கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளுர், மேற்குலக அரசியல் போக்கு!

பெரும்பான்மைத் தமிழ்மக்களின் விருப்பத்திற்கமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதித் தேர்தலில் 'ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்பேசும் மக்களிடம் கோருவதற்கு' முடிவெடுத்திருந்தது. இம்முடிவைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ராஜபக்ச அரசாங்கம் வாக்குறுதிகள், அன்றாடப் பிரச்சினைகளிற்கான அதிரடித் தீர்வுகள் என பல வழிகளில் தமது செயற்பாடுகளை வேகப்படுத்தியது. இது தமிழ்மக்களின் அரசியல் பலமான வாக்குப்பலத்தின் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இலங்கையில் ஆட்சிமாற்றத்தை மேற்குலகமும் விரும்புகின்றது என்பதை குறிப்புணர்த்தும் சில செயற்பாடுகளை அவர்கள் முடுக்கிவிட்டிருப்பதன் மூலம் புரியக்கூடியதாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவால் கிடைக்காமல் போகும், அல்லது எதிராகப் போகும் தமிழ்மக்களின் வாக்குச் சரிவைச் சரிப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் ராஜபக்ச உள்ளார். இதனை எதிர்கொள்ள ராஜபக்சவிற்கு இருப்பது இரண்டு வழிகளே, ஒன்று சிங்களப் பேரினவாதத்தை உசுப்பிவிடுதல், இரண்டு தமிழ்மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய வாக்குறுதிகளை வழங்கி விரைவாக நடைமுறைப்படுத்துதல்.

உயர்பாதுகாப்பு வலயத்தின் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கான அனுமதி, யாழ்ப்பாணத்திற்கான இருபத்திநான்கு மணிநேர பயண அனுமதி, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் போராளிகளில் ஆயிரம் பேரை விடுதலை செய்தல் போன்றன தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சவினால் வழங்கப்பட்ட அண்மைய வாக்குறுதிகள்.

மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளித்தல், தேர்தலை புறக்கணித்தல், ராஜபக்சவை ஆதரித்தல் போன்ற முடிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்காததினால் கிடைத்த (எதிர்வினை அரசியல் அடைவு) பிரதிபலன்களாகவே கருதமுடியும். அத்துடன், இத்தீர்மானம் தமிழ்மக்களின் வாக்குகள் மீதான அரசியல் தீர்மானத்தின் வலிமையை தமிழ்மக்களுக்கு மீண்டும் தெளிவாக்கியிருப்பதுடன், சிங்கள அரசியல் தலைமைகளுக்கு தமிழ்மக்களின் வாக்குவலிமையை நிச்சயம் புரியவைத்திருக்கும்.

இத்தேர்தல் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்துள்ளது என்பது அண்மையில் வழங்கப்பட்ட மன உழைச்சலுக்கான சிகிச்சை சுட்டி நிற்கின்றது. 'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' என்பதைப்போல வெற்றி மமதையில் தமிழ்மக்களை மிலேச்சத்தனமாக கொன்று குவித்து கோரத்தாண்டவம் ஆடிய ராஜபக்ச அவர்களை காலம் தண்டிக்க தொடங்கியுள்ளது. என்றாலும் அத்தண்டனை நியாயமான முறையில் கிடைப்பதற்கு தமிழ்மக்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு மிகவும் அவசியம்.

மேற்குலகத்தின் போக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவைத் தொடர்ந்து அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெதர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அக்கறை காட்ட தொடங்கியுள்ளன.

பிரித்தானியாவின் சனல் - 04 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிக் காட்சி உண்மையானது என சர்வதேச நிபுணர் குழுவைக் கொண்டு பரிசீலித்து உறுதிப்படுத்திய ஜ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் அவர்களின் அறிக்கை ராஜபக்சவின் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதால் அந்த அறிக்கை வெளிவராமல் தடுக்க இலங்கை அரசு பாரிய பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டபோதும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இது ஜனாதிபதி ராஜபக்ச அவர்களுக்கு மேலும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. மற்றும் ஜி.எஸ்.பி - பிளஸ் வரிச்சலுகை நீக்கம் தொடர்பில் பிரித்தானியா உறுதியாக இருப்பதுடன், பிரான்ஸ் நாட்டில் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தனி நீதிமன்றம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நகர்வுகளை வைத்து ஒப்புநோக்கும்போது தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதித் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பான தெளிவைப் பெறலாம் எனத்தோன்றுகின்றது. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் இத்தருணத்தில் சர்வதேச ரீதியாக குறிப்புணர்த்தப்படும் இந்நகர்வுகளிலிருந்து மேற்குலகமும் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றது என்பது வெளிப்படையாகின்றது. அந்த ஆட்சி மாற்றம் எமக்குச் சாதகமாகப் பயன்படத்தப்பட வேண்டும்.

படாதபாடுபடும் ராஜபக்ச

தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த உள்ள இரண்டு வழிகளில் ஒன்றான தமிழ்மக்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்குதல் தொடர்பில், யாழ் விஜயத்தை மேற்கொள்ள முன் ஒருபரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அதில் குறிப்பாக யாழ்குடா நாட்டில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றும் அறிவிப்பை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்து பகிரங்கமாக அறிவிப்பார் என ராஜபக்ச தரப்பால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்திற்கான இருபத்திநான்கு மணிநேர போக்குவரத்துக்கு பாதையைத் திறந்து விட்டார். மற்றும் 745 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளை விடுதலை செய்தார். (விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் தடுப்புமுகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தற்போதைய நிலவரம்)

அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ராஜபக்ச அவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு யாழ்மக்கள் வரவேற்பு கொடுக்காமல் எதிர்ப்பைக் காட்டியதை உணர்ந்தார். இதனால் யாழ் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ்மக்களைக் கவரும் பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய வாக்குறுதிகள் எதனையும் வழங்காது, சிறு சிறு தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிவிட்டுச் சென்றார் ராஜபக்ச அவர்கள். ஏனெனில் தமிழ்மக்களுக்கு என்ன வாக்குறுதி வழங்கினாலும் தனது கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்ற அவநம்பிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதிகளையும் வழங்குவதை தவிர்த்துவிட்டார். மேலும் தமிழ்மக்களுக்கு பெரியளவில் வாக்குறுதிகளை வழங்கவில்லை எனச் சிங்கள மக்களிற்கு தெரியப்படுத்தி, சிங்களப் பெரும்பான்மையினத்தின் பேரினவாதத்தை தூண்டி தனது வெற்றியை உறுதிப்படுத்த ராஜபக்ச அவர்கள் தீர்மானித்தே இவ்வாறு செயற்பட்டார் என கருதத் தோன்றுகின்றது.

பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்வைக்கப்பட்டு ராஜபக்சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கோரிக்கைகளில்; எதுவுமே ராஜபக்ச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மகிந்த சிந்தனை-02' இல் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுடன் உயர்பாதுகாப்பு வலய மீள்குடியேற்றம் உட்பட தான் முன்வைத்த கோரிக்கைகளை ராஜபக்ச அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவே அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனக்கூறி பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றார்.

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரையில் 'பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வரும் சில அமைப்புக்கள் மீண்டுமொரு ஈழப்போராட்த்;திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன' என மகிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். எனவே தமிழ்மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்காது என்ற நிலையில் மீண்டும் ஈழப்போராட்டம் வலுப்பெறும் என்ற கருத்தை விதைத்து சிங்கள மக்களிடம் அச்சத்தையும் பேரினவாத சிந்தனையையும் தூண்டி தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கின்றார். ஏனெனில் ஏற்கனவே கிழக்கில் மக்கள் விடுதலைப்படை என்ற ஒரு அமைப்பை கருத்தியல் அடிப்படையில் தோற்றுவித்து தனது அரசியல் நகர்விற்கு சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டார். ஆனால் இந்தியா பசில் ராஜபக்சவை அழைத்து எச்சரித்ததைத் தொடர்ந்து அக்குறுக்கு வழியினை கிடப்பில் போட்டு விட்டு, மீண்டும் அக்கருத்தை வேறு வசனநடைக்குள்ளால் சொல்ல முற்படுகின்றார். தமிழ் மக்களைக் கவருதல் என்ற வழி சாத்தியமாத சந்தர்பத்தில், பேரினவாதத்தை தூண்டி வாக்குப்பெறுவதில் தீவிரகவனம் செலுத்தப்படுவதானது ராஜபக்ச அவர்களின் அரசியல் வங்குரோத்து தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அவற்றை ஏற்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு சமம் என்று கருதியே ஜனாதிபதி அவற்றை நிராகரித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அரசியல் நடவடிக்கை ஊடாக ஈழத்தை அடைவதற்கான நோக்கத்தைக் கொண்டவை. முப்பது வருடங்களாக பல்லாயிரம் உயிர்களை இழந்து போராடி மீட்ட தாய்நாட்டின் சுதந்திரத்தை அடகு வைத்துத் துரோகி ஆவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை. சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்றது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வேலை' என சிங்களப் பேரினவாதத்தை உசுப்பியுள்ளார். இக்கருத்துருவாக்கமானது ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் சிங்கள போரினவாதத்தை மீண்டும் உசுப்பேற்றி, உணர்ச்சிவசப்படுத்தி, சிங்களமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை மறைத்து ஆட்சியில் அமர முயலும் உத்தியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சர்வதேச நாடுகளும், பல மனித உரிமை அமைப்புக்களும் காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை, மக்களின் சுதந்திர நடமாட்டம், மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயநீக்கம் உட்பட தமிழ்மக்களின் தீர்க்கப்படக்கூடிய பல அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரிக்கைகளை முன்வைத்தன. கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சர்வதேச நாடுகள் அரசியல், பொருளாதார ரீதியாக பல அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கின.

அண்மைக்காலம் வரை எதற்கும் மசிந்து போகாமல் செயற்பட்ட ராஜபக்ச அவர்களின் அரசாங்கம், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் குறிப்பிட்ட அகதிகளை மீள்குடியேற்றியதாகக் காட்டியது. அத்துடன் குறிப்பிட்ட சில முகாம்களைச் சேர்ந்தவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்தல், யாழ்ப்பாண போக்குவரத்து தடையை குறிப்பிட்டளவு நேரம் நீக்குதல் போன்ற சலுகைகளை வழங்கி தமிழ்மக்களின் வாக்குகளை கவரும் செயற்பாடுகளை முன்னெடுத்தது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்குப் பின்னால் மாற்றமடைந்த உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளை வெல்வதற்கு தமிழ்மக்களின் ஆதரவு தேவை என உணர்ந்துள்ளதால், மேலும் பல சலுகைகளை வழங்கி தமிழ்மக்களின் வாக்குகளை பெற கடும்பிரயத்தனத்தை மேற்கொள்கின்றது. அதில் 'கைது செய்யப்பட்ட முன்னால் போராளிகளின் விடுதலை' முதன்மையானதாக அறிவக்கப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்வதைப்பற்றி சிந்திக்காமல், மக்கள் அபிமானத்தைப் பெற்ற விடுதலைப்புலிப் போராளிகளை விடுதலை செய்வதனூடாக தமிழ்மக்களின் மனங்களை கவர்ந்து, உச்சக்கட்ட வாக்குவேட்டையை மேற்கொள்ளலாம் என்பதே இச்சலுகையின் பின்னாலுள்ள நோக்கம் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

தமிழ் மக்களின் சில அடிப்படைப் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பில் சரத்பொன்சேகா அவர்கள் வாக்குறுதிகள் வழங்கியபோது அதை விமர்சித்த ராஜபக்சவின் அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள் தற்போது 'பல்டி' அடித்து தாமே முன்னின்று அவற்றைச் செய்யத் தொடங்கியுள்ளனர். சிலவேளை சரத் பொன்சேகா அவர்கள் தமிழ்மக்களுக்குச் செய்வதாகக் கூறிய சில சலுகைகளைக்கூட ராஜபக்ச அவர்கள் தேர்தலுக்கு முன்செய்து முடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!.

ஆனால் தேர்தல் கால கரிசனைகள் நீண்ட ஆயுள் கொண்டவை அல்ல. தூர நோக்கில், தமிழ்மக்கள் இலங்கையில் தனித்துவமான அரசியல் உரிமைகளுடன் வாழவேண்டும் என்பதை நிலைநிறுத்த தமிழ்மக்களின் பலமாக இருக்கும்; வாக்குகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். மிகப்பெரிய மனிதக்கொலையை நடத்திய இலங்கையின் அதிகார பீடத்தை சர்வதேச 'மனித உரிமை' நிதீமன்றின் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இப்போதைக்கு தமிழ்மக்களை யாராலும் காப்பாற்றமுடியாது.

எனவே இத்தேர்தலில் ராஜபக்ச அவர்களை தோல்வியடைய வைப்பதனூடாக தமிழ்மக்கள் சலுகைகளுக்கு சோரம்போனவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்துவதுடன் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அழிவை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பத்தை மேற்குலகத்திற்கும் வழங்கவதற்கு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதைப்பற்றி சிந்திக்கவேண்டும்.

குறிப்பாக, தமிழ்மக்கள் இந்தமுறை முழுமையாக பங்குகொண்டு அவலத்தையும், அழிவையும், அவமானத்தையும் தந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இது எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.

தமிழ்ப்புத்தாண்டு பிறந்துள்ள நிலையிலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் அகதிகளாக முகாம்களுக்குள் வழியற்று, கையேந்தி, இழிநிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்மக்கள் இப்புதிய ஆண்டில் தமக்கான அரசியல் பாதையை சரியாக தெரிவு செய்வதே அவர்களின் அவலவாழ்வை விடிவுகாலமாக்கும். புதிய ஆண்டு அவல வாழ்வின் தொடர்ச்சியாக இருந்தாலும் தமிழ்மக்கள் தமது அரசியல் செயற்பாட்டினூடாக அவல வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு வாழ்வதற்கான ஏதுநிலைகள் எம்முன் தெளிவாக உள்ளது.

தமிழ்மக்களின் அரசியல் தலைமைகள் தமிழ்மக்களை சரியான வழியில் நகர்த்தி இப்புதிய தமிழ்புத்தாண்டிலாவது நிம்மதியான, அவலமவற்ற, கையேந்தும் நிலையற்ற சமூகமாக, பொருளாதார மேம்பாட்டோடும் அரசியல் உரிமைகளோடும் ஈழத்தமிழ்ச்சமூகம் வாழ தமிழ்த்தேசியத் தலைமைகளும், தாயகமக்களும், புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் ஓரணியில் நின்று செயற்பட வேண்டும்.

அபிஷேகா (abishaka@gmail.com)http://eelampakkam.blogspot.com/

Comments