விடுதலைப்புலிகளின் மீதான தடையே அமைதிப்பேச்சு முறிவடைய காரணம் – பால் நியூமேன்


புலிகள் மீது வெளிநாடுகள் தடை விதித்ததே பேச்சுக்கள் முறிவடைய காரணம்:போல் நியூமன்

சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார்.

இந்த விசாரணையில் கலந்துகொண்டு, நேரிடையாக சாட்சியமளித்தவர்களில் ஒருவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் முனைவர் பால் நியூமேன். சிறிலங்காவிற்குச் சென்று சமூக ஆய்வு மேற்கொண்டவர். அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தில் இவர் அளித்த சாட்சியம் மிக மிக முக்கியமானதாகும்.

சிறிலங்க அரசை போர்‌க் குற்றவாளி என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்றும் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் தனது ஆரம்பக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இக்குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது?

முனைவர் பால் நியூமேன்: போ‌ர் நடந்தபோது மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்க படையினர் கனரக

ஆயுதங்களைக் கொண்டு நடத்திய தாக்குதலை உறுதி செய்யும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வந்த மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. உலகமெங்கும் தடை செய்யப்பட்டுள்ள கிளஸ்டர் பாம்ஸ் என்றழைக்கப்படும் கொத்துக் குண்டுகள், ஒயிட் பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இவைகள் மட்டுமின்றி, தங்களிடன் சிக்கிய தமிழ் இளைஞர்களை சிறிலங்கப் படையினர் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். உண்மையானவைதான் என்று நீருபணமான அந்த ஆதாரமும் அளிக்கப்பட்டது.

இதேபோன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி, கற்பழித்த ஒரு மணி நேர வீடியோவும் இத்தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியைத்தான் ஆங்கில தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பியது. இவைகளின் அடிப்படையிலேயே சிறிலங்க அரசு போர்க் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது.

மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) எவ்வாறு நிரூபிக்கப்பட்டது?

பால் நியூமேன்: திட்டமிட்டப் படுகொலைகள், சித்ரவதை, கற்பழிப்பு, கருவுறச் செய்தல், அழித்தல் (Extermination), விருப்பத்திற்கு எதிராக மக்களை தடுத்து வைத்தல், இடம் பெயரச் செய்தல், மக்களை அழிக்கும் நோக்குடன் உணவு, குடி நீர் அளிக்காமல் திட்டமிட்டு செயல்படுவது ஆகிய நடவடிக்கைகளை மானுடத்திற்கு எதிரான குற்றங்களாக ஐ.நா.வின் பிரகடனம் கூறுகிறது. சிறிலங்க படையினரின் இப்படிப்பட்ட குற்றங்களால் பாதிப்பிற்குள்ளான பல தமிழர்கள் இத்தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்தார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, பல சிங்களவர்களும் சாட்சியமளித்தார்கள். இவர்கள் அனைவரிடமும் இன் கேமரா புரசீடிங்ஸ் என்று கூறப்படும் இரகசிய விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கே சென்று நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இந்த சாட்சிகளில் பலர் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இராணுத்திடம் பிடிபட்டு பிறகு முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள்.

சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றுக் குறித்து மேலும் விசாரணை நடந்த வேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளதே, ஏன்?

பால் நியூமேன்: இனப் படுகொலை என்பது மிகப் பெரிய குற்றச்சாற்று. அது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதாலும், அதில் சிறிலங்க அரசும் தன் நிலையை எடுத்துக் கூற வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாலும், இனப் படுகொலைக் குற்றத்தை உறுதி செய்யாமல் மேலும் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பாயத்தில் சிறிலங்க அரசுத் தரப்பில் யாரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லையா?

பால் நியூமேன்: சிறிலங்கத் தூதர் சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக எந்த அடிப்படையில் சிறிலங்க அரசு தடை செய்தது என்பதை, அதன் சார்பாக, இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய கமாடோர் வாசன் நேர் நின்று சாட்சியமளித்தார்.

போரில் விடுதலைப் புலிகளும் போர் விதிமுறைகளை மீறிய, மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகள் செய்தனர் என்று குற்றம் சாற்றப்பட்டதே, அது குறித்து தீர்ப்பாயத்தின் நிலை என்ன?

பால் நியூமேன்: அது குறித்த தெளிவான தனது நிலையை தீர்ப்பாயம் விளக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் போராளிகள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வாய்ப்பு சிறிலங்க அரசிற்கு உள்ளது. இப்போது 11 ஆயித்திற்கும் அதிகமானவர்கள் (விடுதலைப் புலிகள் என்று அந்நாட்டு அரசால் சந்தேகிக்கப்படுபவர்கள்) சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களின் மனித உரிமை மீறல்களுக்கும், மற்ற குற்றங்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தண்டனை அளிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறிலங்க அரசு செய்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து யார் விசாரிப்பது? எனவேதான், ஒரு இறைமையுடைய அரசான சிறிலங்க அரசு தனது நாட்டு மக்களுக்கு எதிரான போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமைக் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது என்று மக்கள் தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.

மக்கள் தீர்ப்பாயம் அளித்த ஆரம்பக்கட்டத் தீர்ப்பில் (Preliminary Findings) அளித்துள்ள மிக முக்கியமானத் தீர்ப்பு, சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வே அனுசரணையுடன் நடைபெற்றுவந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்குக் காரணம் சர்வதேச சமூகமே – குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமுமே – பொறுப்பாகும் என்று கூறியுள்ளது. எந்த அடிப்படையில் இம்முடிவிற்கு வந்தது தீர்ப்பாயம்?

பால் நியூமேன்: இதற்கான வாதத்தை முன் வைத்தவர் பேராசிரியர் பீட்டர் ஷால்க். புத்தம் உள்ளிட்ட மத பாரம்பரியங்களின் வரலாறு குறித்து ஆயவு செய்துவரும் பேராசிரியர் பீட்டர் ஷால்க், சிறிலங்க அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவோடும், அனுசரணையோடும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் போது, விடுதலைப் புலிகளை பயங்கரவாத அறிவித்து தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியதுடன், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்ததே பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு, இராணுவ நடவடிக்கையை சிறிலங்க அரசு துவக்கியதற்குக் காரணம் என்று கூறினார். விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தப் பிறகே அவர்களுக்கு எதிரான போரில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை சிறிலங்கா எளிதாகப் பெற முடிந்தது என்பதையும் ஷால்க் சுட்டிக்காட்டினார். ஆக, பேச்சுவார்த்தையில் பங்கேற்றுவந்த நிலையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடை செய்ததே, அமைதி பேச்சுவார்த்தை முறிவதற்கும், போர் துவங்கியதற்கும் காரணம் என்பதை மக்கள் தீர்ப்பாயம் ஏற்றது.

இத்தீர்ப்பாயத்தின் முடிவுகள் சட்டப்பூர்வமானவையல்ல. இதை வைத்து என்ன செய்ய முடியும்?

பால் நியூமேன்: இத்தீர்ப்பாயத்திற்கு பொது கருத்தை உருவாக்கும் தீர்ப்பாயம் என்ற பெயரும் உண்டு. அதுவே அதன் நோக்குகமும் ஆகும். இதுநாள்வரை, சிறிலங்க அரசிற்கு எதிரான குற்றச்சாற்றுகள் அனைத்தும் பெயரளவிலேயே இருந்தது. இன்று அது ஆதாரப்பூர்வமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை மனித உரிமை அமைப்புகளும், அறிவு ஜீவிகளும் உலக நாடுகளின் அரசுகளுக்குக் கொண்டு சென்று, சிறிலங்க அரசின் போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா.வை வலியுறுத்துமாறுக் கூற வேண்டும். இந்திய அரசிற்கும் அப்படிப்பட்ட அழுத்தத்தை தர வேண்டு்ம். அதன் மூலம் பன்னாட்டு விசாரணைக்கு வழிவகுக்க முயற்சிக்க வேண்டும்.

நன்றி : வெப்துனியா.கொம்

Comments