சுதந்திரத் தனி தமிழீழம் பற்றிய வாக்கெடுப்பு – 99.33 % ஆம் எனப் பதில்”: தமிழ் தேசிய சபை நன்றி தெரிவிப்பு


பெரிய பிரித்தானியாவில், ஒர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தவும் அத்துடன் பெரிய பிரித்தானியாவில் அரசியல், இராசதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய சபை அமைக்கப்பட்டது. த.தே.சபை நடுவராக கடமையாற்றிய இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முயற்சியை வெற்றியுடன் நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் த.தே.சபை தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசிய சபை

ஊடக அறிக்கை

“சுதந்திரத் தனி தமிழீழம் பற்றிய வாக்கெடுப்பு – 99.33 மூ ஆம் எனப் பதில்”

1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சரித்திர முக்கியத்துவம் பெற்ற, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பெரிய பிரித்தானியாவில், ஒர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தவும் அத்துடன் பெரியபிரித்தானியாவில் அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய சபை அமைக்கப்பட்டது. இத்தீர்மானமானது இலங்கைத் தீவில் அமைந்திருக்கும்; வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஓர் சுதந்திர இறையாண்மையுள்ள அரசு அமைக்கப்பட வேண்டும் என 1977-ல் நடைபெற்ற பொதுதேர்தலில் தமிழ் மக்களால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. த.தே.ச ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வேறுபல தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்துவதில் ஓர்

பாரபட்சமற்ற நடுவராகக் கடமையாற்றியது. இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முயற்சியை வெற்றியுடன் நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் த.தே.ச தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

தமிழ் மக்களின் விருப்பத்தையும், குறிக்கோளையும் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்த வேண்டிய தேவைகளில் இம்மீளுறுதிப்படுத்தும் திட்டமும்; ஒன்றாகும். புலம்பெயர் நாட்டு மக்களிடையே நடாத்தப்படுவதால், அது வெற்றிகரமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடாத்தப்பட வேண்டிய கடப்பாடொன்றுண்டு. மேலதிகமான வெற்றி மூலந்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை செய்து, சர்வதேச சமூகத்தின் சம்மதத்தைப் பெற முடியும். அப்படிப்பட்ட ஆணையானது, சர்வதேச சமூகத்தின் போதிய கவனயீர்ப்புக்கு உள்ளாவதால், எமது விடயங்களில் அவர்கள் காட்டும் அணுகுமுறையில் கணிசமான மாற்றங்களை உண்டு பண்ணத் தேவையான அழுத்தங்களை உண்டாக்கும்.

1976இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில், வடக்கும் கிழக்கும் இணைந்த சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனி தமிழீழ அரசு உருவாகவேண்டும் என்பதை ஏற்பார்களா என வாக்காளர்கள் கேட்கப்பட்டார்கள். ஜனவரி 31ந் திகதி ஞாயிறு அன்று வாக்கெடுப்பு முடிவில், தன்னார்வத்துடன் 64,692 தமிழ் மக்கள் இக்கருத்துக் கணிப்பிற்கு வாக்களிக்க வந்திருந்தார்கள் என்பதை அறிந்தோம். அவற்றில் 64,256 (99.33மூ) சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழத்திற்கு ஆதரவாகவும், 185 (0.29மூ) எதிராகவும் வாக்களித்தனர். 251 (0.39மூ) வாக்குகள் செல்லுபடியற்றவையாகின. இலண்டனிலும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மாநகரங்களிலும் மொத்தமாக 65 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தீர்ப்பு இப்போது தெளிவாக உள்ளது. வாக்கெடுப் பு நிலையங்களில் மக்களின் உணர்ச்சி வெள்ளம் அலைபாய்ந்ததை அவதானிக்க முடிந்தது. 2010, ஜனவரி 31-ந்தேதி இலண்டனில் உள்ள பிரபல பார்க் லேன் ஓட்டலில் நடைபெற்ற இறுதி வாக்கெண்ணும் நிகழ்வு மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தில், முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கெடுத்ததுடன் ஈழப்போராட்டத்திற்கு பேராதரவு அளித்த வாக்கெடுப்பின் முடிவுகளை மேலும் கொண்டு செல்வதற்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக உறுதி பூண்டனர். இந்நிகழ்ச்சியில், பங்குபற்றி சொற்பொழிவாற்றிய பிரபலங்களின் விவரங்கள் பின்வருமாறு:

Hugh Charlton மனித உரிமைச் சட்டவாளர் CAMPAC அங்கத்தினர்

Barry Gardner பாராளுமன்ற உறுப்பினர் (Brent North)

Mike Griffiths தொழிற்சங்க செயற்பாட்டாளர், தொழிற்சங்கவாதி

Shiobhan Mc Donagh பாராளுமன்ற உறுப்பினர் (Mitcham & Morden)

Raj Boodhoo சட்டத்தரணி சர்வதேச மன்ற செயற்பாட்டாளர்

Andrew Charalambous Edmenton Conservative வேட்பாளர்

Prof. Dheeran தமிழக அரசியல் தலைவர்

Joan Ryan பாராளுமன்ற உறுப்பினர் (Enfield North)

Andrew Pelling சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் (Central Croydon)

Jan Jananayagam ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் அபேட்சகர்

இவர்கள் அனைவரும் எமது நன்றிக்கு உரியவர்கள்.

பிரித்தானிய தமிழர்கள், 99 % + ஆதரவாக வாக்களித்த நார்வே, கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஹாலந்து ஆகிய நாட்டில் வசிக்கும் தமது உறவுகளுடன் தமிழீழந்தான் தமது முடிவு என எடுத்துரைத்த நிலையில், த.தே.ச பிரித்தானிய அரசையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா. சபையையும் இவ்வாக்கெடுப்பின் அடிப்படையில், இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களிடமும் ஐ.நா மேற்பார்வையின் கீழ் ஓர் கருத்துக்கணிப்பை நடாத்தவேண்டும் எனக் கோரும்.

1999-ல் இதே போல் நடைபெற்ற ஒர் கருத்துக்கணிப்பினால், கிழக்குத் திமோரின் பிரச்சனையும் அதன்பின் கொசோவோவினதும், மோன்டிநீக்ரோவினதும் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன. வேறுபட்ட இனங்களினிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஜனநாயக வழியில் நடாத்தப்படும் கருத்துக்கணிப்பே ஒரு நீதியானதும், நாகரீகமானதுமான வழி ஆகையால், நவநாகரீக உலகத்தின் இந்நடைமுறையை இலங்கையும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை நிலைநாட்டும் இந்த சரித்திர பூர்வமான நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் தோளோடு தோள் நின்று பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழர் இளையோர் அமைப்பு, தமிழீழ செயற்பாட்டாளர்கள், நாடுகடந்த அரசாங்கத்தின் ஐ. இரா செயற்குழுவினர் ஆகியோரை அவர்களுடைய கடின உழைப்புக்கும் ஒன்று சேர்ந்த இணைப்புக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவிக்கிறோம்.

அடிமட்டத்திலிருந்து இயங்கும் அமைப்புகளுக்கும், சமூகத் தொண்டர்களுக்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் இந்தப் பெருமுயற்சியை வெற்றியீட்ட முன்வந்த தனிநபர்களுக்கும் அவர்களின் பங்களிப்பிற்குக் கடமைப்பட்டுள்ளோம். எமது ஜனநாயக வழிமுறையில் நடாத்தப்பட்ட இம்முயற்சியில் ஆர்வமெடுத்து அதன் பெறுபேறுகளை வெளிக்கொணர உதவிய ஊடகங்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக.

எமது வாக்கெடுப்பிற்கு ஐயந்திரிபற்ற நம்பகத்தன்மையையும், நடுநிலைமையையும் ஒரு முன்னுதாரணமாக அளிக்கக் கூடிய வகையில் தங்களுடைய தாராள மனப்பான்மையுடனும், பொதுநல ஆர்வத்துடனும் மேற்பார்வை செய்து பங்குபற்றிய எமது செயற்குழு அங்கத்தினர்க்கும், பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தொண்டர்களுக்கும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு மேற்பார்வையாளர்களுக்கும், எமது மனமுவந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

நன்றி! வணக்கம்!

தமிழ் தேசிய சபையின் சார்பில்

ஸ்ரீரஞ்சன்

செயலாளர்

Comments