முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்


முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ மீண்டும் சிங்கள தேசத்தின் அதிபராக மீண்டும் பதவியேற்றப்பட்ட பின்னரான இரு வார காலப் பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை நெருங்கிவரும் நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு இன்னும் சில நாட்கள் வாழும் அவகாசம் வழங்கப்படும். அந்தக் காலப் பகுதியில், டக்ளசும்இ கருணாவும், சித்தார்த்தனும், சிறீதரனும், ஆனந்தசங்கரியும் மகிந்தவை அர்ச்சிப்பதன் மூலமாகவே பாவ விமோசனத்தைப் பெற்று ஆயுள் பலத்தை நீடிக்க முடியும் என்று தமிழீழ மக்களுக்கு ஆசி பெற்றுக் கொடுப்பதன் மூலம் தங்கள் இருப்பை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.

புலம்பெயர் தேசங்களிலும் இந்தப் போர் விரிவாக்கம் பெற்றே வருகின்றது. ஈழத் தமிழர்களின் அத்தனை நம்பிக்கைகளும் தகர்ந்து போய்விட்டது என்று முடிவுரை எழுதுவதற்கு சிங்கள தேசத்தின் அடிவருடிகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழீழ மக்களையோ, புலம்பெயர் தமிழ் மக்களையோ நேரில் எதிர்கொள்ளவோ, அச்சு ஊடகங்கள் மூலமாகத் தமது கருத்துக்களை எடுத்து வைக்கவோ முடியாத இந்த தமிழ்த் தேசிய எதிர் நிலை வாதிகள், தமக்கு வழங்கப்படும் வளங்கள் மூலமாகப் பல இணையத் தளங்களை உருவாக்கிஇ அவற்றின் மூலமாகத் தமது வக்கிரக சிந்தனைகளையும், தமிழ்த் தேசியச் சிதைவுக் கருத்துக்களையும் தமிழ் மக்களிடம் புகுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். முகவரி அற்ற, முகம் காட்ட மறுக்கும் இந்தத் தமிழ்த் தேசிய குழப்பவாதிகள் ஊடாகச் சிங்களம் தமிழின அழிவுப் போரை முள்ளிவாய்க்கால் தாண்டியும் தொடர்ந்து வருகின்றது.

சிங்கள தேசத்தின் இனவாத யுத்த வெறிக்கு அனைத்தையும் இழந்து தவிக்கும் தமிழீழ மக்கள் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்கள் மூலமாகத் தங்களை மீட்டெடுப்பார்கள் வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டு உள்ளார்கள். சிங்கள தேசமும் இதனை உணர்ந்து கொண்டே புலம்பெயர் தமிழர் மீது அறிவிக்கப்படாத இராஜதந்திர யுத்தம் ஒன்றைத் தமிழ்த் தேசிய சிதைவாளர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

'தமிழீழம்' என்ற இலட்சியக் கனவுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த 37,000 மாவீரர்கள், தளபதிகள் உறங்கிக்கிடந்த கல்லறைகளும் சிங்கள வெறியர்களால் சிதைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளது. வன்னி மக்களது இறுதிப் புகலிடமான முள்ளிவாய்க்கால் அவர்களது புதைகுழியாக மாற்றப்பட்டு, அதன்மேல் சிங்களத்தின் வெற்றிச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தாம் இழந்த உறவுகளுக்காகக் கண்ணீர் வடிக்கவோஇ அவர்களது கல்லறைகளில் விளக்குகள் ஏற்றவோ, அவர்கள் குருதியால் சிவந்து, சேறாகிப்போன அந்த இறுதிக் களத்தைச் சென்று தரிசிப்பதற்கோ ஈழத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே உள்ளது.

பேச்சுரிமையும், வாழ்வுரிமையும் மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் இறுதி நம்பிக்கைக்குரிய பலமாக இருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இன்று தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குள் உள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பலமிழக்கச் செய்துவிட சிங்கள ஆட்சியாளர்கள் செய்யும் சதிகளுக்கு எம்மில் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ உடந்தையாகி வருகின்றார்கள். மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்குவதிலும் அவர்களது விடுதலை உணர்வுகளைச் சிதைப்பதிலும் குறிவைத்து இந்தக் குழப்பவாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்காக, புதிய இணையத்தளங்களையும் உருவாக்கி, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது சேறு பூசும் செயல்களிலும் இறங்கியுள்ளார்கள்.

ஏற்கனவே உள்ள தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களையும், அவதூறுகளையும் வெளியிடும் இணையத்தளங்களின் அருவருப்பான செயற்பாடுகளுக்கு இணையாகவே இவர்களது எழுத்துக்களும் குரூரமான அசிங்கங்களை வெளிப்படுத்துகின்றது. முகவரிகளோ, பெயர்களோ இல்லாமல் சுயம்பர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கும் அவர்களைப்போலவே அம்மணமாகக் காட்சி தருகின்றது. முன்னர் வெளிவந்த தமிழகத்துத் திரைப்படம் ஒன்றில் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்த நெப்போலியன் அவர்கள் 'கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளை இழவு வீடாக இருந்தால் நான்தான் பிணம்' என்று ஒரு வசனம் பேசுவார். அத்தகைய வில்லத்தனம் மட்டுமே இவர்களது செய்திகளின் சாரமாக உள்ளது.

தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசங்கள் எங்கும் மக்கள் பலத்தோடு அமைக்கப்பட்ட அமைப்புக்கள் பலவும் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் அதே பலத்தோடும் அதே விடுதலை உணர்வோடும் தமது பணிகளைத் தொடர்ந்து வருகின்றன. விடுதலைப் புலிகளின் பின்னே அணிவகுத்து நின்ற ஈழத் தமிழர்களும் தமது தேசிய அவாவான 'தமிழீழம்' என்ற இலட்சியத்தை நெருப்பாகச் சுமந்தவாறே 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான தமது மீள் விருப்பைப் பதிவு செய்து புலம்பெயர் தேசத்து மக்களை வியப்படைய வைத்துள்ளார்கள்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மூலம் பெற்றுக்கொண்ட மக்களாணை தமிழ் மக்கள் பேரவையினருக்குப் புலம்பெயர் நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அங்கீகாரங்களை வழங்கியுள்ளது. பல நாடுகளின் அரசியல், சமூக அமைப்புக்கள் மக்களவையினருடன் பயனுள்ள பல கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றமை நம்பிக்கை தருவதாக உள்ளன. புதிய போர்க் களங்களில் அந்நந்த நாட்டு மக்களினதும், அரசியல், சமூக அமைப்புக்களதும் ஆதரவைக் கோருவதும், அவர்கள் மூலமாக சிங்கள தேசத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதும் மிக அவசியமானதாகவே உணரப்படுகின்றது. மேற்குலகின் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதற்கு மக்கள் பேரவையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களே முக்கிய காரணமாக உள்ளது. கடந்த வாரத்தில் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக்கி, பெல்ஜியம் தலைநகர் புறுசெல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் பேரவையினது ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சிறிலங்காவுக்ககான ஜி.பி.எஸ். வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைக்கும் முடிவினை மேற்கொண்டுள்ளது.

புலம் பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டங்கள் பல நாடுகளின் சிறிலங்கா தொடர்பான கருத்தியலில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் விரைவு பெற வேண்டுமாயின், எமது போராட்டங்கள் இன்னமும் வேகமாகப் பலம்பெற வேண்டும். எங்கள் பேரெழுச்சி முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடலாம், அதன் பின்னரான மேற்குலகின் மன மாற்றங்களுக்கும், சிறிலங்கா மீதான அதன் அழுத்தங்களுக்கும் புலம்பெயர் தேச மக்களின் போராட்டங்களே மிக முக்கிய பங்கினை வகுத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்ட வடிவங்களே மேற்குலகின் மன மாற்றங்களுக்கும், சிங்கள அரசு மீதான அழுத்தங்களுக்கும் வகை செய்யும்.

இந்தியாவை அசைக்கவே முடியாத சக்தியெனப் பூதாகரப்படுத்தி அதற்குள் தமிழ்த் தேசியவாதத்தைப் புதைக்கும் முயற்சிகளை தமிழ்த் தேசிய எதிர்நிலைவாதிகள் வேகமாகத் தொடர்கின்ற இந்த வேளையில், மேற்குலகின் நட்பும், ஆதரவும் மட்டுமே தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளன. இலங்கைத் தீவில் கால் பதித்துவிட்ட சீனாவுக்கும், இலங்கைத் தீவில் தான் பதித்த கால் வழுக்கிவிடாமல் இருப்பதற்காகத் தவிக்கும் இந்தியாவுக்கும் தமது மண் ஆடு களமாக அமைவதை இனிமேலும் தமிழீழ மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இலங்கைத் தீவில் இன முரண்பாடு கூர்மையடைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கு கால் பதிக்க வஞ்சகத் திட்டம் வகுத்த இந்தியா ஈழத் தமிழர்களை சிங்களத்திற்கான இரையாகப் பயன்படுத்தி வந்ததை தமிழீழ மக்கள் அத்தனை விரைவாக மறந்துவிட முடியாது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்கள் தோறும் இயங்கு சக்தியாக உள்ள மக்கள் பேரவைகளை பலப்படுத்துவதும்இ அதனுடன் அணி திரள்வதும் தமிழீழத்தையும், தமிழ்த் தேசியத்தையும் நேசிக்கின்ற அனைவரது கடமையாக இருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் பேரவாவாகவும் உள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்து விட்டது என்ற சிங்களத்தின் திமிர் அடக்கப்பட வேண்டும் எனில், அதன் மூலம் எமது மக்களும், எமது மண்ணும் மீட்கப்பட வேண்டும் எனில் புலம் பெயர் தமிழீழ மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். அதற்காகத் திறக்கப்படும் புதிய களங்களில் மக்கள் பேரவைகளுடன் இணைந்து புலம்பெயர் சமூகம் தமது போராட்டங்களை வேகப்படுத்த வேண்டும்.

Comments