புலம் பெயர் மக்கள் தேசியத் தலைமையின் பணியை ஏற்கும் காலம் இது

உலகத்தில் இரண்டாம் உலக யுத்த முடிவுக்கு பிற்பாடு ஐக்கிய நாடுகள் மன்று தோற்றம் பெற்றது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு உலகத்தில் உள்ள தேசங்கள் ஒரு குடைக்கு கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பாடும், ஐக்கிய நாடுகள் மன்றின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடும் உலக அரங்கில் பல புதிய தேசங்கள் உருவாகியுள்ளன. இப்புதிய தேசங்களின் தோற்றத்திற்கு உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் நலன் சார் அரசியலே காத்திரமான காரணியாக அமைந்திருந்தது.

எடுத்துக்காட்டாக அண்மையில் தனிநாடாக பிரிந்த கொசுவா தேசம், அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிராந்திய நலன் சார் அடிப்படையில் உருவாகக்கம் பெற்றிருக்கின்றது. இப்பின்புலச் அரசியல் சிந்தனைக் கோட்பாடானது அதாவது புவிசார் அரசியல் கொள்கை வகுப்பானது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பல பின்னடைவுகளையும் தடங்கல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய களம் மற்றும் புலத்தின் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டில், தமிழீழ விடுதலையை நோக்கிய பாதைக்கான அரசியல் அணுகுமுறையில் சிறு பிளவை ஏற்படுத்தியுள்ளது. இவ் அணுகுமுறை வேறுபாட்டை குழுமோதலாக பார்ப்பதை தவிர்த்து அவற்றின் பின்புலதில் உள்ள அரசியல் சிந்தனைக் கோட்பாட்டின் வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளல் அவசியம்.

இச்சிந்தனைக் கோட்பாட்டின் வேறுபாட்டை மேலும் விளக்கும் வகையில் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முப்பது வருட கால அகிம்சை அதாவது அறவழிப் போராட்ட காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. தந்தை செல்வா அவர்களுடைய அறவழியிலான தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இரண்டுவிதமான சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் அமைந்திருந்தன.

1. தந்தை செல்வா அவர்களுடைய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கிய சிந்தனையை கொண்ட பள்ளிக்கூடம்

2. எம்.பி நவரத்தினம் அவர்களுடைய சுயாட்சி கழகத்தினுடைய சிந்தனைப் பள்ளிக்கூடம்

எம்.பி நவரத்தினம் அவர்கள் சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை எனக் கருதி சுயாட்சியே அதவாது தமிழீழம் தனியாப் பிரிந்து செல்வதே பொருத்தமான அரசியல் தீர்வெனக் கருதி பிரிந்து சென்றவர்.

தந்தை செல்வா அவர்களைப் பொருத்தவரையில் ஏனையவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல்வாதி அல்ல. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வுக்காக மறவழியில் போராடியதோடு மட்டுமன்றி, 1972ம் ஆண்டு குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டதை அடுத்து (தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்ட யாப்பு) சிங்களப் பேரினவாதிகளுடனான பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி கண்டதையடுத்து தமிழீழ தனியரசு அமைப்பதே ஒரே ஒரு தீர்வு என தனது ஆழ்ந்த அரசியல் புரிதலின் ஊடாக முடிவை மேற்கொண்டவர்.

நம்முடைய தேசியத்தலைமையானது எம்.பி நவரத்தினம் அவர்களுடைய சிந்தனைப் பள்ளிக்கூடத்திலிருந்து உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவகையிலான அரசியல் கோட்பாட்டை கொண்ட இரு வகையான அரசியல் சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் உலகில் காணப்படுகின்றன.

1. பயங்கரவாதத்திற்க எதிரான போர் என்ற அடிப்படைச் அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயத்தை கொண்ட ஓர் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள்.

2. தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ணய உரிமையை அடிப்டையிலான தீர்வை கொண்டு நிறைவுக்கு கொண்டுவரல் என்ற சிந்தனையை கொண்ட ஓர் பள்ளிக்கூடம்.

இவ்விரு சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்களும் தேசிய விடுதலைப் போராட்டக் குழுக்களிடம் தமது சிந்தனைகளை வலுப்படுத்துவதற்காக அவர்களது சிந்தனைகளை விதைக்க முற்படுவார்கள். தற்போதைய உலக ஒழுங்கில் தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ண உரிமை அடிப்படையிலான தீர்வைக் காண வேண்டும் என்று சிந்தனைப் பள்ளிக் கூடத்தைச் சார்ந்தவர்களின் சிந்தனையே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இப்பயங்கரவாதத்திற்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயங்கள் ஊடாக செயற்படும் சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் நமது தமிழீழப் போராட்டத்திலும் பல சிந்தனைகளை நமக்குத் தெரிவிப்பார்கள். தமது கோட்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும் தமது சிந்தனைகளை நமக்குள் விதைக்க முற்படுவார்கள்.

இச்சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் திட்டமிட்டு செயற்படும் வல்லமை பெற்றவர்கள். இடதுசாரிப் போக்குடைய மாற்றுக் கட்சிகளின் ஒத்தாசையை நாடுவதன் மூலம் தமிழீழக் எண்ணக்கருவை தமிழ் மக்களிடம் இருந்து அழித்துவிடமுடியாது என்பதில் உலக மற்றும் பிராந்திய வல்லரசுகள் தெளிவு பெற்றுள்ளன.

ஆகவே தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களில் மிதவாதப் போக்குடையவர்கள் எனத் தாம் கருதுபவர்களை நாடிச் செல்ல இப்பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் தலைப்பட்டுள்ளனர். மிதவாதப் போக்குடையவர்களிடம் சொல்லப்படும் கருத்துக்கள் கீழ்வரும் அடிப்படையில் அமைந்திருக்கும்.

தமிழீழம் என்ற கோரிக்கையை முதலில் கைவிடுங்கள். படிபடிப்படியாக உங்கள் கோரிக்கைகளை வையுங்கள் என ஆலோசனை வழங்கப்படும். இது ஏறிபடி அணுகுமுறை எனச் சொல்லப்படும்.

ஆனால் அது இறங்குபடி அணுகுமுறை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது போய்விடும். இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன என்றொரு மிகப்பெரிய கேள்வி எம்முன் எழுந்துள்ளது. தமிழர்கள் பெறுமளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படும் மற்றும் செயற்படவிருக்கம் சனநாயக அமைப்புக்களை வலுப்படுத்துவதோடு, கொள்கை பற்றுருதி கொண்ட செயற்பாட்டாளர்களை அல்லது வேட்பாளர்களை முதலில் அடையாளம் காண வேண்டும்.

அவர்களுக்கு நாம் ஆதரவு அளிப்பதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்களின் கவனத்தை நாம் ஈர்க்கலாம். அதாவது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ணய உரிமை அடிப்டையில் தீர்வைக் காண விளையும் சிந்தனைப் பள்ளிக் கூடத்தை சார்ந்தவர்களையாகும்.

கொசுவா போராட்டம் சிதைக்கப்பட்டு ஒன்பது வருடத்திற்கு பிற்பாடு அதாவது அம்மக்கள் கொள்கை பற்றுருதியுடன் இருந்தமையால் தமது நாட்டுக்கான சுதந்திரத்தை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட நீரோட்டத்தில் சரியான திசையில் தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் ஏற்பட்ட தடங்கல்களை விலக்கியும், களையெடுப்புக்களும், இடைநிறுத்தல்களும் தமிழீழ தேசியத் தலைமையால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்களாகிய நாம் தமிழீழத் தேசியத் தலைமை கவனித்துக் கொள்வர் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் வாளாவிருந்தோம். ஆனால் தற்போது தமிழீழத் தேசியத்தலைமை நேரடியாக வழிப்படுத்தலுக்கான வேலையைசெய்ய முடியாதுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் தேசியத் தலைமையின் செயற்பாட்டை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றை கருத்திற் கொண்டு வரும் தேர்தலில் கொள்கை பற்றுருதியுடன் உள்ளவர்களை தெரிவு செய்வது எமது கடமை என்பதை புரிந்து கொள்வோம்.

- சங்கதிக்காக வெற்றித்திருமகள்

Comments