வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி இணைவு?

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்காவின் பாதுகாப்பு செயலரும், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் இணைந்து செயற்படுவதாக இன்று (19) வெளியான ஈழமுரசு இதழ் செய்தி தெரிவிக்கின்றது.

அச்செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது:

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்காவின் பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவுடன் விடுதலைப்புலிகளால் கடந்த 2009 ஜனவரி இறுதியில் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் இணைந்து செயற்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் சிலரிடம் இருந்து எமக்குக் கிடைத்த செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர் என்றும் அவற்றில் பெருமளவானவற்றை தாங்கள் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் மேலும் தொடரப்பட வேண்டும் என்றும், அவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக தான் இருக்கும் நிலையில் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளதாகவும், எனவே வெளிநாடுகளில் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த முறியடிப்பிற்கு கோத்தபாய ராஜபக்சவினால் நேரடியாக இறக்கிவிடப்பட்டுள்ள குமரன் பத்மநாதன், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக சில வெளிநாடுகளுக்கு அவர் பயணங்களையும் மேற்கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது கொழும்பில் தங்கியிருந்துகொண்டு புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் இருக்கின்ற தனது ஆதரவாளர்கள் மூலம், விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்கும் நடவடிக்கையில் இவர் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அவுஷ்திரேலியா நாடுகளில் இந்த கட்டமைப்பு உடைப்பு நடவடிக்கை தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலருடன் தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள குமரன் பத்மநாதன், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறி வருவதாகவும், அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவர்கள் குறித்து ஆராய்ந்து தனக்கு தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி வருவதுடன், மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணிகளையும் மேற்கொள்ளுமாறு இவர் தனது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தனக்கு நெருக்கமான சிலரது தொலைபேசி இலக்கம் கிடைக்காத நிலையில், பல்வேறு வழிகளினூடாக அவர்களின் தொலைபேசி இலக்கங்களை தேடிப்பெற்று இவர் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாகவும், இவ்வாறு தொடர்புகொள்ளப்பட்ட சிலர், தங்களுக்கு இந்தச் செயற்பாடுகளில் விருப்பமில்லையெனக்கூறி அவருடனான தொடர்புகளைத் துண்டித்து ஒதுங்கிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

தற்போது தனது முன்னைய ஆதரவாளர்கள் ஊடாக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இவர், விடுதலைப் புலிகள் குறித்து ஆதரவான கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை அச்சுறுத்தும் அல்லது அம்பலப்படுத்தும் வகையில் பிரத்தியேக இணையத் தளங்களை இயக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தற்போது தனிமனிதர்களை கொச்சைப்படுத்தும் இணையவலைகள் அதிகளவில் உருவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.இதேவேளை, விடுதலைப் புலிகளின் இந்த சர்வதேச வலைப் பின்னலை சிதறிடிக்கும் நடவடிக்கையில் ஒருசில சர்வதேச கரங்களும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், தற்போது கோத்தபாய ராஜபக்ச ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் பாதுகாப்பு தரப்பின் முக்கியஸ்தர்களை கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் நடைபெறும் தெற்காசியாவின் மிகப் பெரிய ஆயுத தளபாட கண்காட்சியை பார்வையிடும் இவர், சிறீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகளை நவீன மயப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியில் ஈடுபட்டுள்ள ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து புதிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.

இதுஇவ்வாறிருக்க, இன்னொரு பக்கத்தில் சிறீலங்கா அரசின் நாச வேலைகள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் இணையத் தளங்களையும் அரச எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களையும் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதன் ஒரு கட்டமாக இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீன நிபுணர் குழுவொன்று சிறீலங்காவிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டு சீனாவில் அவற்றைச் செயற்படாமல் தடுத்த சீன நிபுணர்களே இவ்வாறு சிறீலங்காவிற்கு வந்துள்ளனர் எனவும் இன்னும் சில தினங்களில் செயலிழந்துபோகும் இணையத் தளங்களில் இருந்து இவர்களது நடவடிக்கை தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் இயக்கப்படும் ஊடகங்களே பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு சிறீலங்காவினால் தடை விதிக்கமுடிகின்றபோதிலும் மாற்று வழிகளூடாக (தேடுதல் தளங்கள்) சென்று பார்வையிடுபவர்களை தடுக்க முடியாது இருப்பதனால், இவ்வாறான மாற்றுவழித் தேடுதல் தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் கூகிள் இணையத்தளம் இலங்கையில் செயற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா இறங்கியுள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழீழ கனவு இன்னும் அப்படியே உள்ளது என்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாகவும் சிறீலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா எச்சரித்துள்ளார். தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் கல்லடி, தொப்பிகல, வாகரை, புனானை இராணுவ முகாம்களுக்கு பயணம் செய்து இராணுவத்தினரிடம் பேசியபோது இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஈழமுரசு (19-02-2010)

Comments