சிறிலங்காவில் போரும் அமைதியும்


உள்நாட்டுப் போர் முடிவுற்றாலும் எதிர்பார்த்த அமைதி சிறிலங்காவில் ஏற்படவில்லை முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் கடும் போர் நடத்திய பிரான்சும் ஜேர்மனியும் இன்று உறுதியான நட்பு நாடுகளாகி விட்டன இது போன்ற ஒரு நிகழ்வைச் சிறிலங்காவில் காணமுடியாது தமிழ்-சிங்களப் பகைமை பல நூற்றாண்டுக்குப் பழமை வாய்ந்தது மனதிலே பகை உதட்டிலே நட்பு என்ற அடிப்படையில் இரு பக்க உறவுகள் இடம் பெறுகின்றன சிறிலங்கா இனப்பிரச்சனை புற்று நோய் போன்றது அது மறைவது போல் இருந்து மீண்டும் தோண்றி விடும் தமிழர்களைத் தோற்கடிக்கும் நோக்குடன் ஒன்றிணைந்த சிங்கள இனத்தவர்கள் மத்தியில் போர் முடிந்ததும் வெடிப்புக்கள் தோன்றிவிட்டன சிங்கள ஒற்றுமைக்கு ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது.

அரசனைக் கவிழ்த்து அரியணையைக் கைப்பற்றும் சேனாபதி பற்றிப் புராண இதிகாசங்களில் படித்திருக்கிறோம் 21ஆம் நூற்றாண்டுச் சிறிலங்காவில் அது கிட்டத்தட்ட நடக்கும் வாய்ப்பு அண்மையில் தோண்றியது தமிழர்களுக்கு எதிரான போருக்கு தலைமை தாங்கிய தரைப்படைத் தளபதியும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா கடற்படைத் தலைமைச் செயலகத்தில் நிறுவப்பட்ட சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளர். எதிர்க் கட்சிகளோடு இணைந்து அரசுக்கும் சனாதிபதிக்கும் எதிராகச் செயற்பட்டார் என்றும் தனக்கு நெருக்கமான 36 இராணுவ அதிகாரிகள், முப்படைகளில் இருந்து தப்பியோடிய 400 வரையிலான விசுவாசிகள், ஜே.வீ.பீ கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் உதவியுடன் அரசைக் கைப்பற்றச் சதி செய்தார் என்றும் அவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

நடுநிலை நோக்கர்கள் பார்வையில் இவர் செய்த மிகப் பெரிய குற்றம் சனாதிபதி பதவிக்கான பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவை எதிர்த்துப் போட்டியிட்டதாகும் சிறிலங்கா பாரம்பரியத்தின்படி தமிழர்களுக்கு எதிரான போரில் சாதனை நிகழ்த்திய தளபதிக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவி வழங்கப்படுவது வழமை சரத் பொன்சேகா மரபுக்கு மாறாகத் தேர்தலில் போட்டியிட்டு வெகுமதி அளிக்கும் நிலையில் இருந்த சனாதிபதியின் மடியில் கை வைத்துவிட்டார். சனாதிபதி மகிந்தவின் இளவலான கோத்தபாயா ராஜபக்ச அரசின் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகிக்கிறார் தமிழர்களுக்;கு எதிரான போரில் ஈட்டிய வெற்றிக்குத் தானே முழுப் பொறுப்பு என்று பொன்சேகாவும் கோத்தபாயாவும் மோதிக்கொண்டனர் மோதலில் இளவலின் கை ஓங்கியதாக நம்புவதற்கு இடமுண்டு.

சரத் பொன்சேகாவின் இக்கட்டான நிலமைக்கு சர்வதேசப் பரிமாணமும் உண்டு தமிழர்களுக்;கு எதிரான போர் கருக்கட்டியவுடன் தளபதி சரத் பொன்சேகா இந்தியத் தலைநகர் புது டில்லிக்குத் திக் விஜயம் மேற்கொண்டார் அவருக்குச் செங்கம்பள வரவேற்பு உபசாரம் வழங்கப்பட்டது “இவர் தோற்பதை நாங்கள் விரும்பமாட்டோம்” என்று இந்தியத் தரைப்படைத் தளபதி வரவேற்பு உரையில் கூறினார் போருக்கான இரகசியத் திட்டங்கள் அச்சமயத்தில் தீட்டப்பட்டன கொம்பு சீவி விடப்பட்ட பொன்சேகா இந்தியா வகுத்த திட்டத்தின் அடிச்சுவட்டில் போரை முன்னெடுத்தார் நேரம் தவறாமல் உறுதி மொழி வழங்கப்பட்ட உதவிகளும் வந்து சேர்ந்தன வெற்றியும் கிட்டியது.

ஜெனரல் பொன்சேகாவின் பிள்ளைகள் அமெரிக்கவில் குடியேறியுள்ளனர் குடியுரிமை வழங்கப் படாவிட்டாலும் பச்சை அட்டை எனப்படும் குடியுரிமைக்கான முதற்கட்ட அனுமதி சரத் பொன்சேகாவிக்கு வழங்கப்பட்டுள்ளது அமெரிக்கா சென்று திரும்பும் உயர்ந்த சலுகையையும் அவர் பெற்றுள்ளார் கோத்தபாயா ராஜபக்ச ஒரு முழு அளவு குடியுரிமை பெற்ற அமெரிக்கராவார் மகிந்தரின் இன்னுமோர் இளவலான பசில் ராஜபக்ச ஜெனரல் பொன்சேகா போல் பச்சை அட்டை அந்தஸ்துப் பெற்றிருக்கிறார் மகிந்தரின் முத்த ஆலோசகர் அரச தேவைகளுக்காக இந்தியாவிக்கு நியமனம் பெறாத தூதராகச் செல்பவர் என்ற பதவிகள் பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு எதிரான போரின் போது சிங்கள இராணுவம் புரிந்த பாரியளவு மனித உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் சிவிலியன் படுகொலைகள் போன்றவற்றிக்காக இராணுவப் பொறுப்பதிகாரிகள் மீதும் அரசுத் தலைமை மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வலுவான குரல் அமெரிக்காவில் எழுந்தது சனாதிபதி ராஜபக்ச கோத்தபாயா ராஜபக்ச சரத் பொன்சேகா ஆகியோர் சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரலும் எழுந்தது அமெரிக்கா குடியுரிமை பெற்றவர்கள் பிற நாடுகளில் புரியும் மனித உரிய மீறல்களுக்கு விசாரணையின் பின் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசின் உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் சரத் பொன்சேகா துணிவே துணை என்று அமெரிக்கா சென்றார் அவர் நிட்சயம் கைது செய்யப்படலாம் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் எதிர்ப்பார்த்தனர் அவர் சிறிலங்கா திரும்புவதற்கு அனுமதிக்கப்படமாட்டார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது ஆனால் நடந்தது வேறு விதமாக இருக்கிறது அவர் அமெரிக்க அதிகாரிகளுடன் நட்புறவு அடிப்படையில் பேசி விட்டு மிகக் குறுகிய காலத்தில் நாடு திரும்பினார் அதன் பின்புதான் அவர் தேர்தலில் நிற்கப்போவதாகத் தகவல் வெளியிட்டார் மனித உரிமைகள் போர் குற்றங்கள் சிவிலியன் உயிரிழப்பு பற்றிப் பேசிய அமெரிக்கா அரசு சரத் பொன்சேகாவை திரும்பிச் செல்ல அனுமதித்ததை ஒரு நிகழ்கால அரசியல் மர்மமாகக் கருத வேண்டும்.

இரண்டாவது தடவையாக சனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் ஆசியைப் பெற்றவர் என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றவர் என்றும் தேர்தல் காலந்தொட்டு இன்று வரை பேசப்படுகிறது அமெரிக்க அரசு சிறிலங்கா மீது தொடுக்கும் கண்டனக் கணைகள் இக் கூற்றை மெய்ப்பிக்கின்றன பொன்சேகாவைக் கைது செய்வதற்கும் தடுத்;து வைத்திருப்பதற்கும் பொருத்தமான குற்றத்தை அவர் செய்யவில்லை என்றும் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா விடுக்கும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன எனது கணவரின் உயிருக்கு ஆபத்து என்று பொன்சேகாவின் மனைவி அனோமா அலறியதின் எதிரொலியாகவும் இது இருக்கலாம்

தமிழர்களின் தோல்விக்கு உதவியதற்கு நன்றிக் கடனாக மகிந்த ராஜபக்ச அரசு தமது சொற்படி நடக்கும் என்று புது டில்லி வெளிவிவகார அமைச்சகத்தின் தென் மாடித் தொடரில் பணியாற்றும் மலையாள இராசதந்திரிகள் போட்ட கணக்கு பொய்த்துவிட்டது. சீனப் பிரசன்னம் உறுதியாக இருக்கிறது மகிந்த ராஜபக்ச ரசியா சென்று திரும்பியுள்ளார் கொத்துக் குண்டுகள் இரசாயன விசவாயுக் குண்டுகளைச் சலுகை விலை அடிப்படையில் வழங்கியதற்காக நன்றி கூறுவதற்கு மகிந்த ராசபக்ச இப்பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் இதுவரை நடந்தவற்றைப் பார்க்கும் போது சிறிலங்காவின் கையோங்கியது போலவும் சிறிலங்காவின் போக்கிற்கு இந்தியா எல்லா வகையிலும் அனுசரணையாக இருப்பது போலவும் தோன்றுகிறது தமிழர்களின் தோல்வியை உறுதிசெய்ய உழைத்த இந்திய பாதுகாப்புச் செயலர் எம். கே நாராயணன் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருடைய இரட்டையரான சிவசங்கர் மேனன் நாராயணனின் பதவியில் அமர்தத்ப்பட்டுள்ளார் இந்தியாவின் கையறு நிலையைக் காட்ட இது போதுமானதாக இருக்கிறது.

தமிழர்களுக்கு அவலத்தைக் கொடுத்த சரத் பொன்சேகாவிற்குத் தேர்தலின் போது வடகிழக்குத் தமிழர்கள் கணிசமானளவு சாதகமாக வாக்களித்துள்ளனர் நம்புவது கடினமாயினும் இது உண்மை தமிழ்ப் போராளிகளைக் கண்டு எல்லைப் புறக்கிராமச் சிங்களவர்கள் ஓடிய காலம் போய் தமிழர்கள் ஓடவேண்டிய காலம் வந்துவிட்டது என்று கூறியவர்தான் இந்தப் பொன்சேகா 2002 பெப்பிரவரி 22ஆம் நாள் தேசியத் தலைவர் பிரபாகரனும் சிறிலங்கா பிரதமர் றணில் விக்கிரமசிங்கவும் நோர்வே மத்தியட்சத்தில் உருவான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திட்டனர் போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை என்பன இந்த அமைதிக்கான உடன்படிக்கை மூலம் உருவாகின இந்த உடன் படிக்கை உடைவுக்கு முதலடி கொடுத்தவர் சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன் படிக்கை செயலிழப்பதற்கு அவரே முழு முதற் காரணியாவார்.

அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் 3,340 சதுர மைல்பரப்புக் கொண்ட வட மாகாணத்தின் 15 வீத நிலப்பரப்பு சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது தமிழர்கள் தம் குடியிருப்புக்கள் விவசாய நிலங்கள் நீர் நிலைகள் மேச்சல் தரவைகள் உல்லாசப் பயணிகளுக்கான நகரப்புற விடுதிகள் என்பன இதிலடங்கும் பலாலி வசாவிளான் போன்ற செம் மண் நிலத்தில் தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்களத் தொழிலாளர்கள் இராணுவத்தின் உணவுத் தேவைக்காக விவசாயம் செய்கிறார்கள் புரிந்துணர்வு உடன் படிக்கையின் பின் இழந்த நிலத்தை மீளப் பெறலாம் என்ற நப்பாசை தமிழர்களுக்கு இருந்தது ஒரு அங்குல நிலத்தையேனும் திருப்பித்தர முடியாது என்று அப்போது யாழ் குடாத் தளபதியாகப் பதவி வகித்த பொன்சேகா அடம் பிடித்தார் முதற் கோணல் முழக் கோணலாக மாறியதோடு போரும் வந்தது.

இன்று சிங்கள தேசம் கொதி நிலையில் இருக்கிறது பொருளாதார வளர்ச்சி குன்றி விட்டது பங்குத் சந்தைச் சுட்டெண் கீழ் நோக்கிச் சரிகிறது அந்நிய நேரடி முதலீடுகள் நின்று விட்டன ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை காலமும் வழங்கிய வர்த்தகச் சலுகையை நிறுத்தி விட்டது ராசபக்ச சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராக பேரணிகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பரவலாக நடக்கின்றன போருக்கென்று ஊட்டி வளர்க்கப்பட்ட இராணுவத்தில் பொன்சேகா அணி கோத்தபாயா அணி என்ற சேனைகள் உருவாகிவிட்டன நாடு பிரியும் கட்டத்தை நெருங்கிவிட்டது என்று ஒரு அமெரிக்க அரசறிக்கை கூறுகிறது.

இது தமிழர்கள் அஞ்சி ஒடுங்க வேண்டிய காலம் சிறிலங்காவை விட்டு வெளியேறும் தமிழர்கள் எண்ணிக்கை அண்மையில் உயர்ந்துள்ளது 1977ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் மோதிக்கொண்டனர் இறுதியில் இரு பகுதியினரும் இணைந்து தமிழர்களைத் தாக்கத் தொடங்கினர் இன்னும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் செட்டிக்குள தடுப்பு முகாமில் உள்ளார்கள் பெருந்தொகைனினர் தெற்கில் கடின வாழ்வு நடத்துகின்றனர் சிறிலங்காவைப் பொறுத்தளவில் போருக்குப்பின் அமைதி என்ற சொற்றொடர் பொருத்தமற்றது.

- க. வீமன்

Comments