ஆசியாவின் மாதிரி சர்வாதிகார ஆட்சி முறைமைக்கான தேர்தல்கள்


தற்போது நடைபெறுகின்ற தேர்தல்கள் வலிந்து நடைமுறைப்படுத்தப்படும் திசை திருப்பும் தந்திரோபாயங்கள் என்றாலும், இந்த சூதாட்டம் எதைநோக்கி செல்கிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டால், தமது அபிலாசைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஈழத் தமிழ் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

தமிழ்த் தேசியக் கொள்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடானது ஒரு பகுதி வாக்காளர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாகும் சவால்களின் மூலமே தமிழீழ மக்களைப் பிரிப்பதற்கு புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளை இல்லாமற் செய்ய முடியும் என்று கூறுகிறார் தமிழ் நெற் இணையத் தளத்தின் கொழும்பு அரசியல் ஆய்வாளர்.

அந்த அரசியல் ஆய்வாளர் மேலும் கூறுவதாவது,

ஏப்ரல் 8நாள் இடம்பெறவுள்ள சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 31 ஆசனங்களுக்காக ஏறத்தாழ 1813 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உண்மையில், சிறிலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகளால் தமது சொந்த நிலங்களிலேயே வேட்டையாடப்பட்டு, மூடிய சிறைகளில் அடைக்கப்பட்டு வதைபடுகின்ற மக்களிடமிருந்து வாக்குகளைச் சூறையாடுவதில் வேட்பாளர் படையொன்று ஈடுபடுகின்றது.

தமிழ் மக்களின் அரசியலுக்கு, இவ்வாறு வேட்பாளர் பெருந்தொகையாக தேவையில்லை. தேர்தல்களையோ, இனக்கொலை அரசின் பாராளுமன்றத்தையோ பற்றி அதிக அக்கறை காட்டாத ஒரு புதிய தலைமுறைதான் தமிழர்கள் தங்களது அரசிலைத் தாமே வடிவமைத்துக் கொள்வதற்கு இப்போது தேவை.

ஆனால், தற்போது தொடர்ச்சியாக நடைபெறும் தேர்தல்கள் தமிழ் மக்களுக்காகவோ அல்லது அவர்களின் நலன்களுக்காகவோ நடாத்தப்படவில்லை என்பதை அனைவரும் அறிவர்.

அந்த தேர்தல்களின் நோக்கம்,

அ) "வெற்றியை" வெளிப்படுத்துவது

ஆ) ‘சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின்' உதவியுடன் கொழும்பை மையமாகக் கொண்ட அரசைப் பலப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதிலும் அதற்கு அப்பாலும் தான் வசதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது,

இ) சில ஆசிய சக்திகளின் உதவியுடன் ‘ஆசியாவின் மாதிரி' ராஜபக்ச சர்வாதிகாரத்தை ‘சனநாயக' ரீதியில் நடைமுறைப்படுத்திக்கொள்வது என்பனவாகும்.

வடக்குக் கிழக்கின் இந்த வேட்பாளர் படையில் அநேகமானோர், தமிழ் ஈழத் தேசியம் என்பதை இயன்றவரை இல்லாது செய்வதற்காக ராஜபக்ச நிர்வாகத்தினால் ‘பலவந்தமாக இணைக்கப்பட்ட' அல்லது தலா 1800 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

சில சந்தர்ப்பங்களில் வாக்குகளைப் பிரிப்பதற்காக ஒவ்வொரு சுயேட்சை வேட்பாளர்களுக்கும் 10-20 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பிரசார நடவடிக்கைகளுக்கும் தலைமை வேட்பாளருக்கு 5 மில்லியன் ரூபாவும் எஞ்சிய தொகையானது 12 உறுப்பினர்களுக்குமிடையே சமமாகவும் பங்கிடப்படும்.

அந்தப் பணம் தமிழ் மக்களைக் கடத்தியதன் மூலமும் அவர்களுக்கான ஒப்பந்தங்களில் செய்த மோசடிகள் மூலமும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ‘அரசியல் நகர்வுகளுக்கு' பின்னாலிருக்கும் ஆளும் குடும்ப உறுப்பினர் ஊழல் மோசடிகளில் அவரது பங்கு தொடர்பாக திரு. பத்து வீதம் (Mr. Ten Percent) என்ற பட்டப்பெயரில் மிகவும் பிரபல்யமானவர்.

யாழ் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்குக் கைத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் சிறிய ரக ஆயுதங்களை வெளிப்படையாகக் கொண்டு திரிவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவோ, வடக்குக் கிழக்கில் இவ்வாறு பெருந்தொகையான மக்கள் தேர்தலில் போட்டியிடுவது கொழும்பு அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ள சுதந்திர சூழ்நிலையை தெளிவுபடுத்துவதாக ‘புகழாரம்' சூட்டியிருப்பதையும் தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறவில்லை.

சீனாவின் அணுகுமுறை ஆயுதம், பணம் மற்றும் முதலீடு என்பவற்றுக்கு ஊடாக சென்றால், இந்திய வல்லரசானது அந்நாட்டின் பேரினவாத, சர்வாதிகார அரசின் செயற்பாடுகளை தனது வஞ்சக அரசியலால் அழகு படுத்தி நியாயப்படுத்தி வருகிறது

தன்னால் ஈழத் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது போனமைக்கு காரணமாக தமிழ் நாட்டு மக்களுக்கு மறைமுகமாக சீனாவை நோக்கி கையை நீட்டும் இந்திய அரசு சிறிலங்காவில் சீனாவுடன் முக்கியமானதொரு பங்காளியாக மாறியுள்ளது. ஏனெனில், காங்கிரஸ் தலைமையிலான புதுடில்லிக்கு, விடுதலை போராட்டத்தினூடாக ஈழத் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைப்பதென்பது சீனாவைத் தனது கொல்லைப் புறத்தில் அனுமதிப்பதைவிட ஆபத்தானதாகவும் தலையிடியாகவும் உள்ளது.

பனிப்போரின் உச்ச கால கட்டத்தில் 1950 இற்கும் 1970 இற்குமிடையிலான கால கட்டத்தில் ‘சனநாயகத்தை' பாதுகாப்பதென்ற பெயரில் அமெரிக்க அரசாங்கமே எல்லா இடங்களிலும் இராணுவ சர்வாதிகார ஆட்சி முறைமையைக் கொண்டுவந்தது.

இப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான போர், மேற்கு நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் தாராள சனநாயகத்தை வழங்குவதில் மேற்கு நாடுகள் தோல்வியுற்றமை போன்றவற்றில் மேற்குலகம் சிக்கிக்கொண்டிருப்பதை பயன்படுத்தி, இந்தியா மற்றும் சீனா ஆகியன மேற்கு மீண்டும் உசார் நிலைக்கு வருவதற்கு முன்னர் தமது தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

உலக சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இந்த சமநிலையானது ராஜபக்சவின் சர்வாதிகாரத்திற்கு சாதகமாக மாறியுள்ளது. இந்த சமநிலையற்ற தன்மையை ‘ஆசியாவின் மாதிரி' சர்வாதிகாரமாக மாற்றும் அதேவேளையில், குறிப்பாக அதனை ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பாதகமாகத் திசை திருப்புவதில் புதுடில்லியும் கொழும்பும் குறிப்பாக உள்ளன.

1987 இலும் 2009 இலும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் ஒருபுறமிருக்க, ராஜபக்சவைப் போலவே, தற்போதைய தேர்தலில் எவ்வளவு தமிழ் மக்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்ள முடியும், எவ்வாறு தேச விடுதலை வேட்கையை இல்லாமற் செய்ய முடியும் என்பதைக் கண்டறிவதிலேயே கவனஞ் செலுத்துகிறது.

ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கைவிட்டதோ அதேபோலவே, தமிழர்கள் நாட்டினது 'சிறுபான்மையினர்' என்ற படிநிலையினையும் அச்சமின்றி, தேவையற்றவகையில் கூட்டமைப்புக் கைவிட்டுவிட்டது. அத்துடன், புலம்பெயர்வாழ் தமிழர்களது அபிலாசைகள் எவையோ அதற்கு எதிராகவும் கூட்டமைப்புத் தனது கருத்துக்களை முன்வைத்துவருகிறது.

இந்தியாவின் தயவின்றி ஓர் அரைகுறைத் தீர்வேனும் ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்துவிடப் போவதில்லை என்ற வஞ்சக்கவர்ச்சி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆதலினால் இந்தியா எதனைக் கூறுகிறதோ அதன்படி ஒழுகுவதோடு, நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் இந்தியா தனது முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் சமூக அரசியல் ரீதியான தயார்படுத்தல் வேலைகளை முன்னெடுக்கவேண்டும். ‘இந்தியாவால் மட்டுந்தான்' ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தகுந்த தீர்வினை முன்வைக்கமுடியும் என இவர்கள் வாதிடுகிறார்கள். இன்றைய நாட்களில், அரசியலின் முன் அபிவிருத்தி என்பது ஒத்துழைப்புடன் கூடிய காலணித்துவத்தினது ஒரு புதிய வடிவம்தான்.

வில்லன்களையும் கதாநாயகன்களையும் வேறுபிரித்தறிய முடியாத உலகில், ‘புதிய தனி அரசுகள் உருவாவதை விரும்பாத' மேற்குலக சக்திகள் புலம் பெயர் தமிழ் மக்களைக் கவனிக்கின்ற அதேவேளையில், இந்தியா உள்நாட்டு அரசியல் விவகாரங்களைக் கவனித்துக்கொள்வதென்ற ஒரு உடன்பாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது சர்வாதிகார ஆட்சி முறைமைக்கும் ஆதரவளிக்காத எவரையும் நாட்டில் இல்லாமல் செய்வதை உறுதிப்படுத்துவதே இந்தியாவும் சீனாவும் இணைந்து முன்னெடுக்கும் பணியாகும்.

ஹிந்து போன்ற ஊடகங்கள் எவ்வாறிருந்தாலும், இந்தியாவிலிருந்து அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட சந்திரகாசன், வரதராஜப் பெருமாள் போன்ற ஈழத் தமிழ் அரசியல்வாதிகளின் வருகை இதற்கு சிறந்த உதாரணமாகும். 13 வது திருத்தம் தொடர்பாக அதிருப்தியுற்று இந்திய அமைதிப்படையுடன் வெளியேறுவதற்கு முன்னர் தமிழீழத்தை வலியுறுத்திய வரதராஜப் பெருமாள் தற்போது ராஜபக்சவின் புகழைப் பாடிக்கொண்டு 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் மக்களுக்கும் ஆலோசனை கூறுகிறார்.

அடுத்தாக இடம்பெறுகின்ற மாகாண சபைத் தேர்தலில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட சில சக்திகள் கொழும்பின் சர்வாதிகாரத்தினாலும் இந்தியாவின் தலைக்கனத்தினாலும் பீடிக்கப்பட்டு அழுகிப் போன 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதை அவர்கள் காணலாம் என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர். இந்திய-இலங்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 'பாதுகாப்புப் படையும்" வருவதை எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே இருக்கும் துணை ஆயுதக் குழுக்கள் பயனற்றதாகி அவையின் கதை முடிவடையும் நிலையை எட்டிவிட்டதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து செயற்பட்டதால் அவர்களுக்கு சமூகத்தின் மையத்திலும் இடமில்லை. குற்றச் செயல்களும் கொள்ளைகளும் அதிகரிப்பது அவர்கள் தப்பியோடுவதற்கு முயற்சி செய்வதையே காட்டுகிறது. ஆனால் தொடர்ந்து வருபவர்களும் தமது மக்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடாத்தாமல் அதனை மற்றவர்களுக்கு பகடைக்காயாக்குவது அவர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

தற்போது நடைபெறுகின்ற தேர்தல்கள் வலிந்து நடைமுறைப்படுத்தப்படும் திசை திருப்பும் தந்திரோபாயங்கள் என்றாலும், இந்த சூதாட்டம் எதைநோக்கி செல்கிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டால், தமது அபிலாசைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஈழத் தமிழ் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

தமிழ்த் தேசியக் கொள்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடானது ஒரு பகுதி வாக்காளர்களால் என்றாலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்கும் வெளியுலகுக்கும் ஒரு தெளிவான செய்தி அனுப்பப்பட வேண்டும்.

அவ்வாறு விடப்படும் சவாலே உள்ளுர் மற்றும் உலக சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான தமிழ் மக்களின் அபிலாசையாகவும் அவர்களின் புதிய அரசியல் பரிமாணமாகவும் அமையும். மீண்டும், அவ்வாறு உருவாகும் சவால்களின் மூலமே தமிழீழ மக்களைப் பிரிப்பதற்கு புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளை இல்லாமற் செய்ய முடியும்.

ஒழுங்குபடுத்திக்கொண்டு கூட்டமைப்புக்கு எதிராகச் சவாலை ஏற்படுத்துவதற்குப் போதியளவு கால அவகாசம் இருக்கவில்லை. இந்த மாவட்டங்களில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஏக அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகிறது.

பிரதிநிதித்துவத்தின் ஊடாகத் தங்களது அடையாளத்தினைத் தக்கவைப்பதில் கிழக்கு மாகாணத்தில் அனைத்துச் சமூகங்களும் தங்களது விருப்பினை வெளிப்படுத்தியிருந்தன. தங்களது இன அடையாளத்தினை நிலைநிறுத்தும் விடயத்தில் தமிழ் பேசும் முல்லீம்களுக்கு கிழக்குப் பிராந்தியம் ஓர் விசேட பிராந்தியமாக உள்ளது.

முஸ்லீம்களின் இன அடையாளம் மற்றும் அவர்களது விசேட தேவைகள் என்பவற்றினை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், இந்தப் பிராந்தியத்தில் தமிழர்களது தேசியப் பிரச்சினையினை சிறிலங்கா அரசு பலவீனப்படுத்துவதற்கு அனுமதிக்காது, தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு இரண்டு சமூகங்களும் ஒன்றாக இணைந்து முகம்கொடுக்கவேண்டியது அவசியமானது.

பல்லின சமூகங்கள் ஒன்றுடனொன்று இணைந்து வாழும் ஒரு நாடாக சிறிலங்காவை மீளமைப்பது என்பது ஓர் மாயையாகிவிட்ட நிலையில், குறிப்பாகக் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து தமக்குள்ள மாற்று வழிகள் தொடர்பில் புதிதாகச் சிந்திக்கவேண்டும்.

மேற்குலகின் மௌனமான ஆசிர்வாதத்தையும் பெற்ற ஆசியாவின் "மாதிரி சர்வாதிகார ஆட்சி" முறைமையானது இலங்கைத் தீவின் எந்த மக்களினதும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. இந்த நாட்டின் தேசங்கள் தொடர்பான யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தவறிய பெரும்பான்மை சிங்கள சமூகமும் இந்த பிரச்சினைகளின் தாக்கத்திலிருந்து தப்பிவிட முடியாது.

இந்தியாவில் பிரித்தானியாவிற்கு எதிராக 1857 அல் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பிரித்தானியரால் வெறுமனே செய்போய் மியூட்டினி (Sepoy Mutiny) ஆகக் கருதப்பட்டது. ஆனால் அந்த நேரம் கார்ல் மாக்ஸ் அதுவே இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறினார். அது இந்தியாவின் வரலாறாக இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழருக்கு அவ்வாறல்ல.

இக்கட்டுரை தமிழ்நெற் இணையதளத்தில் Elections for ‘Asian' model of dictatorship எனும் தலைப்பில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கமாகும்.

Comments