திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!!


தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை சட்சத்திரங்கள் கண்முன்னே உதிர்ந்து வீழ்ந்துவிட்ட காட்சிக்குப் பின்னர் நம்புவதற்கு எதுவுமற்றவர்களாக, நடை பிணங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அரசியல் தளத்திலும் தற்போது அவ நம்பிக்கைகளே அதிகரித்துச் செல்லுகின்றது.

ஆயுத பலத்தை நம்பி அணிவகுத்த அந்த மக்கள் அரசியல் பலத்தையும் தொலைத்து விடுவோமோ? என்று அங்கலாய்க்கின்றனர். ஈழத் தமிழர்களின் அரசியல் சக்தியாக முள்ளிவாய்க்கால் வரை முன்னின்று போராடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தடுமாற்றம் கொண்டு திசைமாறிச் செல்ல முற்படுகின்றது. அதை எப்படித் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்தப் போகின்றோம் என்ற அங்கலாய்ப்புடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள்திகைத்துப் போய் நிற்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக அல்ல, நான்காகப் பிளவுபட்டுப் போய்விட்டது. அந்த மூன்று அணிகளும் தற்போது களத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று மோதுகிறார்கள்.

கிஷோரும், தஙகேஸ்வரியும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திசையில் பயணித்து, தமிழினப் புடுகொலைகளை நிகழ்த்தி முடித்த ராஜபக்ஷக்களிடம் ஐக்கியமாகிவிட்ட கொடுமையும் அரங்கேறிவிட்டது. முள்ளிவாய்க்காலில் கைதாகி, சிறைப்பட்டுக்கிடந்த கனகரத்தினம் உயிரோடு வெளியே விட்ட ராஜபக்ஷவின் கருணைக்கு நன்றிக்கடனாக, அவரது காலடியே தஞ்சம் என்று அதில் ஒன்றாக மாறிவிட்டார்.

ஆனால், சம்பந்தன் அவர்களால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க மறுக்கப்பட்டவர்களான கஜேந்திரன், பத்மினி ஆகிய இருவரும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது, நியாயமற்ற கூட்டமைப்புத் தலைமையின் முடிவை எதிர்த்து அதிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகக் களம் இறங்கியது தமிழ் மக்களது அரசியல் பல இழப்பிற்கு அடி கோலியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமது முடிவையும் மீறித் தனித்துப் போட்டியிட்டார் என்ற குற்றச்சாட்டுடன் திரு. சிவாஜிலிங்கம் அவர்களும், அவருக்குத் துணை போனார் என்ற குற்றச்சாட்டுடன் திரு. சிறிகாந்தா அவர்களும் கூட்டமைப்புத் தலைமையினால் நிராகரிக்கப்பட்டு, தனியாகக் களம் இறங்கியுள்ளார்கள்.

கடந்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு தலைவர் திரு. சம்பந்தரிலும் பார்க்க அதிக விருப்பு வாக்குக்களைப் பெற்ற திரு. கஜேந்திரன், திருமதி பத்மினி ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை ஒரு விவேகமான செயல் என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மக்களிடம் இவர்களுக்கு செல்வாக்கு இல்லை. அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் அவர்கள் போட்டியிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று திரு சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. உண்மைக்குப் புறம்பானது. அப்படியானால், திரு. சம்பந்தனை அவரது தொகுதியில் போட்டியிடுமாறு எந்த மக்கள் போர்க் குரல் எழுப்பினார்கள்? அல்லது, போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரது தகுதி, நேர்மை, துணிவு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு என்பன குறித்த அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதா? என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் வரை புலிகளின் ஊதுகுழலாக மட்டுமே பணியாற்றிய சம்பந்தர், முள்ளிவாய்க்காலின் பின்னர் புதிய எஜமானர்களைத் தேடி இந்தியாவுக்கு ஓடிச் சென்றதைத் தவிர எதைச் சாதித்தார் என்று பட்டியலிட்டுக் கூறவேண்டும். விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்த காலத்தில், 2008 மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் சம்பந்தர் அவர்களே தமிழ் மக்களுக்காகப் போராடுங்கள் என்று அவர் தலையிலோ, ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தலையிலோ புனிதங்களைச் சமர்ப்பிக்கவில்லை. மறாக, புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள், புலம்பெயர் இளையோரே போராடுங்கள் என்றே போர்க்களத்தை புலம்பெயர் தேசங்களுக்கு நகர்த்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் தேசியத் தலைவர் அவர்களது அந்த வார்த்தையைக் கட்டளையாகக் கொண்டு பல அதிசயங்களை நடாத்தி வருகின்றார்கள். உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிரவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். புலம்பெயர் சமூகத்துடன் சிங்கள தேசம் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இத்தனையும் புலம்பெயர் தேச மக்கள் நடாத்திக் காட்டி, இன்னமும் தொடர்ந்து செல்கிறார்கள். இத்தனை பலமான புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளவோ, எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றிய கலந்தாடல்களை நடாத்தவோ கூட்டமைப்பின் தலைமை முன்வராததன் காரணம் எதுவென்பது புரியவில்லை.

ஈழத் தமிழினம் மூன்று அணிகளாக உள்ளது. ஒன்று போர்க் களத்தின் புலிகள், இரண்டாவது அந்த நெருப்புத் தேசத்தில் இன்றும் இருப்புக்களை நிலைநிறுத்திவரும் தமிழீழ மக்கள், மூன்றாவது புலம்பெயர் தமிழர்கள். இந்த மூன்றினதும் அரசியல் சக்தியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை விடுத்து, அவர்கள் ஒரு தனித் தீவாகப் பயணிக்க முற்பட்டால் முகவரி இழக்கும் பரிதாப நிலைக்கு வந்த ஆனந்தசங்கரியின் நிலமைதான் சம்பந்தருக்கும் வரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் இருக்கும். அதில் மக்கள் இருக்கமாட்டார்கள்.

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. சம்பந்தர் அவர்கள் கடந்த காலங்களையும் மறந்துவிட்டிருக்கமாட்டார். எனவே, சிங்கள தேசத்தால் சிதைக்கப்பட்ட அந்த சந்தனப் பேழைகளின்மீது நீங்கள் செய்த சத்தியத்தை மறக்க வேண்டாம். உயிர் வாழ்தலுக்காகப் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் திசை நோக்கி ஈழத் தமிழர்களைத் திசை திருப்ப வேண்டாம். எங்களுக்காகப் பேசவும் ஒரு உலகம் திரண்டு வருகின்ற போது உங்களுக்காக அந்த மாவீரர்களின் தேசியக் கனவைச் சிதைக்காதீர்கள். அதை எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்! தமிழீழ மக்களோடும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடும் கஜேந்திரகுமாரோடும், செல்வராஜா கஜேந்திரனோடும், பத்மினி சிதம்பரநாதனோடும், மனோ கணேசனோடும், ஹக்கீமோடும் வெளிப்படையாகப் பேசுங்கள். அவர்களுடன் பேச முடியாவிட்டால், சரத் பொன்சேகாவுடன், சோனியா காந்தியுடன், மன்மோகன் சிங்குடன் எப்படி உங்களால் பேச முடிகின்றது? நம்மவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முடியாவிட்டால், அடுத்தவனிடம் எப்படிச் சமரசம் பேச முடியும்?

போதும்!

ஈழத் தமிழினம் துரோகங்களால் அழிந்தது போதும்!!

நிறுத்துங்கள்! எல்லோரும் நிறுத்துங்கள்!!

நான் பெரிது நீ பெரிது என்று நினைக்காமல் நாடு பெரியது என்று நினையுங்கள்.

எல்லாவற்றிற்கும் தீர்வு உடனேயே கிடைத்துவிடும்,

பாரிஸ் ஈழநாடு.

Comments