வேர்களுக்கு விழுதொன்றின் உள்ளம் நெகிழ்ந்த மடல்!

அன்புறவுகளே!

ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம்.

தமிழீழம். தமிழீழம். தமிழீழமே. அந்த ஒற்றைவார்த்தைக்காக உடமையிழந்து, உதிரம்சொரிந்து, உடலை அழித்து, உள்ளம்நசிந்து, உயிரைப்பிரிந்து போராடியவர்கள் நீங்கள். அந்த உன்னத இலட்சிய வேட்கையை அடிநாதமாகக் கொண்டு வாழ்பவர்களும் நீங்களே! நாங்கள் எத்தனை தடவை வீதிகளில் இறங்கி அடி வாங்கினாலும், உங்கள் தியாகத்திற்கு அது ஈடாகிவிடாது.

அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் அஞ்சாது நீங்கள் வாழும் வாழ்வு தன்னிகரற்றது. சனநாயக நாடொன்றில் எங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. நாங்கள் எதையும் பேசலாம். எதையும் சிந்திக்கலாம். எவரையும் கண்டிக்கலாம். ஆனால் நீங்கள்?

திறந்தவெளிச் சிறையில் வாழ்பவர்கள்.
பேசுவதற்கு உரிமையிழந்து வாழ்பவர்கள்.
சாவை முதுகில் சுமந்தவாறு வாழ்பவர்கள்.
ஆனாலும் என்ன?

நீங்கள் சிந்திக்க மறுக்கவில்லை! விடுதலை என்ற இலட்சியப் பாதையில் இருந்து இம்மியளவும் நீங்கள் விலகவில்லை! விடுதலையே உயிர்மூச்சென்று வாழும் உங்கள்முன் நாம் தலைசாய்த்து நிற்கின்றோம்.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது நாம் கலங்கிப்போனோம். நாள்நெருங்க நெருங்க எமது குலைநடுங்கியது. கதிகலங்கியது. புலிகளின் தவறை நிவர்த்திய செய்யப் போவதாக சம்பந்தர் எக்காளமிட்ட பொழுது துக்கம் எமது தொண்டையை அடைத்தது.

ஆட்சி மாற்றத்திற்காக நீங்கள் ஏங்குவதாக சிலர் நீலிக்கண்ணீர் வடித்தபொழுது எமது இதயம்கலங்கி அழுதது. எல்லோரும் எதிர்பார்த்தார்கள், பேயை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு முனியை ஈழத்தமிழர்கள் ஆட்சியில் அமர்த்தப் போகின்றார்கள் என்று.

ஆனால் நேற்றுடன் அந்தநிலை மாறிவிட்டது.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவு சாதாரணமானதல்ல! அந்நிய ஆக்கிரமிப்பிற்குள், ஆயுத அடக்குமுறைக்குள், அந்நிய தேசத்தின் அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவு அபாரமானது. உங்கள் துணிச்சல் போற்றுதற்குரியது.

இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழமே எமக்கானது என்று நாங்கள் இங்கு வாக்களிக்க, சிங்கள தேசத்துடன் நீங்கள் நல்லிணக்கம் செய்துவிடுவீர்களோ என்று நாம் அஞ்சினோம். வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை என்று நாங்கள் முழங்க, சிறீலங்கா, சிறீலங்கா என்று நீங்கள் கோசமிடுவீர்களோ என்று நாம் அஞ்சினோம். ஆனால்...

எல்லாவற்றையும் உடைத்தெறிந்து புலிகளை இழிவுபடுத்திய சம்பந்தரின் முகத்தில் நீங்கள் கரிபூசியது எமக்கு ஆறுதல் அளிக்கின்றது. பேயும் வேண்டாம், முனியும் வேண்டாம் என்று, ராஜபக்சவையும், பொன்சேகாவையும் நீங்கள் நிராகரித்தது எம்மைத் தலைநிமிர வைத்துள்ளது. சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலை 80 விழுக்காடு தமிழீழ மக்கள் புறக்கணித்தார்கள் என்ற செய்தி பரவிய பொழுது எங்கள் இதயங்களில் பட்டாம்பூச்சி சிறகுவிரித்துப் பறந்தது.

ஆட்சி மாற்றத்தை நீங்கள் விரும்புவது உண்மைதான். ஆனால் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆட்சியை அல்லவா நீங்கள் விரும்புகின்றீர்கள்! அந்தப் பெருந்தலைவனின் வழியில் போராடும் புலிகளுக்காக அல்லவா நீங்கள் வாழ்கின்றீர்கள்!

உங்கள் கனவை நனவாக்குவது எமது கடன். இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதே எமது இலக்கு.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி நாம் வாக்களிப்பது அதற்காகவே. இத்தளத்திலிருந்த முன்னகரும் ஒவ்வொரு அடியும் தமிழீழத் தனியரசை நோக்கியதே. அதற்காகவே. நாம் உயர்த்தும் ஒவ்வொரும் குரல்களும் உங்களுக்கானவை. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் உங்களுக்கானவை. அந்நியனிடம் வாங்கும் ஒவ்வொரு அடிகளும் உங்களுக்கானவை.

உறவுகளே!

தமிழீழத்தைக் கூறுபோடுவதற்கும், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை காற்றில் பறக்க விடுவதற்கும் சில குழுக்கள் முற்படுவது கண்டு நீங்கள் சீற்றம்கொள்வது எமக்குப் புரிகின்றது. இருந்தாலும் ஒன்றை மட்டும் ஐயம் திரிவு இன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எவர் தடம்புரண்டாலும் தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தில் இருந்து நாம் விலகப் போவதில்லை. உங்கள் ஆணையை நாம் நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம். இது மாவீரர்கள் மீது ஆணை.

மீண்டும் சந்திக்கும் வரை...

- சேரமான் -

Comments