ஈழத்தமிழர் மீதான இனஅழிப்புத் திட்டத்தை நிறுத்துவது யார்? ஐ.நா.வா? மீண்டும் தமிழர்களின் ஆயுதப் போராட்டமா?

" இலங்கையின் 62வது சுதந்திர நாளில் சிங்களப் பௌத்த மேலாதிக்கத்தால், நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சிகரமான இராஜபக்சேவின் ஜனாதிபதித்துவம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், தமிழர்கள் தமது எல்லா வேற்றுமைகளையும் மறந்து தமக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் இனஅழிப்பை நிறுத்துவதே தமது தலையாய கடமையெனக் கொண்டு செயல்படும் பொருட்டு, இக்கட்டுரை வரையப்படுகின்றது. தமிழ் மக்கள் தங்களை எதிர்நோக்கும் அபாயங்களை எண்ணாது வேறு சில அர்ப்பமானப் பிரச்சனைகளால் திசை திருப்பப்படுவது வேதனை அளிக்கிறது.
http://puliveeram.files.wordpress.com/2009/07/shellattak-3.jpg
வட்டுக்கோட்டைத் தீர்மானம் வழியோ, மக்களவை வழியிலோ நாம் அடையப்போகும் தமிழீழத்திற்கு அடித்தளமாக எமது மக்களையும், இனத்தையும் அதை அடையும் வரை பாதுகாக்காவிட்டால் எமது இலக்கை ஒருபோதும் எய்தமுடியாது. “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் இனத்தின் மீது தொடர்ந்து நடத்தப்படும் இனஅழிப்புத் திட்டத்தினை வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு இக்கட்டுரையில் முயற்சிக்கிறோம்.



இனப்படுகொலை என்பது: 

போலந்து நாட்டின் யூதரான வழக்கறிஞர், ரபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவர்தான் இனப்படுகொலை (Genocide) என்பது பற்றி முதன்முதலாக வரைவிலக்கணம் வகுத்தவர் ஆவார். 1933-இல் நாசிகள் ஆட்சிக்கு வரும் முன்பே, தேசிய (National), இன (racial), மத (religious), வகை குழுவினர் (ethinic group), ஆகியோரின் அழிவிற்கு எதிராக சர்வதேசச் சட்டம் கொண்டுவர தனியே நின்று பாடுபட்டவர். இனப்படுகொலை பற்றிய ஆராய்ச்சியில், அவர் செய்த வேலை அடித்தளமாக அமைந்துள்ளது. 



ரபேல் லெம்கின் கருத்துப்படி:
(U.N )Article 1:

சமாதானக் காலத்தில் ஆயினும் அல்லது போர் நடக்கும் காலங்களில் ஆயினும் இனப்படுகொலை நடைபெறும் வேலையில் சர்வதேசச் சட்ட விதி முறைப்படி தடுக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமான ஒரு குற்றமாகும்.

(U.N )Article 2:

இனப்படுகொலை என்பது, முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ தேசியம் சார்ந்த (National)இ அல்லது இனம் சார்ந்த (Racial), அல்லது வகை சார்ந்த (Ethinical), அல்லது சமயம் சார்ந்த (Religious), குழுவினரை அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் ஆகும்.

இனப்படுகொலையாவன:

அ). அக்குழுவினரின் அங்கத்தினர்களைக் கொல்லுதல்

ஆ). அக்குழுவினரின் அங்கத்தினர்களுக்கு பாரதூரமாக உடலளவிலோ, மனதளவிலோ தீங்கிழைத்தல்

இ). அக்குழுவினரின் முழுமையான அல்லது ஒரு பகுதியான அழிவை முன்னிட்டு வாழ்க்கை நிலையைப் பாதிக்கும் நடவடிக்கைகளை நன்றாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு, வேண்டுமென்று நிறைவேற்றுதல்.

ஈ). அக்குழுவினர்க்கு எதிர்காலச் சந்ததியினர் பிறக்க முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

உ). ஒரு குழுவினரின் பிள்ளைகளை இன்னொரு குழுவினராகப் பலவந்தமாக மாற்றுதல்


ரபேல் லெம்கின் கூற்றுப்படி தொடர்ந்து நடைபெற்றுவரும் இனஅழிப்பு வேலைகள்:

அ). ஆதாரங்கள் நிரூபணம் செய்யப்பட்டால் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆ) தடுக்காவிட்டால் இனஅழிப்புத் தொடர வாய்ப்பு ஏற்படும்

ஐ.நா. சாசனத்தின்படி:

இனப்படுகொலை தடுக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

ரபேல் லெம்கின் வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலை என்பது மனம் சார்ந்த செயல்களையும் உள்ளடக்குவதன் மூலம் விரிவடைகின்றது.

பொதுவாக நோக்குமிடத்து, இனப்படுகொலை என்பது ஒரு இனத்தின் முற்றான அழிப்பு என்கிற கருத்தை உள்ளடக்கவில்லை.

அதன்படி, ஒரு இனத்தினுடைய வாழ்க்கை மூலாதாரச் சக்திகளை, அந்த இனத்தை முற்றாக அழிக்கக்கூடிய நோக்குடன், வௌ;வேறு செயல்களை, உள்ளடக்கும் ஒரு கோர்வையான திட்டத்தையே குறிப்பிடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் குறிக்கோள்கள் ஆவன:

அ). தேசிய இனங்களின் கலாச்சார, மொழி, தேசிய உணர்வு, சமயம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அரசியல், சமூகக் கட்டுமானங்களைச் சிதைக்கும் திட்டமாகும்.

ஆ). அத்தகைய குழுக்களைச் சேர்ந்த மக்களின் தனித்த பாதுகாப்பு, சுதந்திரம், சுகாதாரம், தன்மானம், உயிர்களையும்கூட அழிப்பதை உள்ளடக்கியது ஆகும்.

இனப்படுகொலை என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளடக்கப்பட்டவர் என்ற காரணத்தினால் அன்றி, ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்க முடியாது.

(எ-டு): ஒரு பேருந்தில் செல்பவர் அனைவரையும் கொல்லுதல் இனப்படுகொலை ஆகும். ஆனால் அந்தப் பேருந்தில் செல்பவருக்கும் கொன்றவருக்கும் தனிப்பட்ட பகை இருந்து கொன்றால் அது இனப்படுகொலை ஆகாது.

இனப்படுகொலை இரண்டு வகைகளில் நடத்தப்படலாம்.

1. பாதிக்கப்படுவரின் தேசிய இனத்தை அழித்தல்.

2. பாதிப்பை உண்டாக்குபவர் தனது தேசியக் கொள்கையை மற்றவரின் மீது திணிக்கும்போது

(எ-டு) தமிழர்களை ஒரு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு, அப்பகுதியில் சிங்களர்களைக் குடியேற்றுதல் போன்றவை

ரபேல் லெம்கின் என்பவர் போலந்து யூத இனத்தில் பிறந்திருந்தும் நாசிசப் பேரினப் படுகொலையில் இருந்து தப்பியவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

நாசிசவாதிகள் (Nazi's) போலந்தில் நடத்திய யூத இனஅழிப்பையும், இலங்கையில் சிங்களர்கள் (sinhalese) நடத்திய தமிழின அழிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், தமிழர்களுக்கெதிரான இனஅழிப்பு கொடுமை நடந்தேறி வருகின்றது என்பதை இக்கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களாலும் எளிதாக புரிந்துக்கொள்ள இயலும்.

1. ஐரோப்பாவில் யூதர்களது இனப்படுகொலைக்கு முன்னரே, முற்காலந்தொட்டு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடுகள் வளர்ந்திருந்தன. அதைப்போலவே, இலங்கையில், தேசிய இனமான தமிழினத்திற்கெதிரான பாகுபாட்டுடன், சிங்கள இனத்தவரால், 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் நூல், 1870-ல் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழினத்திற்கு முற்றிலும் எதிரான அதுவே சிங்களப் பௌத்த இனத்தவரின் பிரதான வரலாற்று மத நூலாகும்.

நாசி இனக்கொள்கை யூத இனத்திற்கு எதிரான அடிப்படையில் உண்டாக்கப்பட்டது. அதுபோலவே, மகாவம்சக் கொள்கையின்படி சிங்களவர் மட்டுமே இலங்கையில் வாழத் தகுதியுற்றவர்கள். மேலும் தமிழ்ச் சோழ அரசனையும் அவன் படைகளையும் கொல்லுதல் என்பது, பாவிகளையும், காட்டு விலங்குகளையும் கொல்வதற்கு ஒப்பாகுமென்று கூறுகிறது. ஆயிரம் தமிழர் உயிர்கள்கூட ஒரு சிங்களர் உயிருக்குச் சமமானதல்ல என்று கூறுகிறது.
அப்படிப்பட்ட தமிழினத்திற்கு முற்றிலும் எதிரான நோக்கு கொண்ட மகாவம்ச இனக்கொள்கையையே இன்று சிங்களப் பௌத்த சிங்கள அரசியல் கட்சியான ஜாதிக ஹெல உருமய கட்சி போன்றவைகள் பின்பற்றுகின்றன. 2003 மார்ச் திங்களில் சிங்களப் பௌத்த பிக்குகள், இலங்கை பிரிக்க முடியாத சிங்களவரின் ஒற்றையாட்சி நாடு என்றும், அங்கிருக்கும் பிற இன மதப் பாகுபாடுகள் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும் உறுதி மேற்கொண்டதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

2. 1933- இல் ஜெர்மானியாவில் நடைபெற்ற தேர்தலில் நாசிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தனர். அன்றிலிருந்து யூதர்களுக்கெதிரான இனஅழிப்பு திட்டமிட்ட வகையில் அரங்கேற ஆரம்பித்தன. இங்கு இலங்கையில், 1948 -இல் இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன், பிரித்தானியரிடமிருந்து சிங்களரின் கைக்கு அதிகாரம் மாற்றம் செய்யப்பட்டது. அதிகாரம் தங்களது கைகளில் வந்தவுடன் சிங்களர்கள் தமிழினத்திற்கெதிரான போக்கைப் பகிங்கரமாக நடைமுறைக்கு எடுத்துவந்தனர்.

3. 1935-ல் ஜெர்மானியாவின் நூரெம்பெர்க் (Nuremberg) சட்டங்கள் குறிப்பாக ரெய்ச் (Reich) குடியுரிமைச் சட்டம், ஜெர்மானிய யூதர்களின் குடியுரிமையை இழக்கச் செய்தது. இலங்கையில், தமிழர்களின் பலத்தைக் குறைக்கும் வகையில், 1948-ல் சிங்களர்களால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தினால், 25 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களில், 10 இலட்சம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. (பலாத்காரமற்ற இனஅழிப்பு முறையாகும் இது)

4. 1933 முதல், யுத இனமக்களுக்கெதிராகக் கொலைகள் நாசிசவாதிகளின் அரசாங்க ஆதரவோடு, தொடர்ச்சியாகப் பெருமளவில் நடைபெற்றன. இலங்கையில் அதைப்போன்றே, 1956, 1958, 1977-ஆம் ஆண்டுகளில், அரசாங்கத்தின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் தமிழினத்திற்கெதிராக இனக் கலவரங்கள் மூட்டப்பட்டு எண்ணற்ற தமிழர்கள் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன.

1983 முதல் 90 –வரை முதலாவது ஈழப் போரிலும் அதன் பின்னர் நடந்த போர்களிலும், அரசாங்கம் பலாத்காரமாக உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்த மக்களைப் பொதுவான இடங்களுக்குத் தள்ளிப் பெரிய அளவில் கொலைகளை நடத்தியது. அத்துடன் மட்டுமன்றி, ஊரடங்குச் சட்டங்கள், கொலைகள், வீடு எரிப்புகள் முதலான அடக்குமுறைச் சூழ்நிலைகளை உருவாக்கி, சிங்களப் பௌத்த இராணுவம் இடம் பெயர்ந்த மக்களைப்பள்ளிக்கூடங்களிலும், தேவாலயங்களிலும், கோவில்களிலும், அகதி முகாம்களிலும் குழுமி இருக்கச் செய்தது. சில சமயங்களில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களென குறிப்பிட்ட சில இடங்களுக்குச் செல்லும்படி வான்வழி விமானம் மூலம் துண்டுப் பிரசுரங்கள் பரப்பி, மக்கள் அப்பகுதிகளில் சென்றடைந்த பின், அதே மக்கள்மீது, வான்படையும், தரைப்படையுமாக முறையே குண்டுகளையும், ஷெல்களையும் பொழிந்து மக்களைக் கொன்றனர்.

1990-95 ஈழப்போராட்டம் II –ல், கிராமங்களில் கொல்லப்பட்டோர்களின் தொகைகள் பல நூறுகளைத் தாண்டின. கிராமப் படுகொலைகள் முந்தைய ஈழப் போர்களிலும் வழக்கமான நிகழ்வாகவே இருந்தன. 4-வது கட்ட ஈழப்போரில் முன்பு கூறியதுபோல், இலங்கை அரசாங்கம், பாதுகாப்புப் பிரதேசம் என பிரகடனம் செய்து மக்களை அங்கு வரவழைத்தபின், வானிலிருந்து குண்டுகளையும், தரையிலிருந்து ஷெல்களையும் வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர்.

5.1 1941 –ல் போலந்தில் லுப்ளின் (lubin) என்னும் இடத்தில் இருந்த யூதர்களின் சமய நிலையத்தின் தல்முடிக் (Talmudic) எனும் பெரிய நூலகமொன்று எரிக்கப்பட்டன. அதற்கு இணையாக இங்கு இலங்கையில், 1974–ல், 4-வது சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், அரசாங்கம் நடத்திய கொலை வெறியினால் பார்வையாளர்களாக வந்திருந்த தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். 1981-ல் தமிழினத்தின் மிகப்பெரும் பழமைவாய்ந்த யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டது. (யுனெஸ்கோ வரைவிலக்கணப்படி இது கலாச்சார இனஅழிப்பு ஆகும்) அதில் மிகப்பெரிய அளவிலான, 1,00,000–க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, 1983-க்கும் 1995-க்கும் இடையில் 1500 (புத்த மதத்தைத் தவிர்த்த) தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான கோயில்கள் திட்டமிட்ட முறையில் நாசப்படுத்தப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. குண்டுவீசி அழிக்கப்பட்டன. 1995 முதல் 2002 வரை நடைபெற்ற ஈழப்போர் ஐஐஐ –ல் 899 கிறித்துவ தோலயங்களும் அழிக்கப்பட்டன. குண்டுவீசி சிதைக்கப்பட்டன. இப்படியான முறையில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிங்களர்களால், இலங்கைத் தீவின் தேசிய இனமான தமிழர்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்பட்டு ஒரு இனஅழிப்பிற்கு உட்படுத்தப்பட்டதைப் புரிந்துக்கொள்ளலாம்.

5.2 போலந்து நாட்டில், யூதமக்கள் வாழ்விடங்களில், அய்ரோப்பாவின் பிறபாகங்களிலிருந்து கொணர்ந்த ஜெர்மானியர்கள் குடியேற்றப்பட்டு யூதமக்களின் விகிதாச்சாரம் குறைக்கப்பட்டதோ அதைப்போன்றே, இலங்கைத் தீவில், 1951-க்குப் பிறகு கல்லோயா, காந்தளாய், மகாவலி ஆகிய இடங்களில் அரசு ஆதரவுடன் நடைபெற்ற சிங்களக் குடியேற்றத்தினால், கிழக்கு மாகாணத்தில் இருந்த தமிழர்களின் விகிதாச்சாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதை நினைவிற்கொள்ளலாம்.

எவ்வாறு, ஜெர்மானிய மயப்படுத்தல் மூலம், யூதமக்களின் வாழ்விடங்களில் பாரம்பரியத் தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டனவோ, அவ்வாறே, தமிழ் மக்களின் நகரங்கள், கிராமங்கள், தெருக்கள் ஆகியவற்றின் பாரம்பரியப் பெயர்கள் முற்றாக அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, அவ்விடங்களில் சிங்களப் போர் வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.

5.3 நாசிசவாதிகளின் அரசு, தொடக்கக் காலத்தில், ஜெர்மன் யூதர்கள், தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, வெளிநாட்டிற்குக் குடிபெயர்ந்து செல்வதை ஊக்குவித்தன. அதுபோன்றே, வட-கிழக்குப் பகுதியினில் வாழ்ந்த 30 இலட்சம் தமிழ் மக்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர், சிங்களர்கள் அரசு ஆதரவோடு நடத்தும் கொலைவெறி ஆட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அகதிகளாக எண்ணற்ற வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்.

6.1 ஜெர்மானிய நாசிச வாதிகள் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்த சுயாட்சி நிர்வாக நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு யூதர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டன. இலங்கையினில், 1956 –தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின், உள்ளாட்சி நிர்வாகங்கள், தமிழில் நடத்துவதற்குத் தடை செய்யப்பட்டன. தமிழ் அரசாங்க ஊழியர்களது வேலைகள் பறிக்கப்பட்டன. அதன் வாயிலாக, அரசாங்கச் சேவையில் தமிழர்களின் விகிதாச்சார எண்ணிக்கை பெருமளவில் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது.

6.2 நாசிசவாதிகள், யூதஇனத்தின்மீதான பரந்தளவிலான அளவில் தடுப்புக்காவல் சட்டங்களினால், அவர்களின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைத்தனர். அதற்கு இணையாக, இலங்கையில் சிங்களர்கள், தமிழினத்தை ஒடுக்கும் முறையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் (PTA) பரந்த தடுப்புக்காவலைத் திணித்தனர். அச்சட்டத்தின் துணையுடன், கைது செய்யப்படும் தமிழர்கள், குற்றம் சுமத்தப்படாமலேயே ஓராண்டுவரை, திட்டமிட்டு தடுப்புக் காவலிலேயே அழித்தொழிக்கப்பட்டனர். பின் துனு வேவா எனும் இடத்தில் இப்படியாக எண்ணற்ற தமிழகள் தடுப்புக்காலிலேயே அழிக்கப்பட்டதே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி தமிழர்கள் வாழும் பகுதிகளில், 30 வருடங்களுக்குத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டத்தின் வாயிலாக யூதர்களுக்கிணையான, கூறப்போனால், அதைவிட சற்றே அதிகளவில், சிங்களர்களால் தமிழினத்திற்கெதிரான திட்டமிட்ட இனஅழிப்பு வேலை, மேற்கொள்ளப்பட்டு வருவதை நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

7 நாசிசவாதிகள், திட்டமிட்டு யுதஇனத்தின் புத்திஜீவிகள் பலரைக் கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமற்போதல் செய்தும் யூதஇனத்திற்கெதிரான இனஅழிப்பு வேலையைச் செய்தனர். 1939 க்கும் அதற்குப் பிற்கும் எண்ணற்ற போலிஷ் புத்திஜீவிகள் கொல்லப்பட்டதைச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அதுபோன்றே இலங்கையில், சிங்களர்கள் 1983 முதல் தமிழினத்தின் புத்திஜீவிகளைக் கொலை செய்ததோடு, அதன் பின்பும் அதிவேக விசையில் மேற்கொண்டனர். (எ.டு): 2004-2006 யாழ் பகுதியிலும், கிழக்கு மாகாணத்தில் சமூகத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை முழுவதிலும்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவத் தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழினத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். வணிக நிறுவன உரிமையாளர்கள் கடத்தப்பட்டனர். கொல்லப்பட்டனர். இப்படியாக எண்ணற்ற சம்பவங்களை உற்று நோக்கினால், சிங்களர்களாலும், அவர்களது அரசாங்கங்களினாலும் திட்டமிட்ட முறையில் தமிழின அழிப்பு வேலை நடந்துவருவதை புரிந்து கொள்ளலாம்.

8 நாசிசவாதிகள் யூத சனத்தொகையை திட்டமிட்டுக் குறைத்தனர். அதுபோன்றே, இலங்கையில், இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் (1) ஒரு நாளில் 3-க்கும் மேற்பட்ட தமிழர் காணாமல் போதல் மூலம் படிப்படியான ஆட்குறைப்பு (சில ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 6 வீதம்) செய்தததை எடுத்துக்கொள்ளலாம். (2). போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும்போதும், சிங்களர்களால், திட்டமிட்டு தமிழ் வணிகர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டதையும் நினைவிற்கொள்ளலாம். (3). குறிப்பாக இராணுவத்தில் சேரத் தகுதிபடைத்த ஆண்களும், மற்றும் சமூகத் தலைவர்களும் கொல்லப்பட்டதை நினைவிற் கொள்ளலாம் (4). உலகிலேயே காணாமல் போகச் செய்தலில், இலங்கை அதிக விகிதாச்சாரத்தைப் பெற்று உள்ளதை பார்த்தோமானால் அதிர்ச்சி கலந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

9 நாசிகள் யூத இனத்தின மக்கள் குறைப்பைத் திட்டமிட்டு மேற்கொண்டனர். யுத இனக் குழந்தைகளின் வாழ்நாள் நீடிப்பைத் திட்டமிட்டுக் குறைத்தனர். யூத சந்ததியினர் விருத்தியை மருத்துவ ரீதியில் தடுத்தனர். அப்படியாக இலங்கையில் சிங்களர்கள் தமிழினத்தின் மக்கள் குறைப்பை திட்டமிட்டு மேற்கொண்டனர். யாழ்ப்பாணம், வன்னியில் தமிழினக் குழந்தைகளிடையே உருவான சத்துணவின்மை, நோய் ஆகியவற்றை சிங்கள அரசு அலட்சியப்படுத்தியது மட்டுமன்றி, வேண்டுமென்றே, கண்டும் காணாதது போல் எண்ணற்றக் குழந்தைகள் மடிந்ததை நினைவிற் கொள்ளலாம். தமிழர்களின் குடும்பத்திலுள்ள கணவன்-மனைவியைப் பிரித்து வௌ;வேறு தடுப்பு முகாம்களில் வைத்திருத்தல் மூலம் சந்ததியின விருத்தியைக் கட்டுப்படுத்தினர். சிங்களர்களால், தமிழினப் பெண்களின் மேல் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பாலியல் வதை மூலம் பெண்களின் மகப்பேற்றைத் தடுத்தனர். பெண்களுக்கு எதிராக வன்முறை மேற்கொள்வதில் உலகின் முதல் மூன்று நாடுகளுக்குள்ளான பட்டியலில் இலங்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10. நாசிகள் அரசாங்கம் யூதமக்களை அன்றாட வாழ்வில் பட்டினி போடல் மற்றது உணவு, மருந்து குறைப்பினால் இனத்தையே மெல்ல மெல்ல அழித்தொழித்தனர். அதுபோன்றே, இலங்கையில், சிங்களர்களால், 1991 ஆகஸ்டு மாதம் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின்கீழ், வடக்கு – கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் உட்பட பல பொருட்கள் தடை செய்யப்பட்டன. (1). அறுவைச் சிகிச்சைக் கருவிகள், உயிர்காக்கும் மருத்துவச் சாதனங்கள், வலி நிவாரணிகள், கட்டுத் துணிகள் மற்றும் சிறு காயங்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகள் தடை செய்யப்பட்டது (2). 1992 நவம்பரில் யாழ்ப்பாண மாகாண மருத்துவ இயக்குநரின் வேண்டுகோளில் ஒரு சிறுபகுதியை மட்டுமே அனுமதித்தது போன்றவை தமிழ் மக்களுக்கு சிங்களர்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காதவாறு திட்டமிட்டு பார்த்துக்கொண்டனர். கீழ்கண்ட குறிப்புகளை நோக்கினால் அது சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமையும். (i) 5,35,000 ஹமாக்சளின் மாத்திரைகள் கேட்ட இடத்தில் 2000 மும், 19,70,000 பென்சிலின் மாத்திரைகள் கேட்டதற்கு 5,85,000 மட்டுமே தரப்பட்டன. (ii) யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கு உயிர்க் காற்று உருளை (ழஒலபநn உலடiனெநச) ஒன்று கூட கொடுக்கப்படவில்லை. (iii) மருந்துகள் இன்மையால் மருத்துவமனைகளிலும், அகதி முகாம்களிலும் பல குழந்தைகள் குடல் காய்ச்சலாலும், வாந்தி பேதியாலும் மடிந்தனர். (iஎ) மன்னாரிலும் மட்டக்களப்பிலும் மலேரியாவால் மடிந்தனர். (எ) மலேரியாவைப் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த உதவும் மாலத்தியன் மருந்து கொடுக்க மறுத்ததால் 77.540 மக்கள் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை இனப்படுகொலையால் பாதிக்கப்படாத பிற இடங்களைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலானதாகும் என்பன. (3). அதுமட்டுமன்றி, 2009-ல் நடைபெற்ற 4-ஆம் கட்ட ஈழப்போரில் வன்னியில் மருந்தும், உணவும் தடைப்பட்டதால் பலமக்கள் இறந்தனர். குண்டுகளினால் காயப்பட்ட நோயாளிகளில் பலர் தொற்று நோயைத் தடுக்கும் மருந்துகள் இல்லாமையால், பாதிக்கப்பட்ட உறுப்புகளை அகற்றும் அறுவைச் சிகிச்சைகள் பலமுறை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதான அதிர்ச்சியான உண்மைகள் யூத இனத்திற்கு இணையான, தமிழின அழிப்பை உறுதி செய்கின்றன.

11. நாசிகளின் அரசாங்கம், யூதமக்களின் மதகுருக்களைக் கொன்று, அவர்களின் சமய வழிபாட்டு உரிமைகளைத் திட்டமிட்டுப் பாதித்ததை உற்றுநோக்கில், அவ்வாறே இலங்கையில், சிங்கள அரசாங்கம், தமிழர்களின் இந்துசமய வழிபாட்டு உரிமைகளைப் பாதித்ததோடு மட்டுமன்றி, பல வட-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் தேவாலய மதகுருக்களைக் கொன்று தமிழ் கிறித்துவ மக்களின் சமய வழிபாட்டு உரிமைகளையும் அச்சுறுத்துதலுக்கு உள்ளாக்கினர்.

12. நாசிகள் யூதமக்களின் தொழிலதிபர்களைக் கொன்றும், அவர்களின் நிறுவனங்களை அழித்தும் பெரும் பொருளாதாரச் சீர்கேட்டை யூத இனத்திற்கு உருவாக்கினர். இலங்கையிலும், சிங்களர்கள், தமிழினத்திற்கு, பல வழிகளால் பொருளாதாரச் சீர்க்கேடுகளை உருவாக்கினர். முறையே, (1). 1948, 1949 குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய தமிழ் மக்களின் பொருளாதாரக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன. (2). 1983 இனக்கலவரம் மூலம் பெரும்பான்மையான தமிழ் வணிக நிறுவனங்களைக் கொழும்பில் அழித்தனர். (3). 1990 முதல் இந்நாள் வரை, பொருளாதாரத் தடையால், யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் பொருளாதார வளர்ச்சியை அழித்தது குறிப்பிடத்தக்கது. (4). மீன்பிடித் தடைச் சட்டங்கள் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குறியாக்கியது. (5). 1990 முதல் தமிழ் அகதிகளைத் தடுப்பு முகாம்களில் 20 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பதன் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தையும், பொருளாதார வளர்ச்சியையும், சிங்களர்கள் நாசப்படுத்தினர். (6).; பல வருடங்களாக தொடர்ச்சியாக சிங்கள வதையினால் அவதியுற்று வரும் தமிழ் மக்களுக்குத் தொண்டு நிறுவனங்களையும் சேவை செய்யவிடாமல் அவர்களை வெளியேற்றியதுடன், அதன் ஊழியர்கள் பலரையும் சிங்களர்கள் கொன்றனர். (7). தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக நடந்த ஊரடங்குச் சட்டத்தினால், ஏற்பட்ட பாதிப்பு போன்ற மேற்கண்ட சிங்களர்களின் கொடுமைகளை நோக்கினால், இது சிங்களர்களாலும், சிங்கள அரசாங்கத்தினாலும் திட்டமிட்ட தமிழர்களுக்கெதிரான இனஅழிப்பு என்பதை உறுதிபடுத்தும்

13. நாசிகள் 1939 முதல் போலந்து யூதர்களைச் சித்திவதை முகாம்களுக்குள் அடைத்து யூதமக்களுக்கெதிரான இனஅழிப்பை உச்சத்திற்கு எடுத்து வந்தனர். அப்படியாகவே, இலங்கையிலும், சித்திரவதை முகாம்கள் தமிழர்களுக்கெதிராக உருவாக்கப்பட்டன. 1983 முதல் 1995 வரையில் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட தமிழினத்திற்கெதிரான இராணுவ நடவடிக்கையினால், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு, 12,24,000 தமிழர்கள் இடம் பெயர்ந்தனர். அவற்றுள் 98,000 பேர்கள் வதைமுகாம்களில் 18 ஆண்டுகளுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டனர். 1990 ஜீன்-ல் நடைபெற்ற 2வது கட்ட ஈழப்போரின் போது 3,50,000 தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்தனர். அத்துடன் 1,20,000 பேர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தமையால், அங்குள்ள அகதிகள் எண்ணிக்கை 2,30,000 ஆக உயர்ந்தது. 2009-ல் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த அகதிகளுக்குப் புதிய வதை முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டில், மனிதாபிமானமற்ற நிலையில் அடைக்கப்பட்டது போன்ற சிங்களர்களால் மேற்கொள்ளப்பட்ட தமிழினத்திற்கெதிரான அராஜகங்கள் நாசிகள் யூதமக்களுக்குச் செய்த அட்டூழியங்களுக்கு இணையாக அமைவதை காணலாம்.

இனஅழிப்புத் திட்டம்: மார்க் லெவின் ( Mark Levene ) என்பவரின் வரைவிலக்கணத்தின்படி, இனப்படுகொலைத் திட்டத்திற்கும், இனஅழிப்புக்கும் வித்தியாசம் இல்லை. இனஅழிப்பு ஓர் ஒழுங்கான முறையில் காலவரையறைக்கு உட்படுத்தப்படாது நடத்தப்படலாம். இனஅழிப்பின் வரைவிலக்கணம், அதனால், அந்த நேர எல்லைக்குள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில், அடங்கியிருக்கவில்லை.

சில நவீன நிபுணர்கள், திடீரெனப் பேரழிவை ஏற்படுத்தும் பலாத்காரம் முற்றாக அழிவை ஏற்படுத்தும் போதுதான் அவை இனஅழிப்பு என வரைவிலக்கணம் கொடுக்க முனையலாம். ஆனால், இத்தகைய கோணத்தில் பார்க்கும்போது, இனஅழிப்பிற்கு முன், ஓர் இனஅழிப்புத் திட்டம் நிறைவேற்றப்படுவதைக் காணலாம். இலங்கையில், சுதந்திரம் அடைந்த நாள் முதல், இனஅழிப்புத் திட்டம் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டதை நாம் இதற்குமுன் எடுத்துக்காட்டியிருந்தோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில், 1948முதல், இனஅழிப்பு ஒரு திட்டமிட்ட வகையில் நடைபெற்று வந்தபோதிலும், அதன் பாதையில் நடைபெற்ற பெரும் எண்ணிக்கையிலான மற்றைய நிகழ்வுகளுடன், சேர்த்து பெருமெடுப்பிலான பலாத்கார நிகழ்வுகள், அந்த இனத்தை அழிக்கும் முயற்சிகள் என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன. இந்தக் கொள்கை வரைவிலக்கணங்களில், எவை எப்படி நோக்கப்பட்டாலும், 2009-ல் வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது, நடத்தப்பட்ட படுகொலை, ஓர் இனஅழிப்பின் உச்சக்கட்டத் தூண்டுகோள் எனக்கொள்ளலாம்.

30 ஆண்டுக் காலமாக, ஊரடங்குச் சட்டம் பிறப்பித்து, வடக்கு-கிழக்கு மாகாண மக்களைத் தொடர்ந்து உயிர் அச்சத்தில் (Life threat) வாழும்படி செய்ததன் மூலம் உளவியல் ரீதியாக தமிழர் மீது சிங்கள அரசு தனது இனஅழிப்புத் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது. போர் முடிந்து 10 மாதங்களாகியும், புதிய அதிபர் தேர்தல் முடிந்த பிறகும்கூட, தமிழர் வாழும் பகுதியில், இராணுவத் தங்கல் கெடுபிடிகள் தொடர்வதும், நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டிருப்பதும் திட்டமிட்ட தமிழினஅழிப்பை உறுதிபடுத்துகிறது.

நியூயார்க் தொண்டு நிறுவனம் ஒன்று, “னுசநயஅ கழச னுயசகரச” என்னும் சேவைப் பணியின்போது, இனப்படுகொலை தடுப்புத் திட்டம் எனத் தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் (டிசம்பர், 2008), உலகில் இனப்படுகொலை நடைபெற்று வரும் 8 நாடுகளில், காங்கோ, சூடான், இலங்கை ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளதையும், அந்நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் கொடுமைக்கு ஆளாகிவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் நிலை:

தொடர்ந்து நடத்தப்படும் இவ்வினஅழிப்புத் திட்டத்தை, ஐ.நா.சபை தலையிட்டு உடனே நிறுத்தியாக வேண்டும். முழுத் தமிழினமும் அழியும் வரை ஐ.நா.வோ, தமிழினமோ பொறுத்திருக்க முடியாது.

சர்வதேச சமூகம்:

வன்னியில் இருக்கும் தடுப்பு முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களை, அங்கிருந்து அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இன்னொரு தடுப்பு முகாமிலோ அல்லது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசத்திற்கோ குடியமர்த்துவது, இப்போது நடைபெறும் இனஅழிப்புத் திட்டத்தை மீண்டும் நீடிக்கும் ஒரு செயலாகும். இதனை நிறுத்த சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழர்தம் பழைய வாழ்விடங்களில் தக்க நிவாரண உதவிகளுடன் மீண்டும் குடியமர்த்தப்பட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத வலுவுடனேயோ அல்லது தமிழ் மக்களின் ஆயுதப்போராட்ட வலுவுடனேயோ ஒரு சக்தி தடுத்து நிறுத்தாத பொழுது, இவ்வினஅழிப்புத் திட்டமானது, மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்பதில் ஐயமில்லை.

செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். குறள்: 466

-பேராசிரியர் தீரன்-

Comments