துட்ட (சரத்) காமினிக்காக யாழ்ப்பாணம் நோக்கி ஒரு தூது!!!

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலுக்கான நாள் நிர்ணயிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழீழ மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து தமது காய்களை மகிந்த ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் நகர்த்தி வருகின்றனர்.

ஈழத்தீவின் தொன்மை மிக்க இனமாகத் திகழ்பவர்கள் தமிழர்கள். அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் ஈழத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பௌத்த மதம் சிங்களம் என்ற புதிய மொழியை உருவகித்துக் கொண்டதைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற இனமே சிங்கள இனம். பௌத்தத்தின் வருகைக்கும், சிங்களவர்களின் தோற்றுவாய்க்குப் பின்னரான கடந்த இரண்டாயிரத்து இருநூற்றைம்பது (2250) ஆண்டுகால நீட்சியில் தமிழ் மன்னர்களுக்கும், சிங்கள மன்னர்களுக்கும் இடையில் நிகழ்ந்தேறிய யுத்தங்கள் ஏராளம். இவ்வாறு இடம்பெற்ற யுத்தங்களில் தமிழர்களை வெற்றிகொண்ட ஒரேயொரு சிங்களக் கதாநாயகன் துட்டகாமினி.

இந்தக் கதாநாயகனின் நவீன அவதாரம் யார் என்பதை நிர்ணயிப்பதற்கான களமாக சனவரி 26ஆம் நாள் அரங்கேறப்போகும் சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் களம் விரியத் தொடங்கியுள்ளது. துட்டகாமினியின் றுகுணு இராச்சியத்தின் வாரிசாக தன்னைப் பிரகடனப்படுத்தி அம்பாந்தோட்டையில் இருந்து தமிழீழ தேசம் மீது போர்தொடுத்த மகிந்த ராஜபக்சவிற்கு புதிய சவாலாக சரத் பொன்சேகா என்ற மற்றுமொரு துட்டகாமினி அம்பலாங்கொடையில் இருந்து களமிறங்கியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகாலப் பகுதியில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான தமிழீழ மக்களைக் கொன்றுகுவித்த இரண்டு நவீன துட்டகாமினிகள் இப்பொழுது தமது கூர்வாட்களை ஒருவரையொருவர் நோக்கித் திருப்பி நேருக்கு நேராக மோதிக்கொள்வதற்கு தயாராகின்றனர். இரண்டு துட்டகாமினிகளுக்கு மத்தியில் நடைபெறும் யுத்தத்தில் தமிழீழ மக்களின் வாக்கு வங்கி நேரடியாகக் குறிவைக்கப்படுகின்றது. டக்ளஸ் தேவானந்தா, முரளீதரன் (கருணா) சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்று தனது ஏவல் மந்திரிகளை முறையே யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்று மகிந்த ராஜபக்ச தூது அனுப்பி வைக்க, சரத் பொன்சேகாவின் தூதுவனாக கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து சென்றார் ரணில் விக்கிரமசிங்க!

எல்லாளன் மீது போர்தொடுப்பதற்கு முன்னர் கதிர்காமம் சென்று முருகப்பெருமானை துட்டகாமினி வழிபட்டதாக மகாவம்சம் பதிவுசெய்கின்றது. தமிழனை வெல்வதற்கு அப்பொழுதும்கூட தமிழ் கடவுளின் ஆசி தேவைப்பட்டது! இம்முறை சரத் பொன்சேகாவிற்காக தனது பரிவாரங்களான மனோ கணேசன், ஜெயலத் ஜெயவர்த்தன போன்றோருடன் யாழ்ப்பாணம் நோக்கி விரைந்த ரணில் விக்கிரமசிங்க தரிசித்த முதல் தலம் நல்லூர் முருகன்பதி. இப்பொழுது சரத் பொன்சேகா என்ற துட்டகாமினியின் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு தமிழ் கடவுளின் ஆசி ரணில் விக்கிரமசிங்காவிற்கு தேவைப்படுகின்றது.

மேலங்கிகளை உதறியெறிந்துவிட்டு தாண்டுநடைபோட்டு தகத்தாண்டவமாய் நல்லூர் பதியை தனது பரிவாரங்களுடன் ரணில் வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி!

"எம்பெருமானே தமிழீழ தேசத்திற்கு மீட்சி தாராயோ!!" என்று முருகப்பெருமானிடம் பக்தகோடிகள் இருகரம்கூப்பி இறைஞ்ச, கைகள் இரண்டையும் பின்புறம் கட்டியவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டு முருக தரிசனம் கண்டார் ரணில் விக்கிரமசிங்க.

அவருக்கு அருகில் வெகு பவ்வியமாக மனோ கணேசன் கைகட்டி வாய்புதைத்து நின்றது இக்கால அரசியல் சாணக்கியம்!கௌடில்யர் கூட தோற்றுவிடுவார். நல்லூர் முருகன் பதியில் இருந்து நேரடியாக ஆரியகுளம் நாகவிகாரை நோக்கி விரைந்தது ரணில் பட்டாளம்.

அங்கு பிக்குகளிடம் மண்டியிட்டு கைகளில் மாந்திரீக நூல் அணிந்துகொண்டனர் பொன்சேகாவின் தூதுவர்கள். நாகவிகாரையில் இருந்து நேரடியாக தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளாரின் வாசத்தலத்தில் ரணிலுக்கு தேனீர் இடைவேளை.

அங்கிருந்து தொடங்கியது ரணிலின் வாக்குவேட்டை! மனோ கணேசன் அருகிருந்து மொழிபெயர்க்க தொடங்கியது ரணிலின் வீரஉரை!

"உங்களுக்கு சனநாயக ஆட்சி வேண்டுமா? குடும்ப ஆட்சி வேண்டுமா? குடும்ப ஆட்சி வேண்டும் என்றால் மகிந்தவிற்கு வாக்களியுங்கள். சனநாயக ஆட்சி வேண்டும் என்றால் சரத் பொன்சேகாவிற்கே உங்கள் வாக்கு. மகிந்தவை முதலில் வீட்டிற்கு அனுப்புவோம். இது தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள்!" என்று முழங்கித் தள்ளினார் ரணில். ஆகா! என்ன அறிவுரை. என்ன ஆலோசனை. அந்த இடத்தில் ஒரு அசரீரி ஒலித்திருக்க வேண்டும். அது ஒலித்ததோ இல்லையோ, ஆனால் மனோ கணேசனின் காதில் மட்டும் ஒரு ரீங்காரம் ஒலித்திருக்கும்.

அது இதுதான்:-"பேயை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு முனியை ஆட்சியில் அமர்த்துவதற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் என்ன ஏமாந்த சோணகிரிகளா?சிங்கள தேசத்தின் தேர்தலில் தமிழீழ மக்களுக்கு என்னதான் வேலை?"

நன்றி:பதிவு

Comments