புலம்பெயர் தமிழர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைப் புதிராளி திரு. காந்தன் அவர்களுக்கு!

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் யாரும் யாரையும் முழுமையாக நம்புவதற்குத் தயாராக இல்லை. இதில் கூட்டமைப்பினரும் விதிவிலக்காக இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய அவசியம். அந்த மக்களுக்காக அரசியல் நடாத்தப்போவதாக முன் நிற்பவர்கள் அக்கினிப் பிரவேசம் செய்து தங்கள் தூய்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளால் எழுந்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும்வரை, என் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பேசாமல் தூங்கிக்கொண்டிருக்க முடியாது.

இந்த அரசியல் போர்க்களத்தில் நாங்கள் எந்தப் பக்கமும் சாய்ந்துவிடவில்லை. அதற்கான எந்தத் தேவையும் எங்களுக்குக் கிடையாது. எனது அண்ணனோ, மைத்துனனோ, மாமாவோ, சித்தப்பாவோ இந்தப் போர்க் களத்தில் களம் இறங்கவும் இல்லை. யாருக்காகவும் வக்காலத்து வாங்கி ஈழத் தமிழர்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலில் புதைக்கும் ஈனத் தனத்தையும் நடாத்த முடியாது. எமக்குத் தெரிந்தது தமிழ்த் தேசியம் மட்டுமே. எமக்கு உறவானவர்கள் தமிழீழ மக்கள் மட்டுமே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களைப் போலவே, கேள்விகள் தொடுத்தால், அந்தக் கூட்டத்தில் உள்ள அத்தனைபேருக்கும் கோபம் மட்டுமே வருகின்றது. நாங்கள் கஜேந்திரன் குழுவினருக்காக முழுநேரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் கிளப்பப்படுகின்றன. ஆனாலும், கேள்வி கேட்கும் எமது உரிமையை யாரும் நிராகரிக்கவும் விடமாட்டோம். பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலிருந்து நீங்கள் விலகிச் செல்லவும் விடப் போவதில்லை. இது உங்களுக்கும், எங்களுக்குமான சத்திய சோதனை. எனது கட்டுரைகளுக்குத் தொடர்ந்து பதிலளித்து வரும் தங்களது விளக்கத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாகக் கருதி, இந்தப் பதிலுக்கும் பதிலுரைக்க விளைந்துள்ளேன்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பது, இந்தியாவின் தலையீட்டினை இல்லாமல் செய்வது என்ற இரண்டு இலக்கினைநோக்கி ஒரே வியூகத்தினை அமைத்துவருகிறது மகிந்த அரசு. தமிழ்மக்கள் இன்று தமது பரம எதிரியாக நோக்குவது இந்தியாவை. ஆனாலும் இந்தியாவின் தலையீடு காரணமாக ஒரு சில உரிமைகளையாவது தமிழ்மக்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை வந்துவிடுமோ என்பது மகிந்தவின் பீதி. எனவே இந்தியாவினையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினையும் தொடர்புபடுத்துவதன் மூலம் இந்த இரண்டு இலக்கினையும் ஒரே நேரத்தில் சாதித்தவருகிறது." என்ற உங்கள் வாதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாரும் வெளியில் இருந்து வந்து உடைக்கவில்லை. அப்படியான அவசியத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்படுத்திக் கெடுக்கவும் இல்லை.

இந்தியா குறித்த தங்கள் கருத்து, இந்தியா மீதான தங்களது விசுவாசத்தை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றது. இன்றுவரையான முப்பது வருடங்களுக்கும் மேலான இந்தியத் தலையீட்டால் ஈழத் தமிழர்கள் பெற்றதைக் கொஞ்சம் பட்டியலிட்டுக் காட்டினால் நாங்களும் உங்கள் வளியில் இந்தியத் தாசர்களாக மாற்றம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்தியா எமது பிரச்சினையில் தலையீடு செய்ய ஆரம்பித்த காலத்தை 1983 இற்கும் முன்பாக... எழுபதுகளின் பக்கம் ஒருக்கால் திரும்பிப் பாருங்கள். அப்போதெல்லாம் எங்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள சிறீயை எதிர்த்தோம், தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தலை எதிர்த்தோம், கட்டாய சிங்கள மொழியறிவை எதிர்த்தோம். அவ்வளவும்தான் எங்களுக்கு இருந்த பிரச்சைனைகள். சிங்களத்தின் பகையை வெல்லப்போவதாக இந்தியாவின் கைகளில் துள்ளிக் குதித்த பின்னர்தானே இத்தனை அவலங்களும்? இன்னுமொருக்கால் இந்தியாவின் தலையீட்டைத் தாங்கும் அளவிற்கு இன்று தமிழீழம் இல்லை என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

"விடுதலைப்போராட்டத்திற்கான எவ்வளவோ சவால்களும் பொறு்பபுக்களும் எம் பின்னே இருக்கும்போது பரீஸ் ஈழநாடு போன்ற சில ஊடகங்கள் இந்திய எதிர்ப்பு மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரங்கள் என்ற இரண்டை மட்டும் தமது கடமையாகக்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரன் குழுவினருக்காக தமது முழுநேர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருப்பது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது." கூட்டமைப்பை நோக்கிக் கேள்வி கேட்பதும், சந்தேகங்களைத் தெரிவிப்பதும், அதில் எட்டப்படும் தெளிவுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும்தான் நடுநிலையான ஒரு ஊடகத்தின் பணி என்பதை எப்போது ஏற்றுக்கொள்வீர்கள்? நீங்கள் கூறும் கஜேந்திரன் குழு மீது குற்றச்சாட்டை வையுங்கள். அதற்கும் பதில் பெற்றுத் தருகின்றோம்.

"விடுதலைப்புலிகளின் பின்னடைவின் பின்னராக தமிழ்மக்களின் ஒரே குரலும் பலமுமாக இருப்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. விடுதலைப்புலிகளுக்கு எதிரான குழுக்களின் மூலமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான செயற்பாடுகள் வெற்றிபெறாக காரணத்தினால் தற்போது தமிழ்த்தேசியத்திற்காக குரல்கொடுத்தவர்களையே பயன்படுத்திக்கொள்வதிலும் வெற்றிகண்டு வருகிறது மகிந்த அரசு." என்ற தங்களது கருத்துப்படி பார்த்தால், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இன்றுவரை காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரலும், பலமும் எங்கே ஒலித்தது? எதைச் சாதித்தது? என்று எங்களுக்கும் கொஞ்சம் கூறுங்களேன். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், முள்வேலி முகாம்களுக்குள் மூன்று இலட்சம் மக்கள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட போதும் மகிந்தவிடம் வரம் கோரி நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமை வெற்றி கொள்ள மகிந்தவுக்கு யாருமே தேவையில்லை என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்?

"இறுதியுத்த காலத்தில் உயிரச்சம் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களில் முக்கியமானவர்கள் ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரன் ஆகியோர். இதில் கஜேந்திரன், தனது சகோதரனை விடுவிப்பதற்காக மகிந்த அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு சென்றதும் அங்கு மகிந்த அரசுக்கு எதிராக குரல்கொடுக்காததும் ஊகமாகவே இருக்கட்டும். உயிரச்சம் காரணமாக ஜெயானந்தமூர்த்தி இங்கு வர முடியாத நிலையிலும் சிவாஜிலிங்கமும் கஜேந்திரனும் மட்டும் எவ்விதபிரச்சினைகளும் இன்றி எப்படி திரும்பி வந்தார்கள் என்பதும் ஊகமாகவே இருக்கட்டும்." ஊகத்தின் அடிப்படையிலான தங்களது அனுமானங்களுக்கு ஆண்டவனாலும் பதில் தரமுடியாது என்பதால், இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்குயார்தான் தடை போட்டுவிட முடியும்?

"ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம களமிறக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக கஜேந்திரன் களமிறங்க காரணம் என்ன? அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக இவர்களை இறக்கும் கைங்கரியத்தை செய்பவர்கள் யார்? இதற்கு இலகுவாகவே பதில் காணலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை சிதைப்பதன் மூலம் நன்மையடைபவர் யார்? அவர்தான் மகிந்த ராஜபக்ச. அப்படியானால் சிவாஜிலிங்கமும் கஜேந்திரனும் மகிந்த ராஜபக்சவுக்கு துணைபோகிறார்களா என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் ஊகமாகவே இருக்கட்டும்." திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கட்சியின் முடிவை மீறி சிறிலங்காவுக்கான அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் என்ற உங்களுக்கேயான உங்களது நியாயமான குற்றச்சாட்டுக்குள் நாங்கள் பிரவேசிக்க முடியாது. அதற்கான விளக்கம் அவரால் மட்டுமே தரப்பட முடியும். ஆனால், திரு. கஜேந்திரன், திருமதி பத்மினி ஆகியோர் கூட்டமைப்பின் தலைமையால் நியாயமான எந்தக் காரணமும் இல்லாமல் தேர்தல் களத்திலிருந்து அகற்றப்பட்டதும், அதன் நிதிர்த்தமாக கஜேந்திரகுமார் வெளியேறியதும் ராஜபக்ஷவின் முடிவல்ல. இது குறித்து கூட்டமைப்பின் தலைமை நியாயமான எந்தக் காரணத்தையும் முன் வைக்காததால், கூட்டமைப்பின் மீதான ஈழத் தமிழர்களின் சந்தேகம் வலுவடைந்தே செல்கிறது.

"விடுதலைப்புலிகளினால் பிரதிநிதித்துவப்பட்டவர், அவர்களோடு இருந்தவர் தற்போதும் தமிழீழம், தமிழ்த்தேசியம் என்று குரல்கொடுப்பவருமாகிய கஜேந்திரன் மகிந்தவின் அடிவருடியா? நம்பமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இதே தமிழீழம், தமிழ்த்தேசியம் என்ற அடிப்படையில் மகிந்தவினால் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டவர்தான் சிவாஜிலிங்கம். தேசியத்தலைவரோடு ஒன்றாக இருந்து ஒன்றாக சாப்பிட்ட ஒரு மூத்த போராளி கருணா, பிரிந்து செல்லும்போது தேசியத்தலைவருக்கெதிராகவும், மூத்ததளபதிகளுக்கெதிராகவும் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு அளவில்லை. ஆனாலும் அப்போதும் தமிழீழம், தமிழ்த்தேசியம் என்று குரல்கொடுத்தவர்தான். கருணாவே தமிழ்த்தேசியத்திற்கெதிராக செயற்பட்டபோது கஜேந்திரன் எம்மாத்திரம்." என்ற தங்களது வாதத், குற்றச்சாட்டுகளை எதிர்த் திசைக்குத் திருப்பிவிடும் அடிப்படையை மட்டுமே கொண்டுள்ளது. உங்கள் தரப்பின் மீதான குற்றச்சாட்டிற்கு, அவர் எங்களையும் விடக் கூடாதவராக இருக்கக்கூடும் என்றொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஊகத்தின் அடிப்படையில் தெரிவிப்பது நேரான பாதையாக இருக்காது என்பதே எனது கணிப்பு.

"மகிந்தவைப்பொறுத்தவரை தமிழ்மக்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எதிரான அவருடைய ஆயுதங்கள் விடுதலைப்புலிகளின் எதிரிகள் இல்லை. விடுதலைப்புலிகளுடன் ஆளமாக இருந்தவர்களே இன்று தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ராம் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதும் கேபீ என்ன செய்கிறார் என்பதும் எமக்கு தெரியாததல்ல. ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் கனகரத்தினம் எம்பி என்பதும் நாம் அறிந்ததே. அப்படியாயின் கஜேந்திரன் இப்போது மகிந்தவின் ஆயுதமாக பயன்படுத்தப்படமாட்டார் என்பதை ஊகமாக கொள்ளலாமா?" என்ற ஊகங்கள் உங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கா காரணமாகக் கொள்ள முடியாது.

"கிறீஸ்த்தவ வேதத்திலே கிறீஸ்த்து மீண்டும் வருவார் என்றும் ஆனால் அதற்கு முன்பாக தான்தான் கிறீஸ்த்து என்றும் தாங்கள் தான் கிறீஸ்த்துவின் பிரதிநிதிகள் (கள்ள தீர்க்கதரிசிகள்) என்றும் பலர் வந்து கிறீஸ்த்துவுக்கு எதிராக செயற்படுவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதே விதமாகவே இன்று நாங்கள் தான் விடுதலைப்புலிகள் என்றும் நாங்கள் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்றும் பலர் தமிழ்மக்களை குழப்புவதற்காகவும் அவர்களுடைய ஒற்றுமையினை சிதைப்பதற்காகவும் புறப்பட்டுள்ளார்கள்." என்ற உங்களது அலட்டல்களை அப்படியே விட்டுவிடுவோம்.

"எல்லா இன்னல்களுக்குள்ளாகவும் கடந்து வந்த ஈழத்தமிழ்மக்களாகிய நாம் இப்போது ஒற்றுமை என்கின்ற ஒரேயோரு ஆயுதத்தினையே மட்டுமே எமது பலமாக கொண்டிருக்கின்றோம். அதனைக்கொண்டே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதனை அழிப்பதற்காக எதிரியானவன் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறான். விடுதலைப்புலிகளை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்த தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்டது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. அதனையும் அதன் தலைமையினையும் இல்லாதொழி்பபதே இப்போது எதிரியின் ஒரே இலக்கு. அதற்காக அவன் பயன்படுத்தும் ஆயுதம் விடுதலைப்புலிகளுடன் ஆழமாக இருந்தவர்களே. அவர்கள் யார் என்பதை அறிய அவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியமில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்." என்ற கருத்தில் விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் ஆதரவுத் தளமான தமிழீழ மக்களையும் அழிக்கும் வியூகத்தை வகுத்துக் கொடுத்ததும், பின் நின்று அந்தப் போரை நெறிப்படுத்தியதும், அங்கே போர் நிறுத்தம் ஒன்று உருவாகிவிடக் கூடாது என்ற தீர்மானத்துடன் மேற்குலகின் தலையீடுகளை எதிர்த்ததும் இந்தியா தான் என்பது உலகத்தில் அத்தனை மனிதர்களுக்கும் தெரிந்திருக்க, இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழீழ மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கும், மாவீரர்களுக்கும், அந்த மண்ணில் தமிழீழக் கனவோடு விதையாகிப் போன மக்களுக்கும், அதையும் தாண்டி ஊனமுற்று, மவுனமாகிப்போன தமிழீழ மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டதாகவே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நம்புகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் துரோகிகள் ஊடுருவி இருந்தார்கள் என்பது உண்மையே தவிர, இன்றும் விடுதலைப் புலிகளாக வாழ்பவர்கள் அனைவரையும், உங்களைக் கேள்வி கேட்பவர்களையும் துரோகிகள் என்று கணக்கிடுவது உங்களுக்கு அழகானதல்ல.


Comments