் போதே திசநாயகம் தரப்பு வழக்கறிஞர் திசநாயகம் எழுதிய உண்மை அறிக்கையைய் பார்க்க முடிந்தது,

அதை பார்த்த கணத்திலேயே அதில் மாற்றங்கள் அரசுதரப்பு செய்திருந்தமை அப்பட்டமாகத் தெரிந்தது. தனது அறிக்கையில் ‘விடுதலைப் புலிகள் மூன்று தடவைகள் 2006ல் தொடர்பு கொண்டு பண உதவி வழங்க முற்பட்டபோதும் நான் மறுத்துள்ளேன். எனினும் பின்னர் எனது வங்கிக் கணக்கில் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வைப்பிலிடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். வைப்பிலிட்டவர் விபரம் பெறமுடியவில்லை, என்று குறிப்பிட்டிருந்தார். திசநாயகத்தின அறிக்கையில் 3ம் தடவையும் விடுதலைப் புலிகளின் பண உதவியை மறுத்தேன், என்று எழுதியிருந்த இடத்தை திருத்தம் செய்து, 3ம் தடவை நான் ஏற்றுக் கொண்டேன் என்று மாற்றியுள்ளனர். மாற்றம் வேறு மையினாலும் வேறு கையெழுத்தினாலும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்படும் போது கோட்டிற்கு வெளியே மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் கையெழுத்திடல் வேண்டும். ஆனால் திசநாயகத்திடம் அப்படி கையெழுத்துக்கள் பெறப்படவில்லை. இதை பின்னர் திசநாயகத்தின் வழக்கறிஞர் குறிப்பிட்டுக் காட்டிய போதும் நீதிபதி அதை கவனத்திலெடுக்கவில்லை. தான் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட அறிக்கையினனை தள்ளுபடி செய்யமுடியாது என்று விஐசுந்தரம் தெரிவித்துள்ளார். குற்றவாளியே தனது அறிக்கையில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறி, ஒருமுறை ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிவிட்டால் அதனடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும் எனத் திட்டவட்டமாக நீதிபதி அறிவித்தார். அவர்கள் மோசடி செய்து திருத்தம் செய்த வாக்குமூலத்தையே தங்கள் பலமான ஆதாரமாக அரசு தரப்பு பற்றிப் பிடித்தது.

தனது தீர்ப்பில் சாட்சியமாக மனித உரிமைகள் ஆணையத்தின் களுசிறி கமந்த சில்வாவின் சாட்சியத்தையும் ஆதரப்படுத்தினர். அவரது சாட்சியத்தில் களுசிறி கமந்த சில்வா, திசநாயகம் கூறியது போல் தான் வாகரை சென்றபோது எந்தக்குண்டு வீச்சோ அல்லது பட்டினிச் சாவோ நிகழவில்லை என்று சாட்சியமளித்தார். ஆனால் திசநாயகம் தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்தபோது, திசநாயகம் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு மாதங்கள் முன்னர்தான் தான் வாகரைப் பகுதிக்குச் சென்றதாக ஒப்புக்கொண்டார். அதனால் அங்கு நடந்தவை எது பற்றியும் தனக்குத் தெரியாதென்றும் திசநாயகம் கட்டுரை எழுதிய வேளையில் வாகரை வைதியசாலை படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டதைத் தானும் செய்திகள் மூலம் அறிந்ததாகவும் கூறினார். எனினும் இந்தக் குறுக்கு விசாரணைச் சாட்சியத்தை நீதிபதி ஏனோ கணக்கிலெடுக்கவில்லை.

நீதிமன்றம் திசநாயகம் கூறியபோது, தான் சிறுவயதிலிருந்து கொழும்பிலே பல்லின நண்பர்களேடு வளரந்ததாகவும், தன் பத்திரிகையாளர் பணியூடாகவும் மனித உரிமைகள் பணியூடாகவும் என்றும் ஒடுக்கப்படும் மக்களுக்காகவே குரல் கொடுத்ததாகவும், தான் எழுதியதாக குற்றம் சாட்டப்படும் அறிக்கையின் மூலம் எந்த வன்முறைகளோ அல்லது இனகலவரங்களோ தோன்றவில்லை, எனவும் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே தீர்ப்பு எழுதிவைத்து கொண்டு நடாத்தப்பட்ட வழக்கு என்பதால் நியாயமும் நீதியும் இங்கு ஊமைகளாக்கப்பட்டன.

திசநாயகத்தின் நியாயத்தின் முன் உண்மையின் முன் இன்று உலகமே திசநாயகத்தோடு கைகோர்த்து நிற்கின்றது. கொழும்பு உயர் நீதிமன்றத்தை தவிர. உண்மையை உலகுக்கு கொண்டு வரப் போராடிய ஓர் ஊடகவியலாலருக்காக, ஒரு தமிழனுக்காக, நீதியும் நியயங்களும் மறுக்கப்பட்ட ஒரு ஊடகப் போராளிக்காக, வாயும் கைகளும் கட்டப்பட்ட ஒரு எழுத்தாளனுக்காக, சுதந்திர உலகில் ஊடக சுதந்திரத்தை மதிக்கும் அரசுகள் உள்ள நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களாகிய நாமும், எம் கரங்களை ஒன்றிணைத்து அந்தச் சகோதரனின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

-சோழ.கரிகாலன்

Comments