ஜனாதிபதியாகும் சாத்தியமில்லாத வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளுக்கு இணையானவை.

"அடிமைகளாக இருப்பது அவமானமில்லை, ஆனால் உரிமையாளர்களே அடிமைகளாக இருப்பது தான் அவமானம்' 1929 ஆம் ஆண்டு அமெரிக்க கறுப்பினத்தவர்களுக்கு மகாத்மா காந்தி அனுப்பிய தகவல் இது.

இதுதான் அமெரிக்காவின் கறுப்பினத்தவர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஏழு மாதங்களாக பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 280,000 மக்கள் தொடர்பாகவும், அவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவரும் செய்திகளை பார்க்கும் போதும் இந்த வாசகங்கள் தான் நினைவில் வருபவை. கடந்த மே மாதம் போர் நிறைவுபெற்ற போது இடம்பெயர்ந்த 280,000 மக்களில் தற்போதும் 130,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வவுனியாவில் உள்ள முகாம்களிலும், 15,000 மக்கள் ஏனைய பகுதிகளில் உள்ள முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் முழுமையான நடமாடும் சுதந்திரங்கள் வழங்கப் படவில்லை எனவும், யாழ்குடாநாட்டில் குடியமர்த்தப்பட்டவர்கள் மீண்டும் படைத் தளங்களில் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான இராணுவப் பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் அனைத்துலகத்தின் அழுத்தங்கள் மற்றும் எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தல் காரணமாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போர் நிறைவுபெற்ற பின்னர் ஏற்படும் அமைதியான வாழ்க்கைக்கு அவர்கள் இன்றுவரை திரும்பவில்லை. இலங்கையில் நிலைமைகள் வழமைக்கு திரும்புவதுடன், முழுமையான ஜனநாயக நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மேற்குலகம் தீவிரமாகவுள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் துணை வெளிவிவகார செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கும் அதனைத் தான் வலியுறுத்தியிருந்தார். போர் நிறைவுபெற்று விட்டதால் அவசர காலச்சட்டம் தேவையற்றது அதனை நீக்கு மாறும் அவர் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அரச தரப்பு அதற்கு மறுத்து விட்டது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களின் முக்கிய காரணியாக அவசர காலச்சட்ட விதிகளே உள்ளதாக மேற்குலகம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் தனது அடுத்த நகர்வை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு 27 உறுப்பு நாடுகளும் அனுமதியளித்துள்ளதாக அது கடந்த புதன்கிழமை (16) அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக சீர்கேடுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நகர்வு ஆளும் தரப்பிற்கு இரஜதந்திர ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகும். ஏனெனில் இலங்கையில் உள்ள பல இலட்சம் மக்களின் வேலை வாய்ப்புக்களுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நேரடியான தொடர்புகளை கொண்டது. இதனிடையே கடந்த வியாழக்கிழமை (17) நிறைவுபெற்ற வேட்புமனு தாக்கல்களின் முடிவின் போது எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் அவற்றில் 22 வேட்பு மனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் அரச தலைவருக்கான தேர்தலில் போட்டி யிடுவது இதுவே முதற்தடவை. எனினும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலேயே கடும் போட்டிகள் நிலவும் என்பது உறுதியானது. இந்த இருவரில் ஒரு வரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார் என்ற நம்பிக்கை வலுப்பட்டு வருகின்றன. இருந்த போதும் எஞ்சியவர்களில் பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய வர்களுக்கு போடப்படும் வாக்குகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீர் என்பது தெளிவானது. தென்னிலங்கை மக்களை பொறுத்த வரையில் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியினால் ஏற்படப்போகும் நன்மைகள் என்பது அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் மற்றும் நாட்டின் அபிவிருத்தி சார்ந்தது.

ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவ்வாறானது அல்ல. ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யப் போவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் எற்படும் மாற்றம் அவர்களுக்கு ஒரு மூச்சுவிடும் கால அவகாசத்தை வழங்குவதுண்டு. மேலும் தெற்கில் ஏற்படும் மாற்றம் அல்லது பலவீனம் தமிழ் மக்களுக்கு பல தற்காலிக அனுகூலங்களை வழங்குவதுண்டு. ஏனெனில், தமிழ் மக்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளால் மட்டும் புறந்தள்ளப்பட்டவர்கள் அல்ல, அவர்களின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்றவை மட்டுப்படுத்தபட்டே உள்ளன. மேலும் சிறைகளிலும், முகாம்களிலும் பல ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளனர், நாட்டில் இருந்து வெளியேறி பல வருடங்களாக திரும்பிவர முடியாது வெளிநாடுகளில் தஞ்சமடைந்த பல ஆயிரம் தமிழ் மக்களும் உள்ளனர்.

காணாமல் போனவர்களையும், கடத்திச் செல்லப்பட்டவர்களையும் தேடமுடியாத அவர்களின் உறவுகள் முடங்கிப்போயுள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்ற பெரும் போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்களின் மரணத்தை உறுதிப்படுத்தவோ அல்லது அது மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பாகவோ விளக்கமளிக்க முடியாத நிலையிலும் தமிழ் மக்கள் உள்ளனர். பல ஆயிரம் குடும்பங்கள் தமது உறவுகளை இழந்துள்ளன, பல ஆயிரம் குடும்பங்கள் தமது உறவுகளை பிரிந்துள்ளனர். பலருக்கு தமது குடும்ப உறுப்பினர்கள் எங்கு உள்ளனர் என்பதே தெரியாது, பல ஆயிரம் மக்கள் ஊனமடைந்துள்ளனர், முள்ளிவாய்க் காலில் என்ன நடந்தது என்பதே இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. அங்கு நடை பெற்ற சம்பவங்களின் தடயங்களும் மெல்ல மெல்ல அழிவடைந்து வருகின்றன.

எனவே இந்த பேரனர்த்தங்களில் இருந்து நாம் விடுதலை அடைவதற்கு தென்னிலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். புதிய அரசாங்கம் தன்னை வலுப்படுத்தி கொள்ள எடுக்கும் கால அவகாசத்தில் தமக்கு நேர்ந்த அனர்த்தங்களை அறிந்து கொள்ளவோ அல்லது அது தொடர்பான தகவல்களை உலகின் முன் கொண்டு வரவோ முடியும் என அவர்கள் நம்புகின்றனர். எனவே தான் தமிழ் மக்களின் வாக்குகள் நடைபெறப்போகும் தேர்தலில் முக்கியபங்கை வகிக்கும் என அனைத்துலக இராஜ தந்திரிகள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தமது வாக்குகளை வீணாக்குவதால் தற் போதைய நிலைமை மேலும் ஆறு வருடங்கள் நீடிக்குமானால் வன்னியின் போர் தடங்கள், அங்கு ஏற்பட்ட அழிவுகளின் தடயங்கள், மரணமடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் மறைந்து போகலாம் என்பதுடன், காணாமல் போனவர்களின் மர்மங்களும் துலங்கப்போவதில்லை.

எனவே தான் தமது வாக்குகளை வீணாக்காமல் அதனை பயனுள்ள வழிகளில் பயன் படுத்த தமிழ் இனம் தமது ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஈழத்தமிழ் மக்களின் வழிகாட்டுனர்களாக யார் திகழவேண்டும் என்பதும் நாம் அறியாதவர்கள் அல்ல, எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தோன்றியுள்ள விரிசல்கள் தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் அல்லது பிளவுகளை எற்படுத் தலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில்கள மிறங்கியுள்ள 22 வேட்பாளர்களில் தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் தன்மை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு ஓரளவு உண்டு என நம்பப்படுகின்றது. மேலும் விக்கிரம பாகு கருணாரட்ணாவும் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் அவர்கள் இருவரில் ஒருவராவது ஜனாதிபதியாக வரும் வாய்ப்புக்கள் உண்டா? என்றால் அதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஒரு தமிழ்மகனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் மூலம் தமிழினம் தனது ஒற்றுமையை இந்த உலகிற்கு காண்பிக்க வேண்டும் என நாம் விரும்பினால் அதற்கு பல தேர்தல்கள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தல்கள், உள்ளூராட்சி சபை தேர்தல்கள் என்பன தாயகப் பகுதிகளிலும், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு புலம்பெயர் நாடுகளிலும் உண்டு. ஆனால் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தலுக்கு முன்னரும் பல மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு.

பல தடவைகள் போரின் ஓய்வுக்கும் அவை வழிவகுத்ததுண்டு, பேச்சுகளின் ஆரம்பமும் அங்கு நிகழ்ந்ததுண்டு. எனவே வெற்றிபெற முடியாத ஒருவருக்காக நாம் தமிழ் மக்களின் வாக்குகளை வீணடிக்க முடியாது. தற்போதும் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும், போரின் வலிகளையும், வேதனைகளையும் உலகிற்கு சொல்லும் காலமும், பிரிந்துபோயுள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும், காணாமல் போனவர்களை தேடவும், முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் புதைந்துபோன உறவுகளை உறுதிப்படுத்தவும் இது அவசியமானது. எனவே தமிழ் மக்களின் வாக்குகளை பிரிவடையாது தடுப்பதுடன், அவர்களின் வாக்கு வளங்கள் சரியான நோக்கத்திற்கு பயன்படுவதற்கும் அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப தற்போது தேர்தல் களத்தில் குதித்துள்ள பல வேட்பாளர்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அதற்கு அனுகூலமாக மாறக்கூடிய பூகோள அரசியலையும் புரிந்துகொண்டு தேர்தலின் இறுதி நாட்களில் அவர்களுக்கான தேர்வைகாண் பித்து தாம் அதில் இருந்து ஒதுங்கி விடுவதே அரசியல் சாணக்கியம்.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி:வீரகேசரி

Comments