சிறீலங்காவில் தோன்றியுள்ள முக்கோண விரிசல்களும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைகள் தமக்கு தேவையில்லை என முன்னர் வாய்ச்சவால்களை விடுத்திருந்த சிறீலங்கா அமைச்சர்கள் தற்போது அந்த வரிச்சலுகையின் நீடிப்புக்காக தலையால் நடக்கின்றனர். இந்திய நாடாளுமன்றக் குழுவினரும் அதற்காக தான் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வருடத்தின் நடுப்பகுதியில் சிறீலங்காவுக்கு வந்ததுடன், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக தமது அறிக்கையினையும் ஐராப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து சிறீலங்கா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 19 ஆம் நாள் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் சிறீலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையினையும் தற்காலிகமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிக்கையினை தொடர்ந்து மேலும் ஒரு குழுவினர் சிறீலங்காவுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும் சிறீலங்கா அரசும் இந்திய அரசும் இணைந்து மேற்குலகத்தை ஏமாற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் பலர் வடபகுதியில் அவசர அவசரமாக குடியேற்றப்பட்டனர். தடுப்புக்காவலில் இருந்த ஊடகவியலாளர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முகாம்களில் இருந்து இளம் ஆண்களும், பெண்களும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக அனைத்துல மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் தலைநகரிலும், வடக்கு கிழக்கு பகுதிகளிலும் அரச படையினரின் கடத்தல்களும் தொடர்கின்றன. அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் வெளியுறவு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் சிறீலங்கா அரசுக்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தின் மே மாதத்தின் முதல் இரு வாரங்களில் வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட 170 இற்கு மேற்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை தாம் கொண்டுள்ளதை அமெரிக்கா மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது. செய்மதி புகைப்படங்கள், உளவுத்தகவல்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் என அமெரிக்கா பல தகவல்களை சேரித்துள்ளது. இதனை சிறீலங்காக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கும் தனக்கு நெருங்கிய தமிழ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தார். அதாவது மே மாதம் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் அங்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் தம்மிடம் ஆதாரங்களுடன் உள்ளதாகவும், தமக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உதியோகபூர்வமற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதாவது போரியல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை முன்நிறுத்தியும், பொருளாதார அழுத்தங்களை மேற்கொண்டும் சிறீலங்காவில் ஆட்சியில் இருக்கும் தரப்பை தூக்கி எறிவதற்கு மேற்குலகம் தயாராகி வருகின்றது. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்றால் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி முற்றாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் மேற்குலகத்திடம் வலுப்பெற்று வருகின்றது. மேலும் சீனா - சிறீலங்கா கூட்டுறவை வலுப்படாது செய்வதன் மூலமே தமது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் எனவும் மேற்குலகம் நம்புகின்றது. ஈழத்தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் தற்போது அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான புறச்சூழல்களை உருவாக்கும் தகமையை மேற்குலகம் மட்டுமே கொண்டுள்ளதாக நம்புகின்றனர்.

எனவே மேற்குலகத்துடன் தமிழ் மக்கள் ஏற்படுத்தும் வலுவான உறவுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை உருவாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனை உறுதி செய்வது போலவே சிறீலங்காவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஈழத்தமிழ் மக்கள் மேற்குலகத்தின் பக்கம் சாய்ந்து வருகையில் சிறீலங்கா அதற்கு எதிரான கூட்டணியுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. மியான்மார் நாட்டு இராணுவ ஆட்சியாளரின் சிறீலங்கா விஜயம், சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் வியட்னாம் விஜயம், சிறீலங்கா ஈரானுடன் ஏற்படுத்தி வரும் வலுவான உறவுகள் என்பன அதனை தான் காட்டுகின்றன. இந்த இரு தரப்பு விரிசல்களுக்கு மத்தியில் இந்தியா அனாதையாகியுள்ளது என்பது தெளிவானது ஆனால் அவர்கள் அதனை புறம்தள்ளி முத்தரப்பு மோதல்களை உருவாக்கும் காரியங்களில் இறங்கியுள்ளனர்.

சிறீலங்காவில் அதிகரித்துள்ள இந்திய முதலீடுகள், இந்திய படை அதிகாரிகளின் தொடர்ச்சியான வரவுகள் என்பன அதனை தான் காட்டுகின்றன. அதாவது மேற்குலகத்தின் தலையீடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பிரசன்னத்தை தோற்றுவித்து சிறீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் கால்பதித்து விடலாம் என்ற கலக்கம் இந்தியாவை ஆட்கொண்டுள்ளது. அதற்கு முன்னர் தனது படையினரின் ஆதிக்கத்தை சிறீலங்காவில் வலுப்படுத்த இந்தியா முயன்று வருகின்றது. ஆனால் இந்தியாவை சிறீலங்காவில் உள்ள எந்த ஒரு இனமும் வரவேற்கப்போவதில்லை. அவர்கள் வேண்டுமானால் பலவந்தமாக உள்நுழைந்து கொள்ளலாம். எனினும் மேற்குலகத்தின் அணுகுமுறைகள் மாறுபட்டவை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்றங்களை முன்நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக ஒரு அழுத்தத்தை கொண்டுவரமுற்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும், மனித உரிமை அமைப்புக்களை அதிகம் கவர்ந்துள்ளது. அது அவர்களின் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்த அறிக்கையை தொடர்ந்து சிறீலங்கா அரசு சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள போதும் அந்த அறிவித்தலின் ஆயுட்காலம் குறைவானதாகவே இருந்துள்ளது. சிறீலங்காவின் இந்த அறிவித்தலின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் கூறியுள்ள கருத்துக்கள் முக்கியமானவை.

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளி தொடர்பான ஆய்வுகளை தாம் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் நிபுணரான அல்ஸ்ரன், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டவர். கடந்த மே மாதம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் சுயாதீன விசாரணைகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். முன்னர் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் எவையும் சுயாதீனமானவை அல்ல என்பதையும் அவர் வலியுறுத்த தவறவில்லை. சனல் போஃர் ஒளிபரப்பிய காணொளி தொடர்பான ஆய்வுகளை தாம் மேற்கொள்ள முன்னர் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு விசாரணையை மனித உரிமைகள் ஆணைக்குழு காசா பகுதியில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் மேற்கொண்டிருந்தது. இந்த ஆண்டின் முற்பகுதியில் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சிறீலங்காவில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பான விவாதம் கொண்டுவரப்பட்ட போது அதனை ராஸ்யாவும், சீனாவும் வலுவாக எதிர்த்திருந்தன. ஆனால் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கும் அதனை ஒத்த நிலமைகள் ஏற்படுமா? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சில வரையறைகள் உள்ளன ஆனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடவடிக்கைகளுக்கு வரையறைகள் இல்லை என அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பான வலுவான அறிக்கை ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ள நிலையில் ஹெயிட்டி பகுதிக்கு ஐ.நாவின் அமைதிபடையணியாக செல்வதற்கு மேலதிகமாக 198 சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. போரியல் குற்றங்களை மேற்கொண்ட நாடு என அடையாளமிடப்பட்ட நாட்டில் இருந்து படையினர் தெரிவுசெய்யப்படலாமா? என்ற கேள்விக்கு 'இந்த நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகள் வன்முறைகள் தொடர்பில் மிகவும் சுத்தமான வரலாற்றை கொண்டிருக்க வேண்டும் என' ஐ.நாவின் இணைப்பு பேச்சாளர் பாஃஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறீலங்காவை உலக ஒழுங்கில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு பல வலுவான காரணிகள் உள்ளன என்பதே மேற்கூறப்பட்ட தகவல்களின் சுருக்கம், உலக ஓழுங்கில் இருந்து தன்மைப்படுத்துதல், பொருளாதார அழுத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தி சிறீலங்காவில் ஒரு ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

அதன் மூலம் தமிழ் மக்களும் தமது அரசியல் உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என மேற்குலகம் நம்புகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து சிறீலங்கா மீதான பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தனிமைப்படுத்தும் உலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகின்றன. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி பொருளாதார மற்றும் இரஜதந்திர அழுத்தங்களின் ஊடாக சிறீலங்காவை சமாதான வழிகளுக்கு கொண்டுவருவதாற்கான பாதை இன்னமும் தமிழ் மக்களுக்கு திறந்தே உள்ளது. அதனை பயன்படுத்த உலெகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகம் தனது நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

நன்றி:ஈழமுரசு

Comments