புதிய அரசியல் மாற்றங்களுக்கான எதிர்பார்ப்புகளுடன் உதயமாகியுள்ள புத்தாண்டு.

புதிய நம்பிக்கைகளுடன் புதுவருடம் பிறந்துள்ளது, தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்று சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகளுடன் இந்த வருடத்தை நாம் வரவேற்கத் தயாராகின்றோம்.

இலங்கையின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக பலமான எதிர்பார்ப்புகளும் புதுவருடத்தின் பிறப்புடன் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலே. எதிர்வரும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் உள்ள போட்டியைத் தான் உலகம் உற்றுநோக்குகின் றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் இவர்கள் இருவர் தொடர்பான அரசியல் கணணோட்டம் தான் மிக முக்கிய இடத்தில் உள்ளது.

இருந்தபோதும் ஒரு ஆட்சிமாற்றத்தின் ஊடாக கடந்த வருடம் இடம்பெற்ற உக்கிர போரின் தாக்கங்களில் இழந்தவற்றில் சிறு பகுதியையாவது ஈடுசெய்துவிடலாம் என தமிழ் மக்கள் நம்புகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் சமூகம் சில குழப் பங்களை சந்தித்துள்ள போதும், பெரும் பாலானவர்கள் பொன்சேகாவை ஆதரித்து வரு வதை ஊடகங்கள் ஊடாக அறிய முடிகின்றது. இலங்கையில் நடைபெறும் தேர்தலில் தமது தலையீடுகள் இல்லை என அனைத்துலக சமூகம் தெரிவித்துள்ளபோதும் பூகோள அரசியல் நலன் சார்ந்த போட்டிகள் அவர்களுக்கிடையே உள்ளதையும் காணமுடிகின்றது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலுவாக ஆதரிக்கின்றன என்று கூறப்படுகின்றது. மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் அவர்களின் மறைமுகமான ஆதரவு பொன் சேகாவுக்கு உண்டு என நம்பப்படுகின்றது. முன்னர் பல தடவைகள் குறிப்பிட்டது போல அவர்களும் தமிழ் மக்களை போல இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றனர் என்ற கருத்தியலே முன்வைக்கப்படுகிறது. எனவேதான் அரசாங்கத்தின் தேர்தல் கால பிரசார காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வர்த்தக வரிச்சலுகையை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது தற்போதைய அரசாங்கத்திற்கு மிகவும் பின்னடைவான நிலைமை என அவதானிகள் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றுமொரு நகர்வையும் மேற்கொண்டுள்ளது.

அதாவது, ஜனாதிபதித் தேர்தல் நியாயமானதாகவும், சுதந்திரமானதாகவும் நடை பெறாது விட்டால் வர்த்தக வரிச் சலுகை முற்றாக நிறுத்தப்படும் என அது எச்சரித்துள்ளது. அதாவது ஆளும் தரப்பு தனது அதி காரங்களை பயன்படுத்தி மேற் கொள்ளும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அறிக்கையாகவே இது நோக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக உலகின் இரு பெரும் சமூகங்கள் பிளவை சந்தித்துள்ள இந்நிலையில் யார் வெல்லப் போகின்றனர் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1.85 வீத வாக்கு வித்தியாசத்தால் வெற்றிபெற்றிருந்தார்.

அதாவது மஹிந்த 49 இலட்சம் (50.28 வீதம்) வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க 47 இலட்சம் (48.43 வீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் குறைந்தது 50 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நிபந்தனையை மஹிந்த 0.28 வீதத்தால் எட்டியிருந்தார். ஆனால், அன்று வடக்கில் உள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சம்பவம் இதுவாகும். 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச 50.40 சதவீத வாக்கைப் பெற்றிருந்தார்.

மேலும் தற்போதைய பிரதான வேட்பாளர்கள் இருவரும் போரின் வெற்றிகளை முன்நிறுத்தி பெரும்பான்மை சிங்கள மக்களை குறிவைத்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவேதான் 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டிகள் அதிகமானது என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் கடந்த தேர்தல்களில் கட்சிகள் கொண்டிருந்த வாக்குகளின் பலம் தொடர்பில் தான் இரு வேட்பாளர்களினதும் வெற்றிகள் கணிக்கப்படுகின்றன. ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளை நோக்கினால், ஐ.தே.கவைப் பொறுத்தவரையில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அது அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 47 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

எனினும் அண்மையில் நடைபெற்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களின் அடிப்படையில் தனியாக ஐ.தே.கவின் பலம் 26 இலட்சம் வாக்குகள் என கணிப் பிடப்படுகின்றது. எனினும் ஜனாதிபதித் தேர்தலில் பெறும் வாக்குகளுக்கும் உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. ஜே.வி.பியை பொறுத்தவரையில் 1982 ஆம் ஆண்டும், 1999 ஆண்டும் ஜனாதிபதித் தேர்தலில்தனித்து போட்டியிட்டிருந்தது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் அது ஏறத்தாழ 300,000 தொடக்கம் 350,000 வாக்குகளை (4 வீதம்) பெற்றிருந்தது. கடந்த மாகாணசபை தேர்தலில் அக்கட்சி 243,000 வாக்குகளை பெற்றிருந்தது. எனினும் அவர்களால் ஏறத்தாழ 350,000 வாக்குகளை திரட்டமுடியும் என நம்பப்படுகின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் வாக்கு பலம் தொடர்பான சரியான தகவல்கள் இல்லை, எனினும் தலைநகரில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் பலம் அவருக்கு உண்டு. முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் சில பிளவுகளை கொண்டுள்ள போதும், அதன் பிரதான வாக்குப் பலம் ரவூப் ஹக்கீமிடம் உண்டு. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களான அதன் தேசிய அமைப்பாளர் ஆர் யோகராஜன், பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் ஆகி யோரும் கட்சியில் இருந்து விலகி பொன்சேகவை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். இது மலையகத்தின் 10 இலட்சம் மக்களின் வாக்குகளில் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்பப் படுகின்றது.

ஒட்டுமொத்தமாக நோக்கினால் 4 மில்லியன் (40 இலட்சம்) வாக்குப் பலத்தை இந்த கட்சிகளால் சரத்பொன்சேகாவுக்கு வழங்க முடியும். மேலும் சுதந்திரகட்சியில் இருந்து பிரிந்து சென்ற அமைச்சர் அர்ஜுனரணதுங்க போன்றவர்களும் கணிசமான பங்களிப்பை பொன்சேகாவுக்கு வழங்க முடியும். அவருக்கு விளையாட்டு ரசிகர்களின் வாக்குப்பலம் உள்ளது. மறுபக்கம், 2005 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட 4.8 மில்லியன் (48 இலட்சம்) வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தற்போதும் தக்கவைத்துள்ளாரா என்பது தான் தற்போதுள்ள முக்கிய கேள்வி. ஆனால் தாம் 5.1 மில்லியன் (51 இலட்சம்) வாக்குகளை மாகாண சபை தேர்தலில் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. எனினும் அதில் பல உடைவுகளும் பிரிவுகளும் ஏற் கெனவே ஏற்பட்டுவிட்டன.

மேலும் மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்திருந்த மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பல கட்சிகள் இன்று தடம்மாறி விட்டன இந்த நிலையில் அரசாங்கத்தின் உண்மையான வாக்கு பலம் 51 இலட்சமாக இருக்கும் என்பது சந்தேகமே. நடுத்தர வர்க்க மக்கள் விலைவாசி உயர்வு போன்றவற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகளும் அதிகம் மேற்கொள்ளப்படவில்லை. மனித உரிமை மீறல்கள், ஊடகத்துறை மீதான வன்முறைகள் என்பனவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். இதுவும் மஹிந்தவின் வாக்கு பலத்தை பாதிக்கலாம். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஜனநாயக ஐக்கிய முன்னணி இரு நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி வருகின்றது.

ஓன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவை பெறுவது. இதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குப்பலத்தை உடைத்துவிட முடியும் என்பதுடன் தமது வாக்குப் பலத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவை நம்புகின்றன. சந்திரிகாவை பொறுத்தவரையில் அவர் மேற்குலகின் ஆதரவைப் பெற்றவர் மேலும் தற் போதைய அரசாங்கத்தை விமர்சித்தும் வருபவர். அவரின் ஆதரவுகள் பொன்சேகாவுக்கு கிடைத்தால் அது அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாகும். இரண்டாவது தமிழ் மக்களின் வாக்குகளை கவருவது. தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் வாக்குப்பலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றமடைந்துள்ளது.

வடக்கில் ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்களும், கிழக்கில் 400,000 தமிழ் மக்களும் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள். எனவே அவர்களின் வாக்கு பலம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஆதரித்தால் அவர்களின் வாக்குப்பலம் 50 இலட்சத்தை தாண்டிவிடும் என கணிப்பிடப்படுகின்றது. தமக்கு அனுகூலமான ஒரு தற்காலிக மாற்றத்தை அவர்கள் தென்னிலங்கையில் ஏற்படுத்தும் பலத்தைக் கொண்டுள்ளனர் என்றே கருதப்படுகின்றது. எனவே எதிர்வரும் மூன்று வாரங்களும் மிகவும் சிக்கல் நிறைந்த அரசியல் பாதைகளின் ஊடாகவே பயணிக்கப்போகின்றது. அதில் நாம் மேற்கொள்ளப்போகும் முடிவு களைப் பொறுத்தே அடுத்துவரும் ஆறு வருடங்களின் அரசியல் நகர்வு தங்கியுள்ளது.

-வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி:வீரகேசரி

Comments