புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். ஜனவரி 30 , 2010 அன்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ் சென்ற அவர் நல்லூர் முருகன் கோவில் சென்று வழிபட்ட பின்னர் யாழ் நூலகம் சென்ற அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து யாழ்ப்பாணத்தில் அரசு உத்தேசித்துள்ள வேலைத்திட்டங்களை அறிவித்தார்.

அவரின் அறிவிப்புக்களில் முக்கியமானது இரண்டு விடயங்கள், அதாவது அரசு மேற்கொள்ளவுள்ள வர்த்தக அபிவிருத்திகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டுமெனவும் மற்றது வெளிவிவகார அமைச்சின் உதவிக் காரியாலயம் ஒன்று நிறுவ இருப்பதாகவும் தெரிவித்தார். இக்காரியாலயம் புலம்பெயர் தமிழரின் தொடர்பைப் பேணி அவர்களுடன் நல்லதொரு உறவை வளர்க்கும் எனவும் அறிவித்தார். ஆனால் தமிழர் அரசியல் நோக்கர்கள் அரசின் இந்த நடவடிக்கையின் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்கள்.

அரசாங்கத்தின் சூழ்ச்சி என்னவென்றால் யாழ் பிரதேசத்தை வர்த்தக மையமாக அறிவிப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர் தங்களது பணத்தை யாழில் முதலிடுவார்களென்றும் பின்னர் அந்தப் பணத்தை அரசாங்கம் தமது பிற சுய வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமென்றும் அத்துடன் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை தமது வெற்றிக்கு இந்த நடவடிக்கையை சாதகமாக்கிக் கொள்ளலாமென்றும் நப்பாசையுடன் களம் இறங்கியிருப்பதாகவும் தமிழர் அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

அத்துடன் சிங்கள இனவெறி அரசு புலம்பெயர் தமிழருக்குள் ஊடுருவி பல நாசகார வேலைத்திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் மனங்களில் உள்ள தமிழ் ஈழ விடுதலைக் கனலை அணைத்து விடலாமென்றும் இதற்கு இப்படியான காரியாலயங்களை நிறுவி சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தமிழரின் மனங்களை வென்று வெளிநாடுகளில் வதியும் ஈழத்தமிழரின் செயற்பாடுகளை சிதைக்கலாமென்ற மமதையுடன் களம் இறங்கியிருக்கின்றார்கள் போலும்.

எதற்காக வெளிவிவகார அமைச்சர் வர்த்தகத்தை பற்றி வக்காளத்து?

வெளிவிவகார அமைச்சர் தனது இலாக்காவை விட ஏன் மற்றதொரு இலாக்காவான வர்த்தகத்தை பற்றி பேசியுள்ளார் என்று பல நோக்கர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள். அதாவது வெளிவிகார உதவிக் காரியாலயம் ஒன்றை யாழில் தொடங்குவதற்கு ரோகித்தவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் வர்த்தகத்தைப் பற்றி பேசுவதற்கோ செயல் நடவடிக்கையை அறிவிப்பதற்கோ அவருக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருந்தும் யாழில் வர்த்தக மேம்பாட்டை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர் உதவ வேண்டுமென அறிவித்திருப்பதன் நோக்கம் புலம்பெயர் தமிழருக்குள் தனது அமைச்சின் செல்வாக்கை பிரயோகிக்க முனைந்திருக்கின்றார் என்பது மட்டும் தெட்டத்தெளிவாக தெரி;கின்றது.

சிறி லங்கா அரசாங்கம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுகொண்டுள்ளது என்பது எல்லோரும் நன்கு அறிவார்கள். இதில் இருந்து மீளுவதற்கு பல நடவடக்கைகளை செய்யவேண்டியுள்ளது. மிக முக்கியமானதொன்று என்னவென்றால் தமிழினத்தை தமது தலைமையின் கீழ் கொண்டுவந்து உலக நாடுகளுக்கு தமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அறியப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் நற்பை சம்பாதிக்கலாமென்றும் பின்னர் பல கோடிக்கணக்கில் பணத்தை கடனாகவோ நன்கொடையாகவோ பெற்று தமது செல்வாக்கை நிலைநிறுத்தி பாராளுமன்ற தேர்தலிலும் தாம் வெற்றிபெற்று அரச நாற்காலியைத் தக்கவைத்து ஆட்சி புரியலாமென்ற முனைப்புடன் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதின் ஒரு வடிவமே இந்தப் பொருண்மிய அபிவிருத்தி நாடகம்.

உலக நாடுகள் பல சிங்கள அரச பயங்கரவாத ஆட்சியை வெறுத்தார்கள் என்றால் அது மிகையாகாது காரணம் மகிந்த அரசு தமிழருக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள். ஏன் ஐரோப்பிய ஒன்றியம் கூட பொருட்களுக்கான வரிச்சலுகையை நிறுத்தி தமது ஆட்சேபனையைக் காண்பித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை பல முனைகளில் இருந்து மகிந்த எதிர்கொண்டார். இருந்தும், அவர்களை அவமதித்து தனது இராணுவ நடவடிக்கைகள் மூலமாக இந்த நூற்றாண்டில் மனித குலமே கண்டிராத அவலத்தை அரங்கேற்றினார்.

பல வெளிநாடுகள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழிகளின் மூலம் தீர்வுகாணும்படி வற்புறுத்தியும் சிங்கள அடக்குமுறை அரசுகள் செவிசாய்க்காமல் விடுதலைப் புலிகளின் மீது பழியை போட்டுவிட்டு பயங்கரவாதத்திற்கான யுத்தம் புரிவதாக மார்தட்டி உலக சமூகத்தை முட்டாள்களாக்கினார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆயுத முனையிலான தற்காப்பு யுத்தத்தை செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் இந்த உலக சமுகத்தின் கண்மீது ஈழத்தமிழரின் போராட்டம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்தில் எவ்வாறு புலிகள் தமது கொள்கையில் திடமாக இருந்து பின்னர் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களின் பாதுகாப்புக்காகத் தமது ஆயுதத்தை மௌனிக்க செய்ததானது நிச்சயம் பல வெளிநாடுகளின் நற்பெயரை பெற்றுத்தந்தது என்றால் அது மிகையாகாது. இருந்தும் என்ன பலன்? சிங்கள ஆட்சி தமது இனச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்களை தொடந்தும் செய்துகொண்டுள்ளார்கள். இதற்கான களமே யாழில் நிறுவப்பட இருக்கும் வெளிவிகார அமைச்சின் உதவி காரியாலயம்.

தமிழ் இனத்தையே அழித்து முழுத் தீவையும் சிங்கள பௌத்த நாடாக கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் பூண்டிருக்கும் மகிந்தவிடம் எப்படி நாம் எமக்கு சார்பாய் செயலாற்றுவார் என்று நம்புவது. இந்த நடவடிக்கைகளுக்கு சோரம் போகும் தமிழர்களும் நிச்சயம் தமிழர் துரோக கும்பல் வழிப்பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பது தான் உண்மை.

வவுனியா வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 80,000 மக்கள் யாழ் கொண்டு செல்லப்பட்டு இன்றும் அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் தமது உறவினர் வீடுகளில் இருக்கின்றார்கள்; மற்றவர்கள் வெளி நிலங்களில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் முகாம்;களில் இருந்து விடுவிக்கும்போது அரசாங்கம் கூறியது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமது வாழ்வை மீழ ஆரம்பிக்க பணம் கொடுப்பதாக, ஆனால் இன்று வரை அரசாங்கம் ஒரு சதம் காசு கூட கொடுக்கவில்லை. ஆனால் உலக நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் தாம் இம்மக்களுக்கு பணம் கொடுப்பதாக. ஆக இதிலிருந்து தெரிகிறது இந்த இனவெறி சிங்கள அரசாங்கம் எப்படி தமிழரின் பொருளாதார வளர்ச்சியில் கரிசனை காட்டுவார்களென்று.

புலம்பெயர் தமிழர் சிங்கள சதி வலையில் சிக்குவார்களா?

யாழ்ப்பாணத்தில் வதியும் ஈழத்தமிழரில் பலர் தங்களுக்குள் நடக்கும் சதிவலைகளை கண்டும் காணாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. தமது இரத்த சொந்தங்கள் ஏதோ வெளிநாடுகளில் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் என்ற மாயையில் பல ஊதாரித்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உண்மை. அவர்கள் தங்கள் சொந்தங்கள் கடும் குளிரிலும் பலர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்து தமது குடும்பத்துடன் சில மணி நேரத்தையாவது கழிக்காது கடினமாய் உழைத்து பணத்தை தமது சொந்தங்களுக்கு அனுப்ப இவர்களோ பொறுப்பற்று செயலாற்றுகின்றார்கள் என்பது உண்மை. “எருமை ஈண முன் நெய்யுக்கு விலை பேசியது” என்ற பழ மொழிக்கு ஏற்ப தாயகத்தில் வாழும் தமிழர் பல வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இந்திய இராணுவம் அழித்துவிட்டுப் போன பின் சில மாதங்களில் தமது கட்டடங்களை நிர்மாணித்து செயல்பட, பின்னர் சிங்களவன் வந்து அதை அழித்து விட, பின் மீள கட்ட அவைகள் பின்னர் எப்போது அழியும் என்று தெரியுமுன்னரே தமிழரின் கெட்ட நடவடிக்கைகளில் ஒன்றான அதாவது ஒருவர் செய்யும் எந்தவொரு காரியத்துக்கும் மேலாக தனது இயலாமைக்கு எட்டாத நடவடிக்கையில் இறங்கி தன்னையும் அழித்து மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருந்து தமிழரின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பது போன்று இந்த சிங்கள அரசின் அறிவிப்புகளுக்கு நிச்சயம் தாயகத்தில் நிற்கும் சிங்கள ஆக்கிரமிப்பு ஆயுத படைகள் தமிழர்களின் ஆதரவை சில சலுகைகளின் ஊடாக அல்லது ஆயுதமுனையில் தம் பக்கம் இழுத்து வெளிநாடுகளில் வதியும் தமிழரை தம் வசம் கொண்டுவரலாம் என்று கணக்கு போட்டு செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இதற்கு புலம்பெயர் தமிழர் தமது ஆதரவை நல்கி தாம் இன்று வரை தாயக விடுதலைக்காக உழைத்த உழைப்பையும் கனவையும் ஈடு வைப்பார்களா என்பது தான் நமது மனங்களில் எழும் கேள்வி. புலம்பெயர் தமிழர் பல வேற்று இன மக்களுடன் பழகி தமது நோக்கங்களை ஒரு சிறு வட்டத்துக்குள் வைத்திருக்காமல் இன்று பரந்த மன ஓட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவர்கள் சிங்கள அரசாங்கத்தின் சதி வலையில் நிச்சயம் விழ மாட்டார்கள் என்று நம்பினாலும் சிலர் தமது தாயகத்தை வளப்படுத்துவதாக எண்ணி சிங்கள சூழ்ச்சி வலையில் சிக்கி தமிழினத்தை அடகுவைத்து அவர்களின் விடுதலையை முற்றிலுமாக இல்லாதொழிக்க உறுதுணையாக இருந்து விடக்கூடாது என்பது தான் நம் அனைவரினதும் அவா.

சிங்கள ஆட்சியாளர்களின் தந்திரோபாயங்களை முறியடிக்க வேண்டுமாயின் நிச்சயம் அது புலம்பெயர் தமிழரின் கைவசம் தான் உள்ளது. காரணம் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் சிங்கள அரசையே கடுகலங்க வைத்தது. ஏன் அவர்களின் நடவடிக்கைகள் இன்றும் ஒரு சின்ம சொர்ப்பனமாகவே சிங்கள அரசினால் பார்க்கப்படுகின்றது. மகிந்த மற்றும் அவரின் சகோதரர்கள் செய்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஒரு நாள் வஞ்சிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். இவர்களைக் கூண்டில் ஏற்றும் பலம் இந்த புலம்பெயர் தமிழர் வசம் தான் உள்ளது. ஆகவே மகிந்த தனது ஆட்சியில் தமிழரை தன் வசம் கொண்டு வர என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டார்.

மகிந்தவிடம் புரையோடிப் போயிருக்கும் கவலை என்னவென்றால் ஜனாதிபதியாக வந்தால் போதுமானதல்ல. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தான் வெற்றி கொண்டு தான் விரும்பியது போன்று வேலைத் திட்டங்களை கொண்டு வந்து தனது அரசியல் இருப்பை தக்கவைப்பது தான் அவரின் அவா. தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி எப்போது பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதென்று ஆலோசித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி தேர்தலை வைக்க தீர்மானித்துள்ளார்கள். பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டதாகக் கூறி தேர்தலை அறிவித்து வெற்றியும் ஈட்டிய கையுடன் பாராளுமன்றத்திற்கான தேர்தலையும் வரும் ஏப்ரல் மாதத்தில் நடாத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் மகிந்த காய் நகர்த்தலை மேற்கொண்டு உள்ளார்.

ஈபிடிபியின் திடீர் பல்டி

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கில் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்தவிற்கு கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்த சமூக சேவைகள் அமைச்சரும் ஈ.ப.pடி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். பின்னர் ஒரு நாடகத்தையே யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றினார் அதாவது இவரின் பதவி விலகலை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி சமூக அமைப்புகள் இணைந்து என்ற பொருள்பட இவரின் அடியாட்கள் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிய 24 மணி நேரத்திற்குள் ஒரு அறிக்கை விட்டார் டக்ளஸ்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜினாமா செய்யத் தீர்மானித்தனர். இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்."

மகிந்தவும் ரோகித்த போகொல்லாகமயை திடீரென யாழ்ப்பாணம் அனுப்பி ஒரு கல்லில் பல மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு அடியில் பல திட்டங்களுடன் யாழ் சென்று பல அறிவிப்புக்களுடன் டக்ளஸ்சையும் சந்தித்து தம்மோடு சேர்ந்து இயங்குமாறு வேண்டிக்கொண்டார். டக்ளஸ் மீண்டும் தனது வழமையான பல்டியடிக்கும் தொனியில் இன்னொரு அறிக்கை விட்டார்.

அதில் அவர் தனது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு, திட்டமிட்டவாறு மாநகர சபையின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றமுடியாமல் போனது. இதனையடுத்து, அரச தலைவர் தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்ற மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச அமைச்சர் டக்ளசின் ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பல வியூகங்களை வகுத்தார். ஈற்றில், அரச கூட்டணியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் மகிந்த படுதோல்வியடைந்தார்.

இந்நிலையில், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சிச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் பெரு வெற்றியடையப்போவதாக அவர் சூளுரைத்திருக்கிறார். இதேவேளை, ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பெப்ரவரி 5, 2010 - இலங்கையின் சுதந்திர தினத்திற்கு மறுநாள் - நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் வட்டாரத்தினால் நம்பகரமாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எது என்னவென்றாலும் ஒட்டுக்குழுக்கள் எப்பொழுதும் ஓட்டிக்கொண்டேயிருப்பார்கள், ஆனால் சிங்கள ஆட்சியாளர் புலம்பெயர் தமிழரின் மீது ஒரு பகிரங்கப்படுத்தாத ஒரு யுத்த களமுனையை திறக்க தீவிரமாக முனைப்பெடுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இதன் மூலம் எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தாயக கனவை தகர்த்தெறிந்து அவர்களின் ஒற்றுமையை உலக மட்டத்தில் சிதைத்து அவர்களுக்குள் உட்பூசல்களை ஏற்ப்படுத்தி தமிழ் இனமே தரம் கெட்ட இனமாக வர்ணிக்கவைத்து உலக சமூகத்திடம் இருந்து பிரித்து சிங்கள தேசம் உலக சமூகத்திடம் நற்பெயரைப் பெற்று மகிந்த அவர் தன் சகோதரர்களை மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து விடுதலை பெற முழு மூச்சுடன் இறங்கியிருப்பதன் ஒரு செயலே வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமயின் யாழ் பயணமும் யாழ்ப்பாணத்தை வர்த்தக மையமாக உருவாக்குவதென்பதும், அதன் நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக வெளிவிவகார உதவி காரியாலயம் யாழில் நிறுவுவதென்பதும். ஆக இந்த பயங்கர சூழ்ச்சியில் இருந்து தமிழர் விடுபடவேண்டுமாயின் இவர்களின் செயல்களை ஆரம்பத்தில் இருந்தே பகிஷ்கரிப்பது தான் ஒரே வழி புலம்பெயர் தமிழர் முன் உள்ளது.

அனலை நிதிஸ் ச. குமாரன

Comments