அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத்

rajapakse_kanimozhiதமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில் அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும் கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது!

kumudam04112009001

நாடாளுமன்றக் குழு இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முகாம்களுக்குச் சென்று வந்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

முள்வேலி முகாமிற்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத்துச் சொந்தங்களின் இன்னல்களைக் கண்டறிய குளுகுளு கண்ணாடி அணிந்த டி.ஆர்.பாலுவின் தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில் குழு என்பதே தவறு. சுதந்திரமாய் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடவும், சுதந்திரமாய் கருத்துச் சொல்லவும் அதிகாரம் இல்லாத, யாருடைய ஏவலையோ அல்லது ஆவலையோ நிறைவேற்றச் சென்றவர்களை கும்பல் என்றே சொல்லலாம்! ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சென்றவர்கள் என்பதை அப்பட்டமாக மெய்ப்பிக்கும் வண்ணம், புன்னகை வழிய போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும், ராட்சஸன் கையால் பரிசு வாங்கி மகிழ்ந்த படங்களையும் பார்த்தபோது, சந்திரனில்கூட ஈரம் இருப்பதாக கண்டுபிடித்துவிட்டார்கள். இவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லையா? என்ற கேள்வியே எழுந்தது!

kumudam04112009002இன்னமும் அந்த மண்ணில் ரத்தவாடை கூட போகவில்லை. கனியம்மா… உங்களுக்கு எப்படியம்மா பரிசுப் வாங்க மனசு வந்தது? உங்களுக்குத் தந்த அந்தப் பெரிய பரிசு பெட்டியின் உள்ளே தமிழன் தலை இருக்குமோ என எனக்குத் தோன்றியது!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்குப் பிறகு `எழும்… தமிழ் ஈழம்’ என்று கொக்கரித்தார் தொல்.திருமாவளவன். சென்னையில் மாநாடு நடத்தி “கொலைகாரன் ராஜபக்சேயை குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல் விடமாட்டேன்” என்று கோபம் கொப்பளிக்க பேசியவர், ராஜபக்சேயுடன் மட்டுமல்லாமல், இந்தக் கொலைகளை அரங்கேற்றிய கோத்தபய ராஜபக்சேயுடனும் புன்னகை பூத்தபடி படமெடுத்துக் கொண்டதைப் பார்த்தபோது, என் பின்மண்யிலேயே இலங்கை ராணுவம் சுட்டதைப்போல் உணர்ந்தேன். இப்போது சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கியவுடன், `ராஜபக்சேயை போர்க் குற்றவாளியென அறிவிக்கவேண்டும்’ என்று மீண்டும் நெஞ்சை நிமிர்த்துகிறார். எத்தனை காலம்தான் இப்படி நடிக்கப் போகிறீர்கள்? உங்கள் உள்ளத்திற்கும் உதட்டிற்கும் எத்தனை கிலோமீட்டர் தூரம் மிஸ்டர் திருமா?

கருணாவிற்கு முன்பே காட்டிக் கொடுத்த டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்துக்கொண்டு முகாம்களை பார்வையிடுகின்றனர் நமது குழுவினர். பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி அய்யா சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியும்?

“பிரபாகரனோடு நீயும் இருந்திருந்தால் கொல்லப்பட்டு இருப்பாய்” என்று ஆணவத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு திருமாவளவனைப் பார்த்து இந்த கலியுக ஹிட்லர் ராஜபக்சே சொன்னதை ஏடுகள் ஊருக்குத் தெரிவித்துவிட்டன. சமாளித்துக்கொண்டு `நகைச்சுவையாக சொன்னது’ என்கிறார் திருமாவளவன். இந்தக் குழு நடத்தியதும் ஒரு நகைச்சுவை நாடகம்தான். `புலிகளைக் கொன்றுவிட்டோம்’ என அங்கே ராஜபக்சே ஆரவாரிக்கிறார். `அடங்க மறு அத்துமீறு’ என்று நாளும் பேசிய விடுதலைச் சிறுத்தைகளை அடக்கிவிட்டோம் என்று இங்கேயும் சில கதர்ச் சட்டைகள் பேசுவது என் காதில் விழுகிறது. இந்தக் குழுவிற்கு இலங்கையில் என்ன மரியாதை கிடைத்தது என்பதை இலங்கை பத்திரிகைகளே அம்பலப்படுத்திவிட்டன. `ராவணன் காலத்தில் இந்தியாவிலிருந்து அனுமன் வந்தான். இப்போது சனீஸ்வரன் வந்திருக்கிறான்’ என்று மரிசிக்கப்பட்டார்கள்!

கண்ணில் கண்ட கோரக் காட்சியை யாராவது கொட்டித் தீர்த்துவிடுவார்களோ என்று கருதித்தான் பிரதமரை, ஜனாதிபதியைக்கூட விமான நிலையத்தில் வரவேற்க முடியாத முதல்வர், இந்தக் குழுவை வரவேற்க அவசரமாக விமானநிலையம் சென்றார் என்பதே உண்மை.

நம் குழுவின் வருகை முகாம்களில் தவிக்கும் அகதிகளுக்கு குறைந்தபட்சம் ஓர் ஆறுதலாக இருந்திருக்கும் என்ற அளவிலாவது அதை வரவேற்க வேண்டாமா?

ஆறுதலா? என்ன பேசுகிறீர்கள்? பந்தி முடிந்த பிறகு பசித்து வந்த விருந்தாளியைப்போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு விற்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்தபிறகு திருவிழா காண வந்த பக்தனைப்போல, நோயாளி மடிந்த பிறகு மருந்து வாங்கி வந்த உறவுக் காரனைப்போல என்று கவிஞர் மீரா எழுதியது இந்தக் குழுவின் நடவடிக்கைகளைப் பார்த்தபோது என் நினைவுக்கு வருகிறது!

தமிழன்… தமிழ் என்று ரொம்பப் பேசுகிறீர்கள். கலைஞர் கூட்டியிருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாமா?

சமீபகாலமாக சினிமாக்காரர்களை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு வாரம் ஒரு விழா எடுத்து, அதில் தன்னை `இந்திரன், சந்திரன்’ என்று புகழ்வதை ரசித்து ரசித்து அலுத்துவிட்டதோ என்னவோ கலைஞருக்கு (சிரிக்கிறார்). உலகத் தமிழ் மாநாடு என்றவர் இப்போது ஏன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அறிவிக்கிறார்?

உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி வேண்டும். அது கிடைக்காததால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அறிவிக்கிறாரோ என சந்தேகிக்கிறேன்.

தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு! இவர் ஆட்சியில் நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. அதிகாரச் சூழலில் தமிழ் இல்லை. பள்ளிகளில் தமிழ் இல்லை. கோயில்களில் தமிழ் இல்லை. வீதியில், நடை, உடையில் கடையில் எங்கும் தமிழ் இல்லை. இதைப்பற்றியெல்லாம்

கவலைப்படாதவர் எதற்கு மாநாடு கூட்ட வேண்டும்? விளம்பர வெளிச்சத்தில் சுகம் காணத் துடிக்கிற இவர்கள் தமிழனுக்கு ஒரு பெரிய ஆபத்து வரும்போது, தன்னுடைய குடும்பத்திலுள்ளவர்களை டெல்லியில் அதிகார நாற்காலியில் உட்கார வைக்க கெஞ்சிக் கூத்தாடி மிரட்டிய கேளிக்கூத்தை வட இந்திய டி.வி.க்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஊரே சிரித்தது. இப்போது இலங்கையில் ரத்த அத்தியாயம் முடிந்துவிட்டது என்று ஊருக்கும், உலகுக்கும் அறிவித்துவிட்டு மாநாடு என மார்தட்டுகிறார். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் எல்லா இடங்களிலும் மண்ணை கவ்வியவர்கள் மீண்டும் அங்கே காலூண்றுவதற்கு வழி கிடைக்காதா என ஏங்கும் விதத்தில் தமிழை கேடயமாக எடுக்கிறார்கள்.

ராமதாஸ் வெளியேறி விட்டாரே?

எதுவும் சொல்ல விரும்பவில்லை.

தமிழீழ பிரச்னையும் ஒரு வழியாக ஓய்ந்துவிட்ட நிலையில், இனி எதை வைத்து அரசியல் பண்ணப் போகிறார் வைகோ?

ஓய்ந்துவிட்டது என்பது அடிப்படை இல்லாத கேள்வி. அடுத்தது, எங்கள் வைகோ இதை மட்டும் வைத்து அரசியல் செய்யவில்லை. ஈழத்தைத் தன் அரசியலுக்கும் பயன்படுத்தவில்லை. நாங்கள் மத்திய மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை குறிப்பாக, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வரலாறு காணாத லஞ்சம், ஜனநாயகப் படுகொலைகள், அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் எல்லாவற்றையும் வைத்துதான் பிரசாரம் செய்கிறோம்! அழகிரி போன்ற அந்தக் குடும்பத்தினரின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் தமிழகத்தின் எல்லாதுறைகளிலும் ஆட்டிப் படைக்கிறது. இதை எல்லாம் அம்பலப்படுத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை!.

-வி. சந்திரசேகரன்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

நன்றி: குமுதம் சஞ்சிகை

Comments