பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது

‘பயங்கரவாதம்' என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது.

அமெரிக்கா கடந்த 22ம் திகதி, இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசையும் அது கடுமையாகச் சாடியிருந்தது. விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணில் இணைத்ததாக அதிகம் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக சிறீலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து கடுமையாகவே சாடப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் இந்தப் போர்க் குற்ற அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஐ.நா சபை வரை விவாதங்கள் வலுவடையத் தொடங்கியுள்ளன.

இந்தப் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு சிறீலங்கா உடன்பட வேண்டும் எனவும் அல்லாது போனால் அதற்கான எதிர்வினைகளை (ஜீஎஸ்பி-பிளஸ் இடைநிறுத்தம் போன்ற) சிறீலங்கா சந்திக்க வேண்டும் எனவும் அவை எச்சரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் போருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணையாக நின்ற சில நாடுகளைக் கூட அமெரிக்காவின் அறிக்கை சிறீலங்காவிற்கு உதவி வழங்குவதில் இருந்து பின்வாங்க வைத்துள்ளது. சர்வதேச நாடுகளின் இந்த சடுதியான மனமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த சிறீலங்கா, அமெரிக்காவின் இந்த போர்க் குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாகவும், சுயாதீனமான புத்திஜீவிகளை கொண்டு இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாக அறிவித்திருந்தது.

ஆனால், அமெரிக்காவின் யுத்தக்குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பதை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறைப்பதற்கான, சர்வதேச சமூகம் மறக்கச் செய்வதற்கான அவகாசத்தைப் பெறும் முயற்சியே சிறீலங்காவின் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப் போவதான அறிவிப்பு என்று அது தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் ஏமாற்றுத் தனத்தைப் புரிந்துகொண்டதனாலேயே இவ்வாறான ஒரு அறிக்கையை அதனால் வெளியிட முடிந்துள்ளது. காலம் காலமாக இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவற்றை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களை அமைக்கும்.

நீண்ட நெடுங்காலம் இழுபடும் இந்த விசாரணைக் குழுக்கள், இறுதியில் எந்த ஒரு முடிவும் இல்லாமல், யாருக்கும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்காமல் பின்னர் காணாமல் போய்விடும். உதாரணமாக, மூதூரில் பிரான்சின் ‘அக்சன் கொந்ர லா பாம்' பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட விடயத்தில் கூட இவ்வாறு அமைக்கப்பட்ட குழு, இரண்டு ஆண்டுகள் விசாரணைகளை இழுத்தடித்து, உண்மைகளை மூடிமறைத்தது. அண்மையில் அந்தப் படுகொலையின் தீர்ப்பு வெளியாகியபோது, பிரான்சின் அக்சன் கொந்ர லா பம் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். எனவே, சிறீலங்காவின் விசாரணைக் குழுக்கள் அமைக்கும் பணி என்பது காலத்தை இழுத்தடிக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமே என்பதை சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளன என்பதன் வெளிப்பாடுதான் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை எனக் கொள்ளலாம். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம். பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதை சிறீலங்கா இப்போது உணர்ந்துகொண்டிருக்கும்.

ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு

நன்றி்:ஈழமுரசு

Comments