நாம் உணர்ந்துகொள்ளத் தவறும் படகுத் தமிழர்களின் துயரம்!

சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது.

மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது. சிறு கடல் தொலைவில் நான்கு கோடி தமிழர்கள் வாழும் தமிழகம் அரவணைக்க மறந்ததாலும், அழிவுகளுக்குத் துணை போனதாலும் ஆழ் கடலையும் எதிர் கொண்டு நீள் பயணம் மேற்கொள்ளும் எமது உறவுகளுக்காக வேதனைக் குரல்கூட தமிழகத்தில் ஒலிப்பதாகக் காணவில்லை. ஆனாலும், உயிரை விடவும் மானமே பெரிதாக எண்ணும் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் படகிலும் மிதக்கின்றார்கள். கடலிலும் மிதக்கின்றார்கள்.

தரை மார்க்கமான தப்பித்தல் என்பது முடியாத காரணத்தினால் கடல் கடந்து தமிழகம் சென்றவர்கள் தவிர, மேலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விமானம் மூலமாகப் பயணித்து, பெருந் துயர் சுமந்து ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளில் தஞ்மடைந்தார்கள். தற்போது அந்தப் பாதைகளும் தமிழர்களுக்கு அடைக்கப்பட்டு, சிறிலங்காவின் ஒரே சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் இறுதித் தமிழனையும் சிறைபிடித்து, சித்திரவதைகள் செய்வதற்கான கொடூர கூடாரமாக மாற்றம் பெற்றுவிட்டது. இதனால், ஈழத் தமிழர்கள் உயிர் வாழ்தலுக்காகக் கடல் கடந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலங்களின் பின்னர் எதிர்கால நம்பிக்கைகளைத் தொலைத்த மனிதர்களாக மாறிவிட்ட ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் வாழ்தல் என்பது மரணத்திலும் கேலமாகவே போய்விட்டது. வவுனியா முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட வன்னி மக்களில் பலர், 'இறுதிப் போர்க்களத்திலாவது இறத்துபோயிருக்கக் கூடாதா?' என்று சோகப் பெருமூச்சு விட்டு, தம் அவலங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் இறுதி நம்பிக்கையான புலம்பெயர் அகதி வாழ்வும் தற்போது அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றது. அண்மையில் கடல்கடந்து அவுஸ்திரேலியா நோக்கி 258 ஈழத் தமிழர்கள் பயணம் செய்த படகொன்று இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு, மெராக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ம் திகதி முதல் இந்தோனிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகில் 32 குழந்தைகள், 27 பெண்கள், 4 வயோதிபர்கள், 195 ஆண்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கழிந்த நிலையில் அவுஸ்திரேலிய கடற் பகுதியில் வைத்து அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்றில் பயணித்த 78 தமிழர்களும் மீண்டும் அவுஸ்திரேலியாவின் 'ஓசியானிக் விக்கிங்' என்ற கப்பலில் ஏற்றப்பட்டு இந்தோனிசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த இரு படகு அகதிகளையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அவுஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தப் படகுகளில் இருப்பவர்களோ தம்மை அவுஸ்திரேலிய அரசு ஏற்காவிட்டாலும், தாம் ஐ.நா. அகதிகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள எந்த நாட்டிற்காவது சென்று வாழத் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த இரு படகுகளிலும் பயணித்தவர்களை மனிதாபிமானம் மிக்க நாடுகள் ஏதாவது ஏற்க மறுக்கும் பட்சத்தில் இந்தோனேசிய அரசு அவர்களை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பும் முடிவை மேற்கொள்ளக்கூடும். அப்படி அவர்கள் அனைவரையும் சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தோனேசிய அரசு முடிவு செய்யுமானால், கொடூரமான இனவெறிச் சிங்கள அரசின் கைகளில் மரணிப்பதை விட, அந்த அகதித் தமிழர்கள் நடுக் கடலில் தமது வாழ்வை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கொக்கஸ் தீவுக்கு அருகே கடலில் மூழ்கியுள்ளது. 40 இற்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்த இந்த மூழ்கிய படகிலிருந்து 17 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் பலியானவர்கள் பெரும்பாலும் ஈழத் தமிழர்கள் என்றே நம்பப்படுகின்றது.

இத்தனை அவலங்களும் எமது உறவுகளுக்கு நேர்ந்து கொண்டிருக்கும்போது நாம் அது பற்றிய எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமலேயே உள்ளோம். முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்னர் எமது உணர்வுகள் மரத்து விட்டது போலவே தோன்றுகிறது. ஆனாலும், ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அத்தனை அவலங்களுக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய நிலையிலும், போராடக் கூடிய சூழலிலும் புலம்பெயர் தமிழர்களாகிய நாமே உள்ளோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். கரையேறத் தவிக்கும் தமிழர்களின் கண்ணீர் துடைக்க எம் கரங்களை நீட்ட வேண்டும்.

நன்றி: பாரிஸ் ஈழநாடு



Comments