பிள்ளை இல்லாமல் தாயா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் சிறீலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

1976ம் ஆண்டு தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டுவந்த தனித் தமிழீழம் என்ற முடிவை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை மறைத்து, விடுதலைப் புலிகளே இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் பிரிவினையைக் கோரினார்கள் என்றரீதியில் பிரச்சாரங்கள் சிறீலங்காவினாலும், அதன்சார்பு சக்திகளினாலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க தமிழ் மக்களின் விருப்பமே தமிழீழம் என்பதை இந்த சர்வதேச நாடுகளுக்கு ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டிய கடப்பாடு மீண்டும் தமிழ் மக்களுக்கு எழுந்தது. தாயக தமிழ் மக்களால் இன்றைய அபாயகரமான, அதனை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அதனை நிரூபிக்க முன்வந்தனர்.

இப்போது நோர்வேயிலும் பிரான்சிலும் கனடாவிலும் நடந்து முடிந்திருக்கும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல் முடிவுகள், சிறீலங்காவின் பிரச்சாரங்களைப் பொய்யாக்கியிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்திய இவர்களால், ஜனநாயக ரீதியில் அந்தந்த நாடுகளின் அரச மட்டத்திலான ஆதரவுகளுடன் நடக்கும் தமிழீழத் தனியரசுக்கான தேர்தல்களுக்கு அவ்வாறான முத்திரையைக் குத்தமுடியவில்லை. எனினும் இந்தத் தேர்தல்களைக் குழப்புவதற்கும், தடுப்பதற்கும் இவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயகத்திற்குப் புறம்பான பகீரதப் பிரயத்தனங்களும் அச்சுறுத்தல்களும் தோல்வி கண்டுவருகின்றன.

இதனால், தமிழர் தரப்பிற்கிடையே உள்ள துரோக குழுக்களை முன்னிறுத்தி இந்தத் தேர்தல்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைளும் பிரச்சாரங்களும் பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு வடிவமாக இந்த மீள் வாக்கெடுப்பென்பது பெரும் வரலாற்று அவமானம் என கட்டுரைகளை வரையப்படுகின்றன. இந்த வாக்கெடுப்பில் சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகள் யாருக்குமே அக்கறை இல்லை என்றும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. யாருக்குமே இது குறித்து அக்கறையில்லையாயின் எதற்காக இந்த தேர்தலைக் குழப்பும் நடவடிக்கையை சிறீலங்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முனைப்புடன் மேற்கொள்கின்றன என்பதற்கான காரணங்களை இவர்களால் விளக்க முடியவில்லை.

ஈழமுரசும், ஊடக இல்லமும் இந்தத் தேர்தலுக்கு ஆதராவாகவும், இலங்கையில் கடந்த காலங்களில் நிகழ்ந்த பல உண்மைகளையும் வெளியிட்டு வருவது சிறீலங்காவினதும் அதன் ஆதரவு சக்தியினதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிகழ்சி நிரலுக்கு பெரும் இடையூறாகியுள்ளதாக அறியவருகின்றது. எனவே, ஊடக கட்டமைப்புகளும், அதில் செயற்படுகின்றவர்களும் அகற்றப்பட வேண்டும் என சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துகின்ற அளவிற்கு நிலைமை சென்றிருக்கின்றது எனும்போது வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீள் வாக்குப் பதிவு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் இவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அது எவ்வளவு தூரம் தடையாக இருக்கின்றது என்பதும் புரியமுடிகின்றது.

‘ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உருவாக்கி கொள்வதற்கு இந்த தேர்தல் நடவடிக்கைகள் முதற்படி. எனவே அதன் வெற்றி என்பது எமது அரசியல் தீர்வுக்கான மிக முக்கிய பாதையாகும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் அதன் வெற்றியின் முக்கியத்துவம் எமக்கு புரியும்? என ஆய்வாளர் அருஸ் அவர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டுடன், நாடுகடந்த அரசு என்ற இன்னொரு வடிவம் முன்னெடுக்கப்படுகின்றது. நாடுகடந்த அரசு தான் சரி, வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிழை என்பது போன்ற கருத்துக்கள் இவர்களால் பரவலாகப் பரப்பப்படுகின்றன.

நாடுகடந்த அரசுக்கான ஆதரவை வழங்குமாறு கோரும் இவர்கள், இலங்கை என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல என்று கூறுகின்றனர். நாடு பிரிக்கும் நோக்கம் இல்லாத இவர்கள், எதற்காக இல்லாத நாட்டிற்கு ஒரு அரசை புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முயல்கின்றனர் என்பதற்கான கேள்விகளுக்கு இன்னும் மக்கள் மத்தியில் விடைகள் முன்வைக்கப்படவில்லை. இது பிள்ளை இல்லாமல் தாயாக வேண்டும் என்ற எண்ணுபவரின் மனநிலையையே காட்டுகின்றது. எமது உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி, தமிழீழத் தனியரசைக் கட்டியமைக்க அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் எனும் மாவீரர்தின உரையை உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இன்றைய தேவையாகின்றது.

ஆசிரியர்-தலையங்கம்

நன்றி:ஈழமுரசு

Comments