டிசம்பர் 2009 இல் அமெரிக்க செனேற் சபையின் வெளிவிவகாரக் குழு வெளியிட்ட அறிக்கை பற்றிய ஆய்வுரை

தேசிய நலனின் உள்ளடக்கமான வெளிவிவகாரக் கொள்கையில் அடிப்படை மாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் இருத்தல் வேண்டும். முன்னாள் சனாதிபதி வேட்பாளரும், ஆளும் சனாதிபதிக் கட்சியின் முன்னணி உறுப்பினரும். அமெரிக்க செனேற் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவருமான ஜோன் கெரியின் பெயரில் வெளிவந்த சிறிலங்கா தொடர்பான அறிக்கைக்குப் பெருமளவு முக்கியத்துவம் உண்டு. தமிழர்களாகிய நாம் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் ஒரு கனதியான மாற்றம் ஏற்படப் போவதை இந்த அறிக்கையில் இருந்து புரிந்து கொள்வது அவசியம். மாற்றம் என்ற தாரக மந்திரத்தை ஆரம்பத்தில் கொண்டிருந்த ஒபாமா நிர்வாகம் அதை நிராகரித்து விட்டு முந்திய நிர்வாகம் கொண்டிருந்த வெளிவிவகாரக் கொள்கைக்குத் திரும்புவதற்கான சமிக்ஞையாக ஜோன் கெரி அறிக்கையைப் புரிந்துகொண்டால் வரப்போகும் அதிர்ச்சித் திருப்பங்களின் தாக்கத்தில் இருந்து விலகிக்கொள்ள முடியும்.

காலம் காலமாகத் தொடரும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இரு முக்கிய போக்குகளை நோக்கர்கள் அவதானித்துள்ளனர். உன்னதமான மனித நேய இலட்சியங்களை வெளிப்படுத்தும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை அதேசமயத்தில் உலக ஆதிக்கத்திற்கான வல்லாதிக்கக் குறிக்கோளையும் வெளிப்படுத்தி வருகிறது. இந்த இரட்டைப் போக்கிலிருந்து அமெரிக்காவினால் விலகிக் கொள்ள முடியவில்லைப் போலும், இரு தடவை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய செஸ்ரர் போல்ஸ் அவர்களுடைய பொது வாழ்வில் மேற்கூறிய உன்னத இலட்சியங்களும் உலக ஆதிக்க வல்லாதிக்கமும் இரண்டறக் கலந்திருந்தன. போல்சின் காலம் பனிப்போரின் உச்சக்கட்டம். இருப்பினும் அவர் அமெரிக்க இலட்சியங்களை வெளிப்படையாகப் பேசி வந்தார். போல்ஸ் காலத்தில் அமெரிக்க சனாதிபதியாகப் பதவி வகித்த ஜோன் கெனடியும் விதிவிலக்கல்ல. அவர் அமெரிக்க அரசியலில் ஒரு மறுமலர்ச்சிக்கான கட்டியம் கூறினார். ஆனால் அவர் வியற்நாம் போரை விரிவுப் படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார். படுதோல்வியில் முடிந்த கியூபா மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இப்போது ஒபாமாவும் கெனடியின் பாதையில் செல்வதற்கு தயாராகிவிட்டாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

டிசம்பர் 07 ஆம் திகதியிடப் பட்ட ஜோன் கெரி அறிக்கையின் முழுத்தலைப்பு “சிறிலங்கா போர் முடிந்தபின் அமெரிக்க அணுகுமுறையை மீளமைத்தல்” என்பதாகும். பூடகமாகத் தெரிவிக்கப் பட்ட இந்தத் தலைப்பிள் உள்ளர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்வது எமது முக்கிய நோக்கம். சிறிலங்காவின் புவிசார்ந்த அரசியலில் அமைவிட முக்கியத்துவம் அண்மைக் காலமாக உயர்ந்துள்ளதை இந்த அறிக்கை தனது முக்கிய செய்தியாகக் குறிப்பிடுகின்றது. இதை ஒட்டிய செய்தியாக சிறிலங்காவின் நெருக்கமான நட்புறவை இழப்பதற்கு அமெரிக்காவுக்குக் கட்டுப்படியாகது என்றும் சொல்லப்படுகின்றது. சிறிலங்காவை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்ற தகவலும் அறிக்கை மூலம் கிடைக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் சனாதிபதி ராசபக்ச அரசும் படைகளும் போரை நடத்திய விதத்தையும் அவை போரின் போது நடத்திய மனித உரிமை மீறல்களையும், புரிந்த போரியல் குற்றங்களையும் கண்டித்த போது சிறிலங்கா அரசு சீனா, ஈரான், லிபியா, பர்மா போன்ற நாடுகளுடன் நெருக்க உறவைப் பேணியதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது போன்ற அறிக்கையில் ஓரளவு நேர்மையையும் நாணயத்தையும் எதிர்பார்ப்பது இயற்கை. அமெரிக்காவின் நட்பு நாடுகளான இந்தியாவும் பாக்கிஸ்தானும் ராசபக்சாவின் தமிழர்களுக்கு எதிரான போருக்கு வழங்கிய ஆயுத, அரசியல் மற்றும் இராசதந்திர உதவிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்ற முக்கிய வழங்கல்கள் பற்றிய செய்தியை குறிப்பிடாமல் விட்ட அறிக்கை தமிழர் தரப்பிற்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. தடுப்பு முகாம்களில் நெருக்கி அடைக்கப் பட்ட பொதுமக்களை விரைவில் விடுவிப்பதற்கு இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் அளித்ததாக கூறும் அறிக்கை போருக்கு இந்திய மத்திய அரசு வழங்கிய அனுசரணை பற்றிக் குறிப்பிடாமல் விட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. சிறிலங்கா நடத்திய போர் வெற்றி அடைவதற்கும் புலிகள் தோற்கடிக்கப் படுவதற்கும் பின்னால் இருந்து செயற்பட்டது இந்தியா தான். போர் முடிவடைந்தபின் இது இந்தியாவின் போர் என்று ராசபக்ச அரசு குறிப்பிட்டுள்ளது. பாரியளவு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தனது இராணுவ ஆலோசகர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் சிறிலங்காவிற்குள் தள்ளியுள்ளது. தமிழ் நாட்டிலும் உலக மட்டத்திலும் சிறிலங்காவுக்கு எதிரான குரல் எழும்பாமல் தனது இராசதந்திர வீச்சு மூலம் இந்தியா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஜோன் கெரி அறிக்கையின் முக்கிய நட்சத்திரச் செய்தி பின் வருமாறு. சிறிலங்கா விவகாரத்தில் ஒபாமா நிர்வாகம் குறுகிய கால மனித உரிமை மற்றும் மனிதநேயக் கரிசனைகளில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் புவிசார் அரசியல் அமைவிட நோக்கங்களில் விரிவான கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது. நெருக்கமான பொருளாதார, இராணுவ பாதுகாப்பு மேம்பாட்டுத்திட்ட உதவிகளை சிறிலங்காவிக்கு அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது. போரின் முடிவுக்குப் பின் புதிய அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களுக்குப் பொருத்தமான சிறிலங்கா தொடர்பான வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அறிக்கை, இதன் அர்த்தம் மனிதநேய விவகாரங்களைக் கைவிடுதல் என்றல்ல என்று கூறுகிறது எதிர் வரும் காலத்தில் மனித நேய விவகாரம் மாத்திரம் அமெரிக்காவின் ஒற்றைக் கரிசனையாக இருக்கக் கூடாது என்று அது இடித்துக் கூறுகிறது.

அமெரிக்க அரசு சிறிலங்கா அரசுக்கு நேரடி போர் உதவிகளை வழங்காமல் விட்டது ஓரளவுக்கு உண்மை என்றாலும் அதன் நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேயில் செக் குடியரசு போன்றவை அத்தகைய உதவிகளை வழங்கிய போது அமெரிக்கா தடுப்பு நடவடிக்ககை எடுக்காமல் விலகியுள்ளது. மனித நேயக் கரிசனைகளில் மாத்திரம் போர்க் காலத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தியது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பான செய்தி. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் போன்ற தடை செய்யப் பட்ட படைக்கலங்கள் பயன் படுத்தப்பட்ட போது மேற்குலகம் வெற்று அறிக்கைகளை மாத்திரம் விடுத்தவாறு மௌனம் சாதித்தது. இதைச் சிறிலங்கா நடத்திய போருக்கு வழங்கப்பட்ட மறைமுக ஆதரவு என்று கணிப்பிட வேண்டும். ஐநா பாதுகாப்புச் சபையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனது வெட்டு வாக்கு மூலம் சீனா செயலிழக்கச் செய்;துவிட்டதாக ஜோன் கெரி அறிக்கை கூறுகின்றது. ஐ.நாவின் ஒப்புதல் இன்றி அமெரிக்கா தலைமையிலான நேற்ரோ அமைப்பு பொஸ்னியா விவகாரத்தில் படை நடவடிக்கை மேற்கொண்டுள்ள தோடு கொசோவோ என்ற புதிய நாடு பிறப்பதற்கும் ஆதரவு வழங்கியுள்ளது. தனது தேதிய நலன் என்று வந்து விட்டால் எந்த நாடும் அத்து மீறல்களைச் செய்யத் தயங்கமாட்டாது என்பதற்கு இது சிறந்த உதாரணம். சிறிலங்கா போர் நடந்த காலத்தில் ஐநா செயலாளர் நாயகம் பான்கீமூன் போரைத் தடுப்பதற்குப் பதிலாக அதிபர் மகிந்த ராஜபக்சாவின் குடும்ப நண்பர் என்ற காரணத்திற்காக அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது பற்றிய ஆய்வை மேற்கொள்வது அவசியமாகும்.

போர்க் காலத்தில் உதவி வழங்காமல் பின்னின்ற காரணத்தால் அமெரிக்கா – சிறிலங்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை கெரி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்து மாகடலில் மாறி வரும் சூழல், அதன் கடற் பாதைகளில் சிறிலங்காவின் கேந்திர அமைவிடம் காரணமாக எழுந்த முக்கியத்துவம் விரிசலை அகற்றி நெருக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அத்தியாவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. மேற்கு நாடுகள் விதிக்கும் நிபந்தனைகள் இல்லாமல் பல மில்லியன் பெறுமதியான இராணுவ மற்றும் போர் உபகர்ணக் கடன்கள், உட்கட்டமைப்புக் கடன்கள், துறைமுக விரிவாக்கக் கடன்கள் போன்றவற்றைச் சீனா வழங்குவதை அறிக்கை மூலம் காணமுடிகிறது. அம்பாந்தோட்டையில் ஒரு ஆழ்கடல் துறை முகத்தைக் கட்டுவதற்கு ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் சீனா சிறிலங்காவுடன் 2007இல் செய்து கொண்ட நிகழ்ச்சி அமெரிக்காவிலும் அதன் நட்பு நாடான இந்தியாவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 2008 இல் சீனா ஒரு பில்லியன் டாலர் கடனுதவியை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. 2009 இல் கொழும்புத் துறை முகத்தில் இருந்து 34 மைல் தொலைவிலுள்ள மீரிகம என்ற பிரதேசத்தில் ஒரு பிரத்தியேக பொருளாதார வலயத்தை சிறிலங்கா சீனாவிற்கு வழங்கியுள்ளது. சீனப் பிரசன்னம் அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் மேற்கில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் கரையோரத்தில் குவதார் என்ற பெயர் பெற்ற ஆழ்கடல் துறைமுகத்தைச் சீனா அமைத்துள்ளது. அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகளை குவதாரில் இருந்து கண்காணிக்க முடியும். சிறிலங்காவைத் தனது பாதுகாப்பு ஒழுங்கிற்குள் கொண்டு வருவதோடு சீனப் பிரசன்னத்தை வெளியேற்றுவது இந்தியாவின் நோக்கமாக இருக்கிறது.

வெளிப்படையாகப் பிரகடனம் செய்யாமல் இந்து மாகடலில் வலுவாகத் காலூன்றுவது சீன வெளியுறவுக் கொள்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் இதற்காக சீனா பல இந்து மாகடல் சார்ந்த கரையோர நாடுகளுடன் நெருக்கமான நட்புறவை உருவாக்கியுள்ளது அமெரிக்கா, சீனா, இந்தியாவின் எதிரும் புதிருமான தேசிய நலன்களில் முரண்பாட்டுக் களமாக சிறிலங்கா இடம் பெறுகிறது. இரண்டாம் பனிப்போரின் விளை நிலமாக சிறிலங்கா இடம் பெறும் வாய்ப்பு இருக்கிறது இந்த முரண்பாடுகளை நன்கு உணர்ந்த சிறிலங்கா அதற்கு அமைவாகத் தனது இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் சிறிலங்காவிற்கு எத்தகைய இனிப்புகளை வழங்கினாலும் சீனாவை அகற்றுவது அல்லது ஒடுக்குவது நீண்ட கால அடிப்படையில் கூட இயலாதகாரியம் என்று துணிந்து கூற முடியும்.

தமிழர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல் சிங்களவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு தீவு முழுவதையும் உள்ளடக்கிய உதவி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை அமெரிக்கா செயற்படுத்தவேண்டும் என்று பரிந்துரை செய்யும் அறிக்கை சிறிலங்கா மீது இதமான அழுத்தம் பிரயோகிப்பது மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் அதிகாரப்பகிர்வை அரசியல் சீர்திருத்தத்தில் உள்ளடக்கி நிரந்தர அமைதியை சிறிலங்காவில் ஏற்படுத்தும் கைக்காரியத்தை நிகழ்த்த அமெரிக்காவினால் முடியும் என்று இந்த அறிக்கை கூறுவதை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் சாசனம் பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் முதலிடம் வழங்குகிறது. எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற அதிகாரங்கள் பிற அரசியல் கட்டமைப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கப் படமாட்டாது என்று அதே சாசனம் கூறுகின்றது. கொடுத்த அற்ப சொற்ப அதிகாரங்களை மீளப் பெறுவதுதான் சிறிலங்கா அரசியல் வரலாறாக இருக்கிறது. சிறிலங்காவின் முதலாவது அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கு வழங்கிய உரிமைகள் மீளப் பெறப்பட்டுள்ளன கடந்த 60 வருட காலமாக வழங்காத அதிகாரங்களை இனியா சிங்களவர்கள் தமிழர்களுக்கு வழங்கப்போகிறார்கள்? அமெரிக்க அரசு சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

சிங்களச் சார்பு நீதி மன்றங்கள் மூலம் தமிழர்களுடைய உரிமைகளைப் பறிப்பது சிறிலங்கா நடை முறை. 13 ஆம் திருத்தம் ஏற்படுத்திய வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றத்தின் மூலம் பிரித்தார்கள். மத்தியட்சர் நோர்வே சுனாமி நிதியைப் பங்கீடு செய்வதற்காக ஏற்படுத்திய பீ-ரொம்ஸ் நிர்வாகக் கட்டமைப்பை நீதி மன்றம் மூலம் சிங்கள ஆளும் வர்க்கம் இல்லா தொழித்தது. சிறிலங்கா நீதி மன்றங்களில் தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கிளிநொச்சியில் சிங்களக் குடியேற்றம் நடக்கப் போவதாக கதை அடிபடுவதாக கெரி அறிக்கை கூறுகிறது. சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டு வெப்ப வலய மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழர்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை அரசு அமைத்து வருகிறது. கிழக்கிலும் வடக்கிலும் மத்தியிலும் குடியேற்றம் தொடர்ச்சியாக இன்றும் நடை பெறுகிறது. சிங்கள தமிழ் முரண்பாடுகளுக்கு நிலம் தான் அடிப்டைக் காரணம் ஒட்டு வேலைச் சமரசங்களும் பூச்சு வேலைகளும் நிலையான அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை. போரின் முடிவு அமைதிக்கு வழி காட்டும் என்ற அறிக்கையின் கூற்றை ஏற்க முடியவில்லை. இந்து மாகடல் ஆதிக்கத்திற்காக சிறிலங்காவில் கால் ஊன்றும் ஆதங்கம் அமெரிக்க செனேற் சபை அறிக்கையின் தொனிப் பொருளாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் அது தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் என்றும் எதிர்பார்ப்பது பேதமையாகும்

– வீமன்-

Comments