மீண்டும் ஒரு ஏரோதன் வதையும் எம்தேசத்தின் மாசற்ற குழந்தைகளும்

தமிழில் தற்போதுள்ள நூல்களில் தலைமுதல் நூலான தொல்காப்பியத்தின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பட்டதாக ஆய்வுகள் கணக்கிடுகின்றன. மூவாயிரம் வருடங்களுக்கு இத்தாலியில் வெடித்துச் சிதறிய தீக்குழம்பினல் கருகிப்போய், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள பொம்பே நகரின் நாகரிக அமைப்பைக்கண்டு இன்றைய உலகமே வியந்து நிற்கிறது.

கிரேக்கத்தின் தத்துவ மேதைகள், உரோமையின் பரந்த சாம்ராட்சியங்களை உருவாக்கிய மாவீரார்கள், மற்றும் பல்வேறு நாடுகளினதும் அரசர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களின் வரலாற்றுக் காலங்களும் நாகரிகமடைந்த மனித வாழ்வியலில் கணக்கிட முடியாத காலத்து தொன்மையானவை. அரச ஆணையை ஏற்று நிறை மாதக்கர்ப்னியான பென்மரியள் தச்சுத் தொழிலாளியான கணவன் சூசையுடன் நசரேத் என்னும் தமது ஊரைவிட்டு இடம் பெயர்ந்து பெத்தலேகம் செல்கிறார்கள். கழுதையில் அமர்ந்து பயணம் செய்த போது ஏற்பட்ட வேதனைகளை எல்லாம் பெருமையோடு தாங்கிக் கொள்கிறார்கள். பெத்தலேகம் நகரை அடைந்ததும் அவளுக்கு பிரசவ வலியும் தொடங்கவே கதிகலங்கிப் போன சூசை வீரரீடம் ஒடித் தங்க இடம் கேட்கிறர்.

உற்றர் உறவுகளால் வீடுகள் நிரம்பி இடம் இல்லை, இடம் இல்லை என்று எல்லோரும் கை விரிக்கிறர்கள். சத்திரங்களைத்தேடி ஒடுகிறார், எங்கும் இடம் கிடைக்கவில்லை. "மரியாள்! எங்கும் இடமில்லை என்கிறர்கள் உமது வலியை சற்றுத் தாங்கிக் கொள்ளும் நகரின் ஒதுக்குப்புறமாய் போவோம்".சூசைக்கு அப்போது அதைவிட வேறுபாதை எதுவும் தெரியவில்லை. உலகுக்கு ஒளியாய்-மக்களின் மறுவாழ்வுக்காய், விடிவுக்காய்-உரிமைக்காய் தன் உயிரையே தற்கொடையாய் தரப் போகின்ற இக்குழந்தைக்கா இடமில்லை என்கிறார்கள். தாங்க முடியாத மன வேதனையில் மரியாளின் உள்ளம் வெம்பி வெதும்பினலும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவளாய் அமைதியாக சூசையைப் பின் தொடர்ந்தாள். அவர்களுககு கிடைத்த இடமோ மந்தைகள் நடுவே ஒரு மாட்டுத் தொளுவம்.

அங்கேதான் அன்பே உருவானவரைப் பெற்றெடுத்தாள் மாரியாள். எல்லாத் தலை முறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். எல்லாம் வல்லவராம் கடவுள் எனக்கு அரும் பெரும் செயல்களைச் செய்துள்ளார். (லூக்- 1-48,49) என்று, அவள் அன்று வாய்மொழிந்துள்ளது போல இன்று அவள் பெயரால் உயர்ந்து நிற்கும் கோடான கோடி மாதாகோவில்களும், மடு (தமிழீழம்), வேளாங்கன்னி (தமிழ்நாடு), லூர்து நகர் (பிரான்ஸ்), பற்றிமா (போர்த்துக்கல்), அகிர்தா (ஸ்பெயின்), குவாடலூபோ (மெக்சிக்கோ), யூலியாகிம் (தென்கொரியா) ஆகிய திருத்தலங்களில் தினமும் கூடிநிற்கும் இலட்சோப இலட்ச மக்களும் அவளின் புனிதமான தாய்மைக்கு புகழாரம் சூட்டுகின்றனர். அன்று மகிமை பெற்ற மரியாள் அடைந்த வேதனையை இன்று சோதனைகளாக எமது தேசத்திலும் பல அன்னையர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

இன்னமும் தொடர்கிறது அவர்களின் அவலம். அநீதியின் பேரினால் ஏற்பட்ட அச்சத்தின் உச்சத்தினால் நிறைமாத பெண்களும் பசி , களைப்பு , உடல்வலி, தாய்மை உணர்வு, பெற்றெடுத்து குழந்தை முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற பேரவா, தமது சக்திக்கு மீறிய இத்தனை துயரங்களையும் எமது தேசத்தின் தாயுள்ளங்களும் தாங்கித் தவித்தன. இடம் பெயர்ந்து, இடம் பெயர்ந்து அவர்கள் அலைந்த போதுதான், கொடுங்கோலன் ஏரோதன் போல சிங்களமும் கொடுமை மிகுந்த அரக்கனாக தன்னை மாற்றிக் கொண்டது. யேசு பிறந்தபோது யூதேய நாட்டை ஆட்ச்சி புரிந்து கொண்டிருந்த கொடுங்கோல் மன்னன்தான் ‘ஏரோதன்'. அரச மோகமும் , சுக போகமும் இவனது இரண்டு கண்கள்."இத்தகைய படுபாதக குணம் கொண்டோனிடம்தான் கீழ்த் திசையில் இருந்து வந்த ஞானிகள் மூவர் யூதர்களின் அரசர் பிறந்திருக்கிறாரே அவர் எங்கே" அவருடைய பிறப்பின் போது தோன்றும் விண்மீன் எழுதலைக் கண்டு அவரை வணங்கவந்தோம்.

என்று அவரிடமே வினவினார்கள். தனது ஆட்சியில் மற்றொருவன் அரசைக் கவர்வதா, கலங்கினான் ஏரோதன். மறைல் அறிஞர்களையும், தலமைக் குருக்களையும் உடன் அழைத்தான்."எங்கே பிறந்திருக்கிறார் மெசியா?" சொல்லுங்கள் ஆத்திரம் மிகுந்த தொனியில் அதட்டினான், யூதேயாவிலுள்ள பெத்தலேகமில்தான் அவர் பிறப்பார் அப்படித்தான் இறைவாக்கினர் எழுதியுள்ளார்கள் என்று அவனுக்கு பதில் தந்தார்கள். மீண்டும் ஞானிகளை அழைத்து கபடமாகப் பேசினான் ஏரோதன். "நீங்கள் பெத்தலேகலமுக்கு போங்கள். அங்கேதான் நீங்கள் தேடிவந்த குழந்தை பிறந்திருக்கிறார். அங்கு சென்று குழந்தையைப்பற்றி கருத்தாய் ஆராய்ந்து அறியுங்கள். அவரைக் கண்டபின் எனக்கும் வந்து தெரிவியுங்கள், நானும் போய் அவரை வணங்கவேண்டும்".

அவர்களைத் தந்திரமாக அனுப்பிவிட்டு குழந்தையைக் கொன்றுவிடக் காத்திருந்த ஏரோதன் அவர்கள் திரும்பி வராததால் ஏமாந்தவராய் கோபவெறிகொண்டான். ஞானிகள் வந்து போனதும் அப்படிக் குழந்தை பிறந்திருந்தால் ஏரோதன் சிந்தித்தான், கால நேரம் சரியாக அவனுக்குப் புலப்படவில்லை. அதனால் இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொன்றுவிடுங்கள் என உத்தரவிட்டான். தனது அரசையும் ஆட்சியையும் எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்று எண்ணம் கொண்ட அந்தக் கயவன் ஏரோதன். படையினர் சென்றனர் பெற்றெடுத்த உதிரங்கள் பற்றி எரிய கரம் கூப்பித் தொழுது அழுது குளறியும் இரங்காது அரக்கனின் ஆணையை ஏற்று குழந்தைகளை துண்டு துண்டாக வெட்டி எறிந்தார்கள்.

இவை அனைத்தும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்திருக்கிறது. பால் உணவுத் தடையால் பசியின் கொடுமையினால் பரிதவித்து மாண்ட குழந்தைகள் எத்தனை? கொத்துக் குண்டுகளால் சிதறிச் சின்னாபின்னமான சிற்றுடல்கள் எத்தனை? கொடிய இராணுவம் வெட்டிக் குதறிய குழந்தைகள் எத்தனை? கட்டாயக் கருக்கலைப்பால் சிதைந்து போன குழந்தைகள் எத்தனை?சிங்கள ஆட்சியிருக்க மற்றொரு ஆட்சியா? என்ற இனவெறிதானே மீண்டும் ஒரு ‘எரோதவதையை' எமது மண்ணில் நடாத்தியிருக்கிறது. புலம் பெயர்ந்து வந்த நாம் செல்வமும், செழிப்பும் உள்ள நாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது குழந்தைகளுக்கு சுத்தமும், சத்தும் நிறைந்த பல்சுவை உணவுகள் ஊட்டி, பட்டாடைகள் உடுத்தி தங்க ஆபரணங்கள் சூட்டி மகிழ்கிறோம்.

இங்கே எங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்கும் வசதிக்கும் அங்கே எமது மண்ணில் உரிமை கேட்டெழுந்த இளையோர்களின் உயிர் தியாகங்களும் அவர்களுக்கு துணையாய் நின்று இரத்தம் சிந்தி மரித்துப் போன உறவுகளும் என்பதை மறந்து போகிறோமா? யேசு என்ற குழந்தைக்காய் ஏரோதனால் உயிர்ப் பலியான குழந்தைகள் நாற்பதுவரையில் தான் என ஆய்வாளர்கள் கணிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எமது மண்ணில் வெட்டி எறியப்பட்டு, சிதைந்து சின்னாபின்னப்பட்ட குழந்தைகள் எத்தனை?நாலாயிரம் தொடங்கி நாற்பதாயிரம் வரை இருக்கலாம் எதையும் கணக்கிட முடியாமல் தானே சிங்கள ஏரோதன் உலகின் கண்களை மூடிமறைத்து விட்டானே. நாற்பது குழந்தைக்காக யேசுவின் திருச்சபை மார்கழி மாதம் 26ம் திகதியை மாசற்ற குழந்தைகள் தினம் ஆகப் புனிதப்படுத்தி என்றும் மறவாது நினைவுகூர்ந்து வருகிறது.

நாம் எம் தேசத்தின் மாசற்ற குழந்தைகளுக்காக என்ன செய்யப் போகிறோம்? அவர்களை எப்படி நினைவுகூரப் போகிறோம். அன்பு - சமாதானம் - மனிதநேயம் - நீதி - உரிமை அனைத்தையும் மக்களிடமே வலியுறுத்தி வாழ்ந்து காட்டி அநீதிக்கு எதிராக எந்த சமரசத்தையும் ஏற்காது மனிதத்தின் விடுதலைக்காக தன்னுயிரையே தற்கொடையாக்கத் தந்த யேசுவின் பிறப்பை கொண்டாடி மகிழும் உலக நாடுகளிடம் எமது மாசற்ற குழந்தைகளுக்காக நீதி கேட்க வேண்டாமா? யேசுவின் பிறப்பும் - இறப்பும் - உயிர்ப்பும் இவற்றின் அடையாளமான சிலுவையும் எமக்கு கூறிநிற்பது பேதங்கள் அற்ற அன்பான வாழ்வும் நீதிக்காக - உரிமைக்காக குரல் கொடுப்பதும் போராடுவதுமே.யேசுவின் பிறப்பு தினத்தையும் - புதிய ஆண்டையும் மகிழ்வோடு எதிர் கொள்ளும் நாம் எமது மண்ணின் மாசற்ற குழந்தைகளையும் நினைவில் கொள்வோம். எதிர்கால எம் தேசத்தின் குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுப்போம் - கரம் கொடுப்போம் - கரம் குவிப்போம். மீண்டும் - மீண்டும் ‘ஏரோதவதை ‘எமது மண்ணில் நிகழ விடாது மனங்களில் உறுதி கொள்வோம். பிறக்கும் புத்தாண்டு புதிய எழுச்சியோடு எமக்கு ஒளிரட்டும்.

- எழிலன் -

நன்றி:ஈழமுரசு

Comments