நாடு கடந்த அரசாங்கம் (TGTE) ? நம்பலாமா ?

  1. நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் பரப்புரைகளும் பல சந்தேகங்களை ஏற்படுத்திவருகின்றன
  2. புதினப்பலகையிலும் இன்போதமிழிலும் இவர்களின் பரப்புரைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன
  3. வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது நாடுகடந்த அரசிற்கு எதிரானது இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும்
  4. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீள்வக்கெடுப்பின் மீதான எதிர் வினை என்பது இவர்களாலே[ நாடு கடந்த அரசால்] செய்யப்பட்டது

பிள்ளை இல்லாமல் தாயா?

‘ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உருவாக்கி கொள்வதற்கு இந்த தேர்தல் நடவடிக்கைகள் முதற்படி. எனவே அதன் வெற்றி என்பது எமது அரசியல் தீர்வுக்கான மிக முக்கிய பாதையாகும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் அதன் வெற்றியின் முக்கியத்துவம் எமக்கு புரியும்? என ஆய்வாளர் அருஸ் அவர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டுடன், நாடுகடந்த அரசு என்ற இன்னொரு வடிவம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடுகடந்த அரசு தான் , வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிழை என்பது போன்ற கருத்துக்கள் இவர்களால் பரவலாகப் பரப்பப்படுகின்றன.

நாடுகடந்த அரசுக்கான ஆதரவை வழங்குமாறு கோரும் இவர்கள், இலங்கை என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல என்று கூறுகின்றனர். நாடு பிரிக்கும் நோக்கம் இல்லாத இவர்கள், எதற்காக இல்லாத நாட்டிற்கு ஒரு அரசை புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முயல்கின்றனர் என்பதற்கான கேள்விகளுக்கு இன்னும் மக்கள் மத்தியில் விடைகள் முன்வைக்கப்படவில்லை.

இது பிள்ளை இல்லாமல் தாயாக வேண்டும் என்ற எண்ணுபவரின் மனநிலையையே காட்டுகின்றது. எமது உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி, தமிழீழத் தனியரசைக் கட்டியமைக்க அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் எனும் மாவீரர்தின உரையை உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இன்றைய தேவையாகின்றது.

படங்கள் சொல்லும் செய்தி என்ன ?

பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. ஆனால் அதற்காக எமக்கு எதிரான சக்திகள் "போனால் போகட்டும் போடா!" எனத் தமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவார்களா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இன்னும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற அடிப்படையிலேயே சூட்சுமமாக தொழிற்படுகிறார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. அவர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட தமிழ்மக்களை வழிநடாத்த முன்வரும் பிரமுகர்கள் எப்படி தமது நடவடிக்கைகளைத் திருப்புவார்கள் என்பது மிகப்பெரிய சந்தேகத்திற்குரிய கேள்வியாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்றைய அரசியல்வாதிகள் யாராயினும் (TNA, TLTE, GTF, தமிழ்ப்பேரவை) தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஐயம் திரிபு இல்லாது தமிழ் மக்களின் முன் சமர்பித்தே ஆக வேண்டும். தமிழீழ கோரிக்கைக்கு குறைந்த எதையும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்கும் நிலையில் தமிழ் மக்கள் இனிமேலும் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சில வெளிநாட்டுச் சக்திகள் தமிழீழ கோரிக்கையை இழுத்தடிக்கும் நோக்குடன், வேறு அரைகுறை தீர்மானங்களைத் திணித்து தமிழ் மக்களின் நிலைமையை "சமாளிப்பதற்கு" (ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட காரணத்தால்) இது ஏற்ற தருணம் என்று எண்ணலாம்.

நாடு கடந்த அரசாங்கத்தை (TGTE) அமைக்க முற்படும் குழுவினர் மேல்மட்டத்தில் நிச்சயமாக பல நல்லவிடயங்களை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர் என்பதனை ஒரளவிற்கு ஏற்க வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கீழ் தமிழீழக் கொள்கையை ஆதரிப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு படியாகும்.

முரண்பாடு
நாடுகடந்த அரசு தான் , வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிழை என்பது போன்ற கருத்துக்கள் இவர்களால் பரவலாகப் பரப்பப்படுகின்றன.

நாடு கடந்த அரசாங்கம் வெளியிட்ட 2010 ஜனவரி 14-ம் தேதி அறிக்கையில் 6.3.1-ஐ நோக்கின் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது போன்று அமைந்தது. "தமிழீழம் என்ற ஒரு கொள்கையில் தமிழரது எல்லா அரசியல் அபிலாசைகளும் அடங்கும்போது, வெவ்வேறு சொற்பதங்களின் மூலம் TGTE தமிழ் மக்களை திசை திருப்ப முயல்கின்றதோ என ஓர் ஐயப்பாடு நிலவலாம்.

காரணம், TGTE இதயசுத்தியுடன் இவ்விடயத்தில் ஈடுபட்டாலும், வருங்கால அங்கத்தினர்கள் இத்தகைய சொற்பதங்களை திரிவுபடுத்துவதற்கு வாய்ப்பு உண்டு. அடுத்தப்படியாக, சர்வதேச நாடுகள் எமது தமிழீழம் பற்றிய கொள்கைகளை எம்மிடம் இருந்து பின்பற்ற வேண்டுமே ஒழிய அதற்கு எதிராக, அவர்களைத் திருப்தி படுத்தும் நோக்கத்துடன் நாம் ஒரு அமைப்பை உண்டாக்குவது உகந்தது அல்ல.

இதே போல, 6.4-ல் கூறியபடி வட-கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் விடயங்களில் (சுயாட்சியையும் இறைமையையும் தவிர்த்து) அங்கிருக்கும் தலைமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. எனினும், அங்கிருக்கும் தமிழர்களின் தலைமை - தமிழீழ அரசு அமைக்கப்படாத இடத்து, இலங்கை அரசின் அடிவருடிகளாகவே செயற்பட நேரிடும்.

"சுயாட்சி" என சொல்லளவில் எது அமைக்கப்பட்டாலும், சிங்கள பௌத்த மத்திய அரசின் ஆதிக்கம் இருக்கும்வரை வடகிழக்கு மாகாணங்களில் தமிழரின் தலைமையால் தமிழர்க்குச் சாதகமான எதையும் சுயேட்சையாக செய்யும் வாய்ப்பு இருக்கமுடியாது என்பது சரித்திரரீதியாக நாம் கண்ட அனுபவமாகும்.

6.5-ல் "தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டால்......." என மொழியப்படுகிறது. இக்கூற்று, தமிழீழம் அமைக்கப்படுமா? இல்லையா? என்ற ஐயப்பாட்டை தமிழ் மக்களிடையே கொண்டுவரலாம். தமிழீழமே குறிக்கோள் என இயங்கப்போகும் ஒரு அமைப்பு இத்தகைய ஐயப்பாட்டுடன் அணுகுவது, தமிழரின் அரசியல் நம்பிக்கையையும், அவர்கள் இத்தனை காலமும் நடத்திய போராட்டத்தையும் கொச்சைபடுத்தலாம்.

6.6-ல் வெளிநாட்டுக் கொள்கை அழகாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழம் அமைத்தாலன்றி அவர்களுக்கு மற்றைய அரசாங்கங்களின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்குபற்றும் திராணி இருக்கமுடியாது. எனவே, தமிழீழம் மலரும் முன் இதைப்பற்றிக் குறிப்பிடுவது, பொரிமாத் தோண்டி பானை உடைத்த கதை ஆகிவிடலாம்.

TGTE அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்டும் முன்னரே அவர்கள் என்ன அடிப்படையில் தெரியப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். தமிழீழக் கொள்கையிலிருந்து, எள்ளளவும் விலகும்போது, அவர்களின் அங்கத்துவ பதவி வெற்றிடமாகும் என யாப்பில் நிறுவப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் இலக்கணத்தில் ஈழம் என்னும் சொல்லைப்போல துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சொல்லைக் காண்பதரிது. உதாரணமாக TELO - தமிழீழ விடுதலை இயக்கம், PLOT - தமிழீழ மக்களின் விடுதலை இயக்கம், EPRLF - ஈழமக்களின் விடுதலை முன்னனி, EPDP - ஈழமக்களின் ஜனநாயக கட்சி. மேற்கூறியவற்றுடன் (TGTE) தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் எனும் சொற்பதத்தை ஒப்பிட்டு நோக்கின் இந்த அமைப்பும் மேற்கூறியவற்றைப்போல் ஒரு துரோகக் கும்பலாகுமோ என்று சிலர் பயப்படலாம்.

இப்பயத்தைப் போக்குதல் TGTEன் தலையாய கடமையாகும். தமிழர்கள், "தமிழீழம்" என்ற சொல்லின் கீழ் அடைந்த ஏமாற்றமும் துரோகத்தனமும் எல்லோரும் அறிந்ததே. எனவே இத்தகைய பயங்களைப் போக்கி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறலாம் எனும் கனவு எவருக்கும் இருக்குமானால், தமிழீழம் ஒன்று மட்டும்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என ஆணித்தரமாக வெளிக்கொணர வேண்டும்.

TGTE, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கொடுக்கும் ஆதரவுடன் நின்றுவிடாமல் இன்னும் நம்பிக்கையூட்டும் வகையில் இத்திசையில் நகர வேண்டும். சுயாட்சியை தற்போதைய சூழ்நிலையில் ஏற்று, அதன்பின் படிப்படியாக தமிழீழத்தை அடையலாம் என்ற தோரனையில் TGTE முன்வரக்கூடும். ஆனால் அப்படியொரு சூதாட்டத்தின் விளைவுகளுக்கு தமிழ் மக்கள் ஆயத்தமா? காரணம், சிங்கள பௌத்த ஆதிக்க வெறிப் பிடித்த எந்த இலங்கை அரசாங்கமும் மகாவம்சத்தின் போதனையை பின்பற்றுவதே ஒழிய TGTEன் போதனைகளை கேட்கும் நிலமையில் இல்லை!

மகாபாரதத்தில் துரியோதனன் கூறியதுபோல் "ஈ இருக்கும் இடமெனினும் அவர்க்கு அரசினிக் கொடேன்!" எனும் கூற்றை நாம் மறந்துவிடக்கூடாது. தற்போதைய அரசியல் வீச்சை உலக அளவிலோ அல்லது தமிழ் மக்களின் கண்ணோட்டத்திலோ நாம் தவறவிடின், காலம் செல்லச் செல்ல இவ்வீச்சு மழுங்கலாம். "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" என ஒரு பழமொழி உண்டு.

எனவே காலங் கடந்த பின் தமிழீழம் என்பது வெறும் கானல்நீர் ஆக மாறலாம். TGTE தமது கொள்கைகளை அரசியல் உலகிற்கு எடுத்துக் கூறுவதற்கேற்ற உலகிலேயே மிகப்பெரிய பலம் நிறைந்த ஒரு அமைப்பு என (தொடங்குவதற்கு முதலே!) கூறுகிறது. இத்தகைய அபார நம்பிக்கையை நாம் வரவேற்றாலும், தற்புகழ்ச்சியிலும் பார்க்க இத்தகைய கோட்பாட்டை வேறு யாரும் கூறினால் கூடிய மகிழ்ச்சியை தந்திருக்கும்.

TGTEன் அங்கத்தவர்கள் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுவது வரவேற்கப்படுவது ஒன்று. ஆனால், அதைவிட "Formation Commiittee" என இன்னொரு செயற்குழு (மக்களின் பங்களிப்பின்றி) அமைக்கப்படும் என அறிகிறோம்.

ஜனநாயக முறையில் இயங்கும் ஓரு இயக்கத்திற்கு வேறு வகையாக செயற்குழு அங்கத்தினர்களை நியமிப்பதை மக்கள் ஐயத்துடன் நோக்கலாம்.

தொடரும்.

- தமிழ்மாறன்.செ


Comments